“கோவை:சென்னை துரைப்பாக்கம் ஒக்கியம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 50). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி வரலட்சுமி (45). இவர்களுக்கு யுவராஜ் (16)என்ற மகனும், ஜனனி (15) என்ற மகளும் இருந்தனர்.

வரலட்சுமி தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் யுவராஜ் 11-ம் வகுப்பும், ஜனனி 10-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

தட்சிணாமூர்த்தி தனது வீட்டு தேவைக்காக கடன் வாங்கியிருந்ததாகவும், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த 28-ந் தேதி தட்சிணாமூர்த்தி தனது மனைவியிடம் வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

ஆனால் அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு வரலட்சுமி துரைப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

கணவர் மாயமானதில் இருந்தே வரலட்சுமியும், அவரது குழந்தைகளும் கடும் மன உளைச்சலில் இருந்தனர்.

அவர்களுக்கு வரலட்சுமியின் தாயார் தாராபாய் ஆறுதல் கூறி வந்தார்.கடந்த 29-ந் தேதி வரலட்சுமி, தனது தாயாரிடம் வீட்டிலேயே இருந்தால் மிகவும் மன உளைச்சலாக உள்ளது.

அதனால் நானும், குழந்தைகளும் சிங்கபெருமாள் கோவிலுக்கு சென்று வருகிறோம் என தெரிவித்தார்.

அவரும் போய்விட்டு வாருங்கள் என அனுப்பி வைத்தார்.இதையடுத்து வரலட்சுமி, தனது மகன் யுவராஜ், மகள் ஜனனி ஆகியோருடன் கோவிலுக்கு சென்றார்.

அன்றைய தினம் முழுவதையும் அங்கேயே இருந்தார். மதியத்திற்கு பிறகு அவரது தாயார் போன் செய்து ஏன் இன்னும் வீட்டிற்கு வரவில்லை என கேட்டார்.

அதற்கு வரலட்சுமி தான் கோவிலில் தங்கி விட்டு மறுநாள் வருகிறேன் என தெரிவித்தார்.இரவு தாராபாய் தனது மகளை செல்போனில் அழைத்தார்.

ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் பதறிபோன அவர் உடனே தனது உறவினர்களுடன் கோவிலுக்கு சென்று தேடி பார்த்தார். அங்கு அவர்கள் இல்லை.

எங்கு சென்றனர் என்பது தெரியவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் தாராபாய் சம்பவம் குறித்து துரைப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வரலட்சுமி மற்றும் அவரது மகன், மகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கோவை நஞ்சுண்டாபுரம் ரெயில்வே தண்டவாளம் அருகே 3 பேர் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் டி.எஸ்.பி. யாஸ்மின், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் உடல்களை பார்வையிட்டு, அவர்கள் யார் என்பதை அறிய அங்கு ஏதாவது கிடக்கிறதா? என தேடி பார்த்தனர்.அப்போது செல்போன் மற்றும் சில பொருட்கள் இருந்தன.

அதனை வைத்து விசாரித்த போது, இறந்து கிடந்தது மாயமான வரலட்சுமி, அவரது மகன் யுவராஜ், மகள் ஜனனி என்பது தெரியவந்தது.மன உளைச்சலில் இருந்த வரலட்சுமி தனது தாயாரிடம் கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு, மகன், மகளுடன் கோவைக்கு வந்துள்ளார்.

கோவைக்கு வந்த அவர்கள் பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். கணவர் மாயமானதாலும், கடன் தொல்லை அதிகரித்ததாலும் இனி இந்த உலகில் வாழ்வதை விட தற்கொலை செய்து கொள்ளலாம் என வரலட்சுமி முடிவெடுத்துள்ளார்.

அதன்படி கோவை நஞ்சுண்டாபுரம் ரெயில்வே மேம்பாலம் பகுதிக்கு தனது குழந்தைகளுடன் வரலட்சுமி சென்றார்.

அந்த வழியாக கேரள மாநிலம் சொர்னூர் நோக்கி ஒரு ரெயில் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து வரலட்சுமி, தனது குழந்தைகளுடன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.”,

Share.
Leave A Reply

Exit mobile version