போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இரண்டு இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் .
நேற்று சனிக்கிழமை (11) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இந்த சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடைய நபரும், வவுனியா பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதான இருவரும் துபாய் ஊடாக கனடா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர் .
இவர்கள் இருவரும் போலி கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தியதால், அவர்களைக் கைது செய்ய கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதனையடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த கடவுச்சீட்டைத் தயாரித்த நபர் தற்போது நீர்கொழும்பில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது .
குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் அந்த விடுதியைச் சோதனை செய்து, அந்த நபரைக் கைது செய்துள்ளனர் .
குறித்த நபர் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என்பதுடன் இவரிடமிருந்து 07 போலி இலங்கை கடவுச்சீட்டுகள் ,,5 கனேடிய வதிவிட விசாக்கள் என்பன குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதன் பின்னர், கைது செய்யப்பட்ட மூவரும் போலி கடவுச்சீட்டுகள், வசிப்பிட அட்டைகள், வதிவிட விசாக்கள் மற்றும் விமான நுழைவு அனுமதிப்பத்திரங்கள் ஆகியவற்றுடன் இன்று (12) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் .