இரானிய கால்பந்து கிளப்பான ‘இஸ்திக்லால்’ அணியின் கேப்டனும் கோல்கீப்பருமான ஹொசைன் ஹொசைனியை பெண் ரசிகர் ஒருவர் போட்டியின்போது மைதானத்திற்குள் வந்து கட்டிப்பிடித்ததால், பிரச்னையில் சிக்கினார் ஹொசைனி.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஹொசைன் ஹொசைனிக்கு எதிராக இரானிய காவல் படையான ‘ஃபராஜா’ ஒரு முறையான புகாரைப் பதிவு செய்தது. இதனால் கலாசாரம் மற்றும் ஊடக வழக்குரைஞர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார் ஹொசைனி. இந்தச் சம்பவம் காரணமாக அவர் நீதிமன்றத்திலும் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டது.

இரானிய ஊடகங்களின்படி, இரானிய கால்பந்து அணியின் கோல்கீப்பர், தனது வழக்கறிஞருடன் அரசு சட்ட அலுவலரின் அலுவலகத்திற்கு வந்து, “தான் சட்டத்தை மீறவில்லை, பெண் ரசிகருக்கு ஆறுதல் கூற மட்டுமே முயன்றேன்” என்று கூறினார்.

அவருக்கு 30 கோடி டோமன் அபராதமாக விதிக்கப்பட்டது, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 4 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு போட்டியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
விளம்பரம்

இரான் கால்பந்து அணியின் முன்னாள் கோல்கீப்பரான மன்சூர் ரஷிதி, ஹொசைனிக்கு ஆதரவாகப் பேசினார். கட்டிப் பிடித்தவர் ஒரு இளம் கால்பந்து ரசிகை என்பதால், எந்த சட்டத்தின் கீழ் ஹொசைனி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

முன்னாள் இரானிய அதிபர் அஹ்மதி நிசாத்தை உதாரணமாகக் கூறிய அவர், வெனிசுலா அதிபரின் தாயை அஹ்மதி கட்டிப் பிடித்ததாகவும், ஆனால் அப்போது யாரும் எதுவும் கூறவில்லை என்றும், அவர் எந்தத் தடையையும் சந்திக்கவில்லை என்றும் ரஷிதி கூறினார்.

“இதைவிட மோசமான விஷயங்களை திரைப்படங்களில் பார்க்கிறோம். இதுபோன்ற சம்பவத்திற்காக ஒரு கால்பந்து வீரர் ஏன் தடையை எதிர்கொள்ள வேண்டும்?” என்றார் ரஷிதி.

 

பெண் ரசிகரை கட்டிப்பிடித்த சம்பவம்: உண்மையில் நடந்தது என்ன?

படக்குறிப்பு, ஹொசைன் ஹொசைனி.

ரசிகர்கள், உணர்ச்சிவசப்பட்டு, தங்களுக்குப் பிடித்த கால்பந்து வீரரின் கவனத்தை ஈர்க்க அல்லது அவரைச் சந்திக்க மைதானத்திற்குள் ஓடுவது கால்பந்து உலகில் பலமுறை நடந்துள்ளது.

பொதுவாக பாதுகாப்பு அதிகாரிகள் அத்தகைய ரசிகர்களை ஸ்டாண்டிற்கு திருப்பி அனுப்புவார்கள் அல்லது நட்சத்திர வீரர்கள் அவர்களுக்கு ஆட்டோகிராஃப் கொடுப்பதன் மூலமோ, அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வதன் மூலமோ அல்லது அவர்களின் டி-சர்ட்டை பரிசாகக் கொடுப்பதன் மூலமோ அனுதாபம் காட்டுகிறார்கள்.

ஆனால் இரானில் நடந்த இந்தச் சம்பவத்தால், இரானிய நட்சத்திர கால்பந்து வீரர் அபராதம், இடைநீக்கம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

உண்மையில் நடந்தது என்னவென்றால், ஏப்ரல் 12 அன்று இரான் பிரீமியர் லீக்கில் ‘இஸ்திக்லால்’ மற்றும் ‘அலுமினியம் அரக்’ ஆகிய கிளப்புகளுக்கு இடையே ஒரு போட்டி நடந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், இமாம் கொமேனி கால்பந்து மைதானத்திற்குள் இரண்டு சிறுமிகள் திடீரென வந்தனர். ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை மேற்கொண்டு செல்லவிடாமல் தடுத்தனர்.

இதைப் பார்த்த, ‘இஸ்திக்லால்’ கேப்டன் ஹொசைன் ஹொசைனி அந்தப் பெண் ரசிகையின் அருகே சென்றபோது, அவர் ஹொசைனியை கட்டிப்பிடித்தார். இக்காட்சியைப் பார்த்த மைதானத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரி உடனடியாக ஹொசைன் ஹொசைனியை ஆடை மாற்றும் அறைக்கு அழைத்துச் சென்றார்.

