இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் படிப்படியாகச் சூடு பிடித்து வருகின்றன. (சொல்ல முடியாது, திடீரென்று முதலில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவும் கூடும்)

ஜனாதிபதித் தேர்தல் நடந்தால், அதில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும், தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, ஜே.வி.பி. – தேசிய மக்கள் சக்தி என்பனவற்றின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் தயாராக இருக்கின்றனர்.

இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையில் மிகப்பெரிய வாக்குவங்கியை வைத்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறீலங்கா பொதுஜன பெரமுன (பொதுமக்கள் முன்னணி) நேரடியாகப் போட்டியிடவில்லை. ஆனால் அவர்களது ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கே கிடைக்கும் எனத் தெரிகிறது.

சில கணித விற்பன்னர்கள் சிங்கள மக்களின் சனத்தொகை நாட்டின் மொத்த சனத்தொகையில் சுமார் 75 சதவீதம் வரை இருப்பதால் (2012 இல் எடுத்த சனத்தொகை புள்ளி விபரத்தின்படி 74.9 வீதம்), அவர்களின் வாக்குகள் தேர்தலில் போட்டியிடும் மூன்று சிங்கள வேட்பாளர்களுக்கும் சமமாகப் பிரிந்து கிடைக்கும் என்றும், எனவே சனத்தொகையில் எஞ்சிய 25 வீதமாக இருக்கும் சிறுபான்மை இனங்களின் வாக்குகளை மேலதிகமாகப் பெறுபவர் ஜனாதிபதியாகத் தெரிவாகும் வாய்ப்பு உள்ளது எனவும் கூறி வருகின்றனர்.

முன்பும் இவ்வாறு சிறுபான்மை இனங்களின் வாக்குகள் கிடைத்தால் மட்டுமே இலங்கையில் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும் எனக் கூறியவர்களும் உண்டு.

அதில் ஓரளவு உண்மையும் உண்டு. உதாரணத்துக்கு, 2015 இல் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவானதிற்கு சிறுபான்மை இனங்களின் வாக்குகளும் கணிசமாக உதவின.

ஆனால், வேறு இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் சிறுபான்மை இனங்களின் வாக்குகள் சரத் பொன்சேகாவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் போடப்பட்டும் அவர்களால் வெற்றியீட்ட முடியவில்லை. அதேநேரத்தில், மகிந்த ராஜபக்சவும், கோத்தபாய ராஜபக்சவும் பெரும்பாலும் அதிகப்படியான சிங்கள வாக்குகளாலேயே ஜனாதிபதிகளாகத் தெரிவானார்கள்.

எனவே, ஜனாதிபதித் தேர்தலில் ஒருவர் வெற்றி பெறுவதற்கு நிலையான வாக்குச் சூத்திரம் எதுவும் கிடையாது.

வெற்றி பெறும் வேட்பாளரும் அவரது கட்சியும் செய்யும் பிரச்சாரங்களின் அடிப்படையிலும், மக்களின் அந்த நேரத்து மனநிலை அடிப்படையிலேயுமே அவர்களது வெற்றி அமைந்து வந்துள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது. ஆனாலும் நாட்டிலுள்ள அப்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப தேர்தலுக்குத் தேர்தல் நிலைமைகள் மாறலாம்.

இத்தகைய ஒரு சூழலில்தான், இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் சார்பாக பொது வேட்பாளர் ஒருவரைப் போட்டிக்கு நிறுத்த வேணடும் என்ற கோரிக்கை சில தமிழர் தரப்புகளிலிருந்து எழுந்துள்ளது. (இங்கு தமிழர்கள் என்று அவர்கள் கருதுவது வடக்கு கிழக்கில் வாழ்கின்ற இலங்கையின் பூர்வகுடித் தமிழர்களைத்தான்)

images விகிதாசாரத்தை எடுத்துக் கொண்டால் (2012 குடிசன மதிப்பீட்டின்படி) இலங்கைத் தமிழர்கள் 11.1 வீதம், முஸ்லீம்கள் 9.3 வீதம், மலையகத் தமிழர் (இந்திய வம்சாவழியினர்) 4.1 வீதம் என்ற நிலைமையே உள்ளது.

எனவே, தமிழ் தரப்பிலிருந்து ஒருபொது வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தினால், அவர் ஒருபோதும் வெற்றிபெற மாட்டார் என்பது சிறுபிள்ளைக்குக்கூட புரியும். அப்படியிருக்க, சில தமிழ்த் தரப்பினர் ஏன் இந்த யோசனையை முன்வைக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

இந்தக் கருத்தை முன்வைப்பவர்கள் இரண்டு காரணங்களைக் கூறுகிறார்கள். ஒன்று, தமிழர்களின் ஒற்றுமையை உலகத்திற்குக் காட்ட வேண்டும் என்பது. (இதுவரை தமிழர்களின் எத்தனையோ விடயங்களை உலகிற்குக் காட்டியாயிற்று!) இரண்டாவது, தமிழர்களின் வாக்குகளைப் பெற்று சிங்கள அரசியல்வாதிகள் ஜனாதிபதித் தேர்தலில் வெல்வதைத் தடுக்க வேண்டும் என்பது.

