விடுதலை புலிகளை வெற்றி கொண்ட தரப்பில் சரத் பொன்சேக்கா சிறந்த இராணுவத்தளபதியாக உலகம் முழுதும் அறியப்பட்ட ஒருவராக அப்போது விளங்கினார்.
இதை பாதுகாப்பு செயலாளராக விளங்கிய கோட்டாபய ராஜபக்சவும், யுத்தம் முடிவுற்ற பிறகு பல ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் டிபென்ஸ் ரிவியூ பத்திரிகையில் கேள்வி ஒன்றுக்கு கோட்டாபய பதில் அளிக்கையில் , “இலங்கை பாதுகாப்புப் படைகளின் தொழில்சார் தன்மை உலகம் முழுவதிலும் பரவலாகப் பாராட்டைப் பெற்றள்ளது.
இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் புலிகள் கைப்பற்றிக் கொண்டிருந்த பிரதேசங்களை மீட்பதில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா ஆற்றிய பங்களிப்பின் காரணமாக, இந்திய பாதுகாப்புச் செயலாளர் எம்.கே. நாராயணன், அவர் உலகிலேயே மிகச் சிறந்த இராணுவத் தளபதி எனக் கூறியிருக்கிறார்”.
“லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவின் அனுபவம், அறிவு, துணிவு மற்றும் வீரம் இல்லையாயின் இந்த வெற்றிகளை ஒருபோதும் அடைந்திருக்க முடியாது.
“போருக்கு எவ்வாறு முகம் கொடுப்பது எனப் பிரபாகரன் திகைத்துப் போகும் வகையிலான போர்த் தந்திரங்களை இராணுவத் தளபதி உபயோகித்தார்.
இவ்வாறு பொன்சேக்காவை புகழ்ந்த கோட்டாபய பின்பு தனது அண்ணன் மகிந்தவுடன் சேர்ந்து அவருக்கு எதிராக ஊழல் மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரை சிறைக்கு அனுப்பினார். அதற்குக் காரணங்கள் பல இருந்தன.
சரத் பொன்சேக்கா இராணுவத்தளபதியாக இருந்தவரை அவர் ஒரு கண்டிப்பான இராணுவ நிர்வாகியாகவும் நாட்டிற்காக சேவை செய்த ஒருவராகவும் அறியப்பட்டவர்.
ராஜபக்சகளுக்கு எதிரான அரசியல்வாதியாக அவர் மாறினாலும் கூட அவரது செயற்பாடுகள் சாதாரண உடையணிந்த ஒரு இராணுவ ஜெனரலைப் போன்றே இருப்பதை அவதானிக்கலாம்.
நல்லாட்சி காலத்தில் ரணில் மற்றும் மைத்ரியுடன் இணைந்து பயணித்த அவர் பின்பு சஜித்துடன் இணைந்தார். அங்கு தனக்கு உரிய கெளரவமும் மரியாதையும் கிடைக்கவில்லையென்பதை உணர்ந்து வார்த்தைகளால் கலகம் செய்ய ஆரம்பித்தார்.
இப்போது தான் மீண்டும் சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கப் போவதாக தனது வட்டாரங்கள் மூலம் அறிவித்திருக்கின்றார். இதுவும் ஒரு கலகமாகவே பார்க்கப்படுகின்றது.
அதற்குத் துணிவும் அவசியம். தற்போதைய ஜனாதிபதியாக விளங்கும் ரணில் விக்ரமசிங்கவே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக எங்கேயும் அறிவிக்கவில்லை. அதற்கு முன்பதாக சரத் பொன்சேக்கா சூசசமாக அதை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது நாட்டில் தேசிய மக்கள் சக்தியைத் தவிர ஏனைய அனைத்து தேசிய கட்சிகளும் பிளவுற்றிருக்கும் நிலையிலும் இன்னும் பிளவுபட போகும் அபாயத்திலும் இருக்கும் நிலையிலும் திடீரென ஜனாதிபதி வேட்பாளராகும் ஆசை சரத் பொன்சேக்காவுக்கு பிறந்துள்ளது. ஆனால் 2010 ஆம் ஆண்டு அவர் ராஜபக்சகளுக்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் நின்றது போன்ற சூழ்நிலை தற்போது இல்லை.
ஆனால் 2010 இல் மகிந்தவுக்கு எதிரான சகல கட்சிகளும் ஏன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் கூட சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவளித்தன. நான்காம் கட்ட ஈழப்போரில் வடக்கில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் இழப்புக்கு காரணகர்த்தாவாகவும் போர்க்குற்றச்சாட்டுகளையும் சுமந்து நின்ற சரத் பொன்சேக்காவுக்கு வடக்கு கிழக்கு மக்கள் வாக்களித்தனர்.
மகிந்தவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணமே அனைவரினது மனதிலும் இருந்ததே ஒழிய சரத் பொன்சேக்கா என்ற நபரை இந்த தரப்பினர் ஜனாதிபதியாக நினைத்துப்பார்க்கவேயில்லை.
