தீவிரவாதிகள் விமானக் கடத்தல் மூலம் இஸ்ரேலியப் பணயக் கைதிகளை உகண்டாவில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் என்ற செய்தி, அப்போது உலகெங்கும் பரபரப்பாக அடிபட்டுக் கொண்டிருந்தது.

இந்த விவகாரம், கென்யாவுக்கும் நன்றாகவே தெரியும். அத்துடன் இஸ்ரேலிய உளவுத்துறை பணயக் கைதிகளை மீட்க அதிரடியாக ஏதோ செய்யப்போகின்றது என்ற விபரமும், கென்யாவுக்கு மேலதிகமாகத் தெரியும்.

அப்படியான சூழ்நிலையில் இஸ்ரேலிய விமானம் ஒன்று கென்யாவில் எரிபொருள் நிரப்ப அனுமதி கேட்கின்றது!

ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதுபோல,மிகத் தெளிவாகபுரியக்கூடிய விடயம் இது. இஸ்ரேலிய விமானம் வருவது, பணயக் கைதிகளை மீட்கும் ரகசிய ஆபரேஷன் என்பதை கென்யா ஊகித்திருந்தது.

ஆனால் என்ன விஷயம் என்று சரியாகத் தெரியாமல், தமது நாட்டு விமான நிலையத்தை இதற்கு உபயோகிப்பதற்கு விட கென்யா விரும்பவில்லை. அதனால்தான் துருவித் துருவி விபரங்களைக் கேட்டது கென்யா.

டேவிட் கிம்சீ, மொசாத்தின் தலைவருடன் கலந்து ஆலோசித்தார்.

இஸ்ரேல் சொன்ன பொய்

“இந்த விமானத்துக்கும் பணயக் கைதிகளுக்கும் சம்மந்தமே இல்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலை கூடாது.

அது கென்யாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலுள்ள ராஜாங்க உறவுகளைக் கெடுத்துவிடும்” என்பதை டேவிட் ஒப்புக்கொண்டார்.

அதே நேரத்தில், பணயக் கைதிகளை மீட்க அதிரடித் திட்டம் ஒன்றுக்காகத்தான் இந்த விமானம் என்று கூறவும் அவர் விரும்பவில்லை.

எனவே, இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல் புதிதாக, அதே நேரத்தில் நம்பும்படியாக ஒரு கதை கூறுவது என மொசாத் முடிவெடுத்தது. அந்தக் கதைதான் கென்யாவுக்கும் இஸ்ரேலினால் சொல்லப்பட்டது.

அந்தக் கதை என்ன?

“விமானக் கடத்தல்காரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, பணயக் கைதிகளை மீட்கவே இஸ்ரேல் முடிவெடுத்திருக்கிறது.

ஆனால், கடத்தற்காரர்களின் கோரிக்கையை இஸ்ரேல் நிறைவேற்றிய பின்னரும், பணயக் கைதிகளை நோக்கித் தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டால் என்ன செய்வது? ஒருவேளை அப்படி நடந்தால், உடனடி மருத்துவ உதவிகளைச் செய்யவே இந்த விமானம்!

இது ஒரு பறக்கும் வைத்தியசாலை போல அமைக்கப்பட்டிருக்கின்றது. இதில் டாக்டர்கள் இருப்பார்கள். விமானத்துக்கு உள்ளேயே சகல மருத்துவ உபகரணங்களுடன் ஆபரேஷன் தியேட்டர் உண்டு.

அப்படியான ஒரு விமானத்துக்கு எரிபொருள் நிரப்பவே அனுமதி கேட்கிறோம்” என கென்யாவின் வெளிவிவகார அமைச்சிடம் கூறப்பட்டது.

விமானத்துக்கும் மொசாத்துக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என்பது போலவே ஒரு தோற்றம் காண்பிக்கப்பட்டது.

மருத்துவ உதவி என்ற இந்தக் கோரிக்கையுடன் சென்றபோது கென்யாவால் அதை மறுக்க முடியவில்லை.

சில மணி நேரங்களிலேயே இஸ்ரேலிய விமானம் நைரோபி விமான நிலையத்தில் இறங்கி எரிபொருள் நிரப்புவதற்கான அனுமதியை கென்யா அரசு கொடுத்தது.

மனிதாபிமான ரீதியிலான அனுமதி என்று கென்யாவின் நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது.
அந்த ஏற்பாடும் சரி. இனி அடுத்த பிரச்சினை.

Entebbe Airport, 1976

உளவாளிகள் உகண்டாவுக்குள் எப்படி நுழைவது?

மொசாத் ஏற்கனவே கென்யாவுக்குள் தனது உளவாளிகள் ஆறு பேரை அனுப்பிவிட்டது. மேலதிக உளவாளிகளையும் அங்கே அனுப்பலாம்.

ஆனால், கென்யாவிலிருந்து உகண்டா நாட்டுக்குள் இஸ்ரேலிய உளவாளிகள் நுழைவது எப்படி என்பதுதான் இன்னமும் குழப்பமாக இருந்தது.

கொமாண்டோக்களை ஏற்றிச் செல்லும் விமானம் உகண்டாவின் என்டபே விமான நிலையத்தில் போய் அதிரடியாக இறங்கி, பணயக் கைதிகளை மீட்பது என்பதுதான் மொசாத்தின் திட்டம்.

அப்படிச் செய்வதற்கு முன்னர் மொசாத்தின் உளவாளிகள் அந்த விமான நிலையம் இருக்கும் ஏரியாவுக்குள் ஊடுருவிச் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

முக்கியமாக அந்த விமான நிலையம் பற்றிய உளவுத் தகவல்கள் வேண்டும்.
விமான நிலையத்தில் இப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படிச் செய்யப் பட்டிருக்கின்றன என்பது தெரிய வேண்டும்.

எந்த நேரத்தில் குறைவான பாதுகாப்பு இருக்கின்றது என்பதை அறிய வேண்டும். இவை எல்லாவற்றையும்விட முக்கியமாக, அந்த விமான நிலையத்தின் முழுமையான வரைபடம் வேண்டும்.

இந்தக் காரணங்களுக்காக முதலில் உளவாளிகள் உகண்டாவுக்குள் நுழைய வேண்டும்.
இஸ்ரேலியர்களை உத்தியோகபூர்வமாக உள்ளே நுழைய இடி அமீன் அனுமதிக்க மாட்டார் என்பது இஸ்ரேலுக்கு நன்றாகவே தெரியும்.

எனவே யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாகத்தான உள்ளே நுழையவேண்டும்.

அடுத்த சிக்கல், P.L.O.!

மொசாத் இப்படி உகண்டாவுக்குள் நுழைவதற்கு மற்றுமோர் பெரிய தடையும் இருந்தது. அது பி.எல்.ஓ. எனப்படும் பாலஸ்தீன விடுதலை இயக்கம்.

அந்த நாட்களில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை வெளிநாடுகள் பலவற்றில் தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருந்தது.

அதற்காக பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் போராளிகள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டுமல்லவா?

அப்படியான பயணங்களுக்கு பாலஸ்தீன விடுதலை இயக்கம் அந்த நாட்களில் நுழைவாயிலாகப் பயன்படுத்திய விமான நிலையம் எது தெரியுமா?

இதே என்டபே விமான நிலையம்தான்!

என்டபே விமான நிலையத்தினூடாக உள்ளே நுழையவும், அதனூடாக மற்றய ஆபிரிக்க நாடுகளுக்குச் செல்லவும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினருக்கு இடி அமீன் முழுமையான அனுமதி வழங்கியிருந்தார்.

அதைவிட உகண்டாவுக்கு உள்ளே பாலஸ்ததீன விடுதலை இயக்கத்துக்கு ஒரு ரகசியத் தலைமை அலுவலகம் அமைக்கவும் இடி அமீனால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

Team Amnon, back in Israel from the Entebbe hostage rescue operation, pose on a black Mercedes car that was a crucial part of the rescue operation, July 4, 1976

யாருடைய வீடு அது தெரியுமா?

உகண்டாவுக்குள் அமைக்கப்பட்டிருந்த இந்த ரகசியத் தலைமை அலுவலகம் பற்றியும் அனேகருக்குத் தெரியாத ஒரு சுவாரசியமான தகவல் உண்டு.

1972ல் இடி அமீன் இஸ்ரேலுடன் உகண்டாவுக்கு இருந்த ராஜாங்கத் தொடர்புகளையெல்லாம் துண்டித்துக் கொண்டார்.

இஸ்ரேலியத் தூதரகத்தையும் உகண்டாவிலிருந்து வெளியேற்றினார். அப்போது இஸ்ரேலியத் தூதுவர் உகண்டாவில் தங்கியிருந்த வீட்டையும் தம்வசம் எடுத்துக் கொண்டார் இடி அமீன்!

