தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிறிய விவசாய கிராமமான துளசேந்திரபுரத்துக்கும் அமெரிக்க அரசியலுக்கும் உணர்வுப்பூர்வமான பிணைப்பு உள்ளது.

அமெரிக்க துணை அதிபரும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பும் உள்ள கமலா ஹாரிஸின் தாய்வழி தாத்தாவின் சொந்த ஊர் துளசேந்திரபுரம்.

கமலா ஹாரிஸ் இதுவரை இந்த கிராமத்துக்கு வந்ததில்லை, இந்த கிராமத்தில் அவருக்கு பூர்வீக சொத்துகள் இல்லை, உறவினர்கள் யாரும் வசிக்கவில்லை.

எனினும் துளசேந்திரபுரம் கிராமத்து மக்கள் கமலா ஹாரிஸை தங்கள் வீட்டுப் பெண்ணாகவே பார்க்கின்றனர்.


தமிழ்நாட்டில் கமலா ஹாரிஸின் பூர்வீக ஊர்

குல தெய்வக் கோயிலில் சிறப்பு பூஜை

அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்று ஊருக்கு நடுவே இருக்கும் தர்ம சாஸ்தா கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

“அமெரிக்காவுக்கு சென்று வருவதே சாத்தியமா என்று பலரும் எண்ணி பார்க்கையில், அந்த வல்லரசு நாட்டின் துணை அதிபராக இருந்து தற்போது அதிபர் பொறுப்பையும் பெறுவதற்கு கமலா ஹாரிஸுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அவர் வழக்கறிஞராக இருந்தது, இளைஞர்களுக்கு செய்த நலத் திட்டங்களை இவற்றை எல்லாம் அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். அவரது பெயரில் கோயில் அர்ச்சனை செய்துள்ளோம், பால் அபிஷேகம், மஞ்சள் அபிஷேகம் செய்துள்ளோம்” என்று சுதாகர் என்பவர் கூறினார்.

பிபிசி தமிழ் துளசேந்திரபுரத்துக்கு சென்ற போது, தர்ம சாஸ்தா கோயிலில் ஊர் மக்கள் சிலர் கமலா ஹாரிஸ் வெற்றி பெற பூஜைகள் நடத்தி, இனிப்புகள் வழங்கி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.


100 ஆண்டு பந்தம் கொண்ட துளசேந்திரபுரம்

கமலா ஹாரிஸ் குழந்தையாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம். கமலாவுடன் அவரது தங்கை மற்றும் தாய் ஷியாமளா.

கமலா ஹாரிஸின் தாத்தா பி.வி. கோபாலன் – ராஜம் கோபாலன் தம்பதியர் துளசேந்திரபுரத்தில் வாழ்ந்துள்ளனர்.

இவரது இரண்டாவது மகளான சியாமளாவுக்கும், ஜமைக்கா நாட்டை சேர்ந்தவருக்கும் பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ். இவர் வழக்கறிஞராக பணியாற்றினார்.

அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கலிபோர்னியாவின் முதல் பெண் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். அரசியலில் வளர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில், துணை அதிபராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

85 ஆண்டுகளுக்கு முன் அந்த கிராமத்தில் கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன் பிறந்துள்ளார்.

பி.வி.கோபாலன் இந்திய அரசுப் பணியில் இருந்துள்ளார். ஜாம்பியா நாடு விடுதலைப் பெற்ற போது, அங்குள்ள அகதிகளுக்கு நிர்வாக உதவிகள் வழங்க அங்கு பணியமர்த்தப்பட்டார். 1960களில் ஜாம்பியாவில் பதவியேற்ற முதல் ஜனாதிபதியின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.

அப்போது அவர் குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்தார். டெல்லி லேடி இர்வின் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற ஷியாமளா கோபாலன், தனது 19 வயதில் அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் படிக்கச் சென்றார்.

ஜோ பைடன் விலகியதையும், கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதையும் கிராம மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

கமலா ஹாரிஸ் பெயரில் வழங்கப்பட்ட கோயில் நன்கொடை
59 வயதான கமலா ஹாரிஸின் பெரிய பேனர் துளசேந்திரபுரத்தின் மையப்பகுதியை பெருமையுடன் அலங்கரிக்கிறது.

அங்குள்ள கிராமத்துக் கோயிலில், கமலா ஹாரிஸ் மற்றும் அவரது தாத்தாவின் பெயர்கள் நன்கொடையாளர்களின் பட்டியலில் உள்ளன. கமலா ஹாரிஸ் சார்பாக அவரது சித்தி சரளா கோபாலன் நன்கொடை வழங்கியதாக தர்ம சாஸ்தா கோயிலில் அர்ச்சகர் நடராஜன் தெரிவித்தார்.

