பூரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறைகளின் தொலைந்துபோன சாவி, தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டுவிட்டதாக பிரதமர் நரேந்திர மோதி தேர்தல் பிரசாரத்தில் பேசியிருக்கிறார். பூரி ஜெகந்நாதர் கோவிலின் பொக்கிஷ அறையின் சாவி எப்படி தொலைந்தது?

ஒடிஷா மாநில தேர்தல் பிரசாரம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, பூரி ஜெகந்நாதர் கோவிலின் பொக்கிஷ அறையான ரத்ன பண்டாரின் தொலைந்து போன சாவி, தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டுவிட்டதாக பேசினார்.

“ஜெகந்நாதர் ஆலய கருவூலம் தொடர்பான நிகழ்வுகளைப் பார்த்து, ஒட்டுமொத்த ஒடிஷா மக்களும் கோபத்தில் உள்ளனர்.

அந்தக் கருவூல அறையின் சாவி தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டதாகக் கூறுகின்றனர். இதை தமிழ்நாட்டுக்கு அனுப்பியவர்கள் யார்? கொண்டு போனவர்கள் யார்? இப்படிப்பட்டவர்களை நீங்கள் மன்னிப்பீர்களா?” என்றார் அவர்.

ஒடிஷாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியில் சக்தி வாய்ந்த நபராக உருவெடுத்துள்ள, முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான வி. கார்த்திகேயன் பாண்டியனை குறிப்பிடும் வகையிலேயே பிரதமர் இப்படி பேசியதாக அந்த மாநில அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.

பிரதமரின் இந்தப் பேச்சிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஒடிஷா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோதி, புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகப் பேசி இருக்கிறார்.

இது கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் பூரி ஜெகந்நாதரை அவமதிப்பதோடு, ஒடிஷா மாநிலத்தோடு நல்லுறவும் நேசமும் கொண்ட தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதும் புண்படுத்துவதுமாகும்.

ஜெகந்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிஷா மக்களைத் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சல்லவா இது? ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் மோதி சுமத்தலாமா? தமிழ்நாட்டு மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா?” என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம்.

அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.

சர்ச்சையின் பின்னணி என்ன?

படக்குறிப்பு, பூரி ஜெகந்நாதர் கோவில், ஒடிஷா

ஒடிஷா மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே இரண்டு கட்டத் தேர்தல்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், இன்னும் இரண்டு கட்டத் தேர்தல்கள் பாக்கியிருக்கின்றன. இந்நிலையில்தான் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் பேசிய பேச்சு, சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோதி இப்படி சர்ச்சைக்குரிய பேச்சைப் பேசுவதற்கு ஒரு பின்னணி இருக்கிறது என்கிறார்கள் அந்த மாநில அரசியல் நோக்கர்கள்.

ஒடிஷாவின் பூரி தொகுதியில் போட்டியிடுகிறார் பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளரான சம்பிட் பத்ரா. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சம்பிட் பத்ரா, “லட்சக்கணக்கானவர்கள் மோதியைப் பார்க்க வருகிறார்கள்.

ஜெகந்நாதரே மோதியின் பக்தர் தான். நாம் எல்லோரும் மோதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான்” என்று குறிப்பிட்டார். கடவுளான ஜெகநாதரை மோதியின் பக்தர் என்று குறிப்பிட்ட அவரது இந்தப் பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்த சம்பிட் பத்ரா, “ஸ்ரீ ஜெகந்நாதரின் பக்தர் மோதி என்று சொல்வதற்குப் பதிலாக மோதியின் பக்தர் ஜெகந்நாதர் என்று சொல்லிவிட்டேன். இதற்காக அடுத்த மூன்று நாட்களுக்கு விரதம் இருப்பேன்” என்று குறிப்பிட்டார்.

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம்.

அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.

ஆனால், அதற்குள் இது ஒடிஷாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அந்த மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், “ஸ்ரீ ஜெகந்நாதர் இந்த பிரபஞ்சத்தின் கடவுள்.

