அறிமுகம்
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதி ஐந்தரை மணி – இரத்மலானை விமானப்படையின் அகதிமுகாமில் இருந்தபோது நான் நாற்குறிப்பொன்றை எழுத தீர்மானித்தேன்.
திங்கட்கிழமை 25ஆம் திகதி அதிகாலை முதல் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள எதிர்பாராத வன்முறை காரணமாக வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அதிர்ச்சியிலும் விரக்தியிலும் சிக்குண்டிருப்பதை பார்த்த பின்னரே, நான் நடந்த சம்பவங்களை நாற்குறிப்பில் பதிவு செய்ய தீர்மானித்தேன்.
பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்திருந்தனர், பலர் சிங்கள காட்டுமிராண்டிகளால் கொல்லப்பட்டனர். ஈவிரக்கமற்ற சிங்களவர்களிடம் பல இளம் பெண்கள் தங்களை இழந்திருந்தனர்.
சிங்கள பௌத்தர்கள் என தங்களை அழைத்துக்கொள்ளும் மக்கள் செய்யும் அட்டூழியங்களை நாகரிக உலகிற்கு என்றோ ஒருநாள் நானோ அல்லது வேறு யாரோ கொண்டுசெல்ல முடியும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இந்த நாட்குறிப்பை நான் ஆரம்பிக்கின்றேன்.
நான் திங்கட்கிழமை அதிகாலை முதல் இந்த அகதிமுகாமில் இருக்கின்றேன்.
அதன் பின்னர் இந்த முகாமில் இடம்பெற்ற விடயங்கள் குறித்தும் இரத்மலானை விமான நிலையத்தில் தஞ்சமடைவதற்கு முன்னர் எனது தனிப்பட்ட அனுபவங்கள் குறித்தும் நான் தெரிவிக்கப்போகின்றேன்.
இந்த முகாமில் உள்ள ஏனைய அகதிகளுடன் கதைத்து அவர்களின் அனுபவங்களை நான் பகிர்ந்துகொள்ளப்போகின்றேன்.
இதன் மூலம் உலகம் உண்மையான கதையை அறிந்துகொள்ளும்.
1983 ஜூலை 25 திங்கட்கிழமை 6.30
மஹரகமவில் உள்ள எனது வீட்டிலிருந்து நான் எனது அலுவலகத்திற்கு சென்றேன். பிரதான வீதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு நான் சென்றவேளை பலர் வீதியில் குழுமியிருந்ததை அவதானித்தேன். அந்த வீதியின் இருமருங்கிலும் இருந்த வீதிகள் எரிந்துகொண்டிருந்தன.
நான் நின்றிருந்த இடத்திலிருந்து சிறிது தொலைவில் சுமார் 30 பேர் நபர் ஒருவரை தாக்கிக்கொண்டிருந்தனர்.
இவை ஓர் இனப்படுகொலையின் ஆரம்ப தருணங்கள் என நான் அப்போது எண்ணிப் பார்க்கவில்லை.
அந்த வன்முறையில் ஈடுபடாமலிருந்த ஒருவரை அழைத்து என்ன நடக்கின்றது என நான் கேட்டேன். அவரின் பதில் என்னை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“அவர்கள் எங்களில் 13 பேரை யாழ்ப்பாணத்தில் கொலை செய்துவிட்டார்கள். அவர்களின் மரணத்திற்கு நாங்கள் பழிவாங்கவேண்டும், அனைத்து தமிழர்களையும் நாங்கள் கொல்லவேண்டும், அதனையே நாங்கள் செய்கின்றோம்” என அவர் தெரிவித்தார்.
நானும் ஒரு தமிழன் என தெரிந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்து பார்த்த நான் உடனடியாக அங்கிருந்து சென்றேன்.
ஆனால் அந்த தருணத்தில் கூட நான் இது பெரும் கலவரமொன்றின் ஆரம்பம் என நான் கருதவில்லை. அலுவலகத்துக்கு செல்ல தீர்மானித்தேன்.
