புலம்பெயர் தேசங்களில் வாழும் பலர் அங்குள்ள நிலவரங்களை ஊடகங்கள், சமூக வலைத் தளங்கள், கட்டுரை வடிவிலான ஆக்கங்கள் மூலமாகவே அதிகளவு தகவல்களைப் பெறுகிறார்கள்.
அதன் மூலமாகவே தமது சிந்தனைகளை ஓட விடுகிறார்கள், பரிமாறுகிறார்கள். தாயகத்தில் தமிழ் அரசியலில் சிலரே அரசியல் கட்டுரைகளை வரைகின்றனர்.
அவற்றில் தரமானவற்றை பலரும் தமக்குள் பகிர்ந்து அவற்றின் அடிப்படையில் தமது விவாதங்களை நகர்த்துகின்றனர்.
அவ்வாறான காத்திரமான பத்தி எழுத்தாளர்களில் ஒருவரான ‘நிலாந்தன்’ அவர்களின் கட்டுரை ஒன்றினை நண்பர் ஒருவர் எனக்குப் பரிமாறியிருந்தார்.
அக் கட்டுரையைப் படித்த வேளையில் பல கேள்விகள் மனதில் எழுந்தன. குறிப்பாக அரசியல் நிலமைகளை மிகவும் இழிவான விதத்தில் அணுகுவது, நாட்டின் அரசியலில் மிகவும் காத்திரமான பாத்திரத்தை வகிக்கும் கட்சிகளைக் ‘கவர்ச்சி’ அரசியல் என வர்ணிப்பது, அநுரவின் பேச்சுக்கள் சில தமிழ் லிபரல் ஜனநாயகவாதிகள் மத்தியில் கவனிப்பைப் பெற்றிருப்பதாக வெறும் சப்பைக்கட்டுப் போடுவது, பன்மைத்துவ சமூக கட்டமைப்பினை ‘பல் வகைமை’ ‘அரசியல் அடர்த்தி’ என்ற சில சொல்லாடல்களைக் கட்டமைத்து புதிய மயக்கத்தை ஏற்படுத்துவது போன்ற அம்சங்களால் கட்டுரை நிரப்பப்பட்டு வாசகனைக் குழப்ப நிலையில் வைத்திருக்க முயன்றிருக்கிறது.
வாசகன் ஏமாற்றப்படுகிறான். நானும் ஏமாற்றப்பட்டிருக்கிறேன்.
எழுத்தாளன் என்பவன் ஒரு சிறந்த வாசகனுமாவான். வாசகன் என்பவன் தனது வாசிப்பு, சிந்தனை, மறுவாசிப்பு என்ற ஒழுங்கமைப்புக் காரணமாக அவனது உளவியல், செயற்பாடு, சிந்தனை என்பன மிகவும் வளம் பெற்று அவன் பண்புள்ள மனிதனாக மாற்றம் பெறுகிறான்.
அதாவது ஆரோக்கியமான உணவு உடலைச் சென்றடைந்ததும், அது எவ்வாறு உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியோடும் வைத்திருக்க உதவுகிறதோ அது போலவே நல்ல கல்வியும், வாசிப்பும், சிந்தனையும் சிறந்த எழுத்தைத் தருகிறது. மிகுதியை வாசகனின் பொறுப்பில் விடுகிறேன்.
வி. சிவலிங்கம்
நான்கு தொகுப்பு என்ற பெயரில் கேள்விகள் முன் வைக்கப்பட்டுள்ளன. தனது நண்பர் ஒருவர் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தால் பதட்டமடைந்திருந்தார் எனவும், அவர் சுமந்திரன், சம்பந்தன் மற்றும் சில விமர்சகர்களைப் பிரதிபலித்தார் எனவும், அதைவிட முக்கியமாக அந்த நண்பர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜே வி பி இற்கு வாக்களித்ததாகவும் தெரிவித்தே கட்டுரை ஆரம்பமாகிறது.
இந்த ஆரம்பத்தைப் படித்தபோது ஜே வி பி இற்கு வாக்களித்த நண்பர் தமிழ் பொது வேட்பாளர் குறித்து ஏன் பதட்டமடைந்தார்?
இங்கு சுமந்திரன், சமபந்தன் மற்றும் சில விமர்சகர்களை அவர் பிரதிபலித்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமந்திரன், சம்பந்தன் ஆகியோர் சாதாரண விமர்சகர்கள் அல்லவே, அவர்கள் மக்கள் பிரதிநிதிகள் அல்லவா?
