வீதியின் மறுபக்கத்திலிருந்து பௌத்த மதகுருமார் பேரணியