ஷாஜகானின் உயரம் சற்று குறைவாக இருந்தாலும், அவர் பருமனான உடல் மற்றும் பரந்த தோள்கள் பெற்றவர்.

இளவரசராக இருந்த வரை, தந்தை ஜஹாங்கீர், தாத்தா அக்பர் போன்று மீசையை மட்டுமே வைத்திருந்தார். அரசரான பிறகு தாடி வளர்க்கத் தொடங்கினார்.

ஷாஜகானின் ஆட்சிக் காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தின் பெருமை அதிகம் வெளிப்பட்டது. அவர் தனது தந்தையைப் போல அடிக்கடி மனநிலை மாறும் தன்மை கொண்டவரில்லை. அவர் மென்மையாகவும், கண்ணியமாகவும் பேசுபவர், எப்போதும் முறையான மொழியில் பேசினார்.

முகலாயர்களைப் பற்றிய புத்தகமான ‘எம்பரர்ஸ் ஆஃப் த பீகாக் த்ரோன்- த சாகா ஆஃப் தி கிரேட் முகல்ஸ்’ என்ற புத்தகத்தை எழுதிய ஆபிரகாம் இரலி, “சுய கட்டுப்பாடு ஷாஜகானுக்கு மிக உயர்ந்த குணமாக இருந்தது.

இது மது மீதான அவரது அணுகுமுறையில் பிரதிபலிக்கிறது. 24 வயதில், அதுவும் முதன்முதலாக மதுவை சுவைக்க தந்தை வற்புறுத்தியபோது அதையும் சுவைத்தார்.

அடுத்த ஆறு வருடங்கள் அரிதாகவே அருந்தினார். 1620-ம் ஆண்டு தெற்கு நோக்கிப் பயணத்தை மேற்கொண்டபோது முழுவதுமாக அந்தப் பழக்கத்தைக் கை விட்டு, மொத்த மதுபான இருப்பையும் சம்பல் ஆற்றில் ஊற்றினார்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முற்றிலும் மும்தாஜ் மஹலுக்கு அர்ப்பணம்

ஷாஜகான்

 

ஷாஜஹான் ஒரு பழமைவாத முஸ்லிமாக வாழ்ந்தாலும், அவர் ஒரு துறவி போல வாழவில்லை.

புகழுக்கும் பெருமைக்கும் அவரது தந்தை ஜஹாங்கீரைப் போலவே இவரும் மிகவும் ஆசைப்பட்டார்.

இத்தாலிய வரலாற்றாசிரியர் நிக்கோலாவோ மனூச்சி, “ஷாஜஹான் அரண்மனையிலிருந்து தனது கவனத்தைத் திசைதிருப்ப இசை மற்றும் நடனத்தை நாடினார்.

அவர் பலவிதமான இசைக்கருவிகள் மற்றும் கவிதைகள் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரே நன்றாகப் பாடுவார். கஞ்சன் என்றழைக்கப்படும் நடனப் பெண்களின் குழு ஒன்று எப்போதும் தயாராக இருந்தது,” என்று எழுதுகிறார்.

ஷாஜஹானின் அராஜகங்கள் குறித்த பல கதைகள் உலவினாலும் அவரது மனைவி மும்தாஜ் மஹல் உயிருடன் இருக்கும் வரை, அவர் முழுவதுமாக அவருக்கான அர்ப்பணிப்புடன் இருந்தார்.

அவருடைய மற்ற மனைவிகளுக்குக் கூட அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் இல்லை.

ஷாஜகானின் அரசவையில் இருந்த வரலாற்றாசிரியர் இனாயத் கான் தனது ‘ஷாஜஹன் நாமா’ புத்தகத்தில், ” அரண்மனையிலோ வெளியிலோ, ஷாஜகானுக்கு மும்தாஜின் மீதிருந்த ஈடுபாட்டில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட மற்ற பெண்கள் மீது இல்லை. அவர் இல்லாமல் இவரால் வாழ முடியாது.” என்று எழுதுகிறார்.

