சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இரான் ஒரு கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளது.

இந்த தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையைச் (IRGC) சேர்ந்த ஏழு பேர் மற்றும் ஆறு சிரிய குடிமக்கள் கொல்லப்பட்டதாக சிரியாவுக்கான இரான் தூதர் தெரிவித்துள்ளார்.

ஒருபுறம், இந்த தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுக்க விரும்புகிறது. அதேவேளை, மத்திய கிழக்கில் ஒரு போரைத் தொடங்கும் வகையில் எதையும் செய்யவும் இரான் விரும்பவில்லை.

இரான் பதிலடி கொடுக்க தயாராகி வருவதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.

நாட்டின் உளவுத்துறை அதிகாரிகள் கூறியதை மேற்கோள் காட்டி, இரான் ஆளில்லா விமானங்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகளின் உதவியுடன் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் சிபிஎஸ் செய்தி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இரான் எப்போது, ​​எங்கு இந்தத் தாக்குதலை நடத்தும் என்பது அமெரிக்க அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. ரமலான் மாதத்தின் கடைசி வாரத்திற்கு இடையில் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் தாக்குதல் நடக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இரானுக்குள் இருந்து ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படுமா அல்லது இராக் மற்றும் சிரியாவின் மண் இதற்குப் பயன்படுத்தப்படுமா என்பது குறித்து அமெரிக்க உளவு நிறுவனத்திற்கும் அதிகம் தெரியவில்லை.

இதற்கிடையில், இரான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது. இது நடந்தால், மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு போர் தொடங்கும்.

இரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.

இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்?

இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலால், இரானுக்கு நேரடியான பாதிப்புகள் ஏற்படும். மறுபுறம், இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்கு இரான் பதிலளிக்கத் தவறினால், அதன் இராணுவத் திறன்களும் கேள்விக்குட்படுத்தப்படும்.

இதன் விளைவு, இரானை பலவீனமாகக் கருதும் இஸ்ரேல் எதிர்காலத்தில் அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் செயல்படும்.

இரான் முன் உள்ள சவால், அது தன்னை பலவீனமாக காட்டிக்கொள்ளக் கூடாது. எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கும் திறமை தன்னிடம் உள்ளது என்பதை அது நிரூபிக்க வேண்டும்.

ஆனால் சிரமம் என்னவென்றால், மத்திய கிழக்கில் ஒரு பெரிய போரைத் தொடங்காமல் இரான் இஸ்ரேலுக்கு எவ்வாறு பதிலளிக்க முடியும்? மற்றொரு கேள்வி என்னவென்றால், இஸ்ரேலைத் தாக்கும் இராணுவ, அரசியல் மற்றும் பொருளாதாரத் திறன் இரானுக்கு இருக்கிறதா?

இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபடும் திறன் இரானுக்கு இல்லை என்று மத்திய கிழக்கு விவகார ஆய்வாளரும் எழுத்தாளருமான அலி சத்ரசாதே பிபிசியிடம் தெரிவித்தார்.

“இரான், தங்கள் நாட்டு மக்களுக்காகவாவது கண்டிப்பாக இஸ்ரேலுக்கு பதிலளிக்க வேண்டும். இது தவிர, தனது நட்பு நாடுகளுடன் நம்பகத்தன்மையைப் பராமரிக்க இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இரான், இஸ்ரேல் மீது எவ்வளவு கோபமாக இருந்தாலும் பரவாயில்லை. இஸ்ரேலுக்கு எதிராக இரான் எந்த ஒரு வலுவான பதிலடியையும் கொடுக்கும் சாத்தியம் குறைவு. எனவே இரான் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.” என்கிறார் அலி சத்ரசாதே.

தொடர்ந்து பேசிய அவர், “தற்போது இரானின் முன்னுரிமை அணுகுண்டு தயாரிப்பதே. ஒரு சில பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி 100 இஸ்ரேலியர்களைக் கொல்வதை விட அணுகுண்டு தயாரிப்பில் முன்னேறுவது தான் அந்நாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் எதிர்காலத்தில் இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்காவின் தாக்குதலையும் இரான் தடுத்து நிறுத்தும்” என்றார்.

ஹெஸ்புல்லாவின் நிலைப்பாடு என்ன?

காசாவில் போர் தொடங்கியதில் இருந்து, பல இரான் ஆதரவு குழுக்கள் சிரியா, இராக், லெபனான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் இஸ்ரேலிய குழுக்களைத் தாக்கியுள்ளன. இருப்பினும், அவர்களின் செயல்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்கள் இஸ்ரேலுடன் நேரடிப் போரில் ஈடுபட விரும்பவில்லை.

