Rafah: காஸாவின் ரஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (19) மாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஃபாவின் புறநகரில் தெல் சுல்தான் பகுதியில் குடியிருப்புக் கட்டடத்தின் மீது குண்டுகள் வீசப்பட்டதாக காஸா மக்கள் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது.
எகிப்தின் எல்லையை ஒட்டியுள்ள ரஃபா நகரில் போரால் பாதிக்கப்பட்ட காஸாவின் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்து அடைக்கலம் புகுந்துள்ளனர்.
அவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் உள்ள பகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தவர்கள் குழந்தைகளும் பெண்களுமேயன்றி போராளிகள் அல்லவெனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 6 குழந்தைகள், 2 பெண்கள், ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் உடல்கள் ரஃபாவின் அபு யூசுப் அல்நஜார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பாலஸ்தீனத்திற்கு எதிரான தாக்குதலை கிட்டத்தட்ட 7 வருடங்களாக இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
ஹமாஸ் – இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக மத்திய கிழக்கு மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காஸா முனையில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால் இதுவரை 34,049 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 76,901 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதல்களில் 1139 பேர் உயிரிழந்துள்ளனர்.