இறுதி நொடிகளில் மும்தாஜ் பெற்ற வாக்குறுதி

ஷாஜஹான் மீது தீராத அன்பு கொண்டிருந்த மும்தாஜ், வெறும் அழகுப் பதுமையாக மட்டும் இல்லாமல், ஜஹாங்கீருக்கு அவர் மனைவி நூர்ஜஹான் இருந்தது போல, அரசாட்சியிலும் ஷாஜஹானுக்கு உறுதுணையாயிருந்தார்.

ஷாஜஹான் பதவியேற்ற நான்கு ஆண்டுகளுக்குள் மும்தாஜ் மறைந்து விட்டார். அப்படி நேர்ந்திருக்காவிட்டால், முகலாய சாம்ராஜ்யத்தில் மும்தாஜின் செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மும்தாஜ்

 

இனாயத் கான், “மும்தாஜ் மிகவும் பலவீனமான தனது கடைசி தருணங்களில், சக்கரவர்த்தியிடம் வேறு எந்தப் பெண்ணிடமிருந்தும் குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என்று வாக்குறுதி பெற்றார்.

தான் கனவில் ஓர் அழகான அரண்மனையையும் தோட்டத்தையும் கண்டதாகவும் தனது நினைவாக அது போன்ற ஒரு கல்லறையை எழுப்பும்படியும் கோரினார்” என்று எழுதுகிறார்.

மும்தாஜ் ஜூன் 17, 1631 அன்று புர்ஹான்பூரில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். 14வது குழந்தையை பெற்றெடுக்கும் போது அவருக்கு 30 மணி நேரம் பிரசவ வலி ஏற்பட்டது.

முன்னதாக, ஷாஜகான் தனது மனைவியைக் கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் ஏழைகளுக்குப் பணத்தை விநியோகித்தார், ஆனால் மருத்துவர்களின் முயற்சிகளையும் மீறி அவர் உயிர் பிரிந்தது.

திடீரென நரைத்த தாடி

இனாயத் கான், “இந்த மரணம் ஷாஜஹானை மிகவும் மோசமாகப் பாதித்தது. அவர் ஒரு வாரம் முழுவதும் தனது அறையை விட்டு வெளியே வரவில்லை, அரண்மனையின் எந்த வேலையிலும் பங்கேற்கவில்லை.

அவர் இசையை ரசிப்பது, பாடுவது, நல்ல ஆடைகளை அணிவது என எல்லாவற்றையும் துறந்தார். அடுத்த இரண்டு வருடங்களுக்கு, மும்தாஜ் இறந்த புதன் கிழமைதோறும் வெள்ளை ஆடை மட்டுமே அணிந்தார். அழுது அழுது கண்கள் வலுவிழந்து, கண்ணாடி அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,” என்று எழுதுகிறார்.

ஷாஜகான்

 

“இந்தச் சம்பவத்திற்கு முன், அவரது தாடி மற்றும் மீசையில் சில வெள்ளை முடிகள் மட்டுமே இருந்தன, அதை அவர் கையால் பிடுங்கி எறிந்தார்.

ஆனால் சில நாட்களில், அவரது தாடியில் மூன்றில் ஒரு பங்கு வெள்ளையாக மாறியது. ஒரு கட்டத்தில் அவர் அரியணையைத் துறக்க முடிவு செய்தார்.

