கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட கதையின்படி, நாசரேத்தை சேர்ந்த இயேசுவின் மரணம் அப்போதைய ஜூடியாவில் இருந்த ரோமானிய ஆளுனர் பிலாத்துவின் உத்தரவின் பேரில் சிலுவையில் அறையப்பட்டு இறந்தார்.

அந்த மரணத்தை நோக்கிய அவரது பயணத்தின் ஒரு பகுதி passion என்று அறியப்படுகிறது. புனித வாரத்தில் நினைவுகூரப்படும் சம்பவங்களில் இது அடங்கும்.

சிலுவையில் அறையப்படுவது கிறிஸ்தவத்தின் வரலாற்றின் மையமாக இருந்தது. எனவே சிலுவை என்பது இறுதியில் இயேசு கிறிஸ்து மீதான பக்தியை சுட்டிக்காட்டும் மதத்தின் அடையாளமாக மாறியது.

ஆனால் அவர் அறையப்பட்டு இறந்த சிலுவை எங்கே? அதற்கு என்ன ஆனது? ஒரு வரலாற்றுத் தேடல் இது.

உலகெங்கிலும் உள்ள டஜனுக்கும் அதிகமான மோனாஸ்ட்ரிகள் மற்றும் தேவாலயங்கள் தங்கள் விசுவாசிகளின் போற்றுதலுக்காக தங்கள் பலிபீடங்களில் “உண்மையான சிலுவை” என்று அழைக்கப்படுபவற்றின் ஒரு பகுதியையாவது வைத்திருப்பதாகக் கூறுகின்றன.

அவர்களில் பலர் தங்களிடம் இருக்கும் இந்த நினைவுச் சின்னங்களின் நம்பகத்தன்மையை மூன்றாம் மற்றும் நான்காம் நூற்றாண்டுகளின் நூல்களை அடிப்படையாகக் கொண்டு சுட்டிக்காட்டுகின்றனர். ஜெருசலேமில் ரோமானியர்கள் எந்த மரச்சிலுவையில் இயேசுவை அறைந்தார்களோ அதன் உண்மையான துண்டு இது என்று விவரிக்கப்படுகிறது.

பிரசங்கங்களில் கூறப்படும் கதையின்படி சிலுவையானது இயேசு மரணத்திற்கு முன் அனுபவித்த துன்பத்தையும் குறிக்கிறது.

ரோமானியப் பேரரசர் கான்ஸ்டன்டைன் மற்றும் அவரது தாயார் ஹெலினா சம்பந்தப்பட்ட அந்தக் கதை இன்றுவரை தொடரும் இயேசுவின் சிலுவையில் அறையப்பட்ட கதையின் தொடக்கமாகும் என்று சொல்கிறார் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் ’ஹிஸ்ட்ரி ஆஃப் தி காஸ்பெல்ஸ் அண்ட் எர்லி கிரிஸ்டியானிட்டி’யின் பேராசிரியரான கேண்டிடா மோஸ்.

இது சிசேரியாவின் கெலாசியோ அல்லது ஜாகோபோ டி லா வோராஜின் போன்ற பண்டைய வரலாற்றாசிரியர்களின் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டது.

ஆனால் உலகெங்கிலும் உள்ள பல்வேறு தேவாலயங்களில் இன்று நாம் காணும் மரத்துண்டுகளின் நம்பகத்தன்மையை பல வரலாற்றாசிரியர்களால் தீர்மானிக்க முடியவில்லை அல்லது அவற்றின் தோற்றத்தை உறுதிப்படுத்தவும் முடியவில்லை.

“இயேசு அறையப்பட்ட சிலுவையின் மரத்துண்டு இது அல்ல. ஏனென்றால் அந்த மரத்துண்டுக்கு பல விஷயங்கள் நடந்திருக்கலாம். உதாரணமாக ரோமானியர்கள் அதை வேறொரு இடத்தில் வேறு ஒருவரை சிலுவையில் அறைய பயன்படுத்தியிருக்கக்கூடும்,” என்று மோஸ் கூறுகிறார்.

ஆனால், “உண்மையான சிலுவை” பற்றிய கதை ஏன் எழுந்தது மற்றும் “மடெரோ மேயரின்” பகுதி என்று கூறப்படும் பல துண்டுகள் ஏன் உள்ளன?

அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் ந்யூ டெஸ்டமெண்ட் விவகாரங்களில் நிபுணரும் வரலாற்றாசிரியருமான மார்க் குடாக்ரே, பிபிசி முண்டோவுக்கு இவ்வாறு பதிலளித்தார். “(நாம் நம்பும் ஒன்று) நமக்கு அருகாமையில் இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.”

“கிறிஸ்தவ எச்சங்கள் என்பது உண்மையை விட ஒரு ஆசைதான்.”

ஜெருசலேமில் கிறிஸ்து இறந்த சிலுவையைக் கண்டுபிடித்தவர் கான்ஸ்டன்டைன் பேரரசரின் தாயார் ஹெலினா என்று சில கூற்றுகள் கூறுகின்றன.

கோல்டன் லெஜெண்ட்

இயேசு சிலுவையில் இறந்த பிறகு அவரது உடல் இப்போதைய ஜெருசலேமின் பழைய நகரத்தில் உள்ள கல்லறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

கிட்டத்தட்ட 300 ஆண்டுகளாக கிறிஸ்தவ கதையில் அந்த சிலுவை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

4 ஆம் நூற்றாண்டில், சிசேரியாவின் பிஷப்பும் வரலாற்றாசிரியருமான ஜெலாசியஸ், ’ஹிஸ்டரி ஆஃப் தி சர்ச்’ என்ற தனது புத்தகத்தில், ’கிறிஸ்தவத்தை நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக திணித்த ரோமானிய பேரரசர் கான்ஸ்டன்டைனின் தாயாரும், கத்தோலிக்க புனிதருமான ’ஹெலினா’, ஜெருசலேமில் “உண்மையான சிலுவை”யை கண்டுபிடித்ததைப் பற்றி ஒரு குறிப்பை எழுதியுள்ளார்.

13 ஆம் நூற்றாண்டின் தனது “கோல்டன் லெஜண்ட்” இல் ஜேம்ஸ் ஆஃப் வோராஜின், பிற வரலாற்றாசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்ட கதை, கிறிஸ்துவின் சிலுவையைக் கண்டுபிடிக்க அவரது மகனால் அனுப்பப்பட்ட ஹெலினா, இயேசு சிலுவையில் அறையப்பட்டதாகக் கூறப்படும் கோல்கோதா மலைக்கு அருகே அழைத்துச்செல்லப்பட்டதாக தெரிவிக்கிறது. அங்கு மூன்று சிலுவைகள் இருந்தன.

ஹெலனா சந்தேகம் கொண்டதாகவும், ஒரு நோய்வாய்ப்பட்ட பெண்ணை ஒவ்வொரு சிலுவையிலும் அவர் வைத்தார். இறுதியில் அந்தப் பெண்ணை குணப்படுத்திய சிலுவை உண்மையானது என்று அவர் உணர்ந்தார் என்றும் சில பதிப்புகள் கூறுகின்றன.

சிலுவையில் அறையப்படுவதற்கு ஆணிகளை பயன்படுத்தியதற்கான தடயங்கள் கொண்ட சிலுவையை அவர் அடையாளம் கண்டதாக மற்ற வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். ஏனெனில் அன்றைய தினம் இயேசு மட்டுமே அந்த முறையில் சிலுவையில் அறையப்பட்டார்.

இயேசு இறந்ததாகக் கூறப்படும் சிலுவையின் ஒரு பகுதி தன்னிடம் இருப்பதாக உலகெங்கிலும் உள்ள பல தேவாலயங்கள் கூறுகின்றன.

“இந்த முழு கதையும், மூன்றாம் மற்றும் நான்காம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ மதத்தில் தொடங்கிய, நினைவுச்சின்னங்களுக்கான விருப்பத்தின் ஒரு பகுதியாகும்” என்று குடாக்ரே கூறுகிறார்.

முதல் கிறிஸ்தவர்கள் தங்கள் பக்தியின் ஆதாரமாக இந்த வகையான பொருட்களை கண்டுபிடிப்பதில் அல்லது பாதுகாப்பதில் கவனம் செலுத்தவில்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“முதல் நூற்றாண்டில் எந்த கிறிஸ்தவரும் இயேசுவின் நினைவுச்சின்னங்களை சேகரிக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

“காலம் செல்லச்செல்ல உலகெங்கிலும் கிறிஸ்தவம் விரிவடைந்ததும், இந்த விசுவாசிகள் தங்களின் இரட்சகர் என்று தாங்கள் நம்பும் நபருடன் நேரடி உறவை ஏற்படுத்த வழிகளை உருவாக்கத் தொடங்கினர்,” என்று இந்தக் கல்வியாளர் கூறுகிறார்.

இந்த எச்சங்களின் கண்டுபிடிப்பு தியாகிகளுடன் நிறைய தொடர்புடையது.

“இயேசுவின் மரணத்திற்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட சிலுவை உண்மையானவையாக இருக்க வாய்ப்பில்லை.” என்று குடாக்ரே கூறுகிறார்.

வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி புனிதர்களின் வழிபாட்டு முறை திருச்சபைக்குள் ஒரு போக்காக மாறியது. எடுத்துக்காட்டாக தியாகிகளின் எலும்புகள், அற்புதங்களை செய்யும் “உலகில் இருக்கும் கடவுளின் சக்தி” என்பதற்கான சான்றுகள் என்ற நம்பிக்கை விரைவாக நிறுவப்பட்டது.

இயேசு உயிர்த்தெழுந்த காரணத்தால் அவரது எலும்புகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை… கல்லறையில் மூன்று நாட்கள் இருந்த பிறகு அவர் வாழ்க்கைக்குத் திரும்பியதும் அதைத் தொடர்ந்து “பரலோகத்திற்கு சென்றதும்” உடல் ரீதியானது என்று பைபிள் கூறுகிறது. சிலுவை மற்றும் முட்களின் கிரீடம் போன்ற பொருட்கள் மட்டுமே இவற்றுடன் இணைந்திருந்தன.

“இயேசுவின் மரணத்திற்கு கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அவர் இறந்த சிலுவை அல்லது முள்கிரீடம் போன்ற ஜெருசலேமில் காணப்படும் பொருட்கள் உண்மையானவையாக இருக்க வாய்ப்பில்லை.” என்று குடாக்ரே கூறுகிறார்.

“அசல் நிகழ்வுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட முதல் கிறிஸ்தவர்கள் மூலம் இது நடந்திருந்தால் அவை உண்மையானவை என்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி பேசலாம். ஆனால் அது அப்படி இல்லை.”

ஆரம்பகால கிறிஸ்தவர்கள் துன்புறுத்தல் காரணமாக இயேசுவின் உடல் இருப்பு தொடர்பான பல பொருட்களைத் தக்கவைக்கவில்லை என்று வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு கப்பலை நிரப்பும் அளவுக்கு எச்சங்கள்

ஹெலினா மிஷனுக்கு வழங்கப்பட்ட சிலுவையின் ஒரு பகுதி ரோமுக்கு கொண்டு செல்லப்பட்டது (மற்றொன்று ஜெருசலேமில் இருந்தது) மற்றும் நினைவுச்சின்னத்தின் பெரும்பகுதி இத்தாலிய தலைநகரில் பசிலிகா ஆஃப் தி ஹோலி க்ராஸில் பாதுகாக்கப்படுகிறது.

இடைக்காலத்தில் ஐரோப்பா முழுவதும் கிறிஸ்தவத்தின் விரிவாக்கம் மற்றும் இந்த மதத்தின் உலகளாவிய அடையாளமாக மாறிய சிலுவையின் துண்டுகள் பல தேவாலயங்களில் சென்றடைவதும் தொடங்கியது.

