எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை மிகச்சிறப்பாக கையாண்டு மிகவேகமாக வளர்ந்து கொண்டிருந்த நாடுகளில், உலக அரங்கில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்ட ஒரு நாடுதான் ஈரான்.
1970களில் உலகின் விஞ்ஞான வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டிருந்ததும், தொலைத்தொடர்பு துறை வளர்ச்சியில் மிக விரைவான வளர்ச்சியை பதிவு செய்து உலகையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்த காலம் ஈரானுக்கு உண்டு.
இப்படி உலக பார்வையில் பல சிறப்புகளைக் கொண்டிருந்த ஈரான், இன்று தனது பொருளாதார கட்டமைப்பையே இழந்து, புவிசார் அரசியல் சூழ்நிலையாலும், பிராந்திய முரண்களாலும் பகைமையை மட்டுமே தன்னகத்தே கொண்டு இந்நாடு தத்தளித்து வருகிறது எனலாம்.
நிகழ்கால இஸ்ரேல் – ஈரான் போர் முரண்பாடுகளால், ஈரான் வெறுமனே நஷ்டமடைய போவதில்லை. ஈரானிய ஆட்சி தற்கொலையை தேர்ந்தெடுத்துள்ளது என்றே கருதலாம்.
புவிசார் அரசியல் சூழ்நிலையை தீர்மானிக்கும்- உலக வல்லரசுகள் இப்போதைய போர்ப் பகைமையை தமது நலன்களுக்கே முன்னுரிமை கொடுப்பர் என்பது உண்மையாகும்.
ஆயினும் ஒன்று தெளிவாக தெரிகிறது, ஈரானிய இறையாட்சி இப்போது ஒரு மரண வளையத்துக்குள் நுழைந்துள்ளது.
தெஹ்ரான் தன்னால் தாங்க முடியாத பிராந்தியப் போருக்கு மத்தியில் சோவியத் பாணி சரிவை எதிர்கொள்ளும் அல்லது மக்கள் புரட்சியின் பின் இரத்தக்களரியால் ஆட்சி மாற்றத்தை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
ஈரான் கடந்த வார இறுதியில் ட்ரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் 300 க்கும் அதிகமானவை இஸ்ரேல் மீது ஏவப்பட்டாலும் குறிப்பிடத்தக்க சேதம் அல்லது உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. என்றாலும், இஸ்ரேல் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என போர் அமைச்சரவை கூறியுள்ளது.
ஈரானின் ஏவுகணை தாக்குதல் தோல்வியுற்ற போதிலும், ஈரான் தனது தாக்குதல் இஸ்ரேலுடனான மூலோபாய சமன்பாட்டை மாற்றிவிட்டதாக பெருமையடித்துக் கொண்டுள்ளது. மேலும் துல்லியமாக மூலோபாய சமன்பாடு மாறிவிட்டதால், இஸ்ரேல் பதிலளிக்க வேண்டிய அவசியத்தில் உள்ளது.
ஈரானின் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலின் பதிலடி சாத்தியமானது என்பதை தெஹ்ரான் அறிந்திருக்க வேண்டும். இஸ்ரேலுக்குத் தெரிந்ததைப் போலவே ஈரான் தனது பதிலுக்கு இஸ்ரேலைப் போலவே அதே காரணங்களுக்காக பதிலளிக்க வேண்டும்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இக்கட்டான பகுதியான மத்திய கிழக்கின் போக்கிற்கு வல்லரசுகள் தம் சுய நலன்களை தீர்த்துக் கொள்வர்.
ஆனாலும் அது இஸ்ரேலும் ஈரானும் விரும்பாத ஒரு பரந்த பிராந்திய மோதலுக்கே வழி ஏற்படுத்தும். தற்போதைய சூழ்நிலையில்
இஸ்ரேல் உடனடியாக பதிலளிக்கும் என்று நினைக்க முடியாது. அத்துடன் எப்போது, எப்படி, எங்கே என்பது பற்றிய நிச்சயமற்ற தன்மையும் உள்ளது.
இஸ்ரேலின் வல்லமைமிக்க இராணுவ திறன்களைக் கருத்தில் கொண்டு ஒரு பரந்த மோதலைத் தவிர்க்க ஈரானிய தரப்பினரும் இறுதியில் முயற்சிப்பர். ஆனால் இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டு தலைமைகளும் எத்தகைய ஆபத்தான முடிவை எடுப்பர் என்பதை இலகுவில் கூற முடியாது.
