`புன்னகை புத்தர்’ : 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா தனது அணு சக்தியை உலகிற்கு காட்டிய தினம்
1974 ஆம் ஆண்டின் 138 ஆம் நாள், உள்ளூர் நேரப்படி காலை 8 மணி 08 நிமிடங்கள் 20 வினாடிகளில், இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை நிகழ்த்தி உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த நிகழ்வின் குறியீட்டு பெயர் “சிரிக்கும் புத்தர்”.
டாக்டர் சதீந்தர் குமார் சிக்கா, 2018 இல் பிபிசி உடனான உரையாடலில் அணுகுண்டு சோதனை நிகழ்வை நினைவு கூர்ந்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
“எங்களுக்கு இவ்வளவு திறன் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் சோதனை செய்து முடித்த போது, அனைவரும் எங்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திறனை ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
அந்த சமயத்தில் டாக்டர் சதீந்தர் குமார், நாட்டின் முன்னணி அணு விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர் ராஜகோபால சிதம்பரத்தின் மேற்பார்வையில் தனது பிஎச்டி ஆய்வை மேற்கொண்டிருந்தார்.
தனது ஆய்வு மேற்பார்வையாளர் ஒரு ரகசிய திட்டத்திற்கு பணி அமர்த்தப்பட்ட இருக்கிறார் என்பது அப்போது டாக்டர் சதீந்தர் குமாருக்கு தெரிந்திருக்கவில்லை. ஆம், அந்த மையத்தின் உயர்மட்ட இயக்குனர்களில் ஒருவரான டாக்டர் ராஜா ராமண்ணா ஒரு ரகசிய திட்டத்திற்காக டாக்டர் ராஜகோபால சிதம்பரத்தை பணியமர்த்தினார்.
டாக்டர். ராஜா ராமண்ணா, இந்தியாவின் அணு ஆயுத திட்டத்தில் ஒரு முக்கிய நபராக முன்னிறுத்தப்பட்டார்.
“என் அறையில், எனது பிஎச்டி ஆய்வறிக்கையை நான் தயார் செய்து கொண்டிருந்தேன், அப்போது, டாக்டர் ராமண்ணா அலுவலகத்திலிருந்து அவரைப் பார்க்க வருமாறு எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது, டாக்டர் சிதம்பரமும் அங்கே இருந்தார். ”
“டாக்டர் ராமண்ணா என்னிடம், ‘ சிக்கா, நீ ஏற்கனவே உன் ஆய்வு படிப்புக்கு தேவையானவற்றை செய்து விட்டாய். இனி, நீ உன் நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா ‘ என்றார். ”
“அவர் என்ன சொல்கிறார் என்று நான் யோசிக்கும் முன்னரே, அணுகுண்டு சோதனை திட்டத்தில் நீங்கள் பங்கேற்க போகிறீர்கள் என்றார். அந்த திட்டத்தில் சேர்க்கப்பட்ட இரண்டாவது அல்லது மூன்றாவது நபர் நான். ”
படக்குறிப்பு, டாக்டர் ராஜகோபால சிதம்பரம்
சிக்கா கூறியது போல், “அமைதியான அணு வெடிப்பை” உருவாக்குவதே இலக்காக இருந்தது. அதாவது, “Peaceful nuclear explosion” (PNE), என்பது ராணுவம் அல்லாத நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் அணு வெடிப்பு சோதனை ஆகும்.
“எப்படியிருந்தாலும், அது ஒரு அணுகுண்டு என்பது அனைவருக்கும் தெரியும்.” என இயற்பியலாளரான (condensed matter physicist) சிக்கா அழுத்தம் திருத்தமாக சொன்னார்.
“சோவியத் மற்றும் அமெரிக்கர்கள் `அமைதியான அணு வெடிப்பு’ (PNE) சோதனைகளை நடத்திய போது அவர்கள் உண்மையில் தங்கள் அணு ஆயுதங்களை தான் சோதித்தனர். `PNE’ என்று குறிப்பிட்டது கண் துடைப்புக்காக தான்.”
இந்தியா 1940 களில் இருந்து அணு ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. அது அணு ஆயுதப் பரவல் தடை (NPT) ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து விட்டது, ஆனால் இந்தியா எப்போதும் அமைதியான அணுசக்தி திட்டத்தில் மட்டுமே ஆர்வமாக இருப்பதாக நாட்டின் தலைவர்கள் வெளிப்படையாக தெரிவித்தனர்.