அவரும் மனதில் உறுதி பூண்டார், ஆனால் ராஜ்ஜியம் என்பது தனிப்பட்ட பிரச்னையால் கைவிட முடியாத ஒரு புனிதமான பொறுப்பு என்று நினைத்து அதைச் செய்யவில்லை,” என்று அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்தாஜ் மஹல் மும்முறை அடக்கம்

மும்தாஜ் மஹல் உடல் முதன்முதலில் புர்ஹான்பூரில் உள்ள தப்தி நதிக்கரையில் உள்ள தோட்டத்தில் புதைக்கப்பட்டது.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவரது உடல் அங்கிருந்து தோண்டி எடுக்கப்பட்டு 15 வயது இளவரசர் ஷா ஷுஜாவின் மேற்பார்வையில் ஆக்ராவுக்குக் கொண்டுவரப்பட்டது, அங்கு ஜனவரி 8, 1632 அன்று யமுனைக் கரையில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டார். ஆனால் இதுவும் அவரது இறுதி ஓய்விடமாக அமையவில்லை.

அங்குதான் ஷாஜகான் இன்னொரு கல்லறையைக் கட்டினார், அதற்கு அவர் ‘ரவுசா-இ-முனவ்வரா’ என்று பெயரிட்டார், இது பின்னர் தாஜ்மஹால் என்று அழைக்கப்பட்டது. இந்தக் கல்லறையைக் கட்டும் பொறுப்பு மிர் அப்துல் கரீம் மற்றும் மகர்மத் கான் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜஹாங்கீர் ஆட்சியின் போது தெற்கு இரானில் உள்ள ஷிராஸ் நகரத்திலிருந்து முகமத் கான் இந்தியாவிற்கு வந்தார். ஷாஜகான் அவரை தனது கட்டுமானத் துறை அமைச்சராக்கினார். 1641ஆம் ஆண்டு டெல்லியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஷாஜஹானாபாத்தின் புதிய நகரத்தில் செங்கோட்டையைக் கட்டும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மும்தாஜ் மஹல் முதல்முறை அடக்கம் செய்யப்பட்ட இடம்

தாஜ்மஹால் 1560களில் டெல்லியில் உள்ள ஹுமாயூனின் கல்லறையை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டது. இதற்காக 42 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அதன் நான்கு மினாரட்டுகள் 139 அடி உயரம் வரை அமைக்கப்பட்டு மேலே ஒரு குவிமாடம் அமைக்கப்பட்டது.

மகரானாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சலவைக்கல்

தாஜ்மஹாலைக் கட்ட முடிவு செய்த பிறகு, ஷாஜகானின் முதல் சவால் இந்தக் கல்லறைக்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பது.

தாஜ்மஹால் பற்றிய புத்தகத்தை எழுதிய டயானா மற்றும் மைக்கேல் ப்ரெஸ்டன், “ஷாஜஹானின் முதல் நோக்கம் தாஜ்மஹால் இருக்கும் இடம் அமைதியாகவும் ஆக்ரா நகரத்திலிருந்து விலகியும் இருக்க வேண்டும் என்பதுதான்.

இரண்டாவது நோக்கம் தொலைவிலிருந்தும் பார்க்கக்கூடிய அளவுக்குப் பெரிதான கட்டடமாக இருக்க வேண்டும் என்பது.

மூன்றாவது, அதன் தோட்டங்களுக்குத் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் யமுனை நதிக்கு அருகில் இருக்க வேண்டும் என்பது.

தான் வாழும் ஆக்ரா கோட்டையிலிருந்து தாஜ்மஹால் தெரியும்படி இருக்க வேண்டும் என்று ஷாஜகான் விரும்பினார். எனவே, ஆக்ரா கோட்டையிலிருந்து ஒன்றரை மைல் தொலைவில் அதை உருவாக்கினார்.”

தாஜ்மஹாலின் கட்டுமானப் பணி ஜனவரி 1632 இல் தொடங்கியது. அதுவரை ஷாஜகான் தெற்கில் இருந்தார்.

அப்போது இந்தியாவுக்கு வருகை தந்த பீட்டர் மண்டி, ‘ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பீட்டர் மண்டியின் பயணங்கள்’ என்ற தனது புத்தகத்தில், “முதலில் அந்த பகுதியை சுத்தம் செய்து நிலம் சமன் செய்யப்பட்டது.

அதன் பிறகு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகலாக உழைத்தனர். கட்டடம் கட்டவும்.ஆழமான அடித்தளம் தோண்டப்பட்டது.

