மத்திய கிழக்கில் இருந்து வரும் அனைத்து செய்திகளும் உலகம் முழுவதும் வேகமாக பரவி விடுகின்றன.

இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நடத்தப்பட்ட முன்னறிவிப்பு இல்லாத ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைப் பற்றிய செய்திகள் வெளி வந்து பேசப்படுவதற்குள் அடுத்த கணம் காஸாவில் நிகழும் தாக்குதல்களை பற்றி தலைப்பு செய்திகள் வந்துவிடுகிறது.

ஆனால் கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் ராணுவத் தலைவர்கள் இரண்டு பழைய எதிரி நாடுகளுக்கு இடையே சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட அசாதாரண மோதலை பற்றி இன்னும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த தாக்குதல், ஒரு பேரழிவு தரும் சர்வதேச மோதலைத் தூண்டும் நிலை இருந்ததால் அது விவாதிக்கக் கூடியதாக இருந்தது.

இரானும் இஸ்ரேலும் நேருக்கு நேர் தாக்கிக் கொள்வது இதுவே முதல் முறை. சில ஆய்வாளர்கள் இரானிய தாக்குதலானது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் என்று கூறுகின்றனர் –

அதாவது, யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா நடத்திய தாக்குதல்கள் எல்லாவற்றையும் விட பெரியது. 1991 இல் சதாம் ஹுசைனின் ஸ்கட் ஏவுகணைகளுக்குப் பிறகு இது நிச்சயமாக இஸ்ரேல் மீதான முதல் வெளிப்படையான தாக்குதல் ஆகும்.

300-க்கும் மேற்பட்ட இரானிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் வழியிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டன அல்லது செயலிழந்தன.

ஆனால் ஜெருசலேமில் உள்ள எங்கள் அலுவலகத்தில் இருந்து இரவு வானம் இஸ்ரேலிய வான் பாதுகாப்பு நடவடிக்கையில் திடீரென ஒளிர்வதை நான் பார்த்தேன். அது, மேலே பறந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீழ்த்த முயற்சி செய்யப்பட்டதன் பிரதிபலிப்பு. ஒருவேளை ஜிபிஎஸ் வழிகாட்டுதல் அமைப்பு செயலிழந்து, ஏவுகணை நகர்ப்புறத்தில் தரையிறங்கி இருந்தால் பொதுமக்கள் பலரின் உயிரை எடுத்திருக்கும்.

“அந்த வார இறுதியில் ஆபத்து நிகழ்வதற்கு நாங்கள் எவ்வளவு அருகாமையில் இருந்தோம் என்பதை மக்கள் உணரவில்லை என்று நான் நினைக்கிறேன்,” என்று ஒரு மூத்த மேற்கத்திய பாதுகாப்பு அதிகாரி என்னிடம் கூறினார். “இது ஒரு வித்தியாசமான கதையாக இருந்திருக்கும்.”

இருப்பினும் மேற்கு நாடுகளில் சிலர் ஏப்ரல் 13 தாக்குதல் மற்றும் கடந்த வாரம் இஸ்ரேலின் பதிலடி ஆகியவற்றிலிருந்து நல்ல விஷயத்தை எடுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள்.

இரானிய தாக்குதலை முன்னமே கண்டுபிடித்தது உளவுத்துறைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

இஸ்ரேல் சேதமின்றி தப்பியது கூட்டு ராணுவ ஒத்துழைப்புக்கான ஒரு சிறந்த உதாரணம் என்றும், இரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் எப்படி ஏணியில் ஏறுவது என்பதை கற்றுக்கொண்டன என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

முதலில் உளவுத்துறை நடவடிக்கையில் இருந்து விவரிக்கலாம். சனிக்கிழமை மாலை தாக்குதல் நடப்பதற்கு முன், புதன்கிழமை காலை இரானின் திட்டங்களைப் பற்றி அமெரிக்காவுக்கு தகவல் கிடைத்ததாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

முக்கியமாக, அவர்கள் இரானின் தாக்குதல் அளவைக் கணித்தனர். ”இரானின் பதிலடி எதிர்பார்ப்புகளை விட உச்சத்தில் இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். இந்த தகவல் சற்று அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அது சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்த உதவியது” என்று ஒரு உயர்மட்ட மேற்கத்திய ஆதாரம் கூறியது.

முக்கியமாக, ஜோர்டான் மற்றும் செளதி அரேபியா உட்பட, வளைகுடாவில் உள்ள சில நாடுகளை இஸ்ரேலின் ஆதரவு நாடாக சேருமாறு அமெரிக்கா அழைப்பு விடுக்க வழிவகுத்தது.

அவர்களின் பயம் என்னவெனில் இரானின் திட்டங்களின் அளவை அறிந்தவுடன் – இஸ்ரேலுக்கு கடுமையாக பதிலடி கொடுப்பதை தவிர வேறு வழியில்லை என்ற சூழல் உருவாகும். அதன் பின்னர் பிராந்திய போர் தீவிரமடையும் அபாயம் ஏற்படும் என்பதே.