சீனா-இந்திய போருக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1964 இல் சீனா வெற்றிகரமாக அணுகுண்டு சோதனையை நடத்தியது. மேலும், பாகிஸ்தானுடன் பதற்றங்கள் அதிகரித்தன. எனவே, இந்தியா தனது சொந்த அணுகுண்டை உருவாக்க ரகசிய திட்டங்களைத் தொடங்கியது.
இத்திட்டங்களின் முக்கிய நோக்கம், எதிரி நாடுகளுக்கு எதிராக தற்காத்து கொள்ளும் திறனை மேம்படுத்தி கொள்வதும் தேசிய பாதுகாப்பு நலன்களை கருதியும் தான். இந்த திட்டம் மிகவும் ரகசியமாக முன்னெடுக்கப்பட்டது.
அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள 10,000 ஊழியர்களில், 100க்கும் குறைவானவர்களே இந்த திட்டத்தில் பங்கு பெற்றனர். அதன் பிறகு இதில் பணியாற்ற சிலர் பணியமர்த்தப்பட்ட போதும் அவர்களுக்கு இதில் யார்யார் ஈடுபட்டுள்ளனர் அல்லது அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்பது தெரியாது.
“நாங்கள் மதிப்பாய்வு கூட்டங்கள் நடத்தும் போது யாரிடமும் சொல்ல வேண்டியதில்லை, எந்த குறிப்புகளும் அங்கு எடுக்கப்படவில்லை. எனவே , தகவல் கசிவு ஏற்படும் அபாயம் இல்லை. கூடுதலாக, தகவல் தேவைப்படும் போது மட்டும் தான் தொடர்பு கொள்வோம்.
மிகவும் கவனமாக அனைவரும் செயல்பட்டோம். நாங்கள் எல்லாவற்றையும் மிகவும் ரகசியமாக வைத்திருந்தோம். ஆனால் என் மனைவிக்கு இது குறித்து சந்தேகம் வந்தது. நான் ஏதோ ரகசிய வேலை செய்கிறேன் என்று என் மனைவி யூகித்தார்” என்று அவர் கூறினார்.
ஒரு பெரிய அறிவியல் சவால்
`புன்னகை புத்தர்’ : 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா தனது அணு சக்தியை உலகிற்கு காட்டிய தினம்
படக்குறிப்பு, புத்தரின் பிறந்தநாள் கொண்டாடப்படும் தினத்தில் அணு சக்தி சோதனை திட்டமிடப்பட்டதால் ’சிரிக்கும் புத்தர்’ பெயர் உருவானது
கனடா உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சிவிலியன் அணு ஆராய்ச்சி உலையில் இருந்து எரிபொருளை பயன்படுத்தி புளூட்டோனியம் கருவியை தயாரிக்க அணுகுண்டு சோதனை திட்டத் தலைவர்கள் முடிவு செய்தனர். இந்த ரகசிய செயல்பாடு கனடாவுக்கு தெரியாது.
இந்த சாதனம் இரண்டாம் உலகப் போரின் போது நாகசாகி மீது போடப்பட்ட வெடிகுண்டு போலவே இருக்கும்.
“இது Implosion என்னும் உள் நோக்கி வெடிக்கும் சாதனம். அணுக்கரு உருண்டையாகவும் அதனை சுற்றி ரசாயன வெடிமருந்து சூழப்பட்டதாகவும் இருந்தது.
இந்த ரசாயன வெடிபொருட்களில் வெளிப்படும் அதிர்வலைகள் ஒரே நேரத்தில் எல்லா பக்கங்களிலும் அழுத்தம் ஏற்படுத்தும் போது, அணுக்கரு சுருக்கப்பட்டு, சூப்பர் கிரிட்டிகாலிட்டி நிலை உருவாகும். அந்த கட்டத்தில், ஒரு நியூட்ரான் உருவாக்கப்படுகிறது. இது ஒரு அணு சங்கிலி எதிர்வினையைத் தொடங்குகிறது. ”
“அணு சங்கிலி எதிர்வினை அதிகரித்து, வெடிப்பை ஏற்படுத்தும். பெரும் அளவிலான ஆற்றல் வெளிப்படும்.