விமர்சகர்களை விட அவர்களது கருத்து வலிமை வாய்ந்தது அல்லவா? விமர்சகர்களுக்கு வேறு கருத்துகள் இருக்கலாம்.
ஆனால் அவை பற்றிய விமர்சனங்களை வாசகன் மத்தியில் எடுத்துச் செல்லும்போது பாராளுமன்ற உறுப்பினரின் மாற்றுக் கருத்துக்கான விபரங்களையும் கொடுத்தல் அவசியம்.
ஏனெனில் வாசகனைச் சிந்திக்க வைக்க இருபக்க நியாயங்களையும் முன்வைத்தே கருத்தைத் தொடர வேண்டும். தற்போது தேர்தல் காலம். அரசியல் கட்சி வேட்பாளன் போல அரசியல் ஆய்வாளன் பிரச்சாரகனாக செயற்படுவது நியாயமானது அல்ல.
இல்லையெனில் தான் ஆதரிக்கும் கட்சி அல்லது கொள்கை என்பவற்றையும் முன்நிறுத்தி கட்டுரை தொடர வேண்டும். அதை விடுத்து சந்தர்ப்பவாத அரசியல்வாதி போல மன்னிப்புக் கேட்பாயா? தவறு என்பதை ஏற்றுக் கொள்வாயா? என்பதெல்லாம் எழுத்தாளன் எந்த அந்தஸ்திலிருந்து கேள்வியை எழுப்புகிறார்? அவரது பொறுப்பு என்ன? எனக் கேட்க ஆரம்பிக்கிறோம்.
ஜே வி பி ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த கவர்ச்சியை விட 2021ம் ஆண்டு நிகழ்ந்த தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னர் கவர்ச்சி அதிகரித்திருப்பதாக தரப்பட்டிருக்கிறது. இங்கு தன்னெழுச்சிப் போராட்டங்கள் என அவர் குறிப்பிடுவது ‘ அரகலய’ என அழைக்கப்பட்ட 2022 இல் இடம்பெற்ற மக்கள் எழுச்சி என நம்புகிறேன்.
அவரால் சரியான காலத்தை அதுவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டின் வரலாற்றில் இடம்பெற்றிராத சம்பவங்கள் நிகழ்ந்த ஆண்டு சரியாக நினைவுக்கு வராதது ஆச்சரியமாகவும், அவ் வரலாறு மிகவும் அந்நியமாக காணும் அவலத்தையும் காண்கிறோம்.
இங்கு ஜே வி பி இன் அரசியலைக் கவர்ச்சி என வர்ணிப்பது அவரவர் பார்வை. ஆனால் 60 களில் ஆரம்பமான இக் கட்சி பல இழப்புகளுக்கு மத்தியிலும் 2024 இலும் வீரியமாக வளர்ந்து செல்கிறது.
இது எவ்வாறு சாத்தியமாயிற்று? என்பதை விளக்க ஏன் முற்படவில்லை. ‘கவர்ச்சி’ என அடையாளப்படுத்தும் அம்சங்களையாவது தொட்டுச் சென்றிருக்கலாம். ஐ தே கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழரசுக் கட்சி போன்ற கட்சிகள் அரசியல் அஸ்தமனத்தை நோக்கிச் செல்கின்றன.
சுமார் 5 வருடங்கள் ஆயுளைக் கொண்ட பொதுஜன பெரமுன இன்று மக்களால் துரத்தப்பட்டுள்ளது. சிங்கள பெருந்தேசிய வாதத்தை உக்கிரப்படுத்தியவர்கள், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாத அளவுக்கு தடுமாறி நிற்கிறார்கள்.
சுமார் 5 தலைமுறையினருக்கு அப்பால் சென்றுள்ள ஜே வி பி 2018ம் ஆண்டில் புதிய மாற்றத்தை நோக்கிச் சென்றதை பத்தி எழுத்தாளரால் காணமுடியவில்லை.
இன்னமும் கடந்த காலத்தில் வாழும் ஒருவரால் நிகழ்கால மாற்றங்களை அவதானிக்க முடியவில்லை. அனுர இன் பேச்சுக்கள் மயக்கம் தரக்கூடியவை எனக் கூறி அக் கட்சியின் மாற்றங்களைக் காண மறுக்கும் போக்கே காணப்படுகிறது.