எனவே, இரானிய சிக்னல்கள், இந்த சம்பவம் பற்றி புலனாய்வு தகவல் சேகரிப்புக்கு மற்றும் இஸ்ரேலுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் தாக்குதலை தடுக்க தயார் செய்ய நேரம் கொடுத்தது.

ஜோர்டான் மற்றும் செளதி அரேபியாவின் பங்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. ஜோர்டான் தனது இறையாண்மையை பாதுகாக்க தற்காப்புக்காக இரானிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதை ஒப்புக்கொண்டுள்ளது.

ஜோர்டான் இஸ்ரேலிய போர் விமானங்களை அதன் வான்வெளியில் பறக்க அனுமதித்தது. செளதி அமெரிக்காவுக்கு தகவல் வழங்கியதாகவும், ஏமனில் உள்ள இரானிய ஆதரவு ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல் குறித்து கண்காணித்ததாகவும் கருதப்படுகிறது.

இரானுக்கு எதிராக புதிய ராணுவ கூட்டணியா?

முக்கியமான விஷயம் என்னவெனில், இந்த திட்டம் வேலை செய்தது. அமெரிக்கா, பிரித்தானிய, பிரெஞ்சு, ஜோர்டானிய மற்றும் செளதி இராணுவங்கள் கூட்டு வான் பாதுகாப்பில் இணைந்து செயல்பட முடியும் என்பதை நிரூபித்தது.

“இது ஒரு அசாதாரணமான வெற்றிகரமான திட்டவட்டமான நடவடிக்கை. உளவுத்துறை ஒரு ஆபத்தை கண்டறிந்தது, அதன் முழு திட்டத்தையும் நாங்கள் அறிந்தோம், நாங்கள் ஒன்றாக வேலை செய்தோம். உலகில் வேறு எந்த நாடுகளும் இதைச் செய்ய முடியாது.” என்று பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.

இது இரானுக்கு எதிரான புதிய பிராந்திய கூட்டணியின் தொடக்கமாகவும் இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். மற்ற நாடுகளை பொறுத்தவரை, இது ஒரு வழக்கமான பாதுகாப்பு மற்றும் ராணுவ முன்னோக்கு நடவடிக்கை, இதன் பின்னால் இருக்கும் பெரிய அரசியல் நோக்கத்தை தவறவிட்டு தொழில்நுட்ப வெற்றியைக் கொண்டாடுகிறது.

மிகவும் அவநம்பிக்கையான ஆய்வாளர்கள், இரான் இஸ்ரேலுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்த விரும்பி இருந்தால் அது முன்கூட்டியே எச்சரிக்கை கொடுப்பதை தவிர்த்திருக்கலாம், அதன் இலக்குகளை விரிவுபடுத்தியிருக்கலாம், இரண்டாவது அலை தாக்குதல்களைத் தொடுத்திருக்கலாம் – அல்லது லெபனானில் இருந்து ஒரு பெரிய தாக்குதலை நடத்த ஹெஸ்பொல்லாவிற்கு உத்தரவிட்டிருக்கலாம்“ என்கின்றனர்.

சர்வதேச மூலோபாய ஆய்வுகளின் சிந்தனைக் குழுவைச் சேர்ந்த எமிலி ஹோகாயெம் கூறுகையில், இஸ்ரேல் தனது பாதுகாப்புக்காக நட்பு நாடுகளை எவ்வளவு நம்பியிருக்க வேண்டும் என்பதை இந்த நடவடிக்கை வெளிப்படுத்தியது.

அதிக தீவிரம் கொண்ட மோதலுக்கு தேவையான போதுமான வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இஸ்ரேல் வைத்திருக்குமா என தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

“யுக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போரை போல, உங்களிடம் எவ்வளவு சக்தி வாய்ந்த பொருட்கள் கையிருப்பில் உள்ளன என்பது முக்கியம்,” என்று அவர் கூறினார். இந்த நெருக்கடி ஒரு புதிய பிராந்திய ராணுவக் கூட்டணியின் தொடக்கத்தைக் குறித்தது என்ற கருத்தையும் ஹோகாயெம் நிராகரித்தார்.

“நாம் புதிய சகாப்தத்தின் உச்சத்தில் இல்லை. அரபு நாடுகள் ஒத்துழைத்துள்ளன, ஏனெனில் அவை முக்கியமான ஒரு பிராந்திய மோதலைத் தவிர்க்க விரும்புகின்றன. மேலும் அவர்கள் தங்கள் மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு நல்ல கூட்டாளிகள் என்பதை நிரூபிக்க விரும்புகிறார்கள். இது வெறுமனே தேசிய இறையாண்மையின் ஒரு விஷயம். அவர்கள் வானத்தில் வெடிபொருட்கள் வெடிப்பதை அவர்கள் விரும்பவில்லை.” என்றார்.