இம்ப்லோஷன் வெடிப்பு சாதனம் இப்படித்தான் செயல்படுகிறது. இருப்பினும், இதை உருவாக்குவது எளிதானது அல்ல, குறிப்பாக மற்ற நாடுகள் தங்கள் அணுசக்தி சோதனை பற்றி இந்தியாவுடன் ரகசியங்களை பகிர்ந்து கொள்ளப் போவதில்லை.
எனவே மற்ற நாடுகளிடம் இருந்து உதவி பெறாமல் அணு ஆயுத சோதனை நடத்தும் ஒரே நாடு இந்தியா தான்.
அந்த நேரத்தில், அணுசக்தி பற்றி சில அடிப்படைக் கொள்கைகளை தவிர விரிவான தகவல்கள் தெரியாது.
எனவே நாங்கள் புதிதாக அனைத்தையும் உருவாக்க வேண்டியிருந்தது. புளூட்டோனியம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நச்சுப் பொருள்.
அதன் இயற்பியல் பண்புகள் மிகவும் ஆச்சர்யப்பட வைக்கும். சாதாரண அறை வெப்பநிலை மற்றும் சுற்றுப்புற அழுத்தங்களில் இது மிகவும் இலகுவாக உடையக்கூடிய தன்மையில் இருக்கும். எனவே இதை கையாள்வது கடினம். ஆனால் நாங்கள் அதை பயன்படுத்தினோம்
மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், சூப்பர் கம்ப்யூட்டர்கள் அல்லது அடிப்படை கணினிகள் கூட எங்களுக்கு கிடைக்கவில்லை. எனவே நாங்கள் மிகவும் அடிப்படையான கணினி சாதனங்களின் உதவியுடன் இந்த சோதனையை செய்ய வேண்டியிருந்தது.” என்று விவரித்தார்.
இருப்பினும், 1972 ஆம் ஆண்டில், அணு ஆயுத சோதனை குழு கணினி போன்ற ஒரு அடிப்படை சாதனத்தை வைத்திருந்தது. அதை வைத்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்து தகவல்களை சேகரித்து செயல்படுத்தினர்.
பாகிஸ்தானில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வட இந்தியாவின் பாலைவனத்தில் உள்ள `பொக்ரான்’ என்னும் பகுதி சோதனை தளமாக தேர்வு செய்யப்பட்டது. இந்த சோதனை நிலத்தின் மேற்பரப்பில் மேற்கொள்ளப்படாது, எனவே அவர்கள் ஒரு பெரிய குழியை மிகவும் ஆழமாக நிலத்தடியில் தோண்டினர், அதில் அந்த பெரிய சாதனத்தை வைத்தார்கள்.
அணு வெடிப்பு நிகழ்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவர்கள் அந்த சாதனத்தை குழியில் இறக்கி, குப்பைகள், மணல் மற்றும் பிற பொருட்களை கொண்டு அந்த துளையை நிரப்பினர். கடைசி நிமிடத்தில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வது சாத்தியமில்லை, எனவே நாங்கள் அனைவரும் பதற்றத்தில் இருந்தோம்.”
” சோதனை நிகழ்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, நாங்கள் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்களை வெளியேற்றினோம்.
அவர்கள் எந்த தொந்தரவும் கொடுக்காமல் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டனர். ஏதோ பெரிய விஷயம் நடக்க போகிறது என்று அவர்கள் சந்தேக பட்டிருக்கலாம்.” என்று சதீந்தர் குமார் சிக்கா விவரித்தார்.
`புத்தர் சிரித்தார்’
படக்குறிப்பு, அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் புகழ், புத்தர் சிரித்ததன் பின்னர் சர்வதேச அளவில் உயர்ந்தது.
அணுகுண்டு சோதனை மே 18, 1974 இல் திட்டமிடப்பட்டது.
டாக்டர் சிக்காவும் அவரது சக விஞ்ஞானிகளும் நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு கோபுரத்தில் இருந்து அதைக் கண்காணிக்க கூடினர்.
“என்ன நடக்கப் போகிறது என்பதை பதிவு செய்ய பேனாவுடன் ஒரு நோட்புக் கொடுத்தார்கள், ஆனால் அனைத்தும் ஒரு `ஃபிளாஷ்’ அல்லது ஒரு மில்லி வினாடியில் நடந்தது.
