யுக்ரேனுக்கான 61 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான இராணுவ நிதியுதவியை அமெரிக்கா அளிக்கவுள்ளது. இதன் மூலம் யுக்ரேன் எந்த மாதிரியான ஆயுதங்களை பெறப் போகிறது? ரஷ்ய ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுக்கும் யுக்ரேன் முயற்சிக்கு இது எப்படி கைகொடுக்கும்?
வான் பாதுகாப்பு அமைப்புகள், நடுத்தர முதல் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகள் ஆகியவை யுக்ரேனுக்குத் தேவையான மிக முக்கியமான ஆயுதங்கள் ஆகும். இந்த மூன்று ஆயுதங்களையும் வாங்கவே அமெரிக்காவின் நிதியுதவி பயன்படுத்தப்படக் கூடும்.
வான் வழியாக ரஷ்ய அச்சுறுத்தலைத் தடுப்பது நகரங்களின் பாதுகாப்பிற்கும் ஆற்றல் ஆலைகள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்பை பாதுகாக்கவும் இன்றியமையாதது.
கடந்த வாரம் யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி, இந்த ஆண்டு மட்டும் தனது நாடு கிட்டத்தட்ட 1,200 ரஷ்ய ஏவுகணைகள், 1,500 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 8,500 வழிகாட்டி வெடிகுண்டுகள் ஆகியவற்றால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
யுக்ரேனில் பல்வேறு மேற்கத்திய நாடுகள் விநியோகித்த ஆயுத அமைப்புகள் உள்ளன. தோள்பட்டையில் இருந்து ஏவப்படும் ஸ்டிங்கர் குறுகிய தூர ஏவுகணைகள் முதல் மேம்பட்ட மற்றும் மிகவும் விலையுயர்ந்த – பேட்ரியாட் அமைப்பு வரை உள்ளன. குறைந்தது இன்னும் ஏழு பேட்ரியாட் ஆயுத அமைப்புகள் அல்லது அதற்கு இணையான ராணுவ உபகரணங்கள் தேவை என்று ஜெலென்ஸ்கி கூறினார்.
ரஷ்யாவின் கப்பல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் – மேம்படுத்தப்பட்ட S-300 மற்றும் S-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் – இரானில் தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஷாஹெத்-136 ட்ரோன்கள் ஆகியவை பெரியளவில் ஏவப்படுவதால் அவற்றை எதிர்கொள்வது யுக்ரேனுக்கு கடினமானதாக இருக்கிறது.
வான் பாதுகாப்பு அமைப்பை முறியடிப்பதற்கான ஒரு உன்னதமான தந்திரம், அவற்றை ஏமாற்றி திசை திருப்பும் வகையில் இலக்குகளை தாக்குவதாகும். அவற்றின் ரேடார் கண்காணிப்பு அமைப்புகளை ஏமாற்றுவது மற்றும் ஏவுகணை இருப்பை குறைப்பது ஆகியவை ஆகும்.
நடுத்தர முதல் நீண்ட தூர இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள்
எப்படியிருப்பினும் களத்தில் நடக்கும் போர் மிக முக்கியமானது.
கடந்த அக்டோபர் முதல், யுக்ரேன் தனது கிழக்குப் பகுதியில் கிட்டத்தட்ட 583 சதுர கிலோமீட்டர் (225 சதுர மைல்) பகுதியை ரஷ்ய படைகளிடம் இழந்துள்ளது. பெரும்பாலும் பீரங்கிகளின் பற்றாக்குறை காரணமாக இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஒரு மொபைல் தளத்திலிருந்து வழிகாட்டப்பட்ட ஆயுதங்களை வழங்குவதன் மூலம், ஹை மொபிலிட்டி ஆர்ட்டிலரி ராக்கெட் சிஸ்டம்ஸ் (HIMARS) யுக்ரேன் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம், இலக்கை அடைந்து, ரஷ்யப் படைகளின் லாஞ்சரைக் கண்டுபிடித்து அழிக்க முடியும்.
எனவே யுக்ரேனில், மேற்கத்திய தயாரிப்பான HIMARS அமைப்பின் அதிக செயல்திறனை எதிர்பார்க்கலாம். மேலும் அதிக டாங்கிகள் மற்றும் நடுத்தர ஆயுத தளவாடங்களின் திறனையும் எதிர்பார்க்கலாம்.
