உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் படுத்து உறங்கும் பயணிகளிடம் தாமும் படுத்தப்படியே செல்பொன் திருடும் நபரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் படுத்துறங்கும் பயணிகள் தம்முடைய செல்போன் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போவதாக ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக பயணிகளிடம் இருந்து பல திருட்டு புகார்கள் வந்ததைத் தொடர்ந்து களத்தில் ரயில்வே போலீசார் இறங்கியுள்ளனர்.

அதன்படி, ரயில்வே போலீசின் பொறுப்பு அதிகாரி சந்தீப் தோமர், ஸ்டேஷன் வளாகத்தில் இருந்த பல கேமராக்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.

அந்த வகையில், பயணிகளின் காத்திருப்பு அறையில் இருந்த கேமரா ஒன்று ஆய்வு செய்யப்பட்டது. அதில், பயணிகள் சிலர் ஓய்வுக்காக தரையில் படுத்துக்கிடக்கின்றனர்.

அதில், ஒரு நபர் திடீரென எழுந்து, எவரேனும் தன்னை கவனிக்கிறார்களா என சுற்றும்முற்றும் பார்க்கிறார்.

அப்போது, சிலர் புரண்டு படுப்பதைத் தொடர்ந்து அந்த நபர் மீண்டும் தலையைச் சாய்த்துக் கொள்கிறார்.

அதன்பின்னர், தனக்கு அருகில் இருக்கும் ஒருவரின் பேண்ட் பாக்கெட்டில் கையைவிட்டு செல்போனை எடுத்துக் கொள்கிறார்.

அடுத்து, இதேபோல் வேறு ஒரு பயணிக்கு அருகே சென்று படுத்துக்கொள்கிறார். அப்போதும் தம்மை யாரும் கவனிக்காததை உறுதி செய்தபிறகு, அந்த பயணியின் பேண்ட் பாக்கெட்டில் இருந்தும் செல்போனை எடுத்துக் கொண்டபின்பு, அங்கிருந்து வெளியேறுகிறார்.

இதைக் கண்ட ரயில்வே போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய ரயில்வே போலீசார், செல்போனைத் திருடும் நபரைக் கைது செய்துள்ளனர்.

அவர், இடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் அவ்னீஷ் சிங் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

அந்நபரிடம் இருந்து 1 செல்போனை போலீசார் கைப்பற்றினர். இதுவரை, தாம் 5 செல்போன்களை திருடியதாக போலீசில் அவர் ஒப்புக்கொண்டதைத் தொடரது அவர்மீது திருட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், அவரிடமிருந்து மற்ற செல்போன்களை மீட்கும் பணியில் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version