சென்னை,பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி அன்று அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

பெரம்பூரில் அவர் புதிதாக கட்டிவரும் வீடு அருகே வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அவரை வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடினர்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இந்த படுகொலை சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இந்த வழக்கில் ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட 11 பேர் கொலை நடந்த அன்று இரவேடு இரவாக கைது செய்யப்பட்டனர்.

11 பேரிடம் 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடைபெற்றது. அப்போது, போலீசார் பிடியில் இருந்து தப்பியோடிய கொலையாளி திருவேங்கடம் ‘என்கவுண்ட்டர்’ முறையில் போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது பதிலுக்கு தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் திருவேங்கடம் உயிரிழந்தார்.

மற்ற 10 கொலையாளிகளும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையே இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக பெண் வக்கீல் மலர்கொடி, இன்னொரு வக்கீல் ஹரிஹரன்,

கைதான அருளின் உறவினர் சதீஷ் ஆகிய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில், மலர்கொடி, ஹரிஹரன் ஆகியோரை காவலில் எடுத்து மீண்டும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

இந்த வழக்கில் தற்போது 13 பேர் சிறையில் இருக்கிறார்கள். போலீஸ் விசாரணையில் தோண்ட தோண்ட வரும் புதையலை போல அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், வட சென்னையை சேர்ந்த பா ஜனதா முன்னாள் நிர்வாகி அஞ்சலையும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

அவரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் மேலும் 10 ரவுடிகளுக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மிகப்பெரிய வழக்காக மாறியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் உடன் பல்வேறு விஷயங்களில் மோதலில் ஈடுபட்டு விரோதத்தை வளர்த்துக் கொண்டவர்கள் எல்லாம் தொடர்பில் இருந்துள்ளனர்.

அது தொடர்பாக 10 ரவுடிகளை தேடி வருகிறோம் என்றனர்.

இத்ற்கிடையே, நேற்று கைது செய்யப்பட்ட அஞ்சலையிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் வாக்குமூலங்களை அளித்துள்ளார்.

அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக வெளியாகி உள்ள தகவல்கள் வருமாறு:-

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் எனக்கு மிகவும் நெருக்கமானவர்.அவர் கொலை செய்யப்பட்டதும் நான் பலவீனம் ஆனேன்.

இந்த சூழ்நிலையில்தான் ஆற்காடு சுரேஷ் கொலையில் ஆம்ஸ்ட்ராங் பின்னால் இருந்து உதவி இருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் எனக்கு கிடைத்தது.

இதனால், பழிக்கு பழி வாங்க முடிவு செய்து நேரம் பார்த்து காத்திருந்தேன். அப்போதுதான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஏற்கனவே 4 ரவுடி கும்பல் கொலை வெறியுடன் களத்தில் இருப்பது தெரிந்தது.

இதனால், அந்த கும்பலை இணைப்பதில் என்னுடைய பங்கும் முக்கியமானதாக இருந்தது. ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி எப்போதும் அவரது கட்சியினர் இருப்பார்கள் என்பதால் அவரை கொலை செய்வதற்கு மிகவும் கவனமாக திட்டங்களை வகுத்து வந்தோம்.

ஆம்ஸ்ட்ராங்கை கொலைசெய்வதற்கு ஏற்கனவே 4 முறை குறி வைத்தோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் தப்பிவிட்டார்.

5-வது முறை வைக்கும் குறியில் அவர் தப்பக் கூடாது என தீவிரமாக திட்டம் வகுத்தோம். இதன்படி, ஆயுதங்களுடன் 4 ரவுடி கும்பலும் களத்தில் இறங்கினார்கள்.

எங்களுடைய சதித்திட்டமும் வெற்றி அடைந்தது. ஆம்ஸ்ட்ராங்கின் கதை முடிந்தது. இந்த வழக்கில் எனக்கு நேரடி தொடர்பு எதுவும் கிடையாது. ரவுடி கும்பலுக்கு பண உதவிகளையும், ஆலோசனைகள் மட்டும் வழங்கி வந்தேன்” என்று கூறியதாக தகவல்கல் வெளியாகியுள்ளது.”,

Share.
Leave A Reply

Exit mobile version