தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கவிஞர் கவியரசர் கண்ணதாசன். மனித வாழ்க்கையின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது வரிகளின் மூலம் உயர் கொடுத்துள்ள கண்ணதாசன், காதல், பாசம், அன்பு, சோகம், தத்துவம் என அனைத்திற்கும் தனது பாடல்களை எழுதியுள்ளார். அதேபோல் எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி ரஜினிகாந்த் கமல்ஹாசன வரை பலருக்கும் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
பாடல்கள் மட்டுமல்லாமல், திரைக்கதை ஆசிரியர் வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குனர், கதாசிரியர் என பன்முக திறமை கொண்ட கண்ணதாசன், அரசியலிலும் கால் பதித்துள்ளார்.
இப்படி பல திறமைகளை உள்ளடங்கிய ஒரு கவிஞராக இருந்தாலும், அரசியலில், எம்.ஜி.ஆர், கருணாநிதி, சிவாஜி கணேசன் என பலரிடம் மோதலில் ஈடுபட்டுள்ளார். எம்.ஜி.ஆருடன் கண்ணதாசனுக்கு ஏற்பட்ட் மோதல் தான் வாலி எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல் எழுத முக்கிய காரணமாக அமைந்தது.
அதேபோல் சிவாஜி கணேசன் குறித்து விமர்சனம் செய்ததால், அவர் கண்ணதாசனை அடிக்க துரத்திய சம்பவமும் நடந்துள்ளது.
அந்த வகையில் கருணாநிதியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரை கண்ணதாசன் கடுமையாக விமர்சித்து தனது பத்திரிக்கையில் எழுதியதால், கத்தியுடன் ஒருவர் கண்ணதாசனிடம் அரசியல் பேசியுள்ளார் என்று அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியுள்ளார். அவர் யார் தெரியுமா?
சினிமாவில் பல திறமைகளுடன் வலம் வந்த கண்ணதாசனுக்கு தினமும் காலை 8 மணிக்கு சிங்காரம் என்ற ஒருவர் அவரது வீட்டுக்கே சென்று முகசவரம் செய்து வந்துள்ளார்.
இதற்காக கண்ணதாசன் தினமும் அவருக்கு சம்பளமாக ரூ2 கொடுத்துள்ளார். தனது ஏரியாவல் சவரம் செய்ய ரூ30 பைசா வாங்கிக்கொண்டிருந்த அவருக்கு கண்ணதாசன் தினமும் ரூ2 கொடுப்பதால், சிங்காரம் தினமும் காலை 8 மணிக்கு கண்ணதாசன் வீட்டுக்கு வந்துவிடுவாராம்.
கடைசியாக கண்ணதாசன் அமெரிக்கா செல்வதற்கு முன்பு கூட சிங்காரம் தான் அவருக்கு சவரம் செய்துள்ளார். அதன்பிறகு அமெரிக்கா சென்ற கண்ணதாசன் அங்கேயே மரணமடைந்தார்.
இதனிடையே கண்ணதாசன் கலைஞர் கருணாநிதியுடன் மோதலில் இருந்தபோது அவரை பற்றி கடுமையாக விமர்சனம் செய்து பத்திரிக்கைகளில் எழுதுவரை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
இந்த சமயத்தில் ஒருநாள், மது குடித்துவிட்டு வந்த சிங்காரம், கண்ணதாசனுக்கு சவரம் செய்துள்ளார். அப்போது அவர் மது குடித்திருப்பது தெரிந்தாலும் கண்ணதாசன் அமைதியாக இருந்துள்ளார்.
அப்போது சிங்காரம், ஐயா நீங்க கருணாநிதி பற்றி கடுமைய விமர்சிக்கிறீங்க, அவரை பத்திரிக்கைளில் திட்டுறீங்க என்று கூறியுள்ளார். இதை கேட்ட கண்ணதாசன் ம்ம் என்று குரல் கொடுக்க, கருணாநிதி ரொம்ப நல்லவருங்க அவரை இனிமேல் திட்டாதீங்க, அவரை விமர்சனம் பண்ணி எழுதாதீங்க என்று சவரம் செய்துகொண்டே கூறியுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் சவரம் செய்து முடித்தவுடன், அவரை கண்ணதாசன் கடுமையாக திட்டியுள்ளார்.
கையில் கத்தி வச்சிக்கிட்டு பேசுற விஷயமா இது இனிமேல் இங்க பார்த்தேன் அவ்வளவுதான் என்று எச்சரித்து அனுப்பியுள்ளார்.
ஆனாலும் மறுநாள் அதை மறந்துவிட்ட கண்ணதாசன் சரியாக 8 மணிக்கு சிங்காரம் எங்க வரலையா என்று கேட்க, அவர் கேட்டுக்கு பின் நின்றுகொண்டு எட்டி எட்டி பார்த்துள்ளார். அதன்பிறகு அவரை அழைத்து பேசிய கண்ணதாசன் கடைசிவரை தன்னுடன் வைத்திருந்தார் என்று அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியுள்ளார்.