யாழ்ப்பாணத்தில் பிறந்து இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த முதல் தமிழர் – யார் இந்த விஜயகாந்த்?

ஐ.சி.சி இருபதுக்கு இருபது உலகக் கோப்பை போட்டிகளுக்கான இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியில் மேலதிக வீரர்களில் (மாற்று வீரர்கள் பட்டியல்) ஒருவராக தமிழர் ஒருவர் இடம்பிடித்துள்ளார்.

ஐ.பி.எல் போட்டிகளில் சன்ரைசஸ் ஐதராபாத் அணிக்காக நேற்றைய தினம் முதல் தடவையாக விளையாடிய விஜயகாந்த் வியாஸ்காந்த் இலங்கை குழாமில் இடம்பிடித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட வீரர்கள் இலங்கை கிரிக்கெட் அணியை இதற்கு முன்னர் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த போதிலும், யாழ்ப்பாணத்தில் பிறந்து யாழ்ப்பாணத்திலேயே வளர்ந்த ஒருவர் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவது இதுவே முதல் தடவையாகும்.

இருபதுக்கு இருபது உலகக் கோப்பை இலங்கை அணி

ஐ.சி.சி இருபதுக்கு இருபது உலகக் கோப்பை போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக வனிந்து ஹசரங்க நியமிக்கப்பட்டுள்ளார். உபத் தலைவராக சரித் அசலங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், குசல் மென்டீஸ், பெத்தும் நிஷாங்க, சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மேத்யூஸ், கமிது மென்டீஸ், தசுன் ஷானக்க, தனஞ்சய டி சில்வா, மகீஸ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, துஷ்மந்த சமீர, நுவன் துஷார, மதீஷ பத்திரன மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் இலங்கை குழாமில் இடம்பிடித்துள்ளனர்.

இலங்ங்கை அணியின் மேலதிக வீரர்களாக அசித்த பெர்ணான்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுக்க ராஜபக்ஷ மற்றும் ஜனித்த லியனகே ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

 

T20 உலகக் கோப்பை இலங்கை குழாமில், முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழர் ஒருவர் இடம்பிடிப்பு


விஜயகாந்த் வியாஸ்காந்த் யார்?

யாழ்ப்பாணத்தில் 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி பிறந்தார் விஜயகாந்த் வியாஸ்காந்த்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் தனது கல்வியை தொடர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த், சிறு வயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டியுள்ளார்.

சுழல் பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த், தனது பந்து வீச்சின் ஊடாக பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

இதனூடாக இலங்கையில் நடாத்தப்படும் லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் ஜப்னா கிங்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, 2020ம் ஆண்டு விளையாடினார்.

இதுவே அவரது முதலாவது இருபதுக்கு இருபது போட்டியாக அமைந்திருந்தது.

அதன்பின்னர் 2023ம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளில் சட்டோகிரம் சாலஞ்சர்சு அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்தார்.

விஜயகாந்த் வியாஸ்காந்த், 2024 சர்வதேச லீக் இருபதுக்கு இருபது சுற்றில் எம்ஐ எமிரேட்சு அணிக்காக விளையாடி, தனது சிறந்த பந்து வீச்சை பதிவு செய்திருந்தார்.

அதனையடுத்து, இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளுக்கான சந்தர்ப்பம் விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு கிடைத்திருந்தது.

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளில் சன்ரைசஸ் ஐத்ராபாத் அணிக்காக விஜயகாந்த் வியாஸ்காந்த் தேர்வு செய்யப்பட்டு, விளையாடி வருகின்றார். சன்ரைசஸ் ஐத்ராபாத் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய வனிந்து ஹசரங்க உபாதைக்குள்ளாகி விலகியதால் அந்த இடத்தை விஜயகாந்த் வியாஸ்காந்த் நிரப்பியுள்ளார்.

 

இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழர்கள்

படக்குறிப்பு, விஜயகாந்த் வியாஸ்காந்த்

இலங்கை அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைப்பதற்கு முன்னர் மகாதேவன் சதாசிவம் உள்ளிட்டோர் விளையாடியிருந்த போதிலும், இலங்கை அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைக்கப் பெற்றதன் பின்னர் சில வீரர்களே விளையாடியுள்ளனர்.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, சர்வதேச ரீதியில் பல சாதனைகளை படைத்த தமிழ் வீரராக முத்தையா முரளிதரன் காணப்படுகின்றார்.

அத்துடன், 1983ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி வினோதன் ஜோன் விளையாடியுள்ளார்.

மேலும், ரசல் அர்னால்ட் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய மற்றுமொரு தமிழ் வீரராக காணப்படுகின்றார்.

முத்தையா முரளிதரன் மலையகத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், வினோதன் ஜோன் மற்றும் ரசல் அர்னால்ட் ஆகியோர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என கூறப்படுகின்றது.

எனினும், யாழ்ப்பாணத்தில் பிறந்து, யாழ்ப்பாணத்தில் வளர்ந்து, இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாவது வீரராக விஜயகாந்த் வியாஸ்காந்த் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version