அனுர இந்தியா, கனடா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி சென்றார் பலமான வரவேற்பு. தெளிவான அரசியல் பார்வை. இவை பத்தி எழுத்தாளரைப் பதட்டமடையச் செய்ததாக ஏன் நாம் வரையறுக்க முடியாது.
2018ம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி என்ற புதிய அரசியல் இயக்கத்தை சிங்கள மக்கள் மத்தியிலுள்ள கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கங்கள் போன்றன இணைந்து தோற்றுவித்தார்கள்.
இந்த இணைப்பின் பின்னர் சமூகத்தின் பல மத்தியதர வர்க்கத்தினர் ஊழலில்லாத, சமநீதியைத் தருகின்ற ஜனநாயக அரசைத் தோற்றுவிக்க உறுதி எடுக்கிறார்கள்.
பல ஆயிரம் பெண்கள் இந்த மாற்றத்தில் தம்மை இணைத்துள்ளார்கள். இவை எதுவும் கவனத்திற்குச் செல்லாதது ஏன்? இது பூனை கண் மூடிப் பால் குடித்தால் உலகம் இருண்டுள்ளதாக எண்ணியே செயற்பட்டதாகக் கூறுவது போல சிலர் உண்மைகளை மறைத்து அல்லது அவ்வாறான ஒன்று என்பது போலி என மக்கள் மத்தியிலுள்ள தம்மீதான நல்லெண்ணங்களைப் பயன்படுத்தி நடத்தும் போலி நாடகங்களே இவை.
இக் கட்டுரையில் தமிழ்ப் பிரதேசத்திலுள்ள லிபரல் ஜனநாயகவாதிகள் சிலரும், சிங்கள மக்கள் மத்தியிலுள்ள படித்த நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரும் ‘ஜே வி பி பரவாயில்லை’ எனக் கருதுவதாகக் கூறி இப் பிரிவினரின் முக்கியத்துவத்தை மிகவும் திட்டமிட்டே மலினப்படுத்துவதாகத் தெரிகிறது.
உதாரணமாக, ஜே வி பியை ஆதரிக்கும் தமிழர்களை லிபரல் ஜனநாயகவாதிகள் என அடையாளப்படுத்துவதும், சிங்களப் பகுதியில் ஆதரிப்போரை நகர்ப்புற நடுத்தர வர்க்கம் என வேறு விதமாக வர்ணிப்பதும் இந்த இரு பிரிவினரும் ஒரே மத்தியதர வர்க்கத்தின் எண்ணங்களைப் பிரதிபலிப்போர் என்பதை மறைக்கும் அப்பட்டமான தந்திரம் அல்லது இரு சாராரும் வெவ்வேறு பிரிவினர் என்ற போலிப் பிரிவை அடையாளப்படுத்துவதாகவே உள்ளது.
அது மட்டுமல்ல இந்த இரு பிரிவினரும் இணைந்துவிடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு இந்த நடுத்தர வர்க்கத்தை இழிவுபடுத்திச் செல்லும் போக்கு ஆரோக்கியமான அணுகுமுறையல்ல.
இன்றைய முதலாளித்துவ சமூகக் கட்டுமானத்தில் மத்தியதர வர்க்கமே அதன் முதுகெலும்பு. இந்த வர்க்கத்தினரை இரு பிரிவுகளாக வகுக்கலாம்.
அதாவது கீழ்- மத்தியதர வர்க்கம், மேல்- மத்தியதர வர்க்கம் எனலாம். இதில் கீழ்- மத்தியதர வர்க்கம் என்போர் சமூகத்தில் ஒரளவு வருமானம் பெறுபவர்களாகவும், வறுமைக் கோட்டிற்கு சற்று அப்பால் சென்றுள்ளவர்களாகவும் அதாவது மத்திய வருமானத்திற்கு கீழே உள்ளவர்களாவும் உள்ள பிரிவினராகும். இவர்களின் நிதிநிலை சிக்கலாக இருப்பதால் வளங்களைப் பயன்படுத்துவதில் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.
இங்கு மேல்- மத்தியதர வர்க்கத்தினரை எடுத்துக் கொண்டால் அவர்கள் அதிக வருமானம் பெறுவர்களாகவும், நிதியில் கணிசமான பாதுகாப்பை உடையவர்களாகவும், இவர்கள் தமது எதிர்கால தேவைகளுக்காக வங்கிகளில் அதிக சேமிப்பை வைத்திருப்பவர்களாகவும், முதலீடுகளில் ஈடுபடுபவர்களாகவும் உள்ளனர்.
