`தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரிகட்டும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப இஸ்ரேலுக்கு ஒரு கெடுதல் என்றால், அமெரிக்கா துடிதுடித்துப்போகிறது. அதற்கான காரணங்கள்…
இஸ்ரேல் ராணுவம் – பாலஸ்தீன ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போர் உக்கிரமடைந்திருக்கிறது.
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் கண்மூடித்தனமான தாக்குதலில் இதுவரை 2,400 குழந்தைகள் உட்பட 6,500 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், உலகின் பல நாடுகள் இஸ்ரேல் பக்கமும் பாலஸ்தீனம் பக்கமும் ஆதரவாகப் பிரிந்து நிற்கும் நிலையில், தொடக்கம் முதலே அமெரிக்கா இஸ்ரேலுக்குத் தனது தார்மிக ஆதரவை வழங்கிவருகிறது.
உச்சபட்சமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேரடியாகவே இஸ்ரேலுக்குச் சென்று அந்த நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்து தனது உறுதியான ஆதரவை வழங்கியிருக்கிறார்.
இஸ்ரேலைவிடவும் ஒருபடி மேலே சென்று ஹமாஸை மிகக்கடுமையாகச் சாடியிருக்கிறார். ஒவ்வொரு முறையும் இப்படி அமெரிக்கா கண்மூடித்தனமாக இஸ்ரேலை மட்டுமே ஆதரிப்பதற்கு என்னதான் காரணம்… இதுவரை இஸ்ரேலுக்காக அமெரிக்கா என்னென்னவெல்லாம் செய்திருக்கிறது… இப்போதும் அதை ஏன் தொடர்கிறது? – முழுப்பின்னணியை அலசுவோம்.
`அமெரிக்கா தன் தோளில் தூக்கிச் சுமக்கும் குழந்தை, இஸ்ரேல்!’
இஸ்ரேல் நாட்டைப் பாதுகாப்பது ஒன்று அயர்ன்-டோம் என்றால், மற்றொன்று அமெரிக்கா.
உலக அளவில் இஸ்ரேலுக்கு எதிராக எந்தவிதமான பிரச்னை ஏற்பட்டாலும், `என்னை மீறி இஸ்ரேலைத் தொடு பார்ப்போம்’ என்கிற தொனியில்தான் ஒவ்வொரு முறையும் அமெரிக்கா ஒரு பாதுகாப்பு அரணாகவே இருந்துவருகிறது.
ஐ.நா சபையில் இஸ்ரேலுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட 42-க்கும் மேற்பட்ட தீர்மானங்களை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடித்திருக்கிறது.
1991 முதல் 2011-க்கு இடையில் அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்ட 24 வீட்டோக்களில், 15 இஸ்ரேலைப் பாதுகாக்கவே பயன்படுத்தப்பட்டன.
இப்போதும்கூட இஸ்ரேல்-ஹமாஸ் பிரச்னையில் முதல் ஆளாக முந்திக்கொண்டு இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், உடனடியாக விமானம் தாங்கிப் போர்க் கப்பல்களை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பிவைத்தது அமெரிக்கா.
தவிர தனது டெல்டா ராணுவ வீரர்களையும் இஸ்ரேலுக்கு ஆதரவாகக் களமிறக்க தயார்படுத்தியிருக்கிறது.
சுமார் 13,000 அமெரிக்க துருப்புகள் இஸ்ரேலில் முகாமிட்டிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, போர்ச்சூழலிலும் இஸ்ரேலுக்கே நேரில் சென்று, `அமெரிக்கா இஸ்ரேலுக்குப் பின்னே பக்கபலமாக நிற்கிறது’ என உறுதிபட தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, அமெரிக்கா, இஸ்ரேலுக்காகக் கடந்தகாலங்களில் என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதையும் கால ஓட்டத்தின் பின்னால் சென்று பார்க்க வேண்டும்.
