இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த செய்தி வெளியானதும் இஸ்ரேலின் சமூக ஊடகங்களில் எதிர்வினைகள் வரத் தொடங்கின. இந்த ஹெலிகாப்டர் விபத்து ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது.

விபத்திற்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்கள் திங்கள் கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டன.

அதன்பின்னர் ஹெலிகாப்டரில் யாரும் உயிர் பிழைத்ததற்கான அறிகுறிகள் இல்லை என இரான் நாட்டு ஊடகம் தெரிவித்தது. ரைசியின் மரணம் உறுதி செய்யப்பட்டதும் இஸ்ரேல் சமூக ஊடகங்களில் மேலும் தீவிரமாக எதிர்வினைகள் வரத் தொடங்கின.

இரானிலும் ரைசியின் திடீர் மரணம் குறித்து சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமீபத்தில் இரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் ஏற்பட்டது. முதலாவதாக, சிரியாவில் உள்ள இரான் தூதரகம் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பதிலடியாக ஏப்ரல் 2024இல், இஸ்ரேலை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்கியது இரான்.

இந்த மோதல் சம்பவங்களுக்கு மத்தியில் ரைசியும் இரானின் வெளியுறவு அமைச்சரும் திடீரென மரணமடைந்தது இஸ்ரேல் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரைசியின் மரணத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று இஸ்ரேல் மறுத்துள்ளது.

செய்தி முகமை ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, பெயர் கூற விரும்பாத ஒரு இஸ்ரேலிய அதிகாரி, “ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குப் பின்னால் இஸ்ரேல் இல்லை.” என்று கூறியுள்ளார். எனினும் இஸ்ரேல் அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி கொல்லப்பட்டது தொடர்பாக இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் மற்றும் அமெரிக்காவின் பங்கு குறித்து எழும் கேள்விகள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

இரான் உதவி கேட்ட போது அமெரிக்கா என்ன செய்தது?

படக்குறிப்பு, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின்

இரானிய செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ கூற்றுப்படி, இந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு இரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளே காரணம் என்று இரான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஜரீப் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து முகமது ஜவாத் கூறியதாவது, ​​‘‘இதயத்தை உலுக்கும் இந்த சம்பவத்திற்கு அமெரிக்காவும் ஒரு காரணம்.

விமானப் போக்குவரத்துத் துறை இரானுக்கு எதையும் விற்கக் கூடாது என்று அமெரிக்கா தடை விதித்தது.

இந்த காரணத்திற்காக அதிபரும் அவரது தோழர்களும் உயிர் தியாகம் செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். அமெரிக்காவின் இந்த குற்றம் இரானிய மக்களின் நினைவிலும் சரித்திரத்திலும் பதிவாகியிருக்கும்.

இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான போது இரான் அமெரிக்காவிடம் உதவி கோரியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்கா உதவி செய்யவில்லை.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் திங்களன்று, “இரான் அரசாங்கம் எங்களிடம் உதவி கேட்டது.

இதுபோன்ற சூழ்நிலையில் எந்த வெளிநாட்டு அரசும் உதவி கேட்டாலும் நாங்கள் உதவ தயாராக உள்ளோம் என்று இரான் அரசிடம் தெரிவித்தோம். ஆனால் இறுதியில் தளவாட பிரச்னை காரணமாக (logistical reasons) எங்களால் உதவ முடியவில்லை.” என்றார்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினிடம் இந்த விவகாரத்தில் இரான் அமெரிக்காவை குற்றம் சாட்டக்கூடும் என்று கவலைப்படுகிறீர்களா? என்று கேள்வியெழுப்பட்டது.

“இந்த ஹெலிகாப்டர் விபத்தில் அமெரிக்காவுக்கு எந்த தொடர்பும் இல்லை” என்று அவர் பதிலளித்தார்.

அமெரிக்க செனட்டர் சக் ஷுமர் திங்களன்று, “அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளின் அதிகாரிகள் உடனான உரையாடல்களின் அடிப்படையில், இரான் அதிபர் மரணத்தில் சதி இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை” என்று கூறினார்.

இரான் அதிபர் மரணம் : அமெரிக்கா மீது குற்றம்சாட்டும் இரான் முன்னாள் வெளியுறவு அமைச்சர்


படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

`டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ என்னும் தளத்தில், ரைசியின் ஹெலிகாப்டர் விபத்திற்கும் இஸ்ரேலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஒரு அதிகாரி கூறிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி அறிக்கையின்படி, இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் அவிக்டோர் லிபர்மேன், “ரைசியின் மரணம் இஸ்ரேல் கொள்கைகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதது.

அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ரைசியின் மரண செய்தி எங்களுக்கு முக்கியமில்லை. இது இஸ்ரேலின் நிலைப்பாட்டை எந்த விதத்திலும் பாதிக்காது. இரானின் கொள்கைகளை உச்ச தலைவர் ஆயதுல்லா காமனெயி தீர்மானிக்கிறார்.

ரைசி ஒரு கொடூரமான மனிதர் என்பதில் சந்தேகமில்லை. அவரது மரணத்துக்கு கண்ணீர் வடிக்க மாட்டோம்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த செய்தி அறிக்கையில், பிரதமர் அலுவலக துணை அமைச்சர் அவி மாவோஸின் கருத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது, “ஒரு மாதத்திற்கு முன்பு ரைசி, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், பிழைக்க மாட்டீர்கள் என்று மிரட்டல் விடுத்தார்.

 

ஆனால் இப்போது அவரே உயிருடன் இல்லை.” என்று பேசியுள்ளார். டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தியில், இந்த கருத்துகளை மேற்கோள் காட்டி, ரைசியின் மரணத்தை இஸ்ரேலுக்கு ஒரு நல்ல செய்தி என்று விவரித்துள்ளனர்.

ரைசி மரணத்தை தொடர்ந்து, இஸ்ரேலிய நகரமான பேட் யாமில் உள்ள ஒரு மதத் தலைவர் தனது மாணவர்களிடம் வார நாட்களில் யூதர்கள் ஓதும் பிரார்த்தனையை தவிர்க்கச் சொல்லி இருக்கிறார். பொதுவாக இந்த பிரார்த்தனைகள் பண்டிகை சமயங்களில் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி அறிக்கையில், ரைசியின் மரணத்திற்குப் பிறகு கொண்டாட்டம், நடனம் போன்ற விஷயங்களும் சில இடங்களில் நடந்ததாக எழுதப்பட்டுள்ளது.

 

“தெஹ்ரானின் கசாப்புக் கடைக்காரர்”

இரான் அதிபர் மரணம் : அமெரிக்கா மீது குற்றம்சாட்டும் இரான் முன்னாள் வெளியுறவு
படக்குறிப்பு, இப்ராஹிம் ரைசி

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் எழுச்சி குறித்து `யாய் நெட்’ செய்தி இணையதளத்தில் கட்டுரையாக பகிரப்பட்டுள்ளது. அந்த கட்டுரைக்கு ‘தெஹ்ரானின் கசாப்புக் கடைக்காரர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு செய்தி இணையதளம், `இரானின் மிகவும் வெறுக்கப்பட்ட மனிதனின் மரணம்’ என்ற தலைப்பை வழங்கியுள்ளது.

ரைசியின் மரணத்துக்கு கண்டிப்பாக கண்ணீர் வராது என்று எழுதப்பட்டுள்ளது. இரான்-இராக் போரின் போது நடந்த படுகொலைகளால், அங்குள்ள மூத்த குடிமக்களின் மனதில் ரைசி குறித்து ஒருவித பயம் நிலவுகிறது.

ஹிஜாப் தொடர்பான கண்டிப்பு காரணமாக, பெண்கள் ரைசியை வெறுக்கிறார்கள் என்றும், இரானின் புரட்சிகர காவலர்களும் அவரிடமிருந்து தள்ளி இருந்ததாக அந்த செய்தி அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது.

இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு நீதித்துறையில் பணியாற்றத் தொடங்கிய ரைசி, பல நகரங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் நீதிபதியாகவும் ஆனார். ரைசி 1988 இல் உருவாக்கப்பட்ட உளவுத்துறை நீதிமன்றத்தில் சேர்ந்தார், அது ‘மரணக் குழு’ என்று பலரால் அழைக்கப்பட்டது.

ஏற்கனவே அரசியல் நடவடிக்கைகளுக்காக சிறை தண்டனை அனுபவித்து வந்த ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளிடம் இந்த நீதிமன்றங்கள் மீண்டும் விசாரணை செய்தன.

இந்த நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதிகளின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை, ஆனால் மனித உரிமை அமைப்புகள் அவர்களில் சுமார் 5,000 ஆண்களும் பெண்களும் அடங்குவர் என்று கூறுகின்றனர்.