அந்த வீட்டைத்தான் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ரகசியத் தலைமையகமாக உபயோகிக்கக் கொடுத்திருந்தார்.

அந்த வீட்டில் இருந்துதான் அவர்கள், இஸ்ரேவுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கான உத்தரவுகள் போய்க்கொண்டிருந்தன.

இந்த விபரம் அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. மூலமாகவே மொசாத்துக்குத் தெரிய வந்திருந்தது.

இப்படியாக பாலஸ்தீன் ஆட்கள் அங்கிருப்பது, மொசாத்துக்கு அடுத்த சிக்கலாக இருந்தது.
மொசாத் உகண்டாவுக்குள், அதுவும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் வந்துபோகும் என்டபே விமான நிலையத்தில், அதிரடி ஆபரேஷன் ஒன்றை திட்டமிடுகிறது!

சூழ்நிலை கொஞ்சம் தந்திரமானதுதான்.

தாக்குதலைத் திட்டமிடுவதற்கு முன், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் இன்னமும் அந்த வீட்டிலிருந்து இயங்குகிறார்களா என்பது பற்றிய உளவுத் தகவல் டேவிட் கிம்சேயுக்கு முதலில் தேவைப்பட்டது.

ஏனென்றால் அந்த வீடு என்டபே விமான நிலையத்துக்கு அருகில் இருந்தது!

விமானத்தில் கொண்டுவந்து இறக்கப்படும் இஸ்ரேலியக் கொமாண்டோக்கள், என்டபே விமான நிலையத்தில் அதிரடித் தாக்குதல் ஒன்றை நடாத்துவதே திட்டம்.

அப்போது, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினரும் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள அந்த வீட்டில் இருந்தால் என்னாகும்?

அவர்களிடம் இருந்து ஆயுத ரீதியான எதிர்ப்புக் கிளம்பலாம். அதற்கு ஏற்ற ஒழுங்குகளையும் செய்துகொள்ள செய்யவேண்டும்.

இந்த விபரங்களை அறிய ரிஸ்க் எடுத்தாவது மொசாத்தின் உளவாளிகளை உகண்டாவுக்குள் அனுப்பியே ஆகவேண்டும்.

இடி அமீன்

இரு உளவாளிகள் ஊடுருவுகின்றனர்

டேவிட் கிம்சே இதற்காக இரண்டு மொசாத் உளவாளிகள் உகண்டாவுக்குள் நுழைவதற்குத் தயார் செய்தார்.

அவர்கள் இஸ்ரேலில் இருந்து முதலில் கென்யாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.
கென்யா சென்றடைந்த அவ்விரு உளவாளிகளும் அங்கிருந்து உகண்டாவுக்குள் ஏரி ஒன்றின் ஊடாகவே ஊடுருவுவது என்று திட்டமிடப்பட்டிருந்தது.

அதன்படி கென்யாவிலிருந்து திருட்டுத்தனமாக படகு ஒன்றின் மூலம் லேக் விக்டோரியா ஏரியில் பயணம் செய்து உகண்டாவுக்குள் நுழைந்தார்கள்.

இதிலுள்ள மற்றொரு முக்கியமான விஷயம், இரு உளவாளிகளின் இந்த ஊடுருவல் கென்யாவின் உளவுத் துறைக்குத் தெரிந்தே நடைபெற்றது.

உண்மையில் படகு மூலமாக உகண்டாவுக்குள் நுழையும் ஐடியாவை இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்துக்குக் கொடுத்ததே கென்யாவின் உளவுத்துறைதான்.

அத்துடன் இரு மொசாத்தின் உளவாளிகளையும் அந்தப் பாதையூடாக உகண்டாவுக்குள் அழைத்துச் செல்ல கென்யாவின் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவரையும் கூடவே அனுப்பி வைத்திருந்தது கென்ய உளவுத்துறை.

என்டபே பகுதிக்குள் இந்த மூன்றுபேரும் ஊடுருவி, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று பார்த்தால், வீடு காலி!

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர், உகண்டாவில் இருந்து தங்களது நடவடிக்கைகளையெல்லாம் அங்கோலா நாட்டுக்கு நகர்த்திவிட்டார்கள் என்ற விபரம் அதன் பின்னரே மொசாத்துக்குத் தெரியவந்தது.

ஒரு தடை நீங்கியது. அதிரடி ஆப்பரேஷனின்போது விமான நிலையத்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் எதிர்ப்பை எதிர்கொள்ளத் தேவையில்லை.