இவர்கள் கல்வியிலும், பதவிகளிலும், அனுபவங்களிலும் சிறந்த தேர்ச்சி உடையவர்களாக இருப்பர்.
இவர்களே சமூகத்தின் முன்மாதிரியான வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாகவும், பொருளாதார முன்னேற்றத்திற்கான புதிய வழிகளைத் தேடி அலைபவர்களாகவும், சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த, சமூக சேவைகளை ஊக்குவிக்க, கீழ்- மத்தியதர வர்க்கத்தினரை மேலே எடுத்துச் செல்லும் வழிகாட்டிகளாகவும் உள்ளனர்.
இந்த விபரத்தைத் தந்தமைக்குக் காரணம் இக் கட்டுரையில் தமிழர்களில் சில லிபரல் ஜனநாயகவாதிகளும், சிங்கள நகர்ப்புற நடுத்தர வர்க்கம் ஜே வி பி இற்கு வாக்களித்தால் என்ன? எனக் கேட்பதாக மிகவும் எள்ளி நகையாடும் விதத்தில் விளக்கப்பட்டிருந்தது.
ஒரு முதலாளித்துவ சமூகத்தில் இந்த மத்தியதர வர்க்கம் பிரதான பகுதியாக இத்தனை குணாம்சங்களையும் தரும் சமூகப் பிரிவாக இருக்கையில் இவர்கள் ஜே வி பி இற்கு வாக்களித்தால் என்ன? என்ற கேள்வியை எழுப்புதில் தவறென்ன இருக்க முடியும்? அது பற்றி சிந்திப்பது சாத்தியமே.
இன்று இலங்கையின் அரசியல் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குச் சென்றமைக்கான பிரதான காரணம் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம், பெரும்பான்மைவாதம், இனவாதம் என்பனவே ஆகும்.
ஆனால் நாட்டில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு, அரச யந்திரம் ஊழல் மயமாக்கப்பட்டு ஜனநாயகம் சீரழிக்கப்பட்டமைக்கான காரணம் தேசிய இனப் பிரச்சனையால் அல்ல.
அங்கு நிலவிய நவதாராளவாத அரசியல், பொருளாதார கட்டுமானத்தாலாகும். இப் பொருளாதாரக் கட்டுமானம் அதிகாரத்தையும், பொருளாதார நிர்மாணத்தையும் ஒரு சிறு குழுவின் கைகளில் ஒப்படைத்தமையால் இக் குழுவினர் நாட்டின் செல்வத்தை சிங்கள பெருந்தேசியவாதத்தைப் பயன்படுத்திக் கொள்ளையடித்து வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைத்திருக்கிறார்கள்.
நாட்டின் அரச யந்திரம் சில குழுவின் சேவகர்களாக செயற்படுகையில், நாட்டின் ராணுவமும், பொலீசாரும் அக் குழுவினரின் பாதுகாப்பு அரண்களாக இருக்கையில் அதை மாற்றாமல் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது.
இக் கட்டுரை அந்தப் பக்கமே செல்லவில்லை. இது புரியாத அம்சம் அல்ல, பதிலாக பிரிவினைவாத அரசியலை முன்னெடுப்பதற்கு இந்த அரசியல் பயன்படாது என்பதை இவர்கள் நன்கு அறிவர்.
சுயநிர்ணய உரிமை, சுய ஆட்சி எனக் குரல் எழுப்புபவர்கள் நாட்டில் ஜனநாயக விரோத அரசு செயற்படுகையில் அதை மாற்றாமல் சமஷ்டி சாத்தியமா? என்பதை முன்வைக்க ஏன் மறுக்கிறார்கள்? இவர்கள் இலங்கை முழுவதற்குமான ஜனநாயக மாற்றங்கள், இதர சிறுபான்மைச் சமூகங்களின் ஜனநாயக உரிமைகள் எதையுமே பேசுவதாக இல்லை.
ஏனெனில் இவர்கள் பின்னால் காணப்படுவது தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் நடத்தப்படும் பிரிவினைவாத அரசியலே.
இல்லையெனில் இலங்கை முழுவதற்குமான ஜனநாயக மாற்றத்தின் பின்னணியில் தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்பாக ஜே வி பி யுடன் பேச்சுவார்த்தைக்குத் தம்மை ஏன் தயாராக்கவில்லை?