தூக்கிலிடப்பட்ட பின்னர், அவர்கள் அனைவரும் வெளியுலகிற்கு தெரியாத பெரிய புதைகுழிகளில் புதைக்கப்பட்டனர். மனித உரிமை ஆர்வலர்கள் இந்த சம்பவத்தை மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்று கூறுகின்றனர்.

இந்த குற்றங்களில் தனக்கு பங்கில்லை என இப்ராஹிம் ரைசி மறுத்தார். ஆனால் அவர் ஒரு முறை இரானின் முன்னாள் உச்ச தலைவர் ஆயதுல்லா காமனெயி ஃபத்வாவின் படி, இந்த தண்டனை ‘பொருத்தமானது’ என்று கூறினார்.

ரைசியின் உடல் தெஹ்ரானுக்கு கொண்டு வரப்படும் போது, யாரும் ​​உண்மையாக கண்ணீர் சிந்தமாட்டார்கள் என்று `யாய் நெட்’ தெரிவிக்கிறது.

`ஜெருசலேம் போஸ்ட்’ செய்தி அறிக்கை ரைசியின் மரணம் குறித்து சமூக ஊடகங்களில் நடந்து வரும் பரபரப்பை பற்றி குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலின் சமூக ஊடகங்களில் என்ன நடக்கிறது?

இஸ்ரேலில் சில சமூக ஊடக கணக்குகளில் இருந்து ரைசியின் மரணம் குறித்த மீம்ஸ்கள் பகிரப்படுகின்றன. சிலர் ரைசியின் ஹெலிகாப்டரை `எலி காப்டர்’ என்ற மொசாட் ஏஜென்ட் ஓட்டிச் சென்றதாக கிண்டலாக பகிர்ந்துள்ளனர்.

எலி கோஹன் என்பவர் இஸ்ரேலின் உளவாளி. இஸ்லாமில் `கமில்’ (Kamil) நிலையை எட்டியதன் மூலம், கோஹன் சிரியா அதிபருடன் மிகவும் நெருக்கமாகி விட்டார், அவர் சிரியாவின் துணை பாதுகாப்பு அமைச்சராக ஆகும் நிலையில் இருந்தார்.

1967 அரபு-இஸ்ரேல் போரில் இஸ்ரேலின் வெற்றியில் கோஹன் சேகரித்த உளவுத்துறை தகவல் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வரும் `எலி காப்டர்’ என்ற பெயர் எலி கோஹனின் பெயருடன் இணைக்கப்பட்டு பேசப்படுகிறது.

இஸ்ரேலின் பிரெஞ்சு மொழி செய்தி சேனலின் (I-24) நிருபரான டேனியல் ஹைக், `எல்லி காப்டர்’ நகைச்சுவை பற்றி செய்தியாக வெளியிட்டார். இருப்பினும், மக்கள் இதை விமர்சித்ததால், சேனல் தரப்பு மன்னிப்பு கேட்டது.


படக்குறிப்பு, எலியாஹு பென் ஷால் கோஹன் அல்லது `எலி கோஹன்’

ரைசியின் மரணத்தை இஸ்ரேலிய தலைவர்கள் கொண்டாடினார்களா?

ரைசியின் மரணத்தை இஸ்ரேலிய தலைவர்கள் கொண்டாடியதாக துருக்கிய செய்தி நிறுவனம் அனடோலு (Anadolu) தெரிவித்துள்ளது . கலாசார அமைச்சர் அமிச்சாய் எலியாஹு ஒரு கோப்பையில் ஒயின் இருக்கும் படத்தை X தளத்தில் இல் வெளியிட்டு, `சியர்ஸ்’ என்று பகிர்ந்துள்ளார்.

அவர் மற்றொரு ட்வீட் பதிவில், “நேற்றிரவு வரை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மரணத்தை விரும்பிய இந்த பைத்தியக்காரர்களும், வலதுசாரி மக்களும், இரான் கொலையாளியின் மரணத்தை நாம் கொண்டாட வேண்டாம் என்று விரும்புகிறார்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

சில இஸ்ரேலிய தலைவர்களின் அறிக்கைகள் இந்த செய்தி அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அவர்கள் ரைசியின் மரணத்திற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டாம் என்றும், ரைசியின் பழைய அறிக்கைகளை மேற்கோள் காட்டியும் பதிவிட்டுள்ளனர்.

இப்ராஹிம் ரைசியின் மரணம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

Share.
Leave A Reply

Exit mobile version