அமெரிக்க இராணுவ தந்திரோபாய ஏவுகணை அமைப்புகளின் (ATACMS) நீண்ட தூரம் தாக்கக் கூடிய அமைப்புகளும் யுக்ரேன் வந்தடைய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. பழைய ATACMS இராணுவ ஆயுத அமைப்புகள் கடந்த ஆண்டின் பிற்பகுதி முதலே யுக்ரேனிடம் உள்ளன. ஆனால் தற்போது கட்டமைக்கப்பட்டுள்ள மேமப்டுத்தப்பட்ட ஆயுதங்கள் 300கிமீ (186 மைல்கள்) வரை தாக்குதல் நடத்தும் திறனுடையது.
இது ரஷ்யாவின் ஒரு பெரிய கடற்படை தளமாக இருக்கும் கிரிமியா வரையிலும் தாக்கக் கூடியது.
பீரங்கி குண்டுகள்
மேலும் இரண்டு ஆயுதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. M777 ஹோவிட்சர்களுக்கு 155மிமீ பீரங்கி குண்டுகளை தொடர்ந்து உட்செலுத்த வேண்டும். பிப்ரவரி 2022 முதல், அமெரிக்கா இதுபோன்ற 20,00,000 குண்டுகளை யுக்ரேனுக்கு அனுப்பியுள்ளது. மேலும் இந்த சமீபத்திய இராணுவ உதவித் தொகுப்பில் இன்னும் பல எண்ணற்ற குண்டுகள் அனுப்பப்படும்.
“மிகவும் வலுவான தளவாட நெட்வொர்க்” என்று அழைப்பதற்கு ஏற்ப அமெரிக்கா ஆயுதங்களை விரைவாக வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
“நாங்கள் கடந்த காலத்தில் செய்தது போல், சில நாட்களுக்குள் இந்த இராணுவ உதவித் தொகுப்பை வழங்க முடியும்,” என்று பென்டகன் செய்தி செயலாளர் மேஜர் ஜெனரல் பாட் ரைடர் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் கூறினார்.
இராணுவ உபகரணங்கள் அனைத்தும் யுக்ரேனுக்கு மிக அருகில் நகர்த்தப்பட்டிருக்கலாம். அவை ஒப்படைக்கப்பட்ட உடன் அதிகாரப்பூர்வமாக யுக்ரேனின் சொத்தாக மாறும்.
ஆனால் ரஷ்யப் படைகள் கிழக்கில் தங்கள் தாக்குதலைத் தொடர்வதால், முன்னணி ராணுவ படைகளுக்கு தேவையான பீரங்கி உபகரணங்கள் வந்தடைய பல நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம்.
ரஷ்யாவை யுக்ரேனால் திணறடிக்க முடியுமா?
இந்த போர் விமானங்கள் தற்போதைய இராணுவ உதவி தொகுப்பில் இல்லை எனினும், முந்தைய இராணுவ தொகுப்பில் இருந்து அவை விரைவில் சேவைக்கு வரவுள்ளது.
யுக்ரேனிய விமானிகள் மற்றும் பணியாளர்கள் தற்போது ருமேனியாவில் F-16 ஜெட் விமானங்களை இயக்கும் பயிற்சியைத் தொடர்கின்றனர்.
இந்த விமானங்கள் பல்வேறு செயல்பாட்டை மேற்கொள்ளக் கூடியது. வலுவான வான்வழி தாக்குதல், வானிலிருந்து தரை இலக்குகளைத் தாக்கும் திறன் ஆகியவற்றை கொண்டுள்ளது.
யுக்ரேனிய வான் பாதுகாப்பை இவை வலுப்படுத்தும். டென்மார்க், நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா சில மாதங்களில் யுக்ரேனுக்கு டஜன்கணக்கான “வைப்பர்களை” வழங்க உள்ளன.
இந்த போர் விமானங்கள்,போர்க் களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது, ஆனால் யுக்ரேனிய தலைநகரான கீவுக்கு மற்றொரு குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அம்சமாக இருக்கும். F-16 ரக போர் விமானங்களால் போர்க்களத்தில் எந்தவொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது, அவற்றை ரஷ்யப் படைகள் சுட்டு வீழ்த்தும் என்று ரஷ்யா கூறியுள்ளது.
-BBC TAMIL NEWS-