தேசிய மக்கள் சக்தி நாட்டின் ஜனநாயக அடிப்படை மாற்றங்கள் தொடர்பாகவும், தேசிய இனப் பிரச்சனைகள் தொடர்பாகவும் பாரிய கொள்கை மாற்றங்களோடு செல்கிறது. இவற்றை அவதானித்து உரிய வகையில் தமது போக்கையும் மாற்றி ஏன் செல்ல முடியாது?
தமிழ் மக்கள் படிப்படியாக தேசிய அளவிலான கட்சிகளோடு தம்மை அடையாளம் காட்ட ஆரம்பித்துள்ளார்கள்.
வெவ்வேறு சிங்களக் கட்சிகளுக்கு வெப்வேறு காரணங்களைக் காட்டி மாற்றமடைந்து செல்கிறார்கள். தமிழ்த் தேசியவாத அரசியல் படிப்படியாக அதன் ஆவியை இழந்து வருகிறது.
தமிழ் சிங்கள ஒற்றுமைக்கான சக்திகள் பலமடைந்து வருவதன் எதிரொலியே தமிழ் பொது வேட்பாளர் கோரிக்கை. தமிழ் மக்களைத் தனிமைப் படுத்தி செய்யும் குறுந்தேசியவாத அரசியலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை உணர்கிறார்கள். அதனால் ஜே வி பி இன் பழைய குப்பைகளிலிருந்து புதையல் தேடும் முயற்சிகள் காணப்படுகின்றன.
இந்த உண்மையை எடுத்துச் சொன்னால் இலங்கை அரசியற் கட்டுமானம் பற்றிப் பேசி தமிழ் அரசியலில் முன்வைக்கப்படும் பிரிவினைவாதத்திற்கான நியாயங்கள் மழுங்கடிக்கப்படலாம் என்ற அச்சமே நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை தேசிய இனப் பிரச்சனைகளோடு சம்பந்தப்படுத்துவதாகும்.
தேசிய இனப் பிரச்சனைக்குப் பொருளாதார நெருக்கடி காரணமாக இருக்கிறதே தவிர தேசிய இனப் பிரச்சனை தீர்ந்தால் பொருளாதார நெருக்கடி தீரும் என விவாதிப்பது விஞ்ஞானபூர்வமான வாதம் அல்ல.
முதலாளித்துவ பொருளாதாரத்தில் தேசிய இனப் பிரச்சனையும் ஒரு அங்கமே. முதலில் பொருளாதாரக் கட்டுமானத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி தேசிய இனப் பிரச்சனைக்கான உக்கிரத்தைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறான ‘அரசியல் அடர்த்தி’ மிக்க வாதங்களில் இவர்கள் ஈடுபடப் போவதில்லை.
இலங்கை இனப் பிரச்சனை என்பது இலங்கைத் தீவில் ‘பல் வகைமை’யை ஏற்க மறுத்ததிலிருந்துதான் ஆரம்பமாகிறது என புதிய பார்வை முன்வைக்கப்படுகிறது.
இலங்கை ஒரு பன்மைத்துவ சமூகங்கள் வாழும் நாடு என்றால் பலரும் புரிந்து கொள்வர். ‘ பல் வகைமை’ என்ற சொல்லாடல் எதைக் குறிக்க முற்படுகிறது?
அதாவது இலங்கையில் பல வகையான சமூகங்கள் வாழ்கின்றன என்பதை மட்டும் அடையாளப்படுத்தி ஏனைய சமூகங்களிலிருந்தும் தனிமைப்படுத்தும் சொல்லாடலாகவே அது உள்ளது.
பன்மைத்துவம் என்ற சொற்பதம் குறிக்கும் இணைந்த வகையிலான அதாவது இச் சமூகங்கள் இணைந்து வாழ்வதாகவும் பன்மைத்துவம் என்ற சொல் விளக்குகிறது.
இவ்வாறாக ஏமாற்றிப் புதிய சொல்லாடல்களால் வாசகனைக் குழப்பி பிரிவினை அரசியல் செய்வது எந்த நியாய புத்திபடைத்தவர்களாலும் ஏற்கக்கூடியதல்ல.
மகிந்த 13 பிளஸ், ரணில் 13 பிளஸ், சஜித் 13 பிளஸ் என்பது போல் ஜே வி பி இன் தீர்வு என்ன? என்கிறார்.