அருகில் ஓடும் யமுனா நதியின் நீர் அதில் இறங்காமல் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் யமுனை நதியின் வெள்ளம் தாஜ்மஹாலை சேதப்படுத்தாமல் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. முதல் 970 அடி நீளம் மேலும் 364 அடி அகல மேடை கட்டப்பட்டு அதன் மீது கல்லறை கட்டப்பட்டது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

கட்டடத்தில் பயன்படுத்தப்பட்ட பளிங்கு 200 மைல் தொலைவில் உள்ள மக்ரானாவில் இருந்து கொண்டு வரப்பட்டது.

ஒரு போர்த்துகீசியப் பயணி சிபாஸ்டியாவோ மென்ரிக், “தாஜ்மஹாலில் பயன்படுத்தப்பட்ட சில பளிங்குத் துண்டுகள் மிகப் பெரியவை, அவை காளைகள் மற்றும் நீண்ட கொம்புகள் கொண்ட எருமைகள் மூலம் ஆக்ராவிற்கு கொண்டு செல்லப்பட்டன.

அவை பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட மாட்டு வண்டிகளில் கொண்டு வரப்பட்டன. இருபத்தைந்து முதல் முப்பது மாடுகள் அந்த வண்டியை இழுத்து வந்தன” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர்களின் கைகள் வெட்டப்பட்ட கதை புரளி

தாஜ்மஹாலைப் பற்றிய ‘தாஜ் மஹால் – பேஷன் அண்ட் ஜீனியஸ் அட் தி ஹார்ட் ஆஃப் த முகல் எம்பயர்’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்களான டயானா மற்றும் மைக்கேல் பிரஸ்டன், “தாஜ்மஹாலைக் கட்டுவதற்கு மூங்கில் மற்றும் மரக் கட்டைகள் மற்றும் செங்கற்களால் ஒரு சாரக்கட்டு செய்யப்பட்டது. வேலை முடிந்தது, எனவே ஷாஜஹானிடம் செங்கற்களின் சாரக்கட்டை இடிக்க ஐந்து வருடங்கள் ஆகும் என்று கூறப்பட்டது. இதையடுத்து கீழே இறக்கப்படும் அனைத்து செங்கற்களும் அந்தத் தொழிலாளர்களுடையது என்று ஷாஜஹான் உத்தரவிட்டார்.”

“இதன் விளைவு, ஒரே இரவில் சாரக்கட்டு இடிக்கப்பட்டது. தாஜ்மஹால் முழுமையாகக் கட்டப்படுவதற்கு முன்பே அதை வெளியாட்களின் கண்களில் இருந்து பாதுகாக்க அந்த சாரக்கட்டு கட்டப்பட்டது என்பது ஒரு கட்டுக்கதை.

ஒரு மனிதன் தாஜ்மஹாலை ஒருமுறை சுவருக்கு வெளியிலிருந்து பார்த்ததால் அவரது கண் பறிக்கப்பட்டது என்ற கதையும் கட்டுக்கதை தான்” என்று அந்தப் புத்தகம் குறிப்பிடுகிறது.

இந்த உலக அதிசயத்தை மீண்டும் உருவாக்க முடியாதபடி தாஜ்மஹாலைக் கட்டிய ஒவ்வொரு தொழிலாளியின் கைகளையும் ஷாஜஹான் வெட்டிய கதையை இங்குள்ள ஒவ்வொரு சுற்றுலா வழிகாட்டியும் சொல்கிறார்கள். ஆனால் இந்தச் சம்பவத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை, எந்த வரலாற்றாசிரியரும் குறிப்பிடவில்லை.

ஷாஜகானின் வாழ்க்கை வரலாற்றை ‘ஷாஜஹான் – த ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் த முகல் எம்பயர்” என்ற புத்தகமாக எழுதிய ஃபர்குஸ் நிக்கோல், “தாஜ்மஹாலைக் கட்டிய பெரும்பாலான தொழிலாளர்கள் கன்னோஜில் இருந்து வந்த இந்துக்கள்.

