அது 1974 ம் ஆண்டு மார்ச் மாதம். சீனாவின் சாங்சி மாகாணத்தின் தலைநகர் ஷியானின் வடகிழக்கே ஒரு மணி நேரம் பேருந்தில் பயணித்து சென்றடையக்கூடிய கிராமம் அது.
மாதுளம் பழங்களும் சீமைப் பனிச்சை பழங்களும் விளையக்கூடிய அந்த வயலில் யாங் ஷிஃபா எனும் வேளாளர் அவரது ஐந்து சகோதரர்கள் மற்றும் அண்டை வீட்டில் குடியிருந்த வாங் பூசி ஆகியோருடன் இணைந்து கிணறு ஒன்றை வெட்டிக் கொண்டிருந்தார்.
மண்ணுக்குள் புதைந்திருந்த சுடுமண்ணால் ஆன ஓர் உருவத்தின் தலையுடன் அவர்களது மண்வாரி உரசியது.
அது புத்தரின் உருவம் என்று அவர்கள் தவறாக எண்ணினார்கள். அடுத்த சில மாதங்களில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களும் அரசு அதிகாரிகளும் அந்த இடத்தில் வந்து குவிந்தனர்.
அப்போது அந்த வேளாளர்கள் கண்டுபிடித்தது இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தொல்லியல் கண்டுபிடிப்புகளில் ஒன்று என்பது தெரியவந்தது.
பேரரசர் சின் ஷே ஹுவாங்
கிமு மூன்றாம் நூற்றாண்டில் ஒருங்கிணைந்த சீன நிலப்பரப்பை ஆட்சி செய்த பேரரசர் சின் ஷே ஹுவாங்-இன் படை வீரர்களின் ஆயிரக்கணக்கான சுடுமண் உருவங்கள் அந்த விளை நிலத்தின் அடியில் புதைந்து கிடந்தன.
சீனாவில் மா சே துங்கின் கலாசாரப் புரட்சி நடந்த காலத்தில், தொலைதூரப் பகுதியில் இந்தப் படை வீரர்களின் உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டது ஒருவேளை நல்லதாகக் கூட இருக்கலாம்.
ஏனென்றால், 1969ஆம் ஆண்டு மின் பேரரசின் மன்னர் வான்லி மற்றும் அவரது மனைவிகளான இரண்டு பேரரசிகள் ஆகியோரின் உடல்களை, மண்ணுக்கு அடியில் இருந்து தோண்டி எடுத்த செம்படை வீரர்கள் பொது வெளியில் வைத்து அவற்றை எரித்து விட்டனர். இந்த உருவங்களுக்கு அப்படி எதுவும் நிகழவில்லை.
சின் ஷே ஹுவாங்-இன் படை வீரர்களின் ஆயிரக்கணக்கான சுடுமண் உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டது சீனாவை மட்டுமல்லாது இந்த உலகையே வியப்பில் ஆழ்த்தியது.
பின்னர் படை வீரர்களின் சில உருவங்கள் செப்டம்பர் 2007-ல் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தை சென்றடைந்தன. அடுத்த ஆறு மாதங்களில் அவற்றைப் பார்க்க சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் வருகை தந்தனர்.
அதற்கு முன்பு 1972ல் எகிப்திய பாரோ மன்னர் டுட்டன்காமுனின் பொக்கிஷங்களை பார்ப்பதற்குத்தான் அங்கு இந்த அளவுக்கு பெரிய கூட்டம் வந்தது.
சீனப் பெருஞ்சுவர் கட்டுமானம் தொடக்கம்
உட்புறங்களில் செங்கல் கொண்டு உருவாக்கப்பட்ட குழிகளின் நடுவே நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்தப் படை வீரர்களின் உருவங்கள் மிகவும் சிறப்பம்சம் வாய்ந்தவை. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருந்தது.
ஆனால், மீசை உடைய இந்த முகங்கள் 10 அடிப்படை வடிவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தன.
சிவப்பு, நீலம், இளஞ்சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் வண்ணம் பூசப்பட்டிருந்த இந்த உருவங்கள் தற்போது வண்ணம் குறைந்து, மங்கிக் காணப்படுகின்றன.
காலமும் இயற்கை சீற்றங்களும் இவர்கள் கைவசம் இருந்த உண்மையான ஆயுதங்களை பிடுங்கிக் கொண்டன.
இப்படி பெரும் எண்ணிக்கையில் சுடுமண் உருவங்களும் ஆயுதங்களும் தயாரிக்கப்பட்டது ஆரம்பகாலத் திரள் உற்பத்திக்கு (mass production) எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
திறன் வாய்ந்த மன்னராக விளங்கிய சின் ஷே ஹுவாங்-இடம் இதற்கும் குறைவாக நாம் எதையும் எதிர்பார்க்க முடியாது.
கிமு 221ஆம் ஆண்டில் சீன நிலப்பரப்பை ஒருங்கிணைத்து அதை மிகப் பெரும் பேரரசாக மாற்றி நிர்வகித்தவர் சின் ஷே ஹுவாங்.
