“விசாரணைக் குழுவினர் AI-ன் உதவியுடன் எங்கள் குழந்தை கவிதா 14 வயது இளம்பெண்ணாக இருக்கும் புகைப்படத்தை உருவாக்கியுள்ளனர். அந்தப் புகைப்படத்தைப் பார்த்த பின், எங்கள் குழந்தை எப்படியும் கிடைத்துவிடுவாள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.”
சென்னையில் சாலிகிராமத்தில் வசித்து வந்த கணேஷ், வசந்தி தம்பதியின் இரண்டு வயது மகள் கவிதா 13 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார்.
தற்போது சென்னை காவல்துறையினர் செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence – AI) உதவியுடன் கவிதாவின் போட்டோவை 14 வயது இளம்பெண்ணின் முகமாக மாற்றி உள்ளனர்.
2011-ம் ஆண்டு வசந்தி சமையலறையில் வேலைசெய்து கொண்டிருந்தார். கணேஷும் வெளியில் சென்றிருக்க அப்போது கவிதா வீட்டைவிட்டு வெளியில் சென்றிருக்கிறார்.
முதல் மாடியில் உள்ள தன் அண்ணன் வீட்டில் குழந்தை இருப்பதாக வசந்தி நினைத்தார். சிறிது நேரம் கழித்து குழந்தையைத் தேடியபோது அவரின் அண்ணன் வீட்டில் இல்லை எனத் தெரியவந்தது.
திறந்திருந்த வீட்டின் கதவின் அருகே குழந்தை நின்றுகொண்டிருந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து கவிதாவின் தந்தை கணேஷ் கூறுகையில்,” நாங்கள் புகார் அளித்த பின் தொடர்ந்து காவல் நிலையத்துக்குச் சென்றோம். விசாரித்து வருவதாகவே தெரிவித்தனர்.
புகார் கொடுத்து ஒரு வருடத்துக்குப் பிறகு மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து மீண்டும் புகார் கொடுத்தோம்.
அவர் இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றினார். வழக்கை விசாரித்து வந்த மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளரும் சில நாள்களிலேயே இடமாற்றத்தில் சென்றுவிட்டார். இப்படி பலரின் கைகளுக்கு இந்தப் புகார் மாறி மாறிச் சென்றது. 2015-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்தோம்.
சில நாள்களுக்குப் பின் எங்கள் வழக்கறிஞர் எங்களிடம் தெரிவிக்காமலேயே வழக்கைத் திரும்பப் பெற்றார்.
விரக்தியான நிலையில் இனி கடவுள்தான் எங்கள் குழந்தையை எங்களிடம் கொண்டு வர வேண்டும் என கோவில், ஜோதிடம் என சென்றுவிட்டோம்.
இந்நிலையில் 2022-ம் ஆண்டு வழக்கை மூடப் போவதாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் எனக்கு வழக்கை முடிக்க விருப்பமில்லை என்று மனு அளித்தேன்
இதனைத் தொடர்ந்து ஆறு மாதங்களுக்குள் துணை காவல் ஆணையர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
அவர்கள் மீண்டும் இந்தப் புகாரை விசாரிக்கத் தொடங்கினர். விசாரணைக் குழுவினர் AI-ன் உதவியுடன் எங்கள் குழந்தை கவிதா 14 வயது இளம்பெண்ணாக இருக்கும் புகைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.
அந்தப் புகைப்படத்தைப் பார்த்த எனக்கும் என் மனைவிக்கும் எங்கள் குழந்தை எப்படியும் கிடைத்துவிடுவாள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
AI உருவாக்கிய போட்டோவில் எங்கள் குழந்தை மிகவும் அழகாக இருக்கிறாள்” என்று தெரிவித்துள்ளார். குழந்தையைக் கண்டுபிடிக்க இயன்ற முயற்சியை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.