ஈரான்மீது இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் பதிலடியானது ‘ஒரு தாக்குதலே அல்ல’ என ஈரான் விமர்சித்துள்ளது. அது சிறுவர்களின் விளையாட்டைப் போன்றது என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையிலான போர் அபாய அச்சத்தை தணிப்பதாக இக்கருத்துகள் உள்ளன.
சிரியாவிலுள்ள ஈரானிய துணைத்தூதரகத்தின் மீது இஸ்ரேல் கடந்த முதலாம் திகதி நடத்திய தாக்குதலில் ஈரானிய இராணுவ அதிகாரிகள் உட்பட பலர் கொல்லப்பட்டிருந்தனர்.
இத்தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது கடந்த 13 மற்றும் 14ஆம் திகதிகளில் சுமார் 300 ஆளில்லா விமானங்கள்இ ஏவுகணைகளை ஈரான் ஏவியது. இவற்றில் 99 சதவீதமானவை சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் இஸ்ரேலுக்கு சிறிய பாதிப்புகளே ஏற்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
எனினும் இத்தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமை (19) அதிகாலை தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்தது. அன்றைய தினம் ஈரானின் இஸ்பஹான் நகரில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக செய்தி வெளியாகியிருந்தது.
3 சிறிய ஆளில்லா விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
ஈரான்மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கூறிய போதிலும் அத்தாக்குதலை தான் நடத்தியதாக இஸ்ரேல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் தொடர்பிலும் முரண்பாடான தகவல்கள் வெளியாகியுள்ளன. அது ஏவுகணைத் தாக்குதல் என அமெரிக்கா தெரிவித்திருந்தது. எனினும் ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) சுட்டுவீழ்த்தியதாக ஈரான் கூறுகிறது.
இந்நிலையில் இது ஒரு தாக்குதலே அல்ல என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொஸைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளார்.
பதில் தாக்குதல் திட்டமில்லை
அமெரிக்காவின் என்.பி.சி. அலைவரிசைக்கு வெள்ளிக்கிழமை அளித்த செவ்வியொன்றில் இது தொடர்பாக அவர் கூறுகையில்இ
‘நேற்றிரவு நடந்தது தாக்குதல் அல்ல. அது ஈரானில் எமது சிறுவர்கள் பயன்படுத்தும் விளையாட்டுப் பொருளான ‘குவாட்--கொப்டர்’களுக்கு இடையிலான மோதலைப் போன்றது. அவை ஆளில்லா விமானங்கள் அல்ல’ என வெள்ளிக்கிழமை அவர் கூறியுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்புச் சபை நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்காக நியூ யோர்க்குக்கு சென்றிருந்த நிலையில் அமைச்சர் அப்துல்லாஹியன் இந்த செவ்வியை அளித்துள்ளார்.
இஸ்ரேல் குறிப்பிடத்தக்கவொரு தாக்குதலை நடத்தினால் தவிர, இஸ்ரேல்மீது பதில் தாக்குதல் நடத்தும் திட்டம் ஈரானிடம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால்இ ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் ஈரானின் பதிலடி துரிதமாகவும் கடுமையாகவும் இருக்கும் என அவர் கூறினார்.
அதேவேளைஇ இஸ்ரேல்மீது ஈரான் நடத்திய ஏவுகணை, ஆளில்லா விமானத் தாக்குதல் ஓர் எச்சரிக்கை நோக்கமுடையது எனவும் அமைச்சர் அப்துல்லாஹின் கூறினார்.
‘எம்மால் (இஸ்ரேலிய நகரங்களான) டெல் அவிவ் அல்லது ஹைஃபாவை தாக்கியிருக்க முடியும். இஸ்ரேலின் அனைத்து பொருளாதார துறைமுகங்களையும் தாக்கியிருக்கலாம்.
‘ஆனால், எமது சிவப்புக் கோடுகள் பொதுமக்கள் ஆவர்இ இராணுவ நோக்கம் மாத்திரமே எம்மிடமிருந்தது’ என அவர் கூறினார்.