ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்ன நடந்தது?
உள்ளூர் செய்தி தொலைக்காட்சி நிறுவனமான TA3 வெளியிட்டுள்ள செய்தியின்படி, “ஸ்லோவாக்கியாவின் தலைநகரான பிராட்டிஸ்லாவாவிலிருந்து வட கிழக்கே 180 கிமீ தொலைவில் உள்ள ஹன்ட்லோவா நகரில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
ஹன்ட்லோவா நகரில் உள்ள கலாசார சமூக மையத்தில் நடந்த அரசு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ராபர்ட் அங்கிருந்து கிளம்புவதற்காக வெளியே வந்தபோது மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.
விளம்பரம்
இதை ஸ்லோவாக்கியாவின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்நாட்டு ஊடகங்களிடம் பேசிய சாட்சிகள், “துப்பாக்கி சூட்டுக்கு பிறகு பிரதமர் தரையில் வீழ்ந்ததாகவும், பாதுகாவலர்கள் அவரை காரில் ஏற்றி உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்” என்றும் தெரிவித்துள்ளனர்.
பின்னர், ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
படக்குறிப்பு, ஸ்லோவாக்கியா பிரதமர் சுடப்பட்ட இடம்
உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரதமர்?
பிரதமரின் கை, கால் மற்றும் வயிற்றுப்பகுதியில் குண்டுகள் பாய்ந்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. பிபிசியால் அதை தனிப்பட்ட முறையில் உறுதி செய்யமுடியவில்லை.
இந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், “நான் பிரதமரின் கைகளைக் குலுக்க சென்ற போது மூன்று குண்டுகள் சுடப்பட்ட சத்தத்தை கேட்டேன். பின் பிரதமரின் தலையில் ஒரு கீறலையும் பார்த்தேன்” என்றார்.
பிரதமர் படுகொலை செய்ய முயற்சிகள் நடந்திருப்பதாக ஸ்லோவாக்கியா உள்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால், பிரதமரின் உடல்நிலை குறித்து எந்த தகவலையும் அவர் குறிப்பிடவில்லை.
பிரதமரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “பிரதமர் பல முறை சுடப்பட்டார், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவர் ஹெலிகாப்டர் மூலமாக பான்ஸ்கா பைஸ்ட்ரிகா நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, 2018 இல் புலனாய்வுப் பத்திரிகையாளரான ஜான் குசியாக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஃபிகோ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
யார் இந்த ராபர்ட் ஃபிகோ?
கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலுக்குப் பிறகு ஸ்லோவாக்கியாவின் பிரதமராக மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ராபர்ட் ஃபிகோ.
இடதுசாரி ஸ்மெர்-எஸ்எஸ்டி கட்சிக்கு தலைமை தாங்கி வரும் ராபர்ட், கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேனுக்கான போர் உதவிகளை நிறுத்துவதாக உறுதிமொழி கொடுத்திருந்தார். அதே சமயம் தான் ஒரு ரஷ்ய சார்பற்றவன் என்பதையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
2018 இல் புலனாய்வுப் பத்திரிகையாளரான ஜான் குசியாக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஃபிகோ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
“தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால், யுக்ரேனுக்கு ஒரு சுற்று வெடிமருந்துகளை கூட அனுப்பமாட்டோம்” என்று தேர்தல் பரப்புரையின் போது ராபர்ட் உறுதியளித்தார். .
ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை எதிர்ப்பதாக அவர் அளித்த உறுதிமொழியும், சிலரிடம் வரவேற்பை பெற்றது. இவரையும், ஹங்கேரியின் வலதுசாரி பிரதமரான விக்டர் ஓர்பனையும் ஒப்பிட்டு ஐரோப்பிய அரசியல் அரங்கில் விவாதங்கள் நடந்தன.
ஒருவர் கைது
ஸ்லோவாக்கியா பிரதமர் சுடப்பட்டது தொடர்பாக சம்பவ இடத்தில் ஒரு நபர் காவலர்களால் கைது செய்யப்பட்டார்.
அவர் யார்?, அவர்தான் பிரதமரை துப்பாக்கியால் சுட்டாரா? பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட என்ன காரணம்? என்பன போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
படக்குறிப்பு, பிரதமர் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவரை கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.
படக்குறிப்பு, ஸ்லோவாக்கியா பிரதமர் மீதான தாக்குதலை உலகத் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.
உலகத் தலைவர்கள் கண்டனம்
ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் மீதான தாக்குதலை உலக தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர்.
ஸ்லோவாக்கியா அதிபர் சுசானா கேப்புட்டவா, இந்த தாக்குதலை மிருகத்தனமானது மற்றும் இரக்கமற்றது என விமர்சித்துள்ளார்.
“நான் இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த மோசமான சூழ்நிலையில், தாக்குதலில் இருந்து மீண்டு வர ராபர்ட் ஃபிகோவுக்கு கூடுதல் வலிமை கிடைக்க வேண்டுகிறேன்” என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஃபிகோ மீதான இந்த மோசமான தாக்குதலை தான் கண்டிப்பதாக கூறியுள்ளார்.
ருமேனிய பிரதமர் மார்செல் சியோலாகு, துப்பாக்கிச் சூடு பற்றிய செய்தியைக் கேட்டு தான் “ஆழ்ந்த அதிர்ச்சியில்” இருப்பதாககூறியுள்ளார்.
செக். குடியரசு நாட்டின் பிரதமர் பீட்டர் ஃபியாலா, இந்த சம்பவம் “அதிர்ச்சியூட்டுவதாகவும்”, ஃபிகோ விரைவில் குணமடைய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் கூறுகையில், “எனது நண்பரான பிரதமர் ராபர்ட் ஃபிகோவுக்கு எதிரான இந்த கொடூரமான தாக்குதலால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்” என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த பயங்கரமான தாக்குதல் சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளேன். நாங்கள் அனைவரும் ஃபிகோ மற்றும் அவரது குடும்பத்தாரையே நினைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
படக்குறிப்பு, ஸ்லோவாக்கியா பிரதமர் மீதான தாக்குதலை கண்டித்துள்ளார் யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி
யுக்ரேன் அதிபர் கண்டனம்
யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கி இந்த தாக்குதலை பயங்கரமானது என்று கூறியுள்ளார்.
எந்த ஒரு நாட்டிலும், எந்த வடிவத்திலும் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், தங்களது சிந்தனை முழுவதும் ராபர்ட் ஃபிகோ மற்றும் அவரது அன்புக்குரியவர்கள், ஸ்லோவாக்கியாவின் மக்களோடு இருப்பதாக தெரிவித்துள்ளார்.