படக்குறிப்பு, கோப்புப்படம்

இந்த தாக்குதல் அனுபவத்திலிருந்து இரானும் இஸ்ரேலும் நிறைய கற்றுக்கொண்டன என்பது ஆய்வாளர்களின் இரண்டாவது கூற்று. இரு நாடுகளும் தங்கள் நோக்கங்களைத் துல்லியமாக வெளிப்படுத்தியதாக அவர்கள் கூறுகிறார்கள்;

இரு நாடுகளும் தங்கள் தன்மானத்தை இழக்காமல் பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்க முடியும் என்பதை உணர்ந்தனர்; அவர்கள் இருவரும் பரஸ்பரமாக மீண்டும் தடையை சந்திக்க நேரிடும் என்ற ஒரு பயத்தை கொண்டிருந்தனர்.

இரான் இஸ்ரேலை தாக்கியிருக்கலாம், ஆனால் அது அதன் நோக்கத்தைப் பற்றி நட்பு நாடுகளிடம் சொல்லி எச்சரித்தது மற்றும் இந்த ஒரு முறை மட்டும் என்று ஆரம்பத்திலேயே சமிக்ஞை செய்தது.

இஸ்ரேல் தீவிரமாக இல்லாமல், அடக்கமான பதிலடி கொடுக்க முடியும் என்பதை நிரூபித்தது. மத்திய இரானில் உள்ள வான் பாதுகாப்புகளை குறிவைத்து, ஒரு பெரிய திறனை நோக்கி சிறிய தாக்குதலை மேற்கொண்டது.

இஸ்ரேலின் பதிலடி குறித்து இரானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கலாம் என்று எனக்கு சொல்லப்பட்டது. நிச்சயமாக இரான் இஸ்ரேலின் எதிர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க விரும்பவில்லை என்று ஆரம்ப கட்டத்தில் இருந்து சமிக்ஞை செய்தது.

இரு தரப்பினரும் நிச்சயமாக ராணுவ பாடங்களைக் கற்றுக்கொண்டிருப்பார்கள். “இந்த தாக்குதல் இரானுக்கு இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பின் பலம் மற்றும் பலவீனங்களை அடையாளம் காண உதவியது” என்று போர் ஆய்வுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலும் அமெரிக்காவும் இரானின் வியூகங்களை பற்றி அதிகம் புரிந்து கொள்ளும் ஆற்றல் மிக்கவை.

இரானும் இஸ்ரேலும் அதற்கு இடையில் இருந்த ஒரு மிகப்பெரிய தடையை உடைத்து விட்டது என்பது எதிர் வாதம், எனவே தடையின்றி நேரடித் தாக்குதல் நடத்த எளிதான வழி கிடைத்துவிட்டது.


படக்குறிப்பு, டெஹ்ரானில் வைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் எதிர்ப்பு பேனர் முன்பு நடந்து செல்லும் இரான் பெண் (கோப்புப்படம்)

வெளியுறவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த அஃப்ஷோன் ஆஸ்டோவர் வெளி விவகாரங்களுக்கான ஒரு கட்டுரையில், இரானின் தாக்குதலின் அளவை பார்க்கும்போது, அது கட்டுப்படுத்தும் கொள்கையால் இனி நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது.

”இரான் வேண்டுமென்றே பலவீனமான தாக்குதலை நடத்தியது என்ற கருத்தை ஏற்கவில்லை. இரான் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு தீவிரமான தாக்குதலை எதிர்பார்க்கிறது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரானும் இஸ்ரேலும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள கற்றுக் கொண்ட கருத்தை ஹோகாயெம் ஏற்கவில்லை. டமாஸ்கஸில் உள்ள ஈரானின் தூதரகத்தில் பல உயரடுக்கு இரானிய புரட்சிகர காவலர் படை (IRGC) கமாண்டர்களைக் கொல்லும் முடிவின் விளைவுகளை இஸ்ரேல் உணரத் தவறியதை அவர் மேற்கோள் காட்டுகிறார்.

“இந்த இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று நேரடியாக பேசவில்லை. மாறாக, ராணுவ நிலைப்பாடு மற்றும் மூன்றாம் தரப்பினர் மூலம் சிக்னல் கொடுத்து கொள்கின்றன.

இரு தரப்பினரும் தடுப்புகளை மீண்டும் நிறுவியதில் சந்தேகம் உள்ளது. இஸ்ரேலிய செய்தித்தாள் Haaretz இன் பாதுகாப்பு ஆய்வாளர் அமோஸ் ஹரேல் கூறுகையில், “இரு நாடுகளும் முந்தைய விதிகளை மீறி உள்ளன, வரையறுக்கப்பட்ட செலவுகளுடன்… இரு நாடுகளுக்கு இடையேயான அச்சுறுத்தல் நடவடிக்கைகள் சமநிலையில் இல்லை” என்றார்.

இந்த நெருக்கடியில் பலர் கற்றுக்கொண்ட முக்கிய பாடம், தேசம் முழு அளவிலான போருக்கு எவ்வளவு அருகாமையில் இருந்தது என்பதுதான்.

“இது ஒரு நிவாரணம் தான். இது மிகவும் வித்தியாசமாக நடந்திருக்க வாய்ப்புகள் உள்ளது” என்று ஒரு மேற்கத்திய தூதர் என்னிடம் கூறினார்.

-ஜேம்ஸ் லேண்டேல-பதவி, பிபிசி நியூஸ், ஜெருசலேம்

 

Share.
Leave A Reply

Exit mobile version