எழுதியவர், சுனேத் பெரேரா மற்றும் இஸ்ஸாரியா ப்ரைதோங்யம்
பதவி, பிபிசி உலக சேவை
“அவர்கள் என் உடைகளை கழற்றி என்னை நாற்காலியில் உட்கார வைத்து, என் காலில் மின்சாரம் பாய்ச்சினார்கள். இது என் வாழ்க்கையின் முடிவு என்று நான் நினைத்தேன்.”
ஐடி வேலையில் சேருவதற்காக ரவி, தாய்லாந்திற்குச் சென்றார். ஆனால் பாங்காக்கில் ஒரு உயரமான அலுவலக கட்டிடத்தில் உட்காருவதற்கு பதிலாக இலங்கையை சேர்ந்த இந்த 24 வயது நபர் மியான்மரில் ஒரு இருண்ட வளாகத்தில் மாட்டிக்கொண்டார்.
தாய்லாந்து எல்லை நகரமான மே சோட் அருகே அவர் கடத்தப்பட்டு ஆற்றின் குறுக்கே அழைத்து செல்லப்பட்டார்.
ஆன்லைன் மோசடிகளை நடத்தும் சீன மொழி பேசும் கும்பலின் தலைமையிலான பல முகாம்களில் ஒன்றிற்கு தான் விற்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.
ரவி போன்ற கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களை நீண்ட மணிநேரங்களுக்கு இந்த மோசடிகளில் வேலை செய்யும்படி அவர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள்.
போலியான ஆன்லைன் அடையாளங்களைப் பயன்படுத்தி பெண்களாக தங்களை காட்டிக்கொண்டு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தனியாக இருக்கும் ஆண்களை ஏமாற்றி சிக்க வைக்கிறார்கள்.
சிக்கிக் கொண்டவர்களிடம் விரைவான லாபம் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்படுகிறது. போலி வர்த்தக தளத்தில் பெரிய தொகையை முதலீடு செய்ய அவர்கள் வற்புறுத்தப்படுகின்றனர்.
ரவியின் “சைபர் அடிமை” முகாம் மியாவாடியில் ஒரு காட்டில் இருந்தது. இந்தப் பகுதி மியான்மர் ராணுவ அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இல்லை.
ஆசியா, கிழக்கு ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்கள் கணினி தொடர்பான வேலைகள் என்ற வாக்குறுதியுடன் இந்த சைபர் குற்ற முகாம்களில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்று இன்டர்போல் தெரிவிக்கிறது.
கட்டளைகளை பின்பற்ற மறுப்பவர்கள் தாக்கப்படுகிறார்கள், சித்ரவதை செய்யப்படுகிறார்கள் அல்லது பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுகிறார்கள்.
“அவர்களுக்கு கீழ்ப்படியாததால் நான் 16 நாட்கள் ஒரு செல்லில் பூட்டப்பட்டிருந்தேன். அவர்கள் எனக்கு தண்ணீரை மட்டுமே குடிக்க கொடுத்தார்கள். அதில் சிகரெட் துண்டுகள் மற்றும் சாம்பல் கலந்திருக்கும்,” என்று ரவி பிபிசியிடம் கூறினார்.
“நான் செல்லில் இருந்த ஐந்தாவது அல்லது ஆறாவது நாளில் இரண்டு பெண்கள் பக்கத்து அறைக்கு அழைத்து வரப்பட்டனர். என் கண் முன்னே 17 பேர் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்தனர்,” என்று அவர் கூறினார்.
“ஒரு பெண் ஃபிலிப்பைன்ஸ் நாட்டவர். பாதிக்கப்பட்ட மற்றவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை.”
கடத்தப்படுபவர்கள் யார்?
மியான்மரில் 1,20,000 க்கும் அதிகமானவர்களும், கம்போடியாவில் 1,00,000 பேரும் சட்டவிரோத சூதாட்டம் முதல் கிரிப்டோகரன்சி மோசடி வரையிலான ஆன்லைன் மோசடிகளில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதாக 2023 ஆகஸ்டில் ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.
லாவோஸ், ஃபிலிப்பைன்ஸ், மலேஷியா, தாய்லாந்து மற்றும் ஓரளவிற்கு வியட்நாமும் ஆன்லைன் மோசடிகளின் மையமாக இருப்பதாக சென்ற ஆண்டின் இண்டர்போல் அறிக்கை கூறுகிறது.
இந்தப் போக்கு பிராந்திய பிரச்னையிலிருந்து உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக வளர்ந்துள்ளது. பல நாடுகள் மோசடியின் மையமாக அல்லது தற்காலிக தங்கும் இடங்களாக உள்ளன என்று இண்டர்போல் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.
கம்போடியாவிற்கு கடத்தப்பட்ட தனது 250 குடிமக்களை இதுவரை மீட்டுள்ளதாக இந்த மாத தொடக்கத்தில் இந்திய அரசு அறிவித்தது. மார்ச் மாதத்தில் சீனா தனது நூற்றுக்கணக்கான குடிமக்களை மியான்மரில் உள்ள மோசடி மையங்களில் இருந்து திரும்ப அழைத்து வந்தது.
இந்த மையங்களை மூடுமாறு மியான்மரின் ராணுவ அரசு மற்றும் ஆயுதக் குழுக்களின் மீதான அழுத்தத்தை சீனா அதிகரித்து வருகிறது.
மியான்மரில் நான்கு வெவ்வேறு இடங்களில் சிக்கிக்கொண்டுள்ள தனது 56 குடிமக்கள் பற்றி இலங்கை அதிகாரிகள் அறிந்துள்ளனர். அவர்களில் எட்டு பேர் சமீபத்தில் மியான்மர் அதிகாரிகளின் உதவியுடன் மீட்கப்பட்டதாக மியான்மருக்கான இலங்கை தூதர் ஜனக பண்டாரா, பிபிசியிடம் தெரிவித்தார்.
புலம்பெயர தயாராக இருக்கும் பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் முகாம்களை நடத்துபவர்கள் குறிவைப்பதற்கு வசதியாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தெற்காசியாவிலிருந்து ஆயிரக்கணக்கான பொறியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி இடம்பெயர்கின்றனர்.
பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கையை விட்டு வெளியேற கணினி வல்லுனர் ரவி ஆசைப்பட்டார். உள்ளூர் ஆட்சேர்ப்பாளர் ஒருவர் பாங்காக்கில் டேட்டா என்ட்ரி வேலைகளை வழங்குவதை அவர் அறிந்தார்.
நிறுவனம் அவருக்கு அடிப்படை சம்பளமாக 370,000 இலங்கை ரூபாய் (1,200 டாலர்கள்) கொடுக்கும் என்று இந்த பணியமர்த்துபவர் உறுதியளித்தார்.
இந்த புதிய வேலைக்குச் சென்றால் வீடு கட்ட முடியும் என்று புதுமணத் தம்பதியான ரவியும் அவரது மனைவியும் கனவு கண்டனர். எனவே உள்ளூர் ஏஜெண்டிற்கு பணம் செலுத்த பல்வேறு இடங்களிலிருந்து அவர்கள் கடன் வாங்கினர்.
தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கடத்தல்
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரவி உட்பட ஒரு இலங்கையர் குழு முதலில் பாங்காக்கிற்கும், பின்னர் மேற்கு தாய்லாந்தில் உள்ள மே சோட் நகரத்திற்கும் அனுப்பப்பட்டனர்.
“நாங்கள் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். ஆனால் விரைவில் இரண்டு துப்பாக்கி ஏந்தியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டோம். அவர்கள் எங்களை ஒரு ஆற்றை கடக்க வைத்து மியான்மருக்கு அழைத்துச் சென்றனர்” என்று ரவி கூறினார்.
