இலங்கை தமிழ் அரசுக் கட்சி இப்போது திரிசங்கு நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, கிளிநொச்சியில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், கட்சியின் தற்போதைய நிலை குறித்துப் பெரிதும் கவலையுடன் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில், தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, கடந்த 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் அவர் நம்பிக்கையிழந்து போயிருக்கிறார்.

தன்னை, பிறரைக் கொண்டு மறைமுகமாகத் தாக்குகின்ற மலினத்தனமான காரியங்களில் சிலர் ஈடுபடுகின்றனர் என அவர், சொந்தக் கட்சியினர் சிலர் மீது குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

அத்துடன், தமிழ் அரசுக் கட்சி நீண்ட சட்டப் போராட்டத்துக்குள் சிக்கியிருக்கிறது. சிக்க வைக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையையும் அவர் உடைத்திருக்கிறார்.

இந்த இரண்டு விடயங்களுக்கும் பிரதான காரணம், தமிழ் அரசுக் கட்சியில் உருவாகிய, தலைமைத்துவ போட்டி தான் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமைத் தெரிவு முயற்சிகள் தொடங்கப்பட்ட போதே, பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரனுக்கும், சுமந்திரனுக்கும் இடையில் போட்டி உருவானது.

இரண்டு தரப்பினருடனும் பேசி, இணக்கப்பாட்டின் அடிப்படையில் தலைவர் தெரிவை மேற்கொள்வதற்கு, மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

தமிழ் அரசுக் கட்சியின் பாரம்பரியப்படி, தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படுவதில்லை.

இரண்டு பேரும் கடும் பிடிவாதத்தில் இருந்ததால், விட்டுக் கொடுக்க மறுத்ததால், தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

சில குற்றச்சாட்டுகள் இருந்தாலும், ஜனநாயக முறைப்படி தேர்தல், நடத்தப்பட்டது பிற கட்சிகளுக்கு ஒரு முன்னுதாரணமாகவே பார்க்கப்பட்டது.

சிறிதரன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதுடன், சுமந்திரன் தோல்வியைத் தழுவினார். சிறிதரனுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக சுமந்திரன் வாக்குறுதி கொடுத்தார்.

ஆனால், அடுத்த சிக்கல் பொதுச்செயலாளர் விவகாரத்தில் எழுந்தது. சுமந்திரன் பொதுச்செயலாளர் பதவி தனக்கே வழங்கப்பட வேண்டும் என்று அடம் பிடிக்க, சிறிதரன் தரப்பு மறுக்க, கடைசியில் அந்த தெரிவும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

அதில் குகதாசன் பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்ட போதும், அந்த தெரிவை ஏற்றுக்கொள்வதற்கு திருமலை மாவட்டத்தவர்களே தயாராக இல்லை. இதனால் மாவை.சோ.சேனாதிராஜா திடீரென தேசிய மாநாட்டை ஒத்தி வைக்கவும் சிக்கலான நிலைமை உருவெடுத்தது.

தெரிவுகளுக்கு அமைவாக மாநாட்டை நடத்தி அங்கீகாரம் அளிப்பதா? இல்லை எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்ற நபர்களை நீக்கி புதிய நிர்வாகத்தினை செயற்படுத்துவதா என்ற நிலைமைகள் ஏற்பட்டன.

வவுனியாவில் கூடிய உத்தியோகப் பற்றற்ற கூட்டத்தில் பதவிநிலைகளுக்கு புதியவர்கள் தெரிவாகியதோடு குகதாசனின் அனுமதியும் பெறப்பட்டு சுமூகமான நிலையில் மாநாட்டை முன்னெடுப்பதற்கு தயாரான போதும், அதற்கான உரிய அறிவிப்புக்கள் முறையாக இலலை என்று யாழ்ப்பாணத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அன்றையதினமே, அறிவிப்பு முறையாக விடுக்கப்படுவதற்கு அப்பால் அனைத்து தெரிவுகளுமே யாப்புக்கு எதிரானது என்று குறிப்பிட்டு. திருகோணமலையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை சமரசமாக முடிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்திருக்கின்றன.

இதனால் தமிழ் அரசுக் கட்சியின் எல்லா நகர்வுகளும், முடக்க நிலையை அடைந்திருக்கின்றன.

கட்சியின் இப்போதைய தலைவர் யார்? சிறிதரனா அல்லது மாவை சேனாதிராஜாவே அந்தப் பதவியில் நீடிக்கிறாரா? இந்தக் கேள்விக்கான பதில் யாரிடமும் இல்லை.

இதனால் கட்சி யாருடைய கட்டுபாட்டில் இருக்கிறது. அதனை வழி நடத்துபவர் யார், என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தக் குழப்ப நிலை குறுகிய காலத்துக்குள் தீர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதையே, அண்மைய நிலவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

இது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை மீள முடியாத சகதிக்குள் இழுத்துச் செல்வதாகவே கருதப்படுகிறது.