மலர்களைப் பராமரிப்பவர்கள் போகாராவிலிருந்து அழைக்கப்பட்டனர். காஷ்மீரின் ராம் லாலிடம் தோட்டத்தை உருவாக்கும் ஒப்படைக்கப்பட்டது,” என்று குறிப்பிடுகிறார்.

மேலும் தாஜ்மஹாலில் குர்ஆன் வசனங்களை செதுக்கும் பொறுப்பு அமானத் கானுக்கு வழங்கப்பட்டது. தாஜ்மஹாலில் தனது பெயரை எழுத ஷாஜகான் அனுமதித்த ஒரே நபர் இவர்தான்.

குர்ஆன் வசனங்களைத் தவிர, தாஜ்மஹாலில் உள்ள மலர் வேலைப்பாடுகள் மிகவும் கவர்ச்சியாக இருந்தன, இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ரஷ்ய எழுத்தாளர் ஹெலினா பிளாவட்ஸ்கி எழுதினார், “தாஜ்மஹாலின் சுவர்களில் உள்ள சில பூக்கள் மிகவும் தத்ரூபமாக இருந்தன. அவற்றைத் தொட, கைகள் தானாக நீளும்,” என்று குறிப்பிடுகிறார்.

சுவற்றில் புதைக்கப்பட்ட விலைமதிப்பில்லாத ரத்தினங்கள்

தாஜ்மஹாலின் கட்டடத்தில் ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஷாஜகான் ஆர்டர் செய்த 40 விதமான கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.

டயானா மற்றும் மைக்கேல் ப்ரெஸ்டன், “சீனாவின் காஷ்கரில் இருந்து பட்டுப் பாதையில் பச்சைக் கல் கொண்டு வரப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் உள்ள சுரங்கங்களில் இருந்து நீலக் கல் இறக்குமதி செய்யப்பட்டது. அரேபியாவில் இருந்தும் செங்கடலிலிருந்தும் பவளமும் திபெத்திலிருந்து டர்க்கைஸும் கொண்டு வரப்பட்டது.

பர்மாவில் இருந்து மஞ்சள் அம்பர் மற்றும் இலங்கையில் இருந்து ரூபி கொண்டு வரப்பட்டது.

லசுனியா கல் எகிப்தில் நைல் பள்ளத்தாக்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. சபையர் அசுபமாக கருதப்பட்டது, எனவே அவை அரிதாகவே பயன்படுத்தப்பட்டன” என்று குறிப்பிடுகிறார்கள்.

தாஜ் மஹால் உருவாக்க நான்கு கோடி ரூபாய் செலவு

ஷாஜஹான் கால வரலாற்றாசிரியர் அப்துல் ஹமீத் லஹோரி, தாஜ்மஹால் கட்டுவதற்கான செலவு அப்போதைய மதிப்பில் 50 லட்சம் ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மற்ற வரலாற்றாசிரியர்கள் இந்த விலை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மட்டுமே என்றும் கட்டடத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் மதிப்பு இதில் அடங்காது என்றும் நம்புகிறார்கள்.

பின்னர் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், சில வரலாற்று ஆய்வாளர்கள் தாஜ்மஹால் கட்டுவதற்கான செலவை அப்போதைய மதிப்பில் 4 கோடி ரூபாய் என மதிப்பிட்டுள்ளனர்.

கட்டடம் கட்டுவதற்கான அனைத்து பணமும் அரசு கருவூலம் மற்றும் ஆக்ரா மாகாண கருவூலத்தில் இருந்து கொடுக்கப்பட்டது.

இனிவரும் காலங்களில் தாஜ்மஹால் பராமரிப்புக்காக, முப்பது சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வரும் வருவாயை இப்பணிக்கு பயன்படுத்த வேண்டும் என்று ஷாஜகான் உத்தரவிட்டிருந்தார்.

