சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி இருந்த மற்றுமொரு தொழிலாளியின் உடல் 10 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளது.

சிவகாசி- செங்கமலப்பட்டி அருகே நாக்பூரில் உள்ள பட்டாசு ஆலையில் 80 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகல் உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 7 அறைகள் தரைமட்டமாகின. மேலும் 7 அறைகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் 6 பெண்கள் உட்பட 9 உயிரிழந்தனர்.

இதில் ஒரு தொழிலாளியின் உடல் பட்டாசு ஆலையில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் இருந்து மீட்கப்பட்டது. காயமடைந்த 11 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில், 3 பேர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடி விபத்தில் ஒரு அறையில் தொடர்ந்து புகை வந்து கொண்டே இருந்ததால் மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டது.

மதியம் 2 மணிக்கு வெடி விபத்து நடந்த நிலையில், ஜே.சி.பி. இயந்திரம் மூலம் கட்டட இடிபாடுகள் அகற்றப்பட்டு மீட்பு பணிகள் நடந்தன.

இரவு 9 மணி அளவில் இடிபாடுகளில் சிக்கி இருந்த தொழிலாளி ஒருவரின் உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. அந்த கட்டிடத்தில் மேலும் இருவர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்பு பணிகள் தொடர்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version