ஜே வி பி தொடர்பாக கேள்விகளை அடுக்கும் ஒருவர் அக் கட்சியில் ஏற்பட்டுள்ள கொள்கை மாற்றங்கள், அவை எவ்வாறான மாற்றங்களை மக்களிடத்தில் தோற்றுவித்திருக்கிறது?
வர்க்க அடிப்படையில் அரசியல் பேசிய அந்தக் கட்சி இன்று முதலாளித்துவ கட்டுமானத்தை சீரமைக்க முயற்சிக்கிறது. இது மாற்றமில்லையா? இவை பற்றிய குறைந்த பட்ச ஆய்வும் இல்லாமல் கட்டுரையை வழிப் போக்கன் போல் கேள்விகளால் நிரப்புவது பெரும் ஆச்சரியம் தரும் முறை அல்ல.
முதலில் அக் கட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அதன் பின்னால் மக்கள் திரள்வதற்கான காரணம், ஜனாதிபதித் தேர்தலில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் போன்றவற்றை குறைந்தபட்சமாவது விளக்கி கவர்ச்சி அரசியலுக்கு வியாக்கியானம் தந்திருக்கலாம்.
கடந்த 75 ஆண்டுகளாக இலங்கை அரசியல் கடந்துள்ள மாற்றங்கள், நெருக்கடிகள், ஆட்சி அதிகார சக்திகளின் செயற்பாடுகள், ஜனநாயக கட்டுமான மாற்றங்கள் எனப் பல அம்சங்கள் மிகவும் ஆழமாக விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளன.
ஜே வி பி பற்றி எவ்வித ஆதாரமும் இல்லாமல் வெறும் கவர்ச்சி என்ற வார்த்தைப் பிரயோகத்தால் நியாயப்படுத்தும் அணுகுமுறைக்கு கொள்கை விளக்கங்களை முன்வைத்து பதிலளிப்பதில் அர்த்தமில்லை.
இன்று நாடு மிகவும் மோசமான ஜனநாயக விரோதப் பாதையில் சென்றிருக்கிறது. இனவாதம், பெரும்பான்மைவாதம், குழு ஆதிக்கம் போன்றவற்றால் நாடு வங்குறோத்தாகியிருக்கிறது.
இனியும் இனவாதம், பெரும்பான்மைவாதம், குழுவாதம் என்பவற்றால் நாட்டைக் காப்பாற்ற முடியாது என்ற நிலைக்கு நாட்டை நேசிக்கும் மக்கள் சென்றிருக்கிறார்கள்.
இம் மாற்றங்கள் தமிழ் மக்களைச் சென்றடையவிடாது தடுக்க கடந்தகால சம்பவங்களை நினைவூட்டி சுவர்களை எழுப்பலாம் என்ற கனவுகளுக்கு பாதை சமைப்பதாகவே இக் கட்டுரையின் போக்கு காணப்படுகிறது.
ஜே வி பியை நோக்கி முன் வைக்கும் கேள்விகள் காலம் கடந்தவை. அக் கட்சி பல மாற்றங்களோடு நடைபோடுகிறது.
மலையகத் தமிழரை 5ம் படை என்பது, வடக்கு, கிழக்கு பிரிப்பு, இலங்கை- இந்திய ஒப்பந்த எதிர்ப்பு இவை எல்லாம் கடந்து அக் கட்சி வெகுதூரம் முன்னேறிவிட்டது. புதிய தலைமுறை பதவிக்கு வந்திருக்கிறது. தவறுகளை ஏற்று முன்னோக்கிப் பயணிக்கிறது.
முழுமையான இந்திய எதிர்ப்பை நடத்திய அந்த இயக்கம் இந்திய அழைப்பைப் பெற்றிருப்பதை எந்த வகையில் விமர்ச்சிப்பீர்கள்?
இந்தியாவிடம் அவர்கள் அழைப்பை மீளப் பெறுங்கள் அல்லது இனிமேல் தொடர்பை துண்டியுங்கள் இல்லையேல் நாம் இந்தியாவைப் பகிஷிகரிப்போம் அல்லது தொப்புள் கொடி உறவை அறுப்போம் என எந்தக் குரலும் எழவில்லையே ஏன்?
