சுதந்திரத்துக்குப் பின்னர் பெருந்தேசியவாத ஆட்சியாளர்கள் ஒரே நேரத்தில் தமிழ் மக்கள் தேசிய இனமாக இருப்பதை அழிப்பதையும், அரச அதிகாரக்கட்டமைப்பை சிங்களமயமாக்குவதையும் மேற்கொண்டனர். இனஅழிப்பின் முதல் திட்டமாக சிங்களக்குடியேற்றங்கள் அமைந்திருந்ததன.

அதேவேளை அரச அதிகாரக் கட்டமைப்பை சிங்களமயமாக்குவதில் முதல்திட்டமாக தேசியக்கொடியை சிங்களமயமாக்குவது இருந்தது.

அதிகாரக் கட்டமைப்பை சிங்களமயமாக்கும்போது முதலில் குறியீட்டு வடிவங்களுக்கு சிங்களத்தன்மையை கொடுக்க வேண்டிய தேவை இருந்ததினாலேயே தேசியக்கொடி முதல்நிலைப்படுத்தப்பட்டது.

தமிழ் மக்கள் தேசிய இனமாக இருப்பதை அழிப்பதில் இரண்டாவது திட்டமாக மொழி விவகாரம் இலக்காக்கப்பட்டது.

இலங்கையில் 1956ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிங்களம் அரசகரும மொழிச்சட்டம் ஒரே நேரத்தில் இன அழிப்பாகவும், அரச அதிகாரக் கட்டமைப்பை சிங்களமயமாக்குவதாகவும் இருந்தது. இதனை தந்தை செல்வா 1949ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச் சட்டத்தின்போதே எதிர்வுகூறினார்.

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலேயே மொழிப் பிரச்சினை கிளப்பப்பட்டது. டொனமூர் யாப்பு நடைமுறையிலிருந்த காலப்பகுதியில் அரசகரும மொழியாக ஆங்கிலத்தின் இடத்துக்கு சுதேச மொழிகள் இருக்க வேண்டுமென்ற கோரிக்கை மேலெழுந்தது.

1944ஆம் ஆண்டு அரசாங்க சபையின் உறுப்பினராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன சிங்கள மொழி அரசகரும மொழியாக இருக்க வேண்டும் என்ற பிரேரணையைக் கொண்டு வந்தார்.

மட்டக்களப்புத் தொகுதியின் அரசாங்க சபை உறுப்பிராக இருந்த நல்லையா “சிங்களமும் தமிழும்” அரசகரும மொழிகளாக இருக்க வேண்டும் என்று ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் பிரேரணைக்கு ஒரு திருத்தத்தை முன்மொழிந்தார்.

அத்திருத்தம் அரசாங்க சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், டொனமூர் காலம் முழுவதும் “சிங்களமும் தமிழும்” அரசகரும மொழி என்ற தீர்மானம் நடைமுறைக்கு வரவில்லை.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா

1951ஆம் ஆண்டு பிரதமராக இருந்த டி.எஸ்.சேனநாயக்க மரணமடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டியின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா கட்சியிலிருந்து வெளியேறினார்.

அவர் 1951ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினார். அதன்போது கட்சியின் கொள்கைத்திட்டத்தில் சிங்களமும் தமிழும் அரசகரும மொழிகளாக இருக்கவேண்டும் என்றே கூறப்பட்டது.

1949ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழரசுக் கட்சி தமிழ் மொழிக்கு அரசகருமமொழி அந்தஸ்து கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்தது. 1953ஆம் ஆண்டு ஹர்த்தாலைத் தொடர்ந்து பிரதமராக இருந்த டட்லி சேனநாயக்கா பதவி விலக சேர்.ஜோன் கொத்தலாவல பிரதமராக பதவியேற்றார்.

1954ஆம் ஆண்டு நடுப்பகுதியில் எலிசபெத் மகாராணியார் இலங்கைக்கு வருகை தந்தார். அவரது வரவேற்பு நிகழ்வில் நிதி அமைச்சரும் சபை முதல்வருமான ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் பேசினார்.

அப்பேச்சின் தமிழ்மொழி பெயர்ப்பு கூட இடம்பெறவில்லை. இதனை எதிர்க்கும் முகமாக பிரதமர் கொத்தலாவலை யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டபோது தமிழரசுக் கட்சி கறுப்புக்கொடிப் போராட்டத்தை நடாத்தியது.

யாழ். நகர மண்டப மேடையில் பிரதமர் ஏறியதும் தமிழரசுக் கட்சி வாலிப முன்னணியைச் சேர்ந்தவர்கள் மேடைக்கு அருகே சென்று கறுப்புக் கொடியைக் காட்டி “பிரதமரே திரும்பிப் போ” எனக் கோசம் எழுப்பினர். போலிஸார் குண்டாந்தடி நடாத்தி ஆர்பாட்டத்தைக் கலைத்தனர்.

பிரதமர் கொத்தலாவலை கொக்குவிலில் நடந்த வரவேற்பு நிகழ்வில் கொக்குவில் இந்துக் கல்லூரியின் அதிபர் ஹண்டி பேரின்ப நாயகத்தின் வேண்டுகோளுக்கிணங்க சிங்களம், தமிழ் இரண்டையும் அரசகரும மொழிகளாக்கும் வகையில் அரசியல் யாப்பு மாற்றப்படும் எனக் குறிப்பிட்டார்.

பிரதமரின் இந்தக் கருத்துக்குத் தீவிர சிங்கள இனவாத அமைப்புக்களான ‘திரி சிங்கள பெரமுன’ தகநாயக்கவின் ‘பாஸா பெரமுன’ என்பன கடும் எதிர்பைத் தெரிவித்தன.

இதனால் பிரதமர் கொழும்பு திரும்பியதும் மறுதினமே தான் தெரிவித்த கருத்தை மீளப்பெற்று அறிக்கை வெளியிட்டார். 1954ஆம் ஆண்டிலிருந்து “சிங்களம் மட்டும் அரச கரும மொழி” என்ற கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியது.

லங்கா சமசமாஜ கட்சி ஆரம்ப காலம் தொடக்கமே “சிங்களமும் தமிழும்” அரச கரும மொழி என்பதில் உறுதியாக நின்றது. 1954ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் கொழும்பு நகர மண்டபத்தில் “சிங்களமும் தமிழும்” அரச கரும மொழி என்பதை வலியுறுத்தும் வகையில் ஒரு கூட்டத்தை நடாத்தியது.

இக்கட்சியிலிருந்து விலகி புரட்சிகர லங்கா சமசமாஜ கட்சியை உருவாக்கிய பிலிப் குணவர்த்தன தலைமையிலான குழுவினர் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர். இத்தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.

1955ஆம் ஆண்டு சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் டாக்டர்.என்.எம்.பெரேரா பாராளுமன்றத்தின் ஒரு பிரேரணையை கொண்டு வந்தார்.

பண்டாரநாயக்கா அதனை எதிர்த்து வாதிட்டார். “இரண்டையும் அரச கரும மொழியாக்கினால் தவிர்க்க முடியாத வகையில் சிங்கள மொழி அருகி சுருங்கிவிடும் என்ற பயம் சிங்கள மக்கள் மத்தியில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் சிங்கள மொழியை அரசகரும மொழியாக்கும் வகையில் சிங்கள மொழி ஆணைக்குழுவை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை டி.எஸ்.சேனநாயக்க காலத்திலேயே முன்வைத்தது. டி.எஸ்.சேனநாயக்க அதனை ஏற்கவில்லை. இதனால் உத்தியோக பற்றற்ற ஆணைக்குழுவை அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் 1954இல் உருவாக்கியது.