மும்தாஜ் மஹல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகில் ஷாஜஹானும் அடக்கம்

1659இல் ஷாஜகானின் மகன் ஔரங்கசீப் தனது தந்தையைச் சிறையில் அடைத்தபோது, சில நாட்களுக்குப் பிறகு அவர் நோய்வாய்ப்பட்டார். தனக்கு இன்னும் அதிக நேரம் இல்லை என்று அவர் உணர்ந்தபோது, தாஜ்மஹாலை எப்போதும் பார்க்கக்கூடிய பால்கனியில் வைக்க வேண்டும் என்று அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

அதே பால்கனியில், காஷ்மீரி சால்வை போர்த்தப்பட்ட ஷாஜகான், 1666 ஜனவரி 21 அன்று இந்த உலகிலிருந்து விடைபெற்றார். அப்போது அவரது மகள் ஜஹான் ஆரா உடன் இருந்தார். சந்தன மரத்தால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் அவரது உடல் கிடத்தப்பட்டது.

அவரது மகள் இறுதிச் சடங்குகளை அரசு முறையில் செய்ய வேண்டும் என்று விரும்பினார், ஆனால் ஔரங்கசீப் அவரது விருப்பத்தை மதிக்கவில்லை. அவர் தாஜ்மஹாலில் அவரது மனைவி மும்தாஜ் மஹாலுக்கு அருகில் குர்ஆன் வசனங்களை ஓதப்பட, அடக்கம் செய்யப்பட்டார்.

ஆங்கிலேயர் காலத்தில் மதிப்பிழந்த தாஜ்மஹால்

முகலாயர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, 1803 இல், பிரிட்டிஷ் ஜெனரல் லேக் ஆக்ராவை ஆக்கிரமித்தார். இதன் பிறகு, தாஜ்மஹாலின் சுவர்களில் பதிக்கப்பட்டிருந்த மதிப்புமிக்க கற்கள், தரைவிரிப்புகள், சுவர் தொங்கும் பொருட்கள் மறையத் தொடங்கின.

ஆங்கிலேயர்கள் தாஜ்மஹாலின் உள்ளே அமைந்துள்ள மசூதியை வாடகைக்கு விட்டு அதைச் சுற்றி தேனிலவுக் குடில்களைக் கட்டினார்கள். கல்லறையின் மேடையில் இராணுவ இசைக் குழுக்கள் இசைக்கத் தொடங்கின, தாஜ்மஹால் தோட்டத்தில் பிக்னிக் பார்ட்டிகள் தொடங்கின.

இந்த நேரத்தில், 1830 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டிங்க் தாஜ்மஹாலை இடித்து அதன் பளிங்குகளை ஏலம் விட நினைத்தார் என்றும் வதந்தி பரவியது.

1857ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது, பிரிட்டிஷ் வீரர்கள் சில முகலாயக் கட்டடங்களைச் சேதப்படுத்தினர். அவற்றில் ஒன்று மும்தாஜ் மஹாலின் தந்தை ஆசஃப் கானின் அரண்மனை. ஆனால் தாஜ்மஹால் எப்படியோ பாதுகாப்பாக இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், பிரிட்டிஷ் வைஸ்ராய் கர்சன் பிரபு தாஜ்மஹாலைப் புதுப்பிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

1965ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் போது, அருகிலுள்ள விமானப்படை தளத்தின் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலை எதிர்பார்த்து, இந்திய அரசாங்கம் தாஜ்மஹாலை இரவில் மேலே இருந்து பார்க்க முடியாதபடி ஒரு பெரிய கருப்பு துணியை தைத்துப் போட்டது. இந்தத் துணி 1995ஆம் ஆண்டு வரை பாதுகாப்பாக இருந்தது. ஆனால் எலிகள் அதைக் கடித்துக் குதறிவிட்டன..

Share.
Leave A Reply

Exit mobile version