ஈரான் தாக்குதல் தோல்வி்?
இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை(13) அன்று ஈரானின்புரட்சிகர காவலர் படை (IRGC) 170 ட்ரோன்களையும், 30 குரூஸ் ஏவுகணைகளையும், 120 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரானில் இருந்து ஏவப்பட்டதாகவும், சில ஏவுகணைகள் சிரியா, யேமன், ஈராக் ஆகிய நாடுகளில் இருந்து ஏவப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் 99 சதவீதத்தை தங்கள் இலக்குகளைத் தாக்காதவாறு இடைமறித்துவிட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
அதேவேளை லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழு, சிரியாவில் இருக்கும் கோலன் குன்றுகளில் இருக்கும் இஸ்ரேலிய ராணுவத் தளத்தின் மீது ராக்கெட்டுகளை ஏவியதாகக் கூறியிருக்கிறது.
இப்பகுதியில் இரகசிய தளங்களில் இருந்து செயல்பட்ட அமெரிக்கப் படைகள் ஜோர்டான் எல்லைக்கு அருகே தெற்கு சிரியாவில் ஈரானிய ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
அத்துடன் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், இங்கிலாந்தின் விமானப்படை ‘டைஃபூன்ஜெட்’ விமானங்கள் பல ஈரானிய தாக்குதல் ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியதை உறுதிப்படுத்தியுள்ளார். ஈரானிய தாக்குதல் ஆபத்தான மற்றும் தேவையற்ற செயல் என்றும், இதை கடுமையாக கண்டித்துள்ளதாகவும் ரிஷி சுனக் கூறியுள்ளார்.
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒரு பிராந்திய போருக்கு ஈரானை இழுக்கும் அபாயங்கள் நீண்டகாலமாக இருந்தது. தற்போது ஈரான் பொறுமை இழந்து இஸ்ரேலை அதன் சொந்த மண்ணில் இருந்து நேரடியாகத் தாக்கியதன் மூலம் ஈரான் வெல்ல முடியாத ஒரு மோதலைத் தொடங்கியுள்ளது.
தெஹ்ரானின் துணைத் தூதரகத்தின் தாக்குதலில் ஈரானிய ஜெனரல் ஒருவர் சிரியாவில் கொல்லப்பட்ட போது ஈரானிய தாக்குதலை பதில் இல்லாமல் கடந்து செல்ல அனுமதிக்க முடியாது என்பது இஸ்ரேலுக்கு தெரியும்.
தெஹ்ரான் ஒருவேளை விரைவில் அணு ஆயுதங்களுடன் கிழக்கில் சிரியாவிலிருந்து மற்றும் வடக்கில் லெபனானில் உள்ள ஹெஸ் பைல்லாவிலிருந்து ஒருங்கிணைந்த தாக்குதலை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
இன்று, ஒரு முழுமையான பிராந்திய யுத்தம் ஏற்பட்டால் அமெரிக்காவின் ஆதரவை ஜெருசலேம் முழுமையாக பெறும். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், இந்த போரில் ஜெருசலேம் பின்வாங்க வாய்ப்பில்லை போல புலப்படுகிறது.
ஈரானில் 60 சதவீத மக்கள் வறுமையில்:
எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகம் மூலம் உலகின் மிக முக்கிய பொருளாதார நாடாக இருந்த ஈரான், இன்று கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. அதேவேளை 60 சதவீத மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.
ஈரான் நாட்டில், முக்காடு அணிய மறுப்பது எதிர்ப்பின் சக்திவாய்ந்த அடையாளமாக மாறியுள்ளது. இனியும் இஸ்லாமிய புரட்சிகர நோக்கத்தில் நம்பிக்கை வைக்க ஈரானியர்களை வசப்படுத்துவது இனி இலகுவான நோக்கமாகத் தெரியவில்லை.
தற்போது ஈரான் பொருளாதார கட்டமைப்பையே இழந்து, புவிசார் அரசியல் சூழ்நிலையாலும், பிராந்திய முரண்களாலும் பகைமையை மட்டுமே தன்னகத்தே கொண்டு இந்நாடு தத்தளித்து வருகிறது எனலாம்.
-ஐங்கரன் விக்கினேஸ்வரா-