ஜனாதிபதி தேர்தலுக்கான காலத்தை தேர்தல்கள் ஆணைக்குழு செப்டெம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரை என்று வரையறுத்து உத்தியோகபூர்மான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது, வடக்கு, கிழக்கில் மக்கள் பிரதிநித்துவ அங்கீகாரத்தினைக் கொண்ட தமிழ் அரசியல் தரப்புக்கள் மத்தியில் வரவேற்கப்படும் விடயமொன்றாகவே இருக்கின்றது.

ஏனென்றால் வடக்கு,கிழக்கு அரசியல் தளத்தில் இயங்கு நிலையில் உள்ள தமிழ் அரசியல் தரப்புக்களில் தற்போது ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய நிலைப்பாடுகிளின் பிரகாரம் இரண்டு அணியினரே பிரதானமானவர்களாக உள்ளனர்.

அதில் முதலாவது அணியினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி, சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்குத் தமிழர் அமைப்பு ஆகிய தரப்புக்கள் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் தீர்மானத்தினை எடுத்தாகிவிட்டது.

அங்கஜன் இராமாநாதன் சுதந்திரக்கட்சியின் நிலைமையையும், தனது அரசியல் எதிர்கால உறுதிப்பாட்டையும் மையப்படுத்தி இறுதி நேரத்திலேயே தீர்மானத்தினை வெளியிடவுள்ளார்.

இரண்டாவது அணியினர் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களை மையப்படுத்தி தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட அரசியல் தரப்பினர்.

உண்மையில் இந்த அணியினர் தமிழ் பொதுவேட்பாளர் என்ற கோசத்தின் கீழாக இயல்பாகவே ஒன்றிணைந்தவர்கள் அல்லர். இவர்கள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், சமூகத்தில் தாக்கம் செலுத்தவல்ல பிரமுகர்கள், புலம்பெயர் தரப்பினர் ஆகியோரின் வலிந்த கோரிக்கையால் கூட்டாக்கப்பட்டவர்களே ஆவர்.

இதனைவிடவும், தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கோரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும், ரணில் தவிர்ந்த ஏனைய தரப்பினருடன் கைகோர்க்கலாம் என்ற நிலைப்பாடுகளை ஆராய்ந்துவரும் தரப்பினரும் உள்ளனர்.

ஆனால் அவர்கள் ஜனாதிபதி தேர்தல் குறித்த தமது முடிவுகளை சமூக ரீதியாக இன்னமும் தாக்கம் செலுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கவில்லை. வெறுமனே அறிவிப்புக்களுடன் நிறுத்திக் கொண்டுள்ளனர்.

அவ்வாறான நிலையில், ஜனாதிபதி தேர்தலில் ‘தமிழ் பொதுவேட்பாளர்’ என்கிற விடயத்தில் ‘நதிமூலம் ரிஷிமூலம்’ பற்றி தற்போது ஆராயும் கட்டம் கடந்தாகிவிட்டது.

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் என்ற கோசம் சுரேஷ் பிரேமச்சந்திரனால் பகிரங்கவெளிக்கு வந்து, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கொள்கைத் தீர்மானமாக உருவெடுத்தது. விக்னேஸ்வரனும் தன்பங்கிற்கு பேசுபொருளாக்கினார்.

அதேநேரம், இக்கோசம் ‘மக்கள் மனு’ அமைப்பினரால் முன்னகர்த்தப்பட்டதோடு சமாந்தரமாக வடக்கு,கிழக்கு சிவில் அமைப்பினராலும் கலந்துரையாடப்பட்டு

தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதி தேர்தலை கையாள்வது.

இலங்கை ஜனாதிபதி தேர்தலை, ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வது.

அதற்கு அமைய ஒரு தமிழ் பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது. அதற்காக சிவில் சமூகமும் தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது.

தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாஷைகளில் ஒன்றான இறைமையுடனான சுயநிர்ணய உரிமையை வெற்றி கொள்வதற்கான பொருத்தமான எதிர்கால கட்டமைப்புக்களை நோக்காகக் கொண்டு செயல்படுவது

ஆகிய தீர்மானங்கள் எடுத்தாகிவிட்டது.

இப்போது, தமிழ் பொதுவேட்பாளர் கோசத்தின் கீழ் அரசியல் தரப்புக்களையும், சிவில் அமைப்புக்களையும் சங்கமிக்க வைக்கின்ற செயற்பாடுகளுக்கான முதலாவது அடி எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

அதனை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக 14நாட்கள் கால அவகாசத்துடன் ஒரு காத்திருப்பு நீடித்துக் கொண்டிருக்கின்றது. அந்தக் காத்திருப்புக்கூட எதிர்வரும் 19ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தாகிவிடும்.