இவ்வாணைக்குழு இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று மக்கள் அபிப்பிராயத்தை கேட்டறிந்தது. முடிவில் 1956ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கையில் 8ஆவது சுதந்திர தினத்தின் போது தனது 124பக்க அறிக்கையை ஆங்கிலத்தில் வெளியிட்டது. அறிக்கையின் தலைப்பு “பௌத்தத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம்”என்பதாகும்.

கிறிஸ்தவர்களினால் முன்னெடுக்கப்படும் மதமாற்றம், சிங்கள மொழிக்குரிய இடமளிக்கப்படாமை, தமிழர்களின் செல்வாக்கு அதிகரிக்கின்றமை போன்றவற்றை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டது.

ஆணைக்குழுவின் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற பிரதமர் நீதியரசர், ஆதர் விஜயவர்த்தன அறிக்கையின் இறுதியில் ‘சிங்களம் மட்டும்’ அரசகரும மொழியாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

1955ஆம் ஆண்டு டிசம்பரில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வருடாந்த மாநாடு இடம்பெற்றது. அதில் ‘சிங்களம் மட்டும் அரச கரும மொழி’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நான் பதவிக்கு வந்ததும் ‘சிங்களம் மட்டும் அரச கரும மொழி’ சட்டத்தை நிறைவேற்றுவேன் என்று பண்டாரநாயக்கா அறிவித்தார்.

இம்மாநாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்றிய மொழிக்கொள்கை இரண்டு அம்சங்களை உள்ளடக்கியிருந்தது. சிங்களம் மட்டும் அரசகரும மொழியாக இருக்கும். தமிழ்மொழிக்கு நியாயமான அளவு உபயோக அந்தஸ்து வழங்கப்படும் என்பதே அவையாகும்.

பாராளுமன்றத்தில் தமிழ்மொழியின் உபயோகம் தொடர்பாக பண்டாரநாயக்க விளக்கமளிக்கையில், சிங்களமும் தமிழும் சம அந்தஸ்தைக் கொண்டவையாக இருக்கும.

விவாதம், சட்டம் இயற்றுதல் என்பன இருமொழிகளிலும் இடம்பெறும். ஆனால், அரச நிர்வாகம் சிங்கள மொழியில் மட்டுமே இடம்பெறும். நீதிமன்றங்கள் சிங்களத்திலும், தமிழ் மொழியிலும் கடமையாற்றலாம். கல்வி மொழியாக சிங்களவர்களுக்கு சிங்கள மொழியும் தமிழர்களுக்கு தமிழ் மொழியும் இருக்கும் என்றார்.

அவரின் இத்தீர்மானத்தை எதிர்த்து சுதந்திரக் கட்சியிலிருந்து தமிழர்கள் வெளியேறினார். இதனையடுத்து, 1956ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் களனி மாநாடு இடம்பெற்றது.

இம்மாநாட்டில் சுதந்திரக் கட்சியைப் போன்று “சிங்களம் மட்டும் அரச கரும மொழி” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஐக்கிய தேசியக்க கட்சியில் அங்கம் வகித்த தமிழர்கள் வெளியேறினர்.

அவர்களில் ஒருவர் தான் தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் பட்டிருப்புத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த இராசமாணிக்கம். இவர் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தாத்தா ஆவார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் இத்தீர்மானத்தை எதிர்த்து 1956ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி தமிழ் பிரதேசம் எங்கும் ஹர்த்தால் போராட்டம் தமிழரசுக் கட்சி தலைமையில் நடாத்தப்பட்டது. தமிழ்ப் பிரதேசத்தில் இடம்பெற்ற முதலாவது ஹர்த்தால் போராட்டம் இதுதான். போராட்டம் பெருவெற்றியீட்டியது.

எனினும், சுதந்திரக் கட்சியின் தலைவரான பண்டாரநாயக்க தான் ஆட்சிக்கு வந்ததால் 24 மணித்தியாலத்திற்குள் தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டு வருவேன் என்று அறைகூவல் விடுத்தார். பிக்கு எக்சத் பெரமுன உட்பட பல பௌத்த நிறுவனங்கள் பண்டாரநாயக்கவுக்கு ஆதரவளிக்க முற்பட்டன.