இஸ்ரேலுக்காக அமெரிக்கா இதுவரை என்னவெல்லாம் செய்திருக்கிறது?
முதன்முதலில், 1948-ல் யூதர்கள் தங்களுக்கான நாடாக இஸ்ரேலை அதிகாரபூர்வமாக அறிவித்துக்கொண்டபோது அதற்கான முதல் ஆதரவை வழங்கியவர் அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஹாரி எஸ்.ட்ரூமன்தான்.
தவிர ஏற்கெனவே, 1946-ல் ஹிட்லரின் நாஜிப் படைகளால் ஜெர்மனியிலிருந்து விரட்டப்பட்ட 1 லட்சம் யூத மக்களை பாலஸ்தீனத்துக்குள் அனுமதிப்பதற்கான பரிந்துரையையும் அவர்தான் அங்கீகரித்தார். அங்கிருந்துதான் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நெருக்கம் விதைவிட்டு துளிர்த்தது.
குறிப்பாக, 1960-களின் பிற்பகுதியில் இஸ்ரேலையும் அமெரிக்காவையும் பிரித்துப் பார்க்க முடியாதபடி இணக்கமான,
வலுவான உறவை இரு நாடுகளும் பரஸ்பரம் வளர்த்துக்கொண்டன. ஏராளமான ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் இஸ்ரேலுக்கு வாரிக்கொடுத்தது அமெரிக்கா.
ஒருகட்டத்தில், அமெரிக்காவின் வெளிநாட்டு நிதியைப் பெறும் மிகப்பெரிய நாடாக இஸ்ரேல் உருமாறியது.
அதாவது, 1948 முதல் 2012 வரையிலான காலகட்டங்களில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு சுமார் 233.7 பில்லியன் டாலர் வரை நிதியுதவி வழங்கியிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் 3.8 பில்லியன் அமெரிக்க டாலரை இஸ்ரேலின் பாதுகாப்பு நிதியாக அமெரிக்கா கொடுத்துக்கொண்டிருக்கிறது.
மேலும், இஸ்ரேலின் தலைநகராக சர்ச்சைக்குரிய இடமாக ஜெருசலேமை அங்கீகரித்த ஐ.நா பாதுகாப்புக்குழுவின் ஒரே நிரந்தர உறுப்பினராகவும் அமெரிக்காதான் இருக்கிறது.
இப்போது இஸ்ரேல் வசமிருக்கும் `அயர்ன் டோம்’ எனும் வான் பாதுகாப்பு ஆயுதக் கட்டமைப்பும் அமெரிக்காவில் தாயாரிக்கப்பட்டவைதான்.
காஸவை நோக்கிப் பறக்கும் இஸ்ரேலிய ஜெட் விமானங்களில் பெரும்பாலானவை `மேட் இன் அமெரிக்கா’தான்.
தற்போதும்கூட, இஸ்ரேல் உதவி என்று கேட்பதற்கு முன்பாகவே இரு விமானம் தாங்கிப் போர்க்கப்பல்களை இஸ்ரேலுக்கு அனுப்பிவைத்த கையோடு, THAAD எனும் இரண்டு சக்தி வாய்ந்த ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்பப்போவதாகவும் அறிவித்திருக்கிறது.
இதுதவிர, சுமார் 14 பில்லியன் டாலர் நிதியாக வழங்கவும் அமெரிக்க நாடாளுமன்றத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறார் அதிபர் ஜோ பைடன்.
அமெரிக்காவின் இஸ்ரேல் ஆதரவுக்குப் பின்னால்?
அமெரிக்கப் பொருளாதாரத்தில் யூதர்களின் பங்கு:
இஸ்ரேலுக்கு அடுத்து யூதர்கள் அதிகமாக வாழும் நாடு என்றால் அது அமெரிக்காதான். கிட்டத்தட்ட இஸ்ரேல் மக்கள்தொகைக்கு நிகராக இருக்கிறது.
அமெரிக்காவிலுள்ள யூதர்களின் மக்கள்தொகை. உலக அளவில் யூத மக்கள்தொகை 16.1 மில்லியன் என்றால், இஸ்ரேலில் யூதர்களின் எண்ணிக்கை 8.5 மில்லியனாகவும், அமெரிக்காவில் 7.6 மில்லியனாகவும் இருக்கிறது.
இவர்கள் அமெரிக்க மக்கள்தொகையில் 2.5% என்றாலும்கூட, அமெரிக்க அரசியல் அதிகாரம் மற்றும் பொருளாதார வர்த்தகத்தில் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கின்றனர்.
உதாரணத்துக்கு, 2022-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் (Forbes) வெளியிட்ட உலகின் செல்வாக்குமிக்க 267 யூத பணக்காரர்கள் பட்டியில் இடம்பெற்ற 90% யூதர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.
குறிப்பாக, Oracle நிறுவனத்தின் லாரி எல்லிசன் (Larry Ellison) தொடங்கி, Facebook-ன் மார்க் ஷூக்கர்பெர்க் (Mark Zuckerberg), WhatsApp-ன் ஜான் கோம் (Jan Koum), Google-ன் லாரி பேஜ் (Larry Page), செர்ஜி பிரின் (Sergey Brin), எரிக் ஷ்மிட் (Eric Schmidt) உள்ளிட்டோர், Microsoft-ன் ஸ்டீவ் பால்மெர் (Steve Ballmer), Dell Technologies-ன் மைக்கேல் டெல் (Michael Dell), Bloomberg-ன் மைக்கேல் புளூம்பெர்க் (Michael Bloomberg), Reebok-ன் பால் ஃபையர்மேன் (Paul Fireman), eBay-ன் ஜெஃப் ஸ்கோல் (Jeff Skoll) என உலகின் பெரும் பணக்காரர்கள் பலரும் அமெரிக்க வாழ் யூதர்கள்தான்.
மேலும், அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான யூதப் பணக்காரர்கள் Real Estates, Banking, E-commerce, Oil & Gas and Energy மற்றும் முக்கியமாக Media துறையிலும்தான் கோலோச்சுகின்றனர்.
அமெரிக்க அரசியல் அதிகாரத்தில் யூதர்களின் செல்வாக்கு:
உலகின் முக்கியத்துவம் வாய்ந்த முன்னணி நிறுவனங்களைக் கையில் வைத்திருக்கும் அமெரிக்க வாழ் யூதப் பணக்காரர்கள்தான் அமெரிக்கப் பொருளாதாரத்தின் அசைக்க முடியாத அங்கம்.
அமெரிக்காவில் யூதர்களின் பொருளாதார பலம் ஒருபுறமிருக்க, அமெரிக்க அரசியல் அரங்கிலும் அவர்களின் செல்வாக்கு (இஸ்ரேலிய சார்பு லாபி) என்பது மிக உச்சம்.
குறிப்பாக, தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேபினட்டில் முக்கியப் பதவிகளில் இருக்கும் அமைச்சர்களில் பெரும்பாலானோர் யூத வம்சாவளியினர்தான்.
பைடன் கேபினட்டில் யூதர்கள்
முக்கியமாக, அமெரிக்காவின் உள்துறைச் செயலாளர் (Secretary of State-Antony Blinken) ஆண்டனி பிளிங்கன், கருவூலச் செயலாளர் (Secretary of the Treasury-Janet Yellen) ஜேனட் யெல்லன், அட்டர்னி ஜெனரல் மெரிக் கார்லேண்ட் (Attorney general-Merrick Garland), உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் அலெஜான்ட்ரோ மேயர்காஸ் (Secretary of Homeland Security-Alejandro Mayorkas), தேசிய உளவுத்துறை இயக்குநர் அவ்ரில் ஹெய்ன்ஸ் (Director of National Intelligence-Avril Haines) என பைடன் தலைமையிலான அமெரிக்க அரசியல் நிர்வாகத்தில் தலைமைப் பொறுப்புகளில் இருக்கும் யூதர்களின் பட்டியல் நீள்கிறது.
இவை தவிர, அமெரிக்காவின் வெளிநாட்டுத் தூதர்களாக (Ambassador), அதாவது இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான், ஜெர்மனி, டென்மார்க், பெல்ஜியம், கனடா, அர்ஜென்டினா, ஐரோப்பிய ஒன்றியம் எனப் பல நாடுகளுக்கான அமெரிக்கத் தூதர்களாக யூதர்கள்தான் இருக்கின்றனர்.
2020-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனுக்கு, ஒட்டுமொத்த அமெரிக்க யூதர்களில் 69% பேர் வாக்களித்து வெற்றிபெறச் செய்திருக்கின்றனர் என்பது கூடுதல் தகவல்.
அமெரிக்காவின் மத்திய கிழக்கு பூலோக அரசியல்:
இதுதவிர மேலும் சில முக்கியக் காரணங்களும் இருக்கின்றன. குறிப்பாக, மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான களமாகவும் இஸ்ரேலைப் பயன்படுத்திக்கொள்கிறது.
அமெரிக்காவின் பரம எதிரியான இரான் போன்ற அரபு நாடுகளை வேவு பார்ப்பதற்கும், அந்த நாடுகளின் நடவடிக்கைகள், தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றைக் கண்காணிப்பதற்காகவும் இஸ்ரேலிய ராணுவம் மற்றும் உளவுத்துறையான மொசாட்டையும் அமெரிக்கா கூட்டாளியாக வைத்திருக்கிறது.
இஸ்ரேலுக்கு தங்குதடையற்ற தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதரவை வழங்குவதன் மூலம், மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள மற்ற நாடுகளை மறைமுகமாக எச்சரிக்கிறது அமெரிக்கா. இதைத்தான் உலக அரசியல் வல்லுநர்கள், இஸ்ரேல் நாட்டை, `மத்திய கிழக்கில் அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க் கப்பல்’ என வர்ணிக்கின்றனர்.
அமெரிக்காவின் ஆயுத வியாபாரத் தந்திரம்:
இஸ்ரேலை மையமாகவைத்து பூலோக அரசியல் செய்துகொண்டிருப்பது ஒருபுறமிருக்க, பொருளாதார லாப நலன்களையும் அமெரிக்கா அறுவடை செய்துகொள்கிறது.
அதாவது, ஆயுத வியாபரம். இந்தப் போர்களைப் பயன்படுத்தி அமெரிக்கா தனது ஆயுத வியாபாரத்தை பன்மடங்கு பெருக்கிக்கொள்கிறது.
உதாரணமாக, 2021-ம் ஆண்டு மே மாதம் இஸ்ரேல்-பாலஸ்தீன ஹமாஸ் அமைப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது, அமெரிக்கா ஒருபக்கம் போர் நிறுத்தம் குறித்துப் பேசிக்கொண்டே, திரைமறையில் சுமார் 735 மில்லியன் டாலர் மதிப்பீட்டுக்கு இஸ்ரேல் நாட்டுக்கான அதிநவீன ஆயுதங்கள் விற்பனை ஒப்பந்தத்தை முடித்தது. (மேலும், ஏற்றுமதி, இறக்குமதி போன்ற வர்த்தகத்திலும் இஸ்ரேல் அமெரிக்காவின் முக்கியமான வர்த்தகப் பங்காளியாக விளங்குகிறது)
இது போன்ற அரசியல், பூலோக, பொருளாதார, ஆயுத, வர்த்தகக் காரணங்களால்தான் `தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரிகட்டும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப இஸ்ரேலுக்கு ஒரு கெடுதல் என்றால் அமெரிக்கா துடிதுடித்துப்போகிறது!