அவ்வளவு பெரிய நிலப்பரப்புக்கும் எழுத்து, பணம், அளவை என அனைத்தையும் ஒரே சீராக உருவாக்கியதுடன் நேரான சாலைகள் மற்றும் கால்வாய்கள் இவரது ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டன.
தனது பேரரசின் வடக்கு எல்லையைப் பாதுகாப்பதற்காக சீன பெருஞ்சுவரை கட்டவும் இவர் தொடங்கினார்.
சாகாவரம் வேண்டிய மன்னர் – காணாமல் போன அமைச்சர்
அதிக ஆசைகளை கொண்டிருந்த பேரரசர் சின் ஷே ஹுவாங் சாகாவரம் பெற்ற வாழ்வை வாழ விரும்பினார்.
அதற்கான மந்திர பாணத்தைத் தேடி தமது அமைச்சர் ஒருவரையும் வெளிநாட்டுக்கு அனுப்பினார். கடைசிவரை அமைச்சர் ஷு ஃபூ திரும்பவேயில்லை.
படக்குறிப்பு, அமைச்சர் ஷு ஃபூ-வின் கடல் பயணம்
இங்குலிகத்தை (mercury sulphide) உட்கொண்டு 10,000 ஆண்டுகள் வாழ்ந்த பழங்கால மன்னர்கள் மற்றும் துறவிகள் பற்றி கேள்விப்பட்டிருந்தார் மன்னர் சின் ஷே ஹுவாங்.
தேன் மற்றும் பாதரசம் கலந்த பழரசங்களை உட்கொண்டு வந்தார். 49வது வயதில் நிகழ்ந்த இவரது மரணம் பாதரசம் உண்டாக்கிய உடல் நலமின்மையால் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது.
அவரது மரணம் நிகழ்ந்த காலகட்டத்தில் அனைத்தையும் உருவாக்கி வைத்திருந்த பேரரசர் சின் ஷே, அவரது பாதாள கல்லறையை மட்டும் முழுமையாக உருவாக்காமல் வைத்திருந்தார்.
ஒரு வேளை சாகாவரம் கிடைக்காமல் காலம் முழுதும் பேரரசராக வாழ இயலவில்லை என்றால் இறப்புக்குப் பிறகும் ஆட்சி செய்வதற்கான ஏற்பாடாக மண்ணுக்கடியில் இந்த சாம்ராஜ்யத்தை அவர் உருவாக்கத் தொடங்கியிருந்தார்.
இந்தக் கல்லறைத் தோட்டம் ஒரு பழங்கால நகரத்தின் பரப்பளவுக்கு இருந்தது. இதன் மையத்தில் சுமார் 100 மீட்டர் உயரமுள்ள பிரமிடு உருவாக்கப்பட்டது.
தற்போது இந்த 100 மீட்டர் உயரத்தில் பாதி உயரம் மட்டுமே எஞ்சியுள்ளது. சீனப் பாரம்பரியத்தின்படி ஓர் அனுகூலமான, வளம் மிகுந்த நிலப்பரப்பின் மையமாக இந்தப் பிரமிடு விளங்கும்.
கல்லறையைத் திறந்தால் ஆபத்து
இந்த 8000 படைவீரர்களும் மன்னர் சின் ஷே ஹுவாங்கின் கல்லறைக்கு பின்பு அவரது ரகசியங்களை காப்பதற்காக காவல் நிற்கின்றனர். அந்த ரகசியங்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பாதுகாப்பாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஏனென்றால் பேரரசரின் கல்லறை தொடர்ந்து மூடப்பட்ட நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளது. அது இன்னும் திறக்கப்படவில்லை. உலகெங்கிலுமுள்ள தொல்லியல், அருங்காட்சியக வல்லுனர்களும் அந்த கல்லறையைத் திறப்பது ஒரு பேரழிவாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.
அந்தக் கல்லறை திறக்கப்பட்டு, உள்ளே காற்று புகுந்தால் அதற்கு சீர் செய்ய முடியாத அளவுக்கு சேதாரங்கள் உண்டாகும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
மண்ணுக்கடியில் இருக்கும் இந்த கல்லறைத் தோட்டத்தை தோண்டி எடுக்கும் முயற்சியின் போது சுடுமண் உருவங்கள் மீது பூசப்பட்டு இருந்த அரக்கு, காற்று பட்ட 15 நொடிகளில் உதிர்ந்து போனதே இதற்குக் காரணம்.
கி.மு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வரலாற்றாளர் சீமா ஷியானின் கூற்றுப்படி கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்டுள்ள மன்னரின் கல்லறையைச் சுற்றிலும் பாதரசம் அதிக அளவு ஊற்றப்பட்டுள்ளது.
அவ்வாறு பாதரசம் அதிகமாக இருக்குமானால் அந்த இடத்திற்கு நுழைவது மிகவும் ஆபத்தானதாக அமைந்துவிடும்.
சமீப ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆய்வுகளும் அந்த இடத்தில் இருக்கும் மண்ணில் மிகவும் அதிகமான அளவில் பாதரசம் இருப்பதை உறுதி செய்கின்றன.
