இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்ததால் நிலைத்தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எம்.எஸ். அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி (36). இவர் தனியார் வங்கி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்தார்.

பரமக்குடியைச் சேர்ந்த இவரது நண்பரான பாண்டியை அழைத்துக் கொண்டு கடந்த ஜூலை 21-ஆம் தேதி காலை இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு புத்தாடைகள் வாங்க சென்றுள்ளார். அன்று பிற்பகல் ஆடைகளை வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

செல்போன் வெடித்து பறிபோன உயிர்

”மதுரையில் இருந்து பரமக்குடியை நோக்கி, கமுதக்குடி அருகே சென்று கொண்டு இருந்தபோது, ரஜினி பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்தது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரஜினியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்” என பரமக்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வண்டியில் அவர் பின்னால் அமர்ந்து பயணித்து வந்த பாண்டியின் தலையில் காயம் ஏற்பட்டது. பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்தில் உயிரிழந்த ரஜினி

வாங்கிய 10 மாதங்களில் வெடித்த செல்போன்

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ரஜினியின் சகோதரர் பி. பாலா,”எனது அண்ணன் 10 மாதங்களுக்கு முன்பாக 9,500 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கினார்.

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது செல்போன் வெடித்த அதிர்ச்சியில், சாலை தடுப்பில் மோதி உயிரிழந்தார். செல்போன் எப்படி வெடித்தது என்று தெரியவில்லை,” என்று கூறினார்.

சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்த முதியவர் ப்ளுடூத் ஹெட்போன் அணிந்து பாட்டு கேட்ட போது, ஹெட்போன் வெடித்ததில் அவர் காதில் பலத்த காயம் ஏற்பட்டது.

ஆனால் கால்சட்டை பையில் இருந்த செல்போன் திடீரென வெடித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கான காரணம் குறித்து வல்லுநர்கள் கூறுவது என்ன?

செல்போன் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த ரஜினியின் இரு சக்கர வாகனம்

செல்போன் வெடிக்கும் முன்பே அதனை கண்டறிய முடியுமா?

இது போன்ற நிகழ்வுகள் ஏன் நடக்கிறது என்ற கேள்வியை அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் மின்னணு மற்றும் கருவியல் துறையின் பேராசிரியர் ஜீ .சக்திவேலிடம் கேட்டது பிபிசி தமிழ்.

“சில நேரங்களில் பேட்டரிகள் அதிக வெப்பத்தால் வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன அல்லது செல்போன் கீழே விழுந்து பழுது ஏற்பட்டு, வெப்பமடைந்து வெடிக்க வாய்ப்புகள் உள்ளன.

பேட்டரியில் உள்ள வேதிப்பொருட்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு ஏற்பட்டாலும் செல்போன்கள் வெடிக்க வாய்ப்புகள் உள்ளன,” என்று சக்திவேல் குறிப்பிடுகிறார்.

செல்போன்களில் பெரும்பாலும் லித்தியம் அயன் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகிறது. நீண்ட நேரம் வெப்பமான சூழலில் இருக்கும் போது அவை வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் சக்திவேல்

எந்தெந்த காரணங்களால் செல்போன்கள் வெடிக்கின்றன?

செல்போன் வெடிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக தெரிவிக்கிறார் பேராசிரியர் ஜி. சக்திவேல்.

அளவுக்கு அதிகமான பயன்பாடு, நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துதல், செயல்திறன் குறைவு போன்றவை காரணமாகவும் செல்போன்கள் வெடிப்பதாக அவர் பட்டியலிடுகிறார்.

செல்போன் பேட்டரியில் உள்ள வேதிப்பொருட்கள் நாளடைவில் ஒன்றுடன் ஒன்று தொடர்பு ஏற்பட்டு, பேட்டரிகள் வீங்கி வெடிக்க வாய்ப்புகள் உள்ளன.

செல்போன்களை இரவு முழுவதும் சார்ஜ் போடுவதன் மூலமாக பேட்டரியின் செயல் திறன் குறைந்து வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

செல்போன்களில் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடுவதால் அதிக வெப்பமடையும். இதன் காரணமாக ப்ராசசரில் (processor) அதிக வெப்பம் உருவாகி வெடிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

செல்போன்களை அதிக வெப்ப நிலையில் பயன்படுத்துவதன் வழியாக பேட்டரிகள் வெப்பநிலை அதிகரித்து வெடிக்க வாய்ப்பு உள்ளது என்கிறார் அவர்.

 

பழுதான செல்போன்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்


செல்போன்களை இரவு முழுவதும் சார்ஜ் போடுவதன் மூலமாக பேட்டரியின் செயல் திறன் குறைந்து வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

செல்போன் பேட்டரி திறன் குறைந்ததை கண்டறிவது எப்படி?

செல்போன் பேட்டரி முழுவதும் சார்ஜ் செய்தாலும் குறுகிய நேரத்திற்குள் பேட்டரி உடனடியாக குறைவது ஒரு முக்கியமான அறிகுறியாகும் என்கிறார் சக்திவேல்.

செல்போனை சில நிமிடங்கள் பயன்படுத்தியதும் அதிலிருந்து அதீத அளவில் வெப்பம் வெளியேறுகிறதா என்பதை கவனிக்க வேண்டும் என்று எச்சரிக்கும் அவர், செல்போன் பேட்டரி அமைந்திருக்கக் கூடிய பகுதி வீங்கி (bulge) வெளியே தெரியும் பட்சத்தில் அந்த செல்போன் உபயோகத்தை மறுபரிசீலனை செய்யுமாறு எச்சரிக்கிறார்.

செல்போன் கீழே விழுந்த பின் பேட்டரி செயல்பாட்டில் மாற்றம் ஏற்படுவதன் வழியாகவும் பேட்டரி திறன் குறைந்து வருகிறது என்பதை அறியமுடியும் என்கிறார் அவர்.

செல்போன் வெடித்து ஏற்படும் விபத்துகளை தவிர்ப்பது எப்படி?


படக்குறிப்பு, செல்போன்களுக்கு அந்தந்த கம்பெனியின் சார்ஜர்களை பயன்படுத்த வேண்டும்.

செல்போன் வெடிப்பதை தடுப்பது எப்படி?

”செல்போன்களை இரவு முழுவதும் சார்ஜரில் வைப்பதை தவிர்க்க வேண்டும். இது பேட்டரியின் சக்தியை சிறிது சிறிதாக குறைக்கும். சூப்பர்சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யப்படும் செல்போன்களை ஒரு மணி நேரம் மட்டும் சார்ஜ் செய்தால் போதுமானது”

”குறைந்த விலையில் கிடைக்கும் சார்ஜர்களை பயன்படுத்துவதை தவிர்த்து அந்த குறிப்பிட்ட கம்பெனியின் சார்ஜர்களை பயன்படுத்த வேண்டும்.” என சக்திவேல் கூறுகிறார்.

-BBC TAMIL NEWS-

Share.
Leave A Reply

Exit mobile version