ஒரு வகையில் பொன்சேக்கா தமிழ்த்தரப்பினரால் பலிகடாவாக்கப்பட்டார். போர்க்குற்றங்கள் தொடர்பில் ஏதாவதொரு தகவலை தேர்தல் பிரசாரங்களின் போது பரப்பினால் அது மகிந்தவுக்கும் கோட்டாவுக்கும் பாதமாக அமையலாம் என யாரோ தமிழத்தரப்பில் போட்டுக்கொடுத்திருக்கின்றார்கள்.
2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலின் இறுதி கட்ட பிரசாரங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு சரத் பொன்சேக்கா வழங்கிய நேர்காண லில் அவர் கூறிய சில சர்ச்சைக்குரிய விடயங்களே பின்பு அவருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையைப் பெற்றுக்கொடுத்தது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபயவின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அவர் அந்த நேர்காணலில் கூறிய கருத்துக்களால் நாட்டு மக்கள் மட்டுமின்றி சர்வதேசமும் அதிர்ச்சியடைந்தது.
இராணுவத் தளபதியாக இருந்த ஒருவர் யுத்த இரகசியங்களை வெளியிடுவது பொறுத்தமாகுமா என்ற கேள்வி எழுந்தது. யுத்த வெற்றியால் மகிழ்ந்திருந்த சிங்கள பெளத்த மக்களின் ஒரு பிரிவினருக்கு இவரது இந்த கருத்து வெறுப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது. அவர் அப்போதே ஜனாதிபதித் தேர்தலில் தோற்று விட்டார் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேக்கா சுயேச்சையாக நின்றாலும் அவருக்கு ஆதரவு கரம் கொடுக்க பாராளுமன்றில் சிலர் இருக்கின்றார்கள் என்பதை மறுக்க முடியாது.
ஆனால் அவர்கள் எந்தளவுக்கு நேர்மையானவர்களாகவும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்களாகவும் இருப்பர் என்பது கேள்விக்குறியே. இவர்கள் எங்ஙனம் சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் சென்று வாக்கு கேட்கப் போகின்றனர், இவர்களின் பிரசாரத்துக்கு மக்கள் எவ்வாறு செவிகொடுப்பர் என்பது கேள்விக்குறியே.
மேலும் எந்த அடிப்படையிலும் எந்த நம்பிக்கையிலும் இவருக்கு மக்கள் தமது ஆதரவை வழங்கப்போகின்றனர் என்பது முக்கிய கேள்வி.
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில
சிங்கள தேசியம் என்ற பெயரில் இனவாதம் கக்கி வரும் குழுவினரான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரை எவருமே கண்டு கொள்ளாத நிலையில் அவர்களே முன்வந்து சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவு வழங்கலாம். ஆனால் இனவாத பிரசாரத்தை இப்போது சிங்கள மக்களே வெறுக்கின்ற நிலையில் அவர்களின் பேச்சு எடுபடாது.
வடக்கு கிழக்கு தமிழ்க் கட்சிகள் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முயற்சிகளை எடுத்து வருகின்றன.
தமிழர் நலனுக்காக அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களையும் புறக்கணித்து தமது எதிர்ப்பை காட்டும் ஒரு விடயமாக இதை தமிழத் தேசியவாதிகள் முன்வைக்கின்றனர்.
ஆனால் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்து வரும் தமிழர்கள் இந்த பொது வேட்பாளருக்கு எப்படியும் வாக்களிக்கப்போவதில்லை. சிங்கள பெளத்தர் ஒருவரே ஜனாதிபதியாகப்போகின்றார்.
மீண்டும் அவரிடமே சென்று இந்த தமிழ்க்கட்சிகள் தமது பிரச்சினைகளை தீர்க்கும்படி கூறப்போகின்றன.
வடக்கு கிழக்கை தவிர்த்து மலையகப் பிரதேசங்களில் வாழ்ந்து வரும் மக்கள் தமது தொழிற்சங்கங்கள் கூறும் வேட்பாளரையே தெரிவு செய்வர். அவர்களின் பிரச்சினைகள் வேறு. மேலும் மலையக மக்களும் கட்சி தொழிற்சங்க ரீதியாக பிரிக்கப்பட்டிருப்பதால் அவர்களின் வாக்குகளும் இரண்டு வேட்பாளர்களுக்கே சென்றடையப்போகின்றன.
சரத் பொன்சேக்காவை வெற்றி பெற வைக்கும் வாக்காளர்கள் சிங்கள பெளத்த மக்களாவர். அவர்களும் இப்போது சஜித் மற்றும் அநுர ஆகிய இருதரப்பாக பிரிந்துள்ளனர் எனலாம் .இப்போதைய சூழலில் போர் வெற்றி கதைகள் எல்லாம் சிங்கள மக்கள் மத்தியில் எடுபடப் போவதில்லை. அதை கூறி ஜனாதிபதியான கோட்டாபயவே மக்களால் விரட்டியடிக்கப்பட்டார்.
எனவே எதைக் கூறி சரத் பொன்சேக்கா ஜனாதிபதித் தேர்தலில் இறங்கப்போகின்றார், அவருக்கு வாக்களிக்கப்போகும் தரப்பினர் யார், யாரை இலக்காகக் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்தார் என்பது இன்னும் வெளிப்படவில்லை.
ஜுன் மாத ஆரம்பத்தில் சரத் பொன்சேக்கா தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-தேசியன்-