காத்திருப்புக்கு காரணம், தமிழ் பொதுவேட்பாளர் விடயம் குறித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இறுதியான நிலைப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கே ஆகும்.

தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பில் தனது இறுதியான நிலைப்பாட்டை எடுத்துக்கொள்வதற்கு எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் உள்ள அதன் அலுவலகத்தில் கூடவுள்ளது.

இக்கூட்டத்தில் நடக்கப்போவது என்ன என்பது தொடர்பில் பாரிய எதிர்பார்ப்புக்கள் உள்ளன. தமிழ்பொதுவேட்பாளர் விடயத்தினை தமிழரசுக்கட்சி ஏகமனதாக தீர்மானித்து ஆதரித்தால் பிரச்சினைகள் இல்லை. ஆனால், தமிழரசுக் கட்சி பொதுவேட்பாளர் விடயத்தினை எதிர்த்தால், அது நிச்சயமாக பேசுபொருளாக உருவெடுக்கும்.

தற்போதைய நிலையில் மாவை.சோ.சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், அரியநேத்திரன், ஸ்ரீநேசன், யோகேஸ்வரன், கோடீஸ்வரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, சிவமோகன் ஆகியோர் கொள்கை அளவில் பொதுவேட்பாளர் விடயத்தினை ஏற்றுக்கொண்டுள்ளதாக பொதுவெளியில் அறிவித்துவிட்டனர்.

அதேநேரம், சுமந்திரன், சாணக்கியன், சாள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்டவர்கள் பொதுவேட்பாளர் விடயத்தினை எதிர்க்கின்றோம் என்பதையும் பொதுவெளியில் தெரிவித்து விட்டனர். இந்தப் பட்டியலில் பெருந்தலைவர் சம்பந்தனும் அடக்கம்.

ஆகவே,பொதுவேட்பாளர் விடயத்துக்கு தமிழரசு ஆதரவா இல்லை எதிர்ப்பா என்று எடுக்கப்படும் தீர்மானம் (அது வாக்கெடுப்பின் அடிப்படையில் கூட நடைபெறலாம்) மேற்படி இரண்டு அணிகளில் எந்த அணி கட்சிக்குள் கோலோச்சப்போகின்றது என்பதற்கான பலப்பரீட்சையாகவே அமையப்போகின்றது.

அதுமட்டுமன்றி எந்த அணி வெற்றிபெறப்போகின்றதோ அந்த அணி தோல்வி அடையும் அணியை மிகத்தீவிரமாக விமர்சிக்கும். தமிழர்களின் அரசியல் தோல்விக்கு காரணமானவர்கள் என்றோ இல்லை அதனைவிடவும் கீழ்த்தரமாகவோ காறிஉமிழும் நிலைமைகளே ஏற்படும்.

பெருந்தலைவர் சம்பந்தன் பொதுவேட்பாளர் விடயத்தில் எதிர்மறையான நிலைப்பாட்டில் உள்ளார். அவருடைய நிலைப்பாடு கட்சியின் தீர்மானத்தில் தாக்கம் செலுத்துமா என்றால் ‘இல்லை’ என்பதே தற்போதைய சூழலில் பதிலாக உள்ளது.

வயதுமூப்பின் காரணமாக அவரால் பயணங்களை மேற்கொள்ள முடியாதுள்ளார். 19ஆம் திகதிக்கு முன்னதாக தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு சேனாதிராஜாவை அழைத்துள்ளார். இருப்பினும் சம்பந்தன், சேனாதிராஜா சந்திப்புக்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளன.

அதேநேரம், சம்பந்தனின் நிலைப்பாட்டை சேனாதிராஜாவிடத்திலோ அல்லது ஏனைய எந்தவொரு பொறுப்பான பிரதிநிதியிடமோ வெளிப்படுத்தி அதனை மத்திய செயற்குழுவில் அறிவித்தால்கூட முழுமையாக ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி உள்ளது.

அவ்வாறு ஏற்றுக்கொள்ளும் நிலையில் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் இருந்திருந்தால் கட்சியின் புதிய தலைமை உள்ளிட்ட நிருவாகத் தெரிவுகளை அடுத்து பிற்போக்குத்தனமான செயற்பாடுகளால் நீதிமன்றப் படிகளில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது.