அந்தக் காலகட்டத்தில் இவ்வளவு அதிகமான அளவில் திரவ உலோகமான பாதரசத்தை பேரரசரின் ஆலோசகர்கள் உருவாக்கியிருப்பார்களா என்பது இன்னும் ஓர் அனுமானத்துக்குரிய செய்தியாகவே உள்ளது.
கல்லறைக்கு சேதம் விளைவிக்க கூடாது என்பது மட்டுமல்லாமல் உயிர் ஆபத்தை தவிர்க்க வேண்டும் என்ற இன்னொரு நோக்கமும் அவரது கல்லறை இன்னும் திறக்கப்படாமல் இருப்பதற்கு காரணமாக உள்ளது.
கல்லறையின் நுழைவாயிலில் இருந்து பேரரசரின் உடல் இருக்கும் இடத்திற்கு செல்லும் பாதையில் இயந்திர அம்புகள் பொருத்தப்பட்டுள்ளதாக சீமா ஷியான் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அம்புகள் இற்றுப் போய்விட்டனவா அல்லது குரோமியம் பூசப்பட்ட நிலையில் இன்னும் நன்றாக இருக்கின்றனவா, மன்னரின் உடலை பார்ப்பதற்காக கல்லறையை திறந்து உள்ளே செல்லும் சாகசத்தை மேற்கொள்பவர்களை வந்து தாக்கக் கூடிய நிலையில் அவை இருக்கின்றனவா என்று எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.
எலும்புக் கூடுகளில் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனை
புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை சின் ஷே கல்லறை ரகசியங்கள் தொடர்ந்து அச்சுறுத்தும் மர்மமாகவே நீடிக்கும். அவரது கல்லறை அருகே 1970-களில் கண்டெடுக்கப்பட்ட படை வீரர்களின் உருவங்கள் மட்டுமல்லாது படைத் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் உருவங்கள், மெய்யான தோற்றத்தின் அளவுக்கு பெரிதான குதிரைகள் மற்றும் தேர்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளில் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் பேரரசரின் பணியாளர்கள் பெரும்பாலானோர் ஐரோப்பிய வம்சாவளியினர் என்பது தெரியவந்தது.
இதனால் பண்டைய கிரேக்கர்கள், மனிதர்கள் மற்றும் குதிரைகளின் மிகப்பெரிய உருவங்களை உருவாக்குவதற்கு பழங்கால சீனர்களுக்கு கற்றுக் கொடுத்தார்களா என்ற கேள்வியும் உள்ளது.
சின் ஷே ஹுவாங்-இன் இந்தக் கல்லறை தோட்டம் உருவாக்கப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்த இத்தகைய உருவங்கள் இன்றைய சீன நிலப்பரப்பில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
உலகையே வியப்பில் பெருமூச்சுவிட வைக்கும் அளவுக்கு இருக்கும் இந்த இடம் குறித்த விவரங்கள் இனியும் அதிகமாக வெளிவரும் என்று நாம் காத்திருக்கலாம்.
கண்டுபிடித்தவர்களின் கடைசி காலம்
அதெல்லாம் சரி இத்தகைய பிரும்மாண்டமான தொல்லியல் அதிசயத்தை கண்டறிந்தவர்கள் நிலை அதன் பின்பு என்ன ஆனது என்று தெரியுமா?
அந்த வேளாளர்கள் இதை கண்டுபிடித்ததன் மூலம் எதையும் அடையவில்லை. அதற்குப் பிறகு அவர்களுடைய வாழ்க்கை மிகவும் மோசமானது. சுற்றுலா நோக்கில் அவர்களிடமிருந்து அந்த நிலம் அரசால் பிடுங்கப்பட்டது.
இந்தப் தொல்லியல் சின்னங்களைக் கண்டறிந்தவர்கள் ஒருவரான வாங் பூசி வறுமை மற்றும் நோய் காரணமாக 1997ஆம் ஆண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் யாங் ஷிஃபாவின் சகோதரர்கள் யாங் வெங்ஹாய் மற்றும் யாங் யாங்ஷின் ஆகியோர் வேலையும் இல்லாமல் மருத்துவச் செலவுக்கும் பணம் இல்லாமல் அவர்களது ஐம்பதுகளின் தொடக்கத்தில் உயிரிழந்துவிட்டனர்.
இன்னொரு சகோதரரான யான் குவான்-னின் வீடு இடிக்கப்பட்டு விட்டது.
யான் குவானின் மனைவி லி ஷின்குய்ன் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் ஊடகத்திடம், தனது கணவர் கருதியதாக 2007ஆம் ஆண்டு இவ்வாறு தெரிவித்தார்.
“நானும் எனது சகோதரர்களும் ஏதோ ஒரு வகையில் துரதிர்ஷ்டத்தை கொண்டு வந்து விட்டோம். அந்த படைவீரர்களையும் கல்லறைத் தோட்டத்தையும் மண்ணுக்கடியில் அப்படியே விட்டு வைத்திருக்க வேண்டும்.”