இந்த துண்டுகள் லிக்னம் குரூசிஸ் (லத்தீன் மொழியில் “சிலுவையின் மரம்”) என்று அழைக்கப்படுகின்றன.

பசிலிக்கா ஆஃப் தி ஹோலி க்ராஸ் தவிர, இத்தாலியில் உள்ள கோசென்சா, நேபிள்ஸ் மற்றும் ஜெனோவா கதீட்ரல்கள், ஸ்பெயினில் உள்ள சாண்டோ டோரிபியோ டி லிபானாவின் மோனாஸ்ட்ரி (இங்குள்ளது மிகப்பெரிய துண்டு), சாண்டா மரியா டெல்ஸ் டுரெஸ் மற்றும் வேரா குரூஸின் பசிலிக்கா, இயேசு கிறிஸ்து தூக்கிலிடப்பட்ட சிலுவையின் ஒரு மரத்துண்டு தங்களிடம் இருப்பதாகக் கூறுகின்றன.

ஆஸ்திரியாவில் உள்ள ஹேலிங்கன்க்ரெயுஸ் அபே, ஒரு பகுதியை வைத்திருக்கிறது. மற்றொரு மிக முக்கியமான துண்டு ஜெருசலேமில் உள்ள ஹோலி கிராஸ் தேவாலயத்தில் உள்ளது.

 

“கிறிஸ்தவ மக்களின் மத உணர்வு எல்லா நேரங்களிலும், திருச்சபையின் புனித வாழ்க்கையைச் சுற்றியுள்ள பல்வேறு வகையான பக்திகளில் அதன் வெளிப்பாட்டைக் கண்டறிந்துள்ளது”

“கிறிஸ்தவ மக்களின் மத உணர்வு எல்லா நேரங்களிலும், திருச்சபையின் புனித வாழ்க்கையைச் சுற்றியுள்ள பல்வேறு வகையான பக்திகளில் அதன் வெளிப்பாட்டைக் கண்டறிந்துள்ளது. அதாவது நினைவுச்சின்னங்களை வணங்குதல் போன்றவை”. இவை கத்தோலிக்க திருச்சபையின் கொள்கை என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் நினைவுச்சின்னங்கள் “இரட்சிப்பின் பொருள்கள்” அல்ல. மாறாக “நம்முடைய ஒரே மீட்பரும் ரட்சகருமான நம்முடைய பரம பிதாவான இயேசு கிறிஸ்து மூலமாக” பரிந்துரை மற்றும் நன்மையைப் பெறுவதற்காகவே உள்ளன என்பதையும் அது சுட்டிக்காட்டுகிறது.

இதேபோல் துண்டுகளின் பன்முகத்தன்மையும் பல சிந்தனையாளர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

பிரெஞ்சு இறையியலாளர் ஜான் கால்வின் 16 ஆம் நூற்றாண்டில் நினைவுச்சின்னக்கடத்தலின் அதிகரிப்பை குறிப்பிட்டு, “உண்மையான

சிலுவை” என்று அழைக்கப்படும் துண்டுகள் தேவாலயங்கள் மற்றும் மோனாஸ்ட்ரிகளில் பரவின. நாம் இவற்றை (சிலுவை தொடர்பான அனைத்தையும்) சேகரித்தால் ஒரு பெரிய கப்பலை நிறைக்கும் அளவுக்கு அவை இருக்கும் என்றார்.

இருப்பினும் இந்தக்கூற்று பின்னர் வரலாறு முழுவதும் பல்வேறு இறையியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் மறுக்கப்பட்டது.

சமீபத்தில் ட்யூரின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பைமா போலோன் ஒரு ஆய்வில், ”கிறிஸ்துவின் சிலுவையின் ஒரு பகுதியாக இருப்பதாகக் கூறப்படும் எல்லா பகுதிகளையும் ஒன்றாக இணைத்தால், நம்மால் 50% முக்கிய தண்டுப்பகுதியை மட்டுமே உருவாக்க முடியும்” என்று தெரிவித்தார்.

சிலுவை கிறிஸ்தவத்தின் அடையாளமாக மாறிவிட்டது.

