ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டமை உலக அளவில் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குலக நாடுகளை விமர்சிப்பதில் மிகவும் தைரியமான தலைவராக விளங்கிய ரைசி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை பகிரங்கமாக விமர்சித்து வந்த ஒருவர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, தனது வெளியுறவு அமைச்சர், அதிகாரிகளுடன் ஹெலிகப்டரில் டெஹ்ரானுக்கு வந்து கொண்டிருந்தார்.
இரண்டு ஹெலிகப்டர்கள் பாதுகாப்பாக திரும்பின. எனினும் ஜனாதிபதியும், வெளியுறவுத்துறை அமைச்சரும் வந்த ஒரு ஹெலிகப்டர் மாயமாக மறைந்தது.
எனினும் மூன்று ஹெலிகப்டர்கள் சென்ற நிலையில் ஈரான் ஜனாதிபதி சென்ற ஹெலிகப்டர் மாத்திரம் எப்படி மோசமான காலநிலையில் சிக்கியது, அது எதிரிகளால் இலக்கு வைக்கப்பட்டிருக்கலாமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
மிக முக்கியமாக இஸ்ரேலின் உளவுத்துறையான மொசாட் அமைப்பின் மீது உலகெங்கினும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு அமைப்பை அடுத்து உலகம் முழுதும் புகழ்பெற்ற உளவு அமைப்பு மொசாட் ஆகும். எங்கும் ஊடுருவி தமது இலக்கை முடித்து விட்டு மக்களோடு மக்களாக சாதாரணமாக நடமாடிக்கொண்டிருக்கும் உளவுப் பிரிவினர் தான் மொசாட் அமைப்பினர்.
இஸ்ரெலின் மொசாட் அமைப்பில் பல பிரிவுகள் உள்ளன. இராணுவத்தின் உளவுப் பிரிவான அமான் (Aman). உள்நாட்டு உளவுப்பிரிவான ஷபாக் (Shabak). இது Shin Bet என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. சுமார் 7,000 பேர் பணிபுரியும் மொசாட் , உலகின் பெரிய உளவு நிறுவனங்களில் ஒன்று.
அமெரிக்கா அறிவித்தது போன்று இஸ்ரேலும் ஈரான் ஜனாதிபதி ஹெலிகப்டரில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் தமக்கும் எந்த தொடர்புகளும் இல்லை என அறிவித்துள்ளது.
எனினும் பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் காஸா பகுதி தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஈரான் கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் நிலைகள் மீது பலிஸ்டிக் மிசைல்ஸ் (ballistic missiles) மற்றும் ட்ரோன் மூலமாக தாக்குதலை நடத்தியிருந்தது.
இதற்கு உடனடியாக அமெரிக்கா தனது கோபத்தை ஈரான் மீது வெளியிட்டது. தாக்குதல் தொடர்ந்தால் இஸ்ரேலின் பாதுகாப்பு கவசமாக அமெரிக்கா விளங்கும் என எச்சரிக்கை தொனியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஈரானுக்கு தகவல் அனுப்பியிருந்தார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு வல்லரசுகளையும் இஸ்லாமிய மதவாத நாடான ஈரான் ஆரம்பத்திலிருந்தே பகைமை பாராட்டி வருகின்றமை இரண்டு நாடுகளுக்கும் ஒரு கெளரவ பிரச்சினையாகவும் இருந்தது.
எனவே அவர்கள் தருணம் பார்த்து ஈரான் ஜனாதிபதியை கொலை செய்வதற்கு திட்டமிட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
மிக முக்கியமாக மொசாட் மற்றும் சி.ஐ.ஏ ஆகிய இரண்டு உளவு அமைப்புகளும் இந்த ஹெலிகப்டர் விபத்தோடு தொடர்பு பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் கிளம்பியுள்ளது.
இது இவ்வாறிருக்க ஜனாதிபதி ரைசியின் மரணத்தை ஈரானின் சில பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சில இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த கொண்டாட்டங்களுக்கு காரணங்கள் உள்ளன.
அதேவேளை, மிகவும் பழமைவாத சிந்தனைகள் கொண்டவரான ரைசி தனது நாட்டில் இஸ்லாமிய கொள்கைகளை மிகவும் இறுக்கமாக கடைபிடித்த ஒருவர். நாட்டு மக்களும் அவ்வாறே இருக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இவரது ஆட்சியில் 2022 ஆம் ஆண்டு ஈரான் நாட்டில் மஹ்ஸா அமினி என்ற 22 வயது பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று அந்நாட்டின் கலாசார காவலர்கள் என்று கூறப்படும் ரைசியின் இரகசிய பிரிவினாரால் அடித்தே கொல்லப்பட்டார்.
எனினும் அதை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டங்களிலும் ரைசியின் கைகளே ஓங்கியிருந்தன. இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
எனவே, இவர் கொல்லப்பட வேண்டும் என்பதில் இஸ்ரேல் அமெரிக்காவை விட ஈரானில் அவருக்கு எதிரானவர்கள் அதிகம் என்று கூறப்படுகின்றது.
குறித்த உளவு அமைப்புகளுக்கு ஈரானிலிருந்தே தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
அல்லது ஈரான் மக்களுக்குள் மக்களாக மொசாட் பிரிவின் செயற்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் உள்ளது. மிக முக்கியமாக மொசாட்டின் இராணுவ உளவுப் பிரிவான அமான் எனும் பிரிவைச்சேர்ந்தவர்கள் ரைசியின் நடமாட்டங்கள் அவரின் பயணங்கள் தொடர்பில் துல்லியமாக அறிந்து வைத்திருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
எது எப்படியானாலும் ஈரான் ஜனாதிபதியின் மரணம் உலக அளவில் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளதோடு ஈரானின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் கடும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
சி.சி.என்- வீரகேசரி