1956ஆம் ஆண்டு தேர்தலின் போது சுதந்திரக்கட்சி, பிலிப் குணவர்த்தன தலைமையிலான புரட்சிவாத சமசமாஜக்கட்சி, டபிள்யூ. தகநாயக்க தலைமையிலான பாஸா பெரமுன, சி.பி.டி.சில்வா தலைமையிலான குழு என்பன பண்டாரநாயக்க தலைமையில் “மக்கள் ஐக்கிய முன்னணி என்ற கூட்டமைப்பை உருவாக்கிப் போட்டியிட்டன.

பண்டாரநாயக்க “பஞ்ச பல வேகய” என்று அழைக்கப்படுகின்ற ஐம்பெரும் சக்திகளை அணிதிரட்டினார்.

சிங்கள ஆசிரியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், ஆயுள்வேத வைத்தியர்கள், பௌத்த மத குருமார்கள் என்போரே அந்த ஐந்து சக்திகளாவார். இடதுசாரிக் கட்சிகளுடன் போட்டித்தவிர்ப்பு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

தேர்தலில் மக்கள் ஐக்கிய முன்னணி பெருவெற்றியீட்டியது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 8ஆசனங்கள் மட்டுமே கிடைத்தன.

எதிர்க்கட்சி பதவிகூட அதற்குக் கிடைக்கவில்லலை. சமசமாஜக்கட்சியின் தலைவரான என்.எம்.பெரேரா எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றார்.

மக்கள் ஐக்கிய முன்னணி 60இடங்களில் போட்டியிட்டு 51ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. பண்டாரநாயக்க பிரதமராக பதவியேற்றார்.

தமிழரசுக் கட்சிக்கு முதன் முதலாக 10ஆசனங்கள் கிடைத்தது. சிங்கள பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கு சிதைந்ததைப்போல தமிழ்ப்பிரதேசத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சிதைந்தது. இதன் பின்னர் தமிழ் காங்கிரஸ் கட்சியினால் மேலெழவே முடியவில்லை.

பண்டாரநாயக்கா 1956ஆம்ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதி அரசாங்கத்தை அமைத்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற சிம்மாசனப் பிரசங்கத்தில் மகாதேசாதிபதி ஒலிவர் குணதிலக புதிய அரசாங்கம் சிங்களம் மட்டும் சட்டத்தை உருவாக்குவதற்கு முன்னுரிமை வழங்கும் எனக் குறிப்பிட்டார்.

இதற்கேற்ப பிரதமர் பண்டாரநாயக்க 1956ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் சட்ட வரைஞரை அழைத்து சிங்களம் மட்டும் அரச கரும மொழிச்சட்டத்தை தயாரிக்குமாறு கட்டளையிட்டார். அச்சட்டத்தில் தமிழ்மொழி உபயோகம் பற்றிய ஏற்பாடுகளையும் சேர்க்குமாறு குறிப்பிட்டார்.

தமிழ்மொழிக்கு உபயோக அந்தஸ்து வழங்குவதை மக்கள் ஐக்கிய முன்னணியில் அங்கம் வகித்த பாஸா பெரமுனை கட்சியினர் விரும்பவில்லை. இக்கட்சியின் தலைவர்;களில் ஒருவராக விளங்கிய பேராசிரியர் எவ்.ஆர்.ஜெயசூரியா தமிழ் மொழியின் உபயோக அந்தஸ்தை எதிர்த்து பாராளுமன்றப்படிகளில் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தினை ஆரம்பித்தார். இறுதியில் தமிழ் மொழிக்கு உபயோக அந்தஸ்து வழங்கும் யோசனை கைவிடப்பட்டது.

1956ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி சிங்களம் மட்டும் பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அது பின்னர் தமிழின அடக்குமுறைக்கு வித்திட்டது.

சி.அ.யோதிலிங்கம் -வீரகேசரி

Share.
Leave A Reply

Exit mobile version