“இரான் ஆதரவு குழுக்கள் இஸ்ரேலிய தூதரகத்தை தாக்குவது பற்றி யோசிக்கக் கூட மாட்டார்கள், அவ்வாறு தாக்குவது மிகவும் கடினம்.” என்கிறார் அலி சத்ரசாதே.

உலகிலேயே மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுதக் குழுவாக உள்ளது ஹெஸ்புல்லா. இது ஒரு நாட்டின் இராணுவ அமைப்பு இல்லை என்றாலும், இதில் இருபதாயிரம் முதல் ஐம்பதாயிரம் போராளிகள் உள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் நன்கு பயிற்சி பெற்றவர்கள். சிரியப் போரில் பங்கேற்றதன் மூலம், போர்க்கள அனுபவத்தைப் பெற்றுள்ளார்கள்.

இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லாவிடம் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

இருந்த போதிலும், இரான் சார்பாக ஹெஸ்புல்லா இனி இஸ்ரேலுடன் நேரடிப் போரில் ஈடுபடாது என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

ஹெஸ்புல்லா இஸ்ரேலின் வலையில் விழ விரும்பவில்லை என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். ஏனெனில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போரை விரிவுபடுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்கிறார் என்பது நன்றாகவே தெரியும்.

இந்தப் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைப் பொறுத்தே நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலமும் உள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இஸ்ரேலுடன் நேரடிப் போரை நடத்தாமல் ஒரு குறியீட்டு பதிலடியை தான் இரான் எதிர்பார்க்கிறது என்று மத்திய கிழக்கு நிபுணர் சத்ரசாதே நம்புகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, இராக்கில் இரானின் உயர்மட்ட தளபதி காசிம் சுலேமானி படுகொலை செய்யப்பட்டார். இதற்கு ‘கடுமையான பழிவாங்கும் நடவடிக்கை’ எடுக்கப்படும் என இரான் அச்சுறுத்தியது, ஆனால் உண்மையில் அது நடக்கவில்லை.

சுலேமானியின் படுகொலைக்கு பதிலளிக்கும் விதமாக, இராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது இரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. ஆனால் அந்த தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை.

தாக்குதலுக்கு முன்னதாகவே ஏவுகணைகள் குறித்து அமெரிக்க ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வர்ஜீனியா டெக்கின் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் அண்ட் இன்டர்நேஷனல் அஃபர்ஸைச் சேர்ந்த யூசுப் அஸிஸி பிபிசியிடம், “திரைக்குப் பின்னால் இரானுக்குள் இரு சக்திகள் இருக்கின்றன. அவற்றுக்கு இடையே ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, இரான் அணுசக்தி நாடாக மாறுவதன் மூலம் இஸ்ரேலின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒரு பக்கம் விரும்புகிறது, மறுபுறம் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கி பதிலடி கொடுக்க விரும்புகிறது.

இந்தச் சூழ்நிலையில் பொறுமையாக இருந்து, அணுசக்தியை மேம்படுத்துவதுதான் இரானின் முன்னுரிமையாக இருக்கலாம் என்கிறார் அவர்.


மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்

மத்திய கிழக்கில் பெரிய போர் எதுவும் வெடிப்பதை இரான் விரும்பவில்லை. இரானுக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன. ஒன்று, அமெரிக்க வீரர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நிறுவனங்களைத் தாக்கும் ஆயுதக் குழுக்களுக்கு அது தொடர்ந்து ஆதரவளிக்கிறது.

இரண்டாவதாக இரான் தனது அணுசக்தி திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இரானின் அணுசக்தி திட்டத்தை நிறுத்த விரும்புகின்றன.

செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, அமெரிக்க அதிகாரிகள் இரானை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

இது தவிர, இராக் மற்றும் சிரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தனது ராணுவ வீரர்கள் மீது இரான் ஆதரவு குழுக்கள் நடத்தக் கூடிய தாக்குதல்கள் குறித்தும் அமெரிக்கா கண்காணித்து வருகிறது.

எவ்வாறாயினும், சிரியா மற்றும் இராக்கில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது இரான் ஆதரவு குழுக்கள் நடத்திய தாக்குதல்கள் குறித்து அமெரிக்க உளவுத் துறையால் இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

இரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் துணைத் தலைவர் முகமது ஜம்ஷிதி தனது சமூக ஊடகப் பக்கத்தில், “உங்களுக்கு தீங்கு ஏற்படாத வண்ணம், விலகி இருங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

தனது சமூக ஊடகச் செய்திக்குப் பிறகு, அமெரிக்க தளங்களைத் தாக்க வேண்டாம் என்று இரானிடம் அமெரிக்கா கேட்டுக் கொண்டதாக ஜம்ஷிதி கூறினார்.

