தமிழினப் படுகொலை வாரத்தின் முதல் நாளான இன்றைய தினம் (12) முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டது.

புலம்பெயர் மற்றும் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

2009ம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப் படுகொலை வாரமானது இன்று (12) முதல் மே 18ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு வருகிறது.

முள்ளிவாய்க்காலில் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்த காலகட்டத்தில் இலங்கை அரசின் திட்டமிட்ட தாக்குதல்கள், பொருளாதார தடைகள் ஏற்பட்ட காலகட்டத்தில் மக்களுக்கு உணவு, மருந்து என எதுவுமே கிடைக்கவிடாது தடுத்து அரசு உச்சக் கட்ட தாக்குதல்களை நடத்தியபோது மக்களின் உயிர் காக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உப்புக் கஞ்சியே அன்றைய நாட்களில் பலரின் உணவாக மாறியிருந்தது.

அவ்வேளைகளில் இந்த கஞ்சியை பெற்றுக்கொள்ள வரிசையில் நின்றவர்கள் மீதும் கூட திட்டமிட்டு அரசு நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.

இந்த வரலாற்றுக் கொடுமைகளை எதிர்கால சந்ததிக்கும் சர்வதேசத்துக்கும் எடுத்துரைக்க தமிழினப் படுகொலை வாரம் அனுஷ்டிக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் பரிமாறப்படுகிறது.

 

Share.
Leave A Reply

Exit mobile version