யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வாகன சாரதியான இராணுவ சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புத்தூர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் நேற்று திங்கட்கிழமை (20) இராணுவத்தினருக்கு சொந்தமான ஹயஸ் ரக வாகனம் வீதியோரமாக, வீதியை கடக்க துவிச்சக்கர வண்டியுடன் காத்திருந்த யுவதியை மோதி விபத்துக்கு உள்ளானதில் யுவதி உயிரிழந்திருந்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அச்சுவேலி பொலிஸார் , வாகன சாரதியான இராணுவ சிப்பாயை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணைகளின் பின்னர் இராணுவ சிப்பாயை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது , சிப்பாயை 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது
அதேவேளை, குறித்த வாகனத்தில் இராணுவ உயர் அதிகாரிகள் பயணித்ததாகவும் , அவர்களில் இருவர் காயமடைந்த நிலையில் பலாலி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.