“நிலத்தடியில் புதைத்து வைத்த அந்த சாதனம் வெடித்த போது, அந்த தளத்தில் அதிர்வு ஏற்பட்டு, சுமார் 34 மீட்டர் உயரத்திற்கு மேடு போல் உயர்ந்ததை கண்டோம், பின்னர் அது தாழ்ந்தது, மேலும் பூகம்பம் போன்ற அதிர்வுகளை நாங்கள் உணர்ந்தோம். ”
“எங்கள் முயற்சி வெற்றியடைந்து விட்டது. என்னை சுற்றி நிறைய உற்சாகம், கைதட்டல்கள் இருந்தன.
அப்போது நான் இளைஞனாக இருந்தேன். நான் கோபுரத்தின் மேலிருந்து கீழே இறங்கும் இடத்திற்கு உற்சாகத்துடன் குதித்தேன். அணுசக்தி சோதனை வெற்றி பெற்ற தகவல் உடனடியாக டெல்லிக்கு தெரிவிக்கப்பட்டது.
“அன்று மே 18 புத்தரின் பிறந்தநாள், எனவே பிரதமர் அலுவலகத்திற்கும் எங்கள் தலைவர் டாக்டர் ராமண்ணாவிற்கும் இடையே உள்ள குறியீட்டு பெயர் ‘சிரிக்கும் புத்தர்’ என்பது தான். எனவே, அணு வெடிப்பு வெற்றிகரமாக முடிந்ததும், டெல்லிக்கு நேரடியாக தொடர்பு கொண்டு, `புத்தர் சிரித்தார்’ என்று சொன்னார்கள்.”
விஞ்ஞானிகள் வெற்றியை கொண்டாடினர். நாங்கள் அனைவரும் இராணுவப் பேருந்தில் வந்து ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்தோம், அது கோடை காலம் என்பதால் நிறைய மாம்பழங்களும் நிறைய பீர் பாட்டில்களும் இருந்தன.”
இந்தியாவின் அமைதியான அணு ஆயுத சோதனை பற்றிய செய்தி வெளியானதும், சில நாடுகள் நாட்டின் தற்காப்பு உரிமையை அங்கீகரித்து பாராட்டின,
அதே சமயம், அணுசக்தி சோதனை குறித்த உலகளாவிய தடையை மீறியதற்காக இந்தியாவுக்கு எதிராக சர்வதேச சீற்றம் ஏற்பட்டது. இந்தியாவுடனான சர்வதேச அணுசக்தி ஒத்துழைப்பு இடைநிறுத்தப்பட்டது. இது நாட்டின் சிவில் அணுசக்தி திட்டத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது.
“ஆமாம், இது அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் செய்தி தான். இந்திய அறிவியலும் தொழில்நுட்பமும் அணு ஆயுதச் சோதனை நடத்தும் அளவுக்கு முன்னேறும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.”
அடுத்த இருபது ஆண்டுகளுக்கு, இந்தியா தனது இம்ப்லோஷன் சாதனத்தை சிறியதாக்கி, வெடிகுண்டை உருவாக்கியது, பாகிஸ்தானும் அதை உருவாக்க விரைந்தது.
24 வருட இடைவெளிக்குப் பிறகு, இந்தியா மே 11 மற்றும் 13, 1998 ஆகிய தேதிகளில் ஐந்து நிலத்தடி அணுகுண்டு வெடிப்பு தொடர் சோதனையை நடத்தியது. இது உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் விமர்சனங்களை எதிர்கொண்டது.
டாக்டர் சதீந்தர் குமார் சிக்கா 2023 இல் உயிரிழந்தார். அவர், மிகவும் சக்தி வாய்ந்த தெர்மோ நியூக்ளியர் சாதனத்தை உருவாக்கும் பணியை வெற்றிகரமாக வழிநடத்தியவர். மேலும் இந்திய அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் செயலாளராக இருந்தார்.
“சிரிக்கும் புத்தர்” சோதனை நடந்து நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு அவர் பிபிசியிடம் பேசுகையில், இந்தியாவை அணுசக்தி நாடாக மாற்றியதில் அவர் ஆற்றிய பங்கைப் பற்றி அவர் கவலைப்படவில்லை.
“எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை, உண்மையில், நாங்கள் விரும்பியதைச் சாதித்ததற்காகவும், நாட்டிற்காக ஏதாவது செய்ததற்காகவும் நாங்கள் பெருமைப்படுகிறோம் .” என்றார் தீர்க்கமாக..
எழுதியவர், `விட்னஸ் ஹிஸ்ட்ரி’
பிபிசி