(ஆனால், இதற்கு முன்னர் தமிழர்கள் தமது வாக்குகளை யாராவது ஒரு சிங்கள வேட்பாளருக்கு அளித்து அவரை வெல்ல வைத்ததே வரலாறு. அத்துடன், தமிழர்கள் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிக்காவிடினும், கிடைக்கின்ற ஏனைய மக்களின் வாக்குகள் மூலம் யாரோ ஒருவர் வெற்றி பெற்று ஜனாதிபதியாக வரத்தான் போகிறார்)

இலங்கையின் தமிழ் தலைமைகள் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக காலத்துக்காலம் சில நிலைப்பாடுகளை முன்வைத்து வந்திருக்கிறார்கள்.

அதன்படி, முதலில் ஐம்பதுக்கு ஐம்பது, அடுத்தது, சமஸ்டி, பின்னர் தனிநாடு. இதில் தனிநாட்டுக்கான ஆயுதம் தாங்கிய போராட்டம் சுமார் 30 ஆண்டுகாலம் பலத்த பேரழிவுகளுடன் நடைபெற்று, இறுதியில் தோல்வியில் முடிந்தது.

அதன் பின்னர், தமிழ் தலைமை இப்பொழுது மீண்டும் ‘ஐக்கிய இலங்கைக்குள் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு சமஸ்டியே’ தமது தீர்வு என்று சொல்லி வருகிறது.

மறுபக்கத்தில், இனப் பிரச்சினைக்குத் தீர்வாக இலங்கை அரசாங்கங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வாக மூன்று தீர்;வுகள் இருந்தன.

அவை: 1957இல் செய்து கொள்ளப்பட்ட பண்டாரநாயக்க – செல்வநாயகம் உடன்படிக்கை, 1987 இல் செய்து கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கை, 2000ஆம் ஆண்டில் சந்திரிக அரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டம் என்பன.

இந்த தீர்வுத் திட்டங்களில் தமிழர் சம்பந்தப்பட்டிருந்தனர் அல்லது ஆதரித்திருந்தனர். இந்தத் திட்டங்கள் எல்லாமே ஐக்கிய இலங்கை என்ற கருதுகோளை அடிப்படையாகக் கொண்டிருந்ததுடன், அவற்றைத் தமிழர் தரப்பும் ஏற்றிருந்தன.

தமிழர் பிரச்சினைக்கு பிராந்திய ரீதியிலான அதிகாரப் பகிர்வே தீர்வு என்பதையே இந்த யதாத்தவாத நடைமுறைகள் நிரூபித்து நிற்கின்றன.

பொதுவாக எல்லாத் தமிழ் கட்சிகளினதும் நிலைப்பாடும் அன்றும் இதுதான். இடையில் தனிநாடு கோசம் எழுப்பப்பட்டதும், அதற்கான ஆயுதப் போராட்டம் நிகழ்ந்ததும் இலங்கைத் தமிழிர்களின் முழு வரலாற்றையும் எடுத்து நோக்குகையில் ஒரு தற்காலிக நிகழ்வே.

இன்றைய உலக ஒழுங்கில் தனிநாடு என்பது தமிழர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய அல்லது சாத்தியமாகக்கூடிய தீர்வு அல்ல என்பதே வரலாறு வழங்கிய படிப்பினை.

இத்தகைய ஒரு சூழ்நிலையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது அவர் இலங்கையர் என்ற வகையில் நியாயமானதும் சட்டரீதியானதும் ஆகும்என்பது உண்மையே.

இதற்கு முன்னரும் குமார் பொன்னம்பலம், எம்.கே.சிவாஜிலிங்கம் போன்றோர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருக்கின்றனர். ஆனால், அவர்களை பிரதான தமிழ் கட்சிகள் எதுவும் ஆதரிக்காததுடன், தமிழ் பொதுமக்களும் ஆதரித்திருக்கவில்லை. (இன்றும் அதுதான் நிலைமை)

முன்பு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தமிழர்களுக்கும் இப்பொழுது போட்டியிட எண்ணுபவர்களுக்கும் ஒரு வேறுபாடு இருக்கின்றது.

இப்பொழுது முனைபவர்கள் பொது வேட்பாளர் என்ற ரீதியில் தனிநபர்களாக இல்லாமல் இனத்துவ பிரதிநிதித்துவ அடிப்படையில் போட்டியிட எண்ணுகிறார்கள்.