இந்தச் சம்பவத்தின் காணொளியில், ‘வெட்கமற்ற செயல், ‘வெட்கமற்ற செயல்’ என ரசிகர்கள் கோஷங்களை எழுப்பியதையும், பாதுகாப்பு அதிகாரிகள் மீது பாட்டில்களை வீசியதையும் காணலாம்.

அபராதம் மற்றும் மன்னிப்பு கேட்க ஆணை

படக்குறிப்பு, ஹொசைன் ஹொசைனி.

தற்போது இந்தச் சம்பவம் ஹொசைன் ஹொசைனிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அபராதம் விதித்தது மட்டுமல்லாமல், ஊடகங்களில் அவர் முறைப்படி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஒழுங்குக் குழு உத்தரவிட்டுள்ளது.

ஹொசைன் ஹொசைனி போட்டி அதிகாரியிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் இந்த முடிவில் கூறப்பட்டுள்ளது.

ஹொசைன் ஹொசைனிக்கு விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்த ‘இஸ்திக்லால்’ அணியின் ரசிகர்கள் தயாராக இருப்பதாக மெஹ்ர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரானிய கால்பந்தாட்ட வீரர் ஹொசைன் சாதிக்கி, இந்த நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கையில், “வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த ஒரு கட்டிப்பிடி சம்பவம் இதுதான்” என்று கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது அணியின் கோல்கீப்பரை நினைத்துப் பெருமைப்படுகிறேன். ஒரு ரசிகையின் ஆசையை நிறைவேற்றியதன் மூலமாக, கால்பந்தில் மிகவும் விலையுயர்ந்த ஒரு கோலை அவர் அடித்துள்ளார்” என்றார்.

மறுபுறம், ஹொசைன் ஹொசைனி ஒரு பேட்டியில், “நான்கே நாட்களில் இந்த விஷயத்தில் ஒழுங்குக் குழு தனது முடிவை எடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இதற்கு முந்தைய பல சம்பவங்களில் முடிவெடுக்க ஒன்று முதல் இரண்டு மாதங்கள் எடுத்தது. ஆனால் என் விஷயத்தில் நான்கு நாட்கள் மட்டுமே ஆனது. அந்தப் பெண் ரசிகையின் பெயரால் இந்த 30 கோடி டோமனை தியாகம் செய்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்த நேர்காணலுக்குப் பிறகு, கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்குக் குழு அமீர் ஹொசைன் சாதிக்கி மற்றும் ஹொசைன் ஹொசைனி ஆகியோரை அழைத்து அவர்களிடம் விளக்கம் கேட்டது.

ஹொசைன் ஹொசைனிக்கு எதிரான தண்டனையை அமல்படுத்த வேண்டும் என்று பெர்சியா செய்தி நிறுவனம் தனது செய்தி அறிக்கையில் கோரியுள்ளது.

அவ்வாறு நடக்கவில்லை என்றால், “ஒழுங்குக் குழு மற்றும் கால்பந்து சம்மேளனத்தை மக்கள் கேள்வி கேட்பார்கள், கேலி செய்வார்கள்” என்றும் அந்த அறிக்கையில் எழுதப்பட்டிருந்தது.

பாடகர் கௌரோஸும் ஒரு வீடியோவில் ஹொசைனியை ஆதரித்துப் பேசியிருந்தார். “இந்த அழகான தருணத்தில் அவருடன் துணை நிற்க, அபராதத்தைச் செலுத்தத் தயாராக இருக்கிறேன்” என்று அவர் அந்த வீடியோவில் கூறினார்.

சமூக ஆர்வலர் இப்ராஹிம் ஹமிதியும் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் கால்பந்து வீரருக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். பின்னர், கிளப்பின் அதிகாரப்பூர்வ சேனலுக்கு ஹொசைன் ஹொசைனி அளித்த பேட்டியில், “நான் அமைதி மற்றும் பதற்றத்தைக் குறைக்க மட்டுமே விரும்பினேன். ஒழுங்குக் குழுவின் முடிவையும், கடும் அபராதத்தையும் ஏற்றுக் கொண்டேன். ஒழுங்குக் குழுவின் முடிவை கேலி செய்வது எனது நோக்கம் அல்ல,” என்று கூறினார்.

காவல்துறை அதிகாரிகளின் பணிக்கோ அல்லது சட்டத்திற்கோ தடையாக இருக்க விரும்பவில்லை, இந்த விவகாரம் தொடர்பான பதற்றத்தைக் குறைக்கவே விரும்புவதாகவும் அவர் கூறினார்.

இந்த இடைநீக்கம் காரணமாக, ‘இஸ்திக்லால்’ அணிக்கு கோல் கீப்பராக மே 12 அன்று நடைபெறும் போட்டியில் ஹொசைனி விளையாட மாட்டார். அவருக்குப் பதிலாக முகமது ராசா கலிலாபாடி கோல்கீப்பர் பொறுப்பை ஏற்கிறார்.

இரானின் பிரீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் ‘இஸ்திக்லால்’ அணி தற்போது முதலிடத்தில் உள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version