இந்தச் சூழலில் தற்போது தமிழரசுக்கட்சிக்குள் பொதுவேட்பாளர் விடயத்தினை எதிர்க்கும் தரப்பு புதிய மூலோபாயங்களை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அத்தகவல்களின் பிரகாரம்

தமிழ் பொதுவேட்பாளர் இலங்கைத் தமிரசுக்கட்சியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

அதிலும் பொதுவேட்பாளர் விடயத்தை ஆதரிப்பதாக முதலில் கூறிய சிறீதரனே போட்டியிட வேண்டும்

ஆகிய இரு நிபந்தனைகளின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தினை ஆதரிக்கலாம் என்பது தான் அந்த மூலோபாயங்கள்;. இதன்மூலமாக தமிழரசு மீண்டும் இழந்த செல்வாக்கை மீளப்பெறலாம் என்ற தர்க்கமும் முன்வைக்கப்படும்.

அதுமட்மன்றி, தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் பேரம்பேசல், தீர்மானம் எடுத்தல் உள்ளிட்ட அனைத்துப் ‘பிடி’களும் எம்மிடம் இருக்குமென்றும் வெளிப்படுத்தப்படும்.

அதனூடாக மேற்படி மூலோபாய நிபந்தனை முன்மொழிவுகளை சிறீதரன் ஏற்றுக்கொண்டு அறிவிப்பைச் செய்வாராக இருந்தால் சில சமயங்களில் ஏனைய அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் நெகிழ்ச்சியான மனோநிலையுடன் சிந்திக்கலாம்.

ஆனால், சிறீதரன் முதலாவது நிபந்தனை ஏற்றுவிட்டு வேட்பாளராக தான் களமறங்குவதற்கு மறுப்பாராக இருந்தால் “பொதுவேட்பாளர் கோசத்தை ஆதரித்தவரே களமிறங்க அஞ்சுகிறார்” என்று எதிர்த்தரப்பினர் சுட்டிக்காட்டுவார்கள்.

அதன்மூலமாக சிறீதரன் உள்ளிட்டவர்கள் பொதுவேட்பாளர் விடயத்தினை நிராகரிக்க வேண்டிய சூழ்நிலைக் கைதிகளாகி விடுவார்கள்.

அதுமட்டுமன்றி, சிறீதரன் உள்ளிட்டவர்கள் மீது மத மற்றும் சிவில் அமைப்பினர் கொண்டிருந்த நன்மதிப்பும், நம்பிக்கையும் அகன்றுபோகும் நிலைமைகளே ஏற்படும்.

இதேநேரம், வேட்பாளர் யாராக இருந்தாலும் தமிழ் பொதுவேட்பாளரை தனது கட்சிக்கே வழங்க வேண்டும் என்ற தமிழரசுக்கட்சியின் கோரிக்கையை ஏனைய அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ளுமா என்பதிலும் கேள்விகள் உள்ளன.

ஏனென்றால் தமிழ் பொதுவேட்பாளர் விடயத்திற்கு ஆதரவளிக்கும் விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், சிறீகாந்தா உள்ளிட்டவர்கள் தமிழரசுக்கட்சி ஏதேச்சதிகாரமாக கூட்டமைப்பில் செயற்படுகின்றது என்று குற்றச்சாட்டுக்களை வெளியிட்டவர்கள்.

தமிழரசுக்கட்சியின் ஆதிக்கத்துக்குள் செயற்படமுடியாது வலிந்து வெளியேற்றப்பட்டவர்கள் அல்லது வெளியேறியவர்கள். அதிலும் ஜனநாயக போராளிகள் தமிழரசுக்கட்சியால் நேரடியாக நிராகரிக்கப்பட்டவர்கள். சிவில் அமைப்பிலும் தமிழரசுக் கட்சியின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பில் ‘ஒவ்வாமை’ இருக்கின்றது.

ஆகவே, தமிழரசுக்கட்சி தனக்கே வேட்பாளர் அந்தஸ்தை தரவேண்டும் என்று கோருவதும் கூட குழப்பங்களையே ஏற்படுத்தும். அந்த வகையில் தமிழரசுக்கட்சி ஏகமனதாக பொதுவேட்பாளர் கோசத்தினை ஆதரிக்காத பட்சத்தில் பொதுவேட்பாளர் கோசத்துக்கான பயணம் தமிழரசுக்கட்சி தவிர்ந்ததாகவே இருக்கும்.

ஆர்.ராம்

Share.
Leave A Reply

Exit mobile version