உண்மைத்தன்மை

“ஹெலினா ஒரு மரத் துண்டைக் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் அது இயேசு அறையப்பட்ட சிலுவை என்பதை குறிப்பிட யாராவது அதை அந்த இடத்தில் வைத்திருக்கலாம்.” என்று மோஸ் கூறுகிறார்.

குறைந்தபட்சம் இந்த துண்டுகள் இயேசு கிறிஸ்துவின் காலத்தில் நடந்த சிலுவை அறையலை சேர்ந்தவையா என்பதை நிரூபிப்பதிலும் சிரமம் உள்ளது என்று கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

“உதாரணமாக முதலில் செய்ய வேண்டிய விஷயங்களில் ஒன்றான கார்பன் டேட்டிங், செலவு பிடிக்கக்கூடியது. சராசரி தேவாலயத்தில் இந்த வகையான வேலைக்கான நிதி இல்லை,” என்று அவர் கூறுகிறார்.

அத்தகைய ஆய்வுகளுக்கு நிதியளிப்பதற்காக பணத்தை பயன்படுத்த முடிந்தாலும் இந்த ஆராய்ச்சியானது எச்சங்களின் மரியாதையை குலைப்பதாகவும் கருதப்படலாம்.

“மேலும் கார்பன் டேட்டிங் ஊடுருவக்கூடியது. இது சற்றே அழிவை ஏற்படுத்தும். 10 மில்லிகிராம் மரத்தை மட்டுமே நாம் எடுத்தாலும், ஒரு புனிதமான பொருளை வெட்டுவதாகவே அது கருதப்படும்” என்கிறார் மோஸ்.

சந்தேகத்துடன் ஆய்வு செய்யும் குழுவின் உறுப்பினரான அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஜோ கிக்கல், “உண்மையான சிலுவையின்”

பகுதியாக நம்பப்படும் பிளவுகளின் தோற்றத்தை தீர்மானிக்க 2010 ஆம் ஆண்டில் ஒரு ஆய்வு நடத்தினார்.

கிறிஸ்துவின் உண்மையான சிலுவையைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று மோஸ் மற்றும் குடாக்ரே ஆகிய இருவரும் கூறுகின்றனர்.

“ஜெருசலேமில் ஹெலினா அல்லது வேறு யாரேனும் கண்டெடுத்த சிலுவைதான், இயேசு இறந்த உண்மையான சிலுவை என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை.

அதன் தோற்றம் பற்றிய கதை கேலிக்குரியது. அதில் இருந்து எத்தனை துண்டுகளை எடுக்கிறீர்கள் என்பது முக்கியமில்லை,” என்று கிக்கல் தனது “தி ட்ரூ கிராஸ்: சாசர், கால்வின் அண்ட் ரெலிக் டீலர்ஸ்” என்ற கட்டுரையில் எழுதியுள்ளார்.

கிறிஸ்துவின் உண்மையான சிலுவையைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று மோஸ் மற்றும் குடாக்ரே ஆகிய இருவரும் கூறுகின்றனர்.

“நாம் எதையாவது தொடங்குகிறோம் என்றால் முதலில் தொல்பொருள் வேலைகளைச் செய்ய வேண்டும், மத வேலை அல்ல. அதன் பிறகும் கூட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மரத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம்,” என்று குடாக்ரே கூறுகிறார்.

“கிரேக்கம் மற்றும் லத்தீன் இரண்டிலும் சிலுவை என்ற சொல் சித்திரவதை செய்யப்பட்ட ஒரு மரம் அல்லது நிமிர்ந்த குச்சியைக் குறிக்கிறது,” என்று வரலாற்றாசிரியர் விளக்கினார்,

“அதாவது நாம் அநேகமாக ஒரு மரத்துண்டு அல்லது நிலத்தில் நாட்டக்கூடிய குச்சி பற்றி பேசுகிறோம். தற்போது நமக்குத் தெரிந்த சின்னத்தைப் பற்றி அல்ல,” என்றார் அவர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version