இரானிடம் இருந்து அமெரிக்காவிற்கு எழுத்துப்பூர்வ செய்தி வந்துள்ளதாக அமெரிக்க செய்தி சேனலான சிபிஎஸ் (CBS) உறுதிப்படுத்தியுள்ளது.

இரானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு எச்சரிக்கை கடிதத்தையும் அமெரிக்கா எழுதியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சிபிஎஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இஸ்ரேலிய தாக்குதல்களை ஒரு சாக்காகப் பயன்படுத்தி அமெரிக்க நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்று வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

ஒருபுறம், எதிர்காலத்தில் தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் துணியக்கூடாது என்று இரான் விரும்புகிறது, மறுபுறம் மத்திய கிழக்கில் புதிய போரைத் தொடங்கவும் இரான் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் இரான் குழப்பத்தில் உள்ளது.

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் சர்வதேச உறவுகளின் பேராசிரியர் ஃபவாஸ் கெர்ஜஸ் பிபிசியிடம் பேசுகையில், “இரான் உண்மையில் ஒரு ‘காகிதப் புலி’ என்பதை உலகிற்கு காட்ட, இஸ்ரேல் ஒரு பதற்றத்தை உருவாக்க விரும்புகிறது” என்று கூறினார்.

“இந்த விஷயத்தில் இரான் பதிலளிக்கவில்லை என்றால், அது ஒரு ‘காகிதப் புலி’ தான் என்றும், பதிலடி கொடுக்கும் திறன் அதற்கு இல்லை என்ற செய்தியை உலகிற்கு அனுப்பும்,” என்று ஒரு பெயர் கூற விரும்பாத அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இரானின் உயர்மட்ட தளபதி காசிம் சுலேமானி இராக்கில் படுகொலை செய்யப்பட்டார்.

இப்போது இரான் என்ன செய்யும்?

இந்த சூழ்நிலையில், இஸ்ரேலிய தூதரகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு யூத நிறுவனங்களை இரான் தாக்கக் கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான கவுன்சில் ஆன் ஃபாரின் ரிலேஷன்ஸின் மத்திய கிழக்கு நிபுணர் எலியட் ஆப்ராம்ஸ், “இஸ்ரேலுடன் முழு அளவிலான போரை இரான் விரும்பவில்லை. இருப்பினும், இஸ்ரேலின் நலன்கள் தொடர்பான பல்வேறு இடங்களை அது தாக்கக் கூடும்”, என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இரான் தனது அணுசக்தி திட்டத்தை விரைவுபடுத்துவதன் மூலம் பதிலடி கொடுக்க முடியும். யுரேனியத்தை சிறப்பாக செறிவூட்டுவதன் மூலம், அணு குண்டுகளை தயாரிக்க அதை பயன்படுத்த முடியும் அல்லது இரான் அணு ஆயுதங்களை மறுவடிவமைப்பு செய்யத் தொடங்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

ஆனால் இந்த நடவடிக்கை இரானுக்கு பாதகமாக அமையக்கூடும் என்று பல பார்வையாளர்கள் நம்புகிறார்கள். இரான் இதைச் செய்தால், அமெரிக்காவும் இஸ்ரேலும் அதைத் தாக்க முன்வரும்.

வாஷிங்டனை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான சிஎஸ்ஐஎஸ் அமைப்பின் (Center for Strategic and International Studies) மத்திய கிழக்கு நிபுணர் ஜான் ஆல்டர்மேன், இஸ்ரேலிய தூதரகத்தை தாக்குவது போன்ற நடவடிக்கைகளை இரான் எடுக்காது என்று நம்புகிறார்.

“இஸ்ரேலுக்கு பாடம் கற்பிப்பதில் இரானுக்கு விருப்பமில்லை. அதற்கு பதிலாக, தாங்கள் பலவீனமாக இல்லை என்பதை அதன் நட்பு நாடுகளுக்கு காட்டவே இரான் விரும்புகிறது” என்று ஜான் கூறுகிறார்.

இரான் இனி எந்தப் பாதையில் செல்லும்? இந்த விவகாரம் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் முடிவைப் பொறுத்து தான் அமையும்.

Share.
Leave A Reply

Exit mobile version