இந்த இடத்தில், இவர்களுக்கு எதிர்பாராத அதிஷ்டம் ஒன்றும் அடித்தது.

பாதுகாப்பு அதிகாரியின் உறவினர்

இரண்டு மொசாத் உளவாளிகளுடன் கென்யாவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் சென்றிருந்தார் என்று சொன்னோமல்லவா… அந்தப் பாதுகாப்பு அதிகாரிக்கு உகண்டாவில் நல்ல தொடர்புகள் இருந்தன.

அந்தத் தொடர்புகள் மூலம் தகவல் சேகரித்ததில் அவரின் மனைவியின் உறவினர் ஒருவர் விமான நிலையத்தில் பணயக் கைதிகளை காவல் காக்கும் பணியில் இருப்பது தெரிய வந்தது.

குறிப்பிட்ட இந்த உறவினருடன் பேசிய கென்யப் பாதுகாப்பு அதிகாரி, தங்களை எப்படியாவது என்டபே விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
ஆனால் அது ஆபத்தான விளையாட்டு என்று அந்த உறவினர் மறுத்துவிட்டார்.

காரணம், இரு இஸ்ரேலிய உளவாளிகளையும் அவர்களது உருவத் தோற்றத்தை வைத்தே கடத்தற்காரர்கள் சுலபமாக அடையாளம் கண்டு கொள்வார்கள்.

இப்போது ஒரு மாற்றுத் திட்டம் வகுக்கப்பட்டது.

இஸ்ரேலிய உளவாளிகள் இருவரையும் பாதுகாப்பான இடம் ஒன்றில் விட்டுவிட்டுத் தன்னை மாத்திரம் தனியே என்டபே விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டார் கென்யப் பாதுகாப்பு அதிகாரி.

இதில் சிக்கல் ஏதும் இருக்காது. காரணம் உகண்டா நாட்டவருக்கும் கென்ய நாட்டவருக்கும் உருவ அளவில் பெரிதாக வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.

இதற்கு அவரது உறவினர் ஒப்புக்கொண்டார். அவருடன் இவரும் ஒரு காவல் காக்கும் சகா என்ற தோற்றத்தில் என்டபே விமான நிலையத்துக்குள் நுழைந்து விட்டார்.

அங்கே நோட்டமிட்டதில் பணயக் கைதிகள் அனைவரும் உயிருடன் இருப்பதை இவர் கண்களால் பார்த்தார்.

அத்துடன் என்டபே விமான நிலையத்தில் செய்யப்பட்டிருந்த காவல் ஏற்பாடுகளையும் இந்தப் பாதுகாப்பு அதிகாரி மனதில் பதிவு செய்துகொண்டார்.

மொத்தம் 15 பேர் பணயக் கைதிகளைக் காவல்காக்கும் வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள்.

அவர்களில் சிலர் இப்படியான வேலைகளுக்கே புதியவர்கள் என்பது நன்றாகவே தெரிந்தது. இந்தப் புதியவர்கள் துப்பாக்கியையே முன்பின் இயக்கிப் பழக்கமில்லாத ஆட்கள் என்பது அவர்கள் துப்பாக்கியை மிரட்சியுடன் பிடித்திருந்ததில் இருந்தே தெரிந்தது.

துப்பாக்கி பிடிக்கத் தெரிந்த மற்றயவர்களும் அனுபவசாலிகள் அல்ல. அவர்களும் நகத்தைக் கடித்தபடி பயத்துடனும் பதட்டத்துடனும் காணப்பட்டார்கள்.

இந்தத் தகவல்கள் ரேடியோ மூலம், இஸ்ரேலிலுள்ள மொசாத் தலைமையகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

இதே நேரத்தில் கென்யாவுக்கு முதன்முதலில் போய் இறங்கிய ஆறு மொசாத் உளவாளிகள் என்ன செய்தார்கள் என்பதைப் பார்க்கலாமா?

தொடரும்…

”உளவாளிகளின் மர்ம உலகம் மொசாத்:எயார் பிரான்ஸ் விமான கடத்தலும், அதிரடி மீட்பும்…. ! (பகுதி-1)

”உளவாளிகளின் மர்ம உலகம் மொசாத்:எயார் பிரான்ஸ் விமான கடத்தலும், அதிரடி மீட்பும்…. ! (பகுதி-2)

Share.
Leave A Reply

Exit mobile version