கட்டுரையின் இறுதிப் பகுதி இனப் பிரச்சனை என்பது மனிதாபிமானப் பிரச்சனை அல்ல எனவும், மொழிப் பிரச்சனை, வழிபாட்டுப் பிரச்சனை போன்றவையும் உதிரிப் பிரச்சனைகள் அல்ல எனவும் கூறி ஜே வி பி மேலெழுந்தவாரியாகப் பேசுகிறது என்கிறது.
இவை யாவும் தமிழ் மக்களின் கூட்டு உரிமைகள் எனவும், கூட்டு உரிமைக்கான அங்கீகாரம் கிடைக்கும்போது அவை நீங்கிவிடும் என்ற ஒரு மாயைத் தோற்றம் தரப்பட்டுள்ளது.
இங்கு நாம் சில அடிப்படை அம்சங்களைப் புரிந்து கொள்வது அவசியம். நமது தாயகத்தில் ஒரு நவதாராளவாத ஜனநாயக அரசும், நவதாராளவாத பொருளாதாரக் கட்டுமானமும் உள்ளது.
இவை இயற்றும் சட்டங்கள் யாவும் தனிமனித உரிமை தொடர்பான அம்சங்களாகவே அமையும்.
முதலாளித்துவ தாராளவாத ஜனநாயகக் கட்டுமானத்தில் கூட்டு உரிமை ஒன்று இருப்பதாக ஏற்கவில்லை.
எனவேதான் தனி மனித பாதுகாப்பை நோக்கியதாக சட்டங்கள் உள்ளன. எனவே நாம் முதலில் நடைமுறையிலுள்ள அரசுக் கட்டுமானம் சட்டம், ஒழுங்கு, மனித உரிமை, சம நீதி, சொத்துரிமை, சுதந்திரமான செயற்பாடு போன்றனவற்றை உறுதி செய்யும்போது மக்கள் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெற வாய்ப்பு ஏற்படுகிறது.
இவை முழுமையானவை அல்ல எனினும் சமச்சீரற்ற சமூகக் கட்டுமானம் உள்ள முதலாளித்துவ சமூகத்தில் இவை பிரதான அம்சங்களாகின்றன.
இங்கு கூட்டு உரிமையை வற்புறுத்தும் கட்டுரையாளர் நாட்டில் இதர சமூகங்கள் பற்றிய எவ்விதமான அடையாளப்படுத்தலும் இல்லாமல் விவாதத்தை நகர்த்தியிருப்பது தமிழ் மக்களை அந்நியப்படுத்தும் ஒரு பிற்போக்கு அரசியலின் அம்சங்களே. ஏனெனில் நாட்டில் வாழும் இதர தேசிய சிறுபான்மை இனங்களும் இவ்வாறான ஒடுக்குமுறைக்குள் சிக்கியுள்ள நிலையில் வெறுமனே தமிழ் மக்களின் கூட்டு உரிமை பற்றிப் பேசுவது ஒருவகை வகுப்புவாதமே.
நாட்டில் வாழும் இனங்கள் சகவாழ்வு அடிப்படையில் அமைதியாக வாழவேண்டுமெனில் முதலில் நாட்டில் ஜனநாயகம் பலமாக இருத்தல் அவசியம்.
பதிலாக நாம் எமது அரசியல் கொள்கை அடிப்படையில் வேறு தீர்வுகள் பொருத்தமானவை எனக் கருதுகிறோம்.
அதே போலவே இன்றுள்ள நிலையில் தேர்தல் என்பது ஊழலின் இருப்பிடமாக உள்ளது. முதலில் தேர்தல் விதிகள் மாற்றப்பட வேண்டும். பின்னர் ஊழலில்லாத ஜனநாயகத் தேர்தலை நடத்த வேண்டும். அவற்றை மக்களின் பிரதிநிதிகள் ஊடாகப் பேசித் தீர்ப்போம். நிச்சயமாக திணிக்கமாட்டோம்.
இவ்வாறு ஜே வி பி இணைந்த தேசிய மக்கள் சக்தி தெளிவாகத் தெரிவித்த பின்னரும் பழைய பிரச்சனைகளைத் தோண்டி எடுத்து பதில்களைத் தேடுவது வாசகனை முட்டாளாகக் கருதுவதாகவே தெரிகிறது.
ஒரு விவாதத்திற்காக எடுத்துக் கொண்டால் ஜே வி பி தமது தவறுகளை ஏற்றுக் கொண்டால், அல்லது மன்னிப்புக் கேட்டால் என்ன மாற்றம் நிகழ்ந்து விடும்? இது ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி மேடையில் நின்று கூச்சலிடுவதற்குச் சமமானது.