பேருந்து கிடைப்பது மிகவும் கஸ்டமான விடயமாக காணப்பட்டது. கஸ்டப்பட்டு பேருந்தில் ஏறினேன். வீதிகளில் மக்கள் பெருமளவில் நின்றதால் பேருந்து மெதுவாகவே சென்றது.
வீதியின் இரு மருங்கிலும் கடைகள் எரிவதை நான் பார்த்தேன். மக்கள் அலறிக்கொண்டிருந்தார்கள். நுகேகொட சந்தியை நெருங்கியதும் பஸ் நகர முடியாமல் நின்றுவிட்டது.
காடையர்கள் பேருந்துகளை நிறுத்தி அதில் யார் பயணிக்கின்றார்கள் என கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் கைகளில் கத்திகளும் கோடாரியும் இருந்ததை பார்த்தேன் (அவர்களிடம் பெருமளவு ஆயுதங்கள் இருந்ததை அவதானிக்க முடிந்தது).
மற்றைய பக்கத்தில் இரண்டு கார்களை அடித்து நொருக்கிக்கொண்டிருந்தார்கள். டொயோட்டோ ரக வான் ஒன்று தீப்பிடித்ததை பார்க்க முடிந்தது.
திடீரென இரத்தத்தை உறைய வைக்கும் அலறல் சத்தமொன்று கேட்டது. அந்த வானிற்குள் ஆட்கள் இருக்கின்றார்கள் என நான் உணர்ந்தேன்.
அந்த பயங்கரமான காட்சியை பார்க்க முடியாமல் நான் தலையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டேன்.
அதற்கு சிறிது நேரத்தின் பின்னர் காடையர்கள் எங்கள் பேருந்தை நோக்கி ஓடிவந்தார்கள். பேருந்தில் யாராவது தமிழர்கள் இருக்கின்றார்களா என ஒருவன் நடத்துநரிடம் கேட்டான். நடத்துநர் மிகவும் மகிழ்ச்சியுடன் எனக்கு முன்னால் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த பெண்ணை காட்டினார்.
அவர்கள் தன்னை நோக்கி வருவதை பார்த்த அவர், தனது குங்குமத்தை அவசர அவசரமாக அழித்தார். ஒரு பெரிய தாடிவைத்த காடையன் ஒருவன் உடைந்த போத்தலை எடுத்து வயிற்றில் குத்தினான். அந்த பெண் கதற ஆரம்பித்தார். பேருந்தில் பெரும் குழப்பம் உருவானது…..
பேருந்தில் இருந்தவர்கள் இறங்க தொடங்கினார்கள். நான் இறங்குவதறகு முன்னர் அவசரஅவசரமாக என்ன நடக்கின்றது என பார்த்தேன்,அவர்கள் சிறிய ஜன்னல் ஊடாக அந்த பெண்ணை இழுத்துக்கொண்டிருந்தார்கள்.
நான் பேருந்திலிருந்து இறங்கிஅங்கு நடப்பவற்றை பார்த்து சந்தோசப்பட்டுக்கொண்டிருந்த சிங்களவர்களுடன் சேர்ந்துகொண்டேன். அந்த பெண்ணிண் உடல் முழுவதும் இரத்தம்,ஒருவர் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீமூட்டினார்.ஏனையவர்கள் கைதட்டி நடனமாடினார்கள்.
நான் அதனை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டுநின்றேன். எனது உடல் நடுங்கியது.
எனது வாழ்நாள் முழுவதும் நான் மரணித்தவர்களின் உடல்கள் தீ மூட்டப்படுவதையே பார்த்திருக்கின்றேன், உயிருடன்உள்ள ஒருவர் தீமூட்டப்படுவதை நான் பார்த்ததில்லை.
தமிழில் – ரஜீபன்
–
(தொடரும்)