அந்த மகாபிரபுவை மற்றொரு மனிதரின் பக்தராக குறிப்பிடுவது, கடவுளை அவமானப்படுத்துவதைப் போல. இது உலகம் முழுவதும் உள்ள ஒடிய மக்கள் மற்றும் ஜெகந்நாதரின் பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சம்பிட் பத்ராவின் பேச்சு பெரும் சர்ச்சையான நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோதி, பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவி பற்றி பேசியிருக்கிறார்.

அவரது இந்தப் பேச்சிற்குப் பிறகு, பூரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறையின் காணாமல் போன சாவி குறித்த விவாதங்கள் மறுபடியும் மேலெழுந்திருக்கின்றன.

பூரி ஜெகந்நாதர் கோவிலின் பொக்கிஷம்

படக்குறிப்பு, பூரி ஜெகந்நாதர் கோவிலின் வருடாந்திர ரத யாத்திரை

ஒடிஷாவின் கடலோர மாவட்டமான பூரியில் அமைந்திருக்கிறது புகழ் பெற்ற ஜெகந்நாதர் கோவில். 11ஆம் நூற்றாண்டில் முழுமை பெற்ற இந்தக் கோவிலில் ஜெகந்நாதர், பாலபத்ரா, சுபத்ரா என மூன்று திருவுருவங்கள் இருக்கின்றனர்.

இந்த கடவுள்களுக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளாக பல மன்னர்கள் நகைகளையும் விலை உயர்ந்த கற்களையும் தானமாகக் கொடுத்துள்ளனர்.

பக்தர்களும் பல்வேறு நகைகளை தானமாக வழங்கியுள்ளனர். இந்தப் பொக்கிஷங்கள் அனைத்தும் கோவிலுக்குள்ளேயே அமைந்துள்ள ரத்ன பண்டார் என்ற பொக்கிஷ அறையில் பாதுகாக்கப் படுகின்றன.

பொக்கிஷ அறையான ரத்ன பண்டார், பிடார் பண்டார் (உள் அறை), பஹார பண்டார் (வெளி அறை) என இரண்டு அறைகளைக் கொண்டது. இதில் வெளி அறையான பஹார பண்டார் குறிப்பிட்ட கால இடைவெளியில் திறக்கப்படும்.

வருடாந்திர ரத யாத்திரையின்போது ‘சுனா பேஷா’ என்ற தங்கக் கவசம் இங்கிருந்து எடுக்கப்பட்டே கடவுள்களுக்கு சாற்றப்படும்.

வருடம் முழுக்க நடக்கும் திருவிழாக்களுக்கும் நகை எடுக்கப்பட்டு, கடவுள்களுக்கு சாற்றப்பட்டு, மீண்டும் வைக்கப்படும். ஆனால், உள் அறையான பிடார் பண்டார், கடந்த 38 ஆண்டுகளாகத் திறக்கப்படவில்லை.


படக்குறிப்பு, 1884 பூரி ஜெகந்நாதர் கோவிலைச் சித்தரிக்கும் ஓவியம்

கடைசியாக பொக்கிஷ அறை திறக்கப்பட்டது எப்போது?

அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, பொக்கிஷ அறை 1978ஆம் ஆண்டு மே 13க்கும் ஜூலை 23ஆம் தேதிக்கும் இடையில் திறக்கப்பட்டது. அதற்குப் பிறகு, 1985ஆம் ஆண்டில் ஒரு முறை இந்தியத் தொல்லியல் துறையால் திறக்கப்பட்டது.

இந்த அறையில் எவ்வளவு நகைகள் உள்ளன என்பது குறித்து கடந்த 2018ஆம் ஆண்டு ஒடிஷா சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அப்போதைய சட்ட அமைச்சர் பிரதாப் ஜெனா, 1978ல் கணக்கெடுத்தபோது, 12,831 பரி தங்க நகைகளும் 22,153 பரி வெள்ளிப் பாத்திரங்களும் இருப்பதாக பதிலளித்தார்.