இதனை ஒரு எழுத்தாளன் செய்வது அதர்மம். தமிழ் அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் கடந்த காலத்தில் அரசுடன் இணைந்து செயற்படவில்லையா?
சகோதரப் படுகொலையில் ஈடுபடவில்லையா? இன்று கூட்டு அமைக்கவில்லையா? இன்று சிலர் அரசுடன் இணைந்து செயற்படவில்லையா?
அவர்களை மக்கள் வாக்களித்து அனுப்பவில்லையா? இவ்வாறான பின்வரிசையை நோக்கி விடும் கேள்விகளை விடுத்து அர்த்தமுள்ள விவாதத்திற்குள் செல்வோம். இதனையே ‘அரசியல் அடர்த்தி’ எனக் கருதுவதாக நம்புகிறேன்.
ஜே வி பி இன் அரசியலை ஓர் கவர்ச்சி தரும் மனிதாபிமான நோக்கு நிலையில் மேலெழுந்தவாரியாகப் பேசுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மனிதாபிமானம் என்பது கவர்ச்சியானது என விமர்ச்சிப்பது அபத்தமானது.
இன்று உலகில் மனிதாபிமானம், மனித உரிமை என்பன மிகவும் பெறுமதி மிக்க கோட்பாடுகளாகவும், அதை மீறுபவர்களுக்கு எதிராக உலகில் எந்த நாட்டிலும் வழக்குத் தொடரலாம் என்ற நிலை உள்ளது.
பல உயிர்களைக் காவு கொடுத்த ஒரு கட்சி மனிதாபிமானம் பற்றிப் பேசுவது என்பது கவர்ச்சி என விமர்ச்சிப்பது விஷமத்தனமானது.
மனிதாபிமானம் என்பது ஓர் தத்துவார்த்த நிலைப்பாடு. மனிதர்களின் கூட்டு மற்றும் தனிச் செயற்பாட்டிற்கு கௌரவம், அந்தஸ்து உண்டு என்பதை அரசியல் வரு முன்னர் மதங்கள் முன்னுரிமை கொடுத்தன.
மனிதாபிமானம் என்பது மனித உரிமை, சமூக நீதி, சமத்துவம், வித்தியாசமாக சிந்திக்கும் உரிமை, விஞ்ஞான ரீதியான விசாரணை என்பவற்றை வற்புறுத்துகிறது. இதன் காரணமாகவே தேசிய மக்கள் சக்தியினர் அரசு என்பது மதத்தின் இருப்பிடம் அல்ல என்கிறது.
தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் 5 வருடங்களே ஆட்சியிலிருக்க முடியும். அவர்களால் இன்றைய பிரச்சனைகளை அந்த 5 வருடங்களில் தீர்க்க முடியாது.
எனவே ஓர் நியாயமான பொறிமுறை மாற்றத்திற்கான பயணத்தில் ஈடுபடுவதே சாத்தியமானது. கடந்த காலங்களை அசை போட்டு, பாதைகளை அடைத்து விட்டதாகக் கனவு காணும் சக்திகளைத் தோற்கடிப்பதற்கான தருணம் இதுவே.
நாட்டில் கடந்த 75 ஆண்டுகளாக இடம்பெற்ற கொடுமையான அரசியல் பாதையை அடுத்த 5 வருடங்களில் மாற்றிவிட முடியாது.
ஆனால் இப்போதாவது புதிய ஆரம்பத்திற்கான அறிகுறிகள் சிங்களப் பகுதியிலிருந்தே ஆரம்பித்துள்ளமை நல்ல சகுனம் என்றே கருத வேண்டும். தென்பகுதியிலிருந்து வரும் மாற்றங்கள் தமிழ் மக்களைச் சென்றடைய விடாது தடுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதை இவ்வகையான பழைய குப்பைகளைக் கிளறி அதன் மூலம் தடுப்புச் சுவர்களைக் கட்டும் முயற்சிகள் தோல்வியடையும் என்பதை மாற்றங்கள் உணர்த்துகின்றன.
எனவே மனித சமூகம் முன்னேறிச் செல்வதற்கான பாதைகள் திறக்கின்றன். அப் பாதைகளை நோக்கி நடையை மேற்கொள்வது எங்கள் தெரிவு ஆகும்.
— வி. சிவலிங்கம் —