இப்படிப் போட்டியிடுபவர்கள் வெற்றிபெற மாட்டார்கள் என்பது ஒருபுறமிருக்க, இந்த முயற்சி இன முரண்பாடுகளையும், இனங்களுக்களுக்கிடையே தப்பபிப்பிராயங்களையும் மேலும் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும்.

இவர்கள் இப்படித் தனியாக ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்துவது சம்பந்தமாக மக்கள் மத்தியில் சில ஐயப்பாடுகளும் உள்ளன. அவையாவன:

ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை இனங்களின் வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஒரு சூழலில் சிலர் தமிழர் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்த முற்படுவது, தமிழ் வாக்குகளைப் பிரித்து, ஒரு குறிப்பிட்ட ஒரு சிங்கள வேட்பாளரை வெற்றிபெற வைக்கும் தந்திரோபாயமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

 

மக்கள் இப்படிச் சந்தேகிப்பதற்குக் காரணம், 2005 ஜனாதிபதித் தேர்தலின் போது புலிகள் தேர்தலை தமிழ் மக்கள் பகிஸ்கரிக்க வைத்ததின் மூலம் அந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வெற்றிபெற வைத்தபடியால்தான். (புலிகளின் தந்திரோபாயம் வேறு நோக்கமாக இருந்தபோதிலும்)

தமிழ் கட்சிகளிடையே குழு வாதங்களால் எழுந்த ஐக்கியமின்மையே பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சி என்ற கருத்தும் தமிழ் மக்களிடையே உண்டு.

ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு கோரியவர்கள், அதை நீர்த்துப் போகும் வகையில் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது பிழையான தந்திரோபாயம் என்ற கருத்தும் மக்கள் மத்தியில் பரவலாக உண்டு.

வழக்கமாக பிரதான வேட்பாளர்களிடம் பணப்பெட்டி வாங்கிக்கொண்டு அவர்களை ஆதரிப்பவர்கள், இம்முறை அதற்கு வாய்ப்பு இல்லாதபடியால்தான் பொது வேட்பாளர் எனப் பூச்சாண்டி காட்டுகிறார்கள் என்றும், ஆனால் இறுதி நேரத்தில் பேரம் பேசி பெட்டி வாங்கிக் கொண்டு பொது வேட்பாளர் யோசனையைக் கைவிடுவார்கள் என்ற கருத்தும் மக்கள் மத்தியில் பரவலாக உண்டு.

இப்படியாக மக்கள் மத்தியில் பொது தமிழ் வேட்பாளர் பற்றிப் பல கருத்துக்கள் இருந்தாலும், பெரும்பாலான தமிழ் மக்கள் இந்த பொது வேட்பாளர் முயற்சி பற்றி அக்கறை செலுத்துபவர்களாக இல்லை.

இது ஒருபுறமிருக்க, சிறுபான்மை இனங்களைப் பொறுத்தவரையில், மலையகத்தின் பெரிய கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்கெனவே தமது ஆதரவை ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெரிவித்துவிட்டது.

இந்திய வம்சாவழித் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மனோ கணேசன் தலைமையிலான இன்னொரு கூட்டணியும் ஏற்கெனவே சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கின்றது.

வடக்கு கிழக்கில் உள்ள இரண்டாவது பெரிய தமிழ் கட்சியான ஈ.பி.டி.பி.யும் தனது ஆதரவை ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெரிவித்துவிட்டது.

முஸ்லீம் கட்சிகளைப் பொறுத்தவரை அவர்களது தெரிவு எப்பொழுதும் போல, ரணில் விக்கிரமசிங்க அல்லது சஜித் பிரேமதாசதான்.

இந்த நிலைமையில் இலங்கை சனத்தொகையில் 11.1 சத வீதத்தை மட்டும் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் ஒரு பிரிவினர் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தினால், அந்த வேட்பாளர் தனது மக்களின் 2 சத வீத வாக்குகளைத் தன்னும் பெறுவாரா என்பது சந்தேகமே.

இன்றைய சூழலில் தமிழ் அரசியல் சக்திகளுக்கு முன்னால் உள்ள ஒரு புத்திசாலித்தனமான வழி, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் தமிழ் மக்களின் பிரச்சினை சம்பந்தமாக சில கோரிக்கைகளை முன்வைத்து ஒரு திறந்த கலந்துரையாடலை நடத்தி, அந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்பவர்களை நிபந்தனையின் அடிப்படையில் ஆதரிப்பதுதான். அவர்கள் வெற்றி பின்னர் தமது நிலைப்பாட்டை மாற்றினால், அந்தக் கட்டத்தில் தமிழ் தலைமைகள் ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றித் தீர்மானிக்கலாம்.

இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை பொது வேட்பாளர் என்ற தவறான தந்திரோபாயம் கெடுத்துவிடும் என்பதால், அதை சம்பந்தப்பட்டவர்கள் கைவிடுவதே இன்றுள்ள சூழலில் தமிழ் மக்களின் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும்.

Share.
Leave A Reply

Exit mobile version