ஒரு பரி என்பது 11.66 கிராமைக் குறிக்கும். ஆகவே, 149.609 கிலோ தங்க நகைகளும் 258 கிலோ வெள்ளிப் பாத்திரங்களும் இருந்ததாக கொள்ளலாம்.

இதற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கின் அடிப்படையில், ரத்ன பண்டாரின் உள் அறையைத் திறக்க 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், சாவி கிடைக்கவில்லை என்பதால் அறை திறக்கப்படவில்லை. பூரி மாவட்ட ஆட்சியர்தான் உள் அறையின் சாவியை வைத்திருக்க வேண்டும். ஆனால், சாவி எங்கே போனதென்றே தெரியவில்லை.

இது மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்ததை அடுத்து ஜூன் 4ஆம் தேதி நீதித் துறை விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது.

இதற்குப் பிறகு, ‘ரத்ன பண்டார் உள் அறையின் மாற்றுச் சாவி’ என எழுதப்பட்ட ஒரு உறை, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் ஆவணக் காப்பகத்தில் கிடைத்ததாக ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இருந்தபோதும் நீதித் துறை விசாரணை தொடர்ந்து நடந்தது. அதே ஆண்டு நவம்பரில் சுமார் 300 பக்க அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கை இன்னும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படவில்லை.

இதற்குப் பிறகும் இந்த விவகாரம் சர்ச்சையாகவே நீடித்ததால், 2024ஆம் ஆண்டின் ரத யாத்திரையின் போது ரத்ன பண்டாரைத் திறக்கலாம் என மாநில அரசுக்கு ஜெகந்நாதர் கோவிலின் நிர்வாகக் கமிட்டி பரிந்துரைத்தது.

இதற்குப் பிறகு தொடரப்பட்ட ஒரு பொது நல வழக்கை விசாரித்த ஒடிஷா உயர் நீதிமன்றம், மாநில அரசு ஒரு உயர் மட்டக் குழுவை அமைத்து ரத்ன பண்டாரில் உள்ள பொருட்களைக் கணக்கெடுக்க உத்தரவிட்டது.

அதன்படி உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிஜித் பசயத் தலைமையில் 12 உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்தது ஒடிஷா அரசு.

 


படக்குறிப்பு, ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் வி. கார்த்திகேயன் பாண்டியன்.

இதற்கிடையில் தேர்தல் நெருங்கியதால், ஒடிஷாவில் தான் பேசிய பல கூட்டங்களில் ரத்ன பண்டாரின் காணாமல்போன சாவி குறித்து பிரதமர் மோதி கேள்வி எழுப்பினார்.

ஒடிஷாவைப் பொருத்தவரை, பூரி ஜெகந்நாதர் மிகுந்த மரியாதைக்குரியவர். அவரே அரசரைப் போன்றவர். ஆகவே, ரத்ன பண்டார் விவகாரம் ஒரு கொந்தளிப்பு மிக்க விவகாரமாகவே நீடித்து வந்தது.

வி. கார்த்திகேயன் பாண்டியன் பதில்

இந்நிலையில் தான், ஒடிஷாவின் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் பிஜு ஜனதா தளத் தலைவர்களில் ஒருவரும் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமானவருமான வி. கார்த்திகேயன் பாண்டியனை குறிவைத்து, ரத்ன பண்டாரின் சாவி தமிழ்நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக பிரதமர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

பிரதமரின் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்திருக்கும் வி. கார்த்திகேயன் பாண்டியன், “இந்த விவகாரம் குறித்து பிரதமருக்கு நன்றாகத் தெரியுமென்றால், அவர் சாவிகள் இருக்குமிடத்தைக் கண்டறிய வேண்டும்.

அவருக்குக் கீழே பல அதிகாரிகள் வேலை செய்கிறார்கள். அவருக்கு இதைப் பற்றித் தெரிந்திருக்கும்.

அவர் ஒடிய மக்களுக்கு அதைத் தெரியப்படுத்த வேண்டும்” என பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

Share.
Leave A Reply

Exit mobile version