பின்னர் அவர்கள் சீன மொழி பேசும் கேங்ஸ்டர்களால் நடத்தப்படும் முகாமுக்கு மாற்றப்பட்டனர். புகைப்படம் எடுக்கக் கூடாது என்று மிரட்டப்பட்டனர்.
“நாங்கள் பயந்து போனோம். இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட சுமார் நாற்பது இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் முகாமில் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்” என்றார் அவர்.
உயரமான சுவர்கள் மற்றும் முள் கம்பிகள் காரணமாக இந்த வளாகங்களில் இருந்து தப்பிப்பது கடினம் என்று ரவி கூறினார். மேலும் நுழைவாயில்களை துப்பாக்கி ஏந்தியவர்கள் எந்த நேரமும் காவல் காக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
தானும் மற்றவர்களும் ஒரு நாளைக்கு 22 மணிநேரம் வரை வேலை செய்ய வேண்டியிருந்தது என்றும் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் மட்டுமே விடுமுறை கிடைத்தது என்றும் ரவி கூறினார். ஒவ்வொரு நாளும் அவர்கள் குறைந்தது மூன்று நபர்களை குறிவைக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
கீழ்ப்படியாதவர்கள் பணம் கொடுத்து விட்டு வெளியேறும்வரை அடி மற்றும் சித்ரவதைகளை எதிர்கொண்டனர்.
அப்படிச்செய்த ஒருவர், மேற்கு இந்தியாவில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நீல் விஜய். 21 வயதான அவர் 2022 ஆகஸ்டில் ஐந்து இந்திய ஆண்கள் மற்றும் இரண்டு ஃபிலிப்பைன்ஸ் பெண்களுடன் மியான்மருக்கு கடத்தப்பட்டார்.
தனது தாயின் பால்ய நண்பர் பாங்காக்கில் உள்ள ஒரு கால் சென்டரில் தனக்கு வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்ததாகவும், ஏஜெண்ட் கட்டணமாக 1,50,000 இந்திய ரூபாய் (1,800 டாலர்கள்) வசூலித்ததாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“சீன மொழி பேசுபவர்களால் நடத்தப்படும் பல நிறுவனங்கள் இருந்தன. அவை அனைத்துமே மோசடி நிறுவனங்கள். நாங்கள் அந்த நிறுவனங்களுக்கு விற்கப்பட்டோம்,” என்று நீல் கூறினார்.
“நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது, நான் நம்பிக்கை இழந்தேன். என்னுடைய அம்மா அவர்களுக்கு பிணைத்தொகையை தந்திருக்கவில்லை என்றால் மற்றவர்களைப் போல நானும் சித்ரவதை செய்யப்பட்டிருப்பேன்,” என்றார் அவர்.
இந்த மோசடி வேலையில் நீல் ஈடுபட மறுத்ததால் அவரை விடுவிக்க நீலின் குடும்பம் அந்த கும்பலுக்கு 6,00,000 இந்திய ரூபாய்களை (7,190 டாலர்கள்) கொடுத்தது.
ஆனால் இலக்கை அடையத் தவறியவர்களுக்கு மற்றும் பிணைத்தொகை கொடுக்க முடியாதவர்களுக்கு அளிக்கப்பட்ட கொடூரமான தண்டனைகளை அவர் தனது கண்களால் கண்டார்.
அவர் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து தாய்லாந்து அதிகாரிகள் அவர் இந்தியா திரும்புவதற்கு உதவினார்கள். அங்கு அவரது குடும்பத்தினர் உள்ளூர் பணியமர்த்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களை அவரவர் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க தாய்லாந்து அதிகாரிகள் மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இருப்பினும் அண்டை நாடுகளில் செயல்படும் முகாம்களில் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்று தாய்லாந்து நீதித்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
“உலகத்துடன் தொடர்பு கொள்வதில் நாங்கள் அதிகம் பணியாற்ற வேண்டும். மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் விதமாக இந்த குற்ற கும்பல்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,” என்று தாய்லாந்தின் சிறப்பு புலனாய்வுத் துறையின் (டிஎஸ்ஐ) துணை இயக்குநர் ஜெனரல் பியா ரக்சகுல் கூறினார்.
இந்தியா மற்றும் இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் ‘வருகை விசா’ வுடன் தாய்லாந்திற்குள் நுழைய முடியும். எனவே மனித கடத்தல்காரர்கள் பெரும்பாலும் பிராந்தியத்திற்குள் ஒரு பயண மையமாக பாங்காக்கை பயன்படுத்துகின்றனர் என்று அவர் கூறுகிறார்.
”குற்றவாளிகள் இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தங்களுக்காக வேலை செய்ய மக்களை கடத்திக்கொண்டு செல்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.
மோசடி எவ்வாறு நடக்கிறது?
பணக்காரர்களை குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களை குறிவைக்க தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக ரவி குறிப்பிட்டார்.
திருடப்பட்ட தொலைபேசி எண்கள், சமூக ஊடகங்கள் மற்றும் செய்தியிடல் தளங்களைப் பயன்படுத்தி காதல் உறவுகளை உருவாக்குவதன் மூலம் இந்த மோசடி நடப்பதாக அவர் சொன்னார்.
அவர்கள் குறிவைக்கப்பட்டவர்களை நேரடியாக தொடர்புகொண்டனர். பொதுவாக முதல் செய்தி ஒரு எளிய “ஹாய்” என்பதாக இருக்கும். அது தவறாக அனுப்பப்பட்டதாக முதலில் நம்பவைக்கப்படும். சிலர் இந்த செய்திகளை புறக்கணித்துவிடுவார்கள். ஆனால் தனிமையில் இருப்பவர்கள் அல்லது செக்ஸ் தேடுபவர்கள் பெரும்பாலும் இதில் சிக்கிக் கொள்வார்கள் என்று ரவி கூறுகிறார்.
இலக்கு வைக்கப்பட்டவர்கள் இதில் சிக்கியதும் அவர்களை மேலும் கவர்ந்திழுக்க, முகாமில் இருக்கும் இளம் பெண்களை கட்டாயப்படுத்தி எடுக்கப்பட்ட ஆபாச படங்கள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஒரு சில நாட்களுக்குள் நூற்றுக்கணக்கான செய்திகளை பரிமாறிக் கொண்ட பிறகு மோசடி செய்பவர்கள் இந்த நபர்களின் நம்பிக்கையைப் பெறுவார்கள். போலி ஆன்லைன் வர்த்தக தளத்தில் பெரிய தொகையை முதலீடு செய்வதற்கு அவர்களை நம்ப வைப்பார்கள்.
போலி செயலிகள், தவறான முதலீடு மற்றும் லாபத் தகவல்களைக் காட்டும்.
“யாராவது 100,000 டாலர்கள் அனுப்பி வைத்தால் அது அவர்களின் லாபம் என்று கூறி 50,000 டாலர்கள் திருப்பி அனுப்பி வைப்போம். இப்போது தங்களிடம் 1,50,000 டாலர்கள் இருக்கிறது என்ற எண்ணத்தை இது ஏற்படுத்துகிறது.
ஆனால் உண்மையில் அவர்கள் ஆரம்பத்தில் அளித்த தொகையின் பாதியை மட்டுமே திரும்பப் பெறுகிறார்கள். இன்னொரு பாதி எங்களிடம் இருக்கும்,” என்று ரவி விளக்கினார்.
மோசடி செய்பவர்கள், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தங்களால் இயன்ற அளவு பணத்தை எடுத்த பிறகு செய்தியிடல் கணக்குகள் மற்றும் சமூக ஊடக சுயவிவரங்கள் மறைந்துவிடும்.
இந்த செயல்பாட்டின் அளவை மதிப்பிடுவது கடினம். ஆனால் அமெரிக்காவில் நம்பிக்கை அல்லது காதல் மோசடிகள் தொடர்பாக 17,000 க்கும் மேற்பட்ட புகார்கள் இருப்பதாகவும், மொத்த இழப்பு 652 மில்லியன் டாலர்கள் என்றும் FBI தனது 2023 இன் இணைய குற்ற அறிக்கையில் கண்டறிந்துள்ளது.
உளவியல் மற்றும் உடல் காயங்கள்
ஒரு மாத சிறைக்குப் பிறகு ரவி, தான் முதலில் பணிபுரிந்த “கம்பெனி” “திவாலானதால்” வேறொரு கும்பலுக்கு விற்கப்பட்டதாகக் கூறுகிறார். அவர் மியான்மரில் சிக்கியிருந்த ஆறு மாதங்களில் மூன்று வெவ்வேறு கும்பல்களிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
தன்னால் இனி யாரையும் ஏமாற்ற முடியாது என்றும் தன்னை இலங்கை திரும்ப அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தனது புதிய கேங்க் மாஸ்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.
ஒரு நாள் டீம் லீடருடன் ஏற்பட்ட மோதல் சண்டைக்கு வழிவகுத்தது. ரவி ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 16 நாட்கள் சித்ரவதை செய்யப்பட்டார்.
கடைசியாக, “சீன முதலாளி” ரவியை சந்திக்க வந்து, அவருக்கு மீண்டும் வேலை செய்ய “கடைசி வாய்ப்பு” கொடுத்தார். கணினி
மென்பொருளில் அவருக்கு இருந்த நிபுணத்துவம் காரணமாக இந்த வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட்டது.
“எனக்கு வேறு வழி இருக்கவில்லை. அதற்குள் எனது பாதி உடல் செயலிழந்துவிட்டது,” என்று ரவி குறிப்பிட்டார்.
மியான்மரில் உள்ள இத்தகைய முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒருவர் எல்லைக்கு செல்லும் போது இந்த படத்தை எடுத்தார்.
அடுத்த நான்கு மாதங்களுக்கு, VPNகள், செயற்கை நுண்ணறிவு செயலிகள் மற்றும் 3D வீடியோ கேமராக்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட பேஸ்புக் கணக்குகளை ரவி நிர்வகித்தார்.
இதற்கிடையில், நோய்வாய்ப்பட்ட தனது தாயை சந்திக்க இலங்கை செல்ல அனுமதி கேட்டார் ரவி.
6,00,000 இலங்கை ரூபாய் (2,000 டாலர்கள்) மற்றும் ஆற்றைக் கடந்து தாய்லாந்திற்குள் செல்ல கூடுதலாக 200,000 ரூபாய் (650 டாலர்கள்) செலுத்தினால் அவரை விடுவிக்க கும்பல் தலைவர் ஒப்புக்கொண்டார்.
ரவியின் பெற்றோர் வீட்டை அடமானமாக வைத்து கடன் வாங்கி அவருக்கு அனுப்பி வைத்தனர். ரவி மீண்டும் மே சோட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விசா இல்லாததற்காக விமான நிலையத்தில் அவருக்கு 20,000 தாய் பாத் (550 டாலர்) அபராதம் விதிக்கப்பட்டபோது ரவியின் பெற்றோர் மேலும் கடன் வாங்க வேண்டியிருந்தது.
“நான் இலங்கைக்கு வந்தபோது, என்னிடம் 18,50,000 ரூபாய் (6,100 டாலர்கள்) கடன் இருந்தது,” என்று அவர் கூறினார்.
அவர் இப்போது வீடு திரும்பிவிட்டார், ஆனாலும் தனது புது மனைவியைப் பார்க்க ரவிக்கு நேரமில்லை.
”இந்த கடனை அடைக்க இரவு பகலாக கேரேஜில் உழைக்கிறேன். எங்கள் இருவருடைய திருமண மோதிரங்களையும் அடமானம் வைத்துள்ளோம்” என்று மனக் கசப்புடன் அவர் கூறினார்.