“ கமலாவின் சித்தி சரளா இந்த கோயிலுக்கு அடிக்கடி வந்து வழிபடுவார், இது அவர்களின் குல தெய்வக் கோயிலாகும். கடைசியாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இந்த கோயிலுக்கு வந்திருந்தார். 2014ம் ஆண்டு நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகத்தின் போது கமலா ஹாரிஸ் பெயரில் ரூ.5000 நன்கொடையாக வழங்கினார்” என்றார்.

2020ம் ஆண்டு கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது துளசேந்திரபுரம் கிராமமே களை கட்டியது.

அவரை வாழ்த்தி ஊரெங்கும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன, பேனர்கள் வைக்கப்பட்டன, போஸ்டர்கள் அடிக்கப்பட்டன, அவரது படம் கொண்ட காலண்டர்கள் வீட்டு வாசலில் தொங்கவிடப்பட்டன. கோயிலில் நூற்றுக்கணக்கானோருக்கு அன்னதானமிடப்பட்டது.

அதேபோன்ற கொண்டாட்டத்துக்கு காத்திருப்பதாக துளசேந்திரபுரம் கவுன்சிலர் அருள்மொழி தெரிவிக்கிறார்.

“துளசேந்திரபுரத்தில் கமலா ஹாரிஸ் ஒரே ஒருவர் வீட்டுப்பெண் அல்ல, எங்கள் எல்லார் வீட்டுப் பெண்ணும் கூட. அவர் அதிபர் தேர்தல் போட்டியிடக் கூடும் என்பது, ஒரு வார்டு கவுன்சிலராக, எனக்கு மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கக் கூடியதாகும்” என்றார்.

“இங்கு குழந்தைகள் உட்பட எல்லோருக்கும் அவரை தெரியும், ‘ என் சகோதரி, என் அம்மா’ – என்று தான் அழைக்கிறார்கள் அவரை” என்கிறார் அருள்மொழி.

“அவர் தனது வேர்களை மறக்கவில்லை என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார் அவர்.

துளசேந்திரபுரம் கவுன்சிலர் அருள்மொழி சுதாகர்

துளசேந்திரபுரத்தில் ஐந்தாவது தலைமுறையாக தனது பூர்வீக இல்லத்தில் வசித்து வரும், ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, “ ஒரு காலத்தில் இந்தியர்கள் வெளிநாட்டினரால் ஆளப்பட்டார்கள், இப்போது இந்தியர்கள் சக்தி வாய்ந்த நாடுகளை வழிநடத்துகிறார்கள்.” என்று பெருமையுடன் கூறினார்.

“கமலா ஹாரிஸ் சென்றடைந்திருக்கும் உயரம் எளிதானது அல்ல. அவர் வெற்றி பெற்றால் இந்தியாவுடனான நல்லுறவை பேண வேண்டும்” என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

“என் அம்மா ஷியாமளா 19 வயதில் இந்தியாவில் இருந்து தனியாக அமெரிக்காவுக்கு வந்தார். அவர் ஒரு விஞ்ஞானி, ஒரு சிவில் உரிமை ஆர்வலர் மற்றும் தனது இரண்டு மகள்களுக்கு முன் உதாரணத்தை ஏற்படுத்திய ஒரு தாய்” என்று கமலா ஹாரிஸ் கடந்த ஆண்டு தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

தாய் இறந்த பிறகு தனது சகோதரி மாயாவுடன் சென்னை வந்த கமலா ஹாரிஸ், அவரது அஸ்தியை இந்து முறைப்படி கடலில் கரைத்ததாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டது.


ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் கிருஷ்ணமூர்த்தி

“கமலா ஹாரிஸ் சில காலமாக ஒரு முக்கிய நபராக வலம் வருகிறார். ஆனால் இதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

இப்படி ஒன்று நடப்பதற்கான சாத்தியங்கள் எப்போதுமே இருந்தன” என்று டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியரும், கமலா ஹாரிஸ் தாயின் வகுப்புத் தோழருமான ஆர்.ராஜாராமன் கூறினார்.

பேராசிரியர் ராஜாராமன் கூறுகையில், சியாமளாவுடனான தொடர்பை இழந்துவிட்டதாகவும், ஆனால் 1970 களின் நடுப்பகுதியில் அமெரிக்கா சென்று ஷியாமளாவை மீண்டும் சந்தித்ததாகவும் கூறுகிறார்.

“கமலாவின் தாயிடம் நேர்மறை எண்ணம் இருந்தது, அது கமலாவிடமும் உள்ளது” என்றார்.

கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று துளசேந்திரபுரம் கிராம மக்கள் மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அவர்கள் அமெரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், கமலா ஹாரிஸின் பயணத்துடன் இணைந்திருப்பதாக உணர்கிறார்கள்.

என்றாவது ஒரு நாள் கமலா ஹாரிஸ் தங்களை சந்திக்க வருவார் அல்லது அவரது உரையில் துளசேந்திரபுரம் குறிப்பிடப்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

-BBC TAMIL NEWS-

Share.
Leave A Reply

Exit mobile version