கெய்ரோவில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தையில், இஸ்ரேல் மேற்கொண்டுள்ள போர் நிறுத்த முன்மொழிவு ஒன்றை ஹமாஸ் நிராகரித்ததாக அந்த அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ள நிலையில் காசாவில் இடம்பெயர்ந்த மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா மீதான படையெடுப்புக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகும் தெரிவித்துள்ளார்.
கெய்ரோவில் இடம்பெறும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் தனது பிரதிநிதிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுப்பியதோடு, அதில் கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்களுடன் அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. தலைவர் வில்லியம் பர்ன்ஸும் பங்கேற்றுள்ளார்.
இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்காவின் அழுத்தம் அதிகரித்திருக்கும் நிலையிலேயே பர்ன்ஸின் பங்கேற்பு இடம்பெற்றிருப்பதோடு காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றுமு; பலஸ்தீன மக்களுக்கு உதவிகள் செல்வதை அனுமதிப்பது போன்ற விவகாரங்கள் இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய அவதானம் செலுத்தப்படுகிறது.
எனினும் மூத்த ஹமாஸ் அதிகாரியான அலி பரகா, ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கூறியதாவது, ‘எகிப்து தரப்பினர் எமக்கு வழங்கிய இஸ்ரேலின் புதிய முன்மொழிவுகளை நாம் நிராகரித்தோம். அரசியல் குழு கூடி இது பற்றி தீர்மானிக்கும்.’
பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று மற்றொரு ஹமாஸ் அதிகாரி ரோய்ட்டர்ஸுக்கு குறிப்பிட்டுள்ளார் ‘ஆக்கிரமிக்காளர்களின் (இஸ்ரேல்) முடிவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதோடு கெய்ரோ பேச்சுவார்த்தைகளில் புதிதாக எதுவும் இடம்பெறவில்லை’ என்று தெரிவித்தார்.
எனினும் குறிப்பிடப்பட்ட முன்மொழிவுகள் பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை.
மறுபுறம், தெற்கு காசாவின் சில பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் வெளியேறிய நிலையில் கெய்ரோ பேச்சுவார்த்தைகளின் விரிவான அறிக்கை ஒன்று தமக்கு கிடைத்திருப்பதாக நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
‘அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பது மற்றும் ஹமாஸுக்கு எதிரான முழுமையான வெற்றி ஒன்றை அடையும் எமது முதன்மையான மற்றும் முக்கியமான இலக்கை அடைவதற்கு நாம் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்’ என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
‘இந்த வெற்றிக்கு ரபாவுக்குள் நுழைய வேண்டி இருப்பதோடு அங்குள்ள பயங்கரவாத படைப் பிரிவுகளை ஒழிக்க வேண்டி உள்ளது.
அது நடக்கும், அதற்கு திகதி ஒன்று உள்ளது’ என்று குறிப்பிட்ட அவர் அந்தத் திகதி பற்றி விபரத்தை வெளியிடவில்லை.
இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களில் தமது வீடுகள் தரைமட்டமாக்கப்பட்ட காசா மக்களுக்கான கடைசி அடைக்கலமாகவே ரபா உள்ளது. இது ஹமாஸ் படைப் பிரிவுகளின் கடைசி அரணாக இருப்பதாக இஸ்ரேல் சந்தேகம் வெளியிட்டு வருகிறது.
நீர், உணவு மற்றும் தற்காலிக தங்குமடங்களின் பற்றாக்குறைக்கு மத்தியில் காசாவின் தென் முனையில் இருக்கும் ரபாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நிரம்பி வழிகின்றனர். ரபா மீதான படையெடுப்பு பாரி அழிவு மற்றும் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தும் என்று உலக நாடுகள் எச்சரித்து வருகின்றன.
எகிப்து, பிரான்ஸ் மற்றும் ஜோர்தான் தலைவர்கள் நேற்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில், (ரபா மீதான) இஸ்ரேலின் தாக்குதல் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் பிராந்தித்தில் பதற்றத்தை தூண்டும் என்றும் எச்சரித்துள்ளனர். ரபா மீதான படையெடுப்பை அமெரிக்கா எதிர்த்து வருகிறது.
இந்நிலையில் ரபாவில் இருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய இஸ்ரேல் 40,000 கூடாரங்களை வாங்கி இருப்பதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஏ.பீ. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ரபா விவகாரம் தொடர்பில் அமெரிக்காவுக்கு புதிதாக எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என்று நெதன்யாகுவின் அறிவிப்பு குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் மத்தியூ மில்லர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரபாவில் இருக்கும் நூற்றுக்கணக்கானவர்கள் இஸ்ரேல் பின்வாங்கிய பகுதிகளில் தமது வீடுகளை நோக்கி திரும்ப ஆரம்பித்துள்ளனர். தள்ளு வண்டி, கழுதை வண்டி, திறந்த வாகங்கள் மற்றும் கால் நடையாகவும் இந்த மக்கள் பெரும் அழிவை சந்தித்திருக்கும் தமது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
‘இது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை தருகிறது. அழிவுகள் தாங்க முடியாத அளவுக்கு உள்ளன’ என்று குடியிருப்பாளரான அபூ தயிப் குறிப்பிட்டுள்ளார். ‘நான் எனது வீட்டுக்குப் போகிறேன். அது அழிவடைந்திருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆடைகளை வெளியே எடுக்க இடிபாடுகளை அக்கற்றப்போகிறேன்’ அவர் மேலும் தெரிவித்தார்.
இஸ்ரேலியப் படை கடந்த சில மாதங்களாக நிலைகொண்டிருந்த பகுதிகளில் இருந்து 80க்கும் அதிகமான சடலங்களை மீட்டதாக பலஸ்தீன மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதோடு நேற்றுக் காலையில் அங்கு பல இடங்களையும் இலக்கு வைத்து உக்கிர வான் தாக்குதல்கள் இடம்பெற்றதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா கூறியது.
தெற்கு காசா நகரான அல் சைதான் பகுதியில் இரு வீடுகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக வபா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். நகரின் ஏனைய பகுதிகளில் சம காலத்தில் கடுமையான பீரங்கி தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பாடசாலை ஒன்றை சூழ நடத்தப்பட்ட பீரங்கி தாக்குதல்களில் மேலும் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தவிர தெற்கு மற்றும் வடக்கு காசாவிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் உக்கிரம் அடைந்திருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 153 பேர் கொல்லப்பட்டு மேலும் 60 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 33,360 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 75,993 பேர் காயமடைந்துள்ளனர். ஆறு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்தப் போரில் குறைந்தது 7,000 பேர் காணாமல்போறிருப்பதோடு இவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருப்பதாக நம்பப்படுகிறது.