இவ்வாறானதொரு நிலை உருவாகியமை அல்லது, உருவாக்கப்பட்டமைக்குப் பின்னால், பெரியதொரு சூழ்ச்சி இருக்கக் கூடும் என்ற சந்தேகம் பலருக்கு உருவாகியிருக்கிறது.

தமிழர் தரப்பின் அரசியல் பலம் சிதைக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நேரில் காணுகின்ற அவலம் இப்போது தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

போர் முடிவுக்கு வந்த போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற வலுவானதொரு தளம் தமிழரிடம் இருந்தது. அந்தப் பலம் மெதுமெதுவாகச் சிதைக்கப்படும் நிலை, 2010இற்குப் பின்னர் ஏற்பட்டது.

இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளியாக செயற்பட்ட, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும் செயற்பாட்டளவில் முடங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைக்கும் நடவடிக்கைகளில் செல்வாக்குச் செலுத்திய சக்திகள், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இன்றைய நிலைக்குப் பின்னாலும் இருக்கலாம் என்ற சந்தேகம், பரவலாக காணப்படுகிறது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி திரிசங்கு நிலையில் இருக்கும் இந்தக் காலகட்டம் மிக முக்கியமானது.

ஏனென்றால், இன்னும் ஆறு மாதங்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கடுத்து, பொதுத்தேர்தல், உள்ளூராட்சித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் என்று பல தேர்தல்களை நடத்த வேண்டிய நிகழ்ச்சி நிரல்கள் இருக்கின்றன.

இவ்வாறானதொரு தருணத்தில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, முடக்க நிலையில் இருப்பதானது, தமிழர் தரப்பின் அரசியல் முன்னெடுப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தும் யோசனை முன்வைக்கப்பட்டு அதுபற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசிய அரசியல் சக்திகளை ஒன்றுபடுத்த வேண்டிய பழம்பெரும் கட்சியாக, தலைமைத்துவக் கட்சியாக விளங்கிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தடுமாறிக் கொண்டிருக்கிறது.

தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக பார்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தலைமை வகித்த, அதனை அரசியல் ரீதியாக வழிநடத்திய தமிழ் அரசுக் கட்சியினால் இன்று தன்னைத் தானே வழி நடத்த முடியாத நிலை தோன்றியிருக்கிறது.

இது முற்றிலும் உட்கட்சி முரண்பாடுகள் மற்றும், தலைமைத்துவப் போட்டி, அதிகார ஆசை போன்றவற்றினால் உருவாகியிருக்கும் நெருக்கடி.

தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாடுகளில் இருந்து தமிழ் அரசுக் கட்சி எப்போது, விலகிச் செல்வதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியதோ அப்போதே, அதன் சுயமும் அடையாளமும் பறிக்கப்பட்டு விட்டது.

இவ்வாறான நிலையில் இருந்து கொண்டு தமிழ் அரசுக் கட்சியினால் ஒருபோதும், தமிழ்த் தேசிய இனத்துக்கு தலைமைத்துவம் வகிக்க முடியாது.

சொந்த தலைவிதியையே தீர்மானிக்க முடியாத கட்சியினால், தமிழ் மக்களின் தலைவிதியை தீர்மானிக்க முடியாது.

இதேபோக்கு தொடர்ந்து செல்லுமானால், தமிழ் அரசுக் கட்சி மெல்ல மெல்ல சிதைந்து காணாமல் போய் விடும்.

தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களும், தலைவர்களும், இன்னொரு தமிழ்த் தேசிய கட்சியிலோ கூட்டணியிலோ அடைக்கலம் தேடிக் கொள்ளும் நிலை உருவாகும்.

அந்த நிலையை உருவாக்கும் நிகழ்ச்சி நிரலில் தான் சிலர் இயங்குவதாகத் தெரிகிறது.

இந்த நிகழ்ச்சி நிரல் நிறைவேறுமாக இருந்தால், தமிழ் அரசுக் கட்சியினால் வரலாற்றில் ஒருபோதும் மீண்டெழ முடியாமல் போகும்.

தந்தை செல்வாவின் தலைமையில் எழுச்சி கண்ட தமிழ் அரசுக் கட்சியை, அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக, ஜி.ஜி.பொன்னம்பலத்துடன் இணைந்து, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உருவாக்கப்பட்டது.

அதற்குப் பின்னர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, செயற்பாட்டு ரீதியான கட்சியாக இருக்கவில்லை.

2004இல் விடுதலைப் புலிகளின் முயற்சியால் தான், அது மீளவும் உயிர்பெற வைக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவ வகிபாகமும் அதற்கு வழங்கப்பட்டது.

ஆனால், தற்போது, உள் முரண்பாடுகளால் தேய்ந்து கொண்டிருக்கும் தமிழ் அரசுக் கட்சி, இந்த நிலையில் இருந்து மீள முடியாமல் போனால், இன்னொரு முறை உயிர்ப்பிக்க யாரும் வரப் போவதில்லை என்பது திண்ணம்.

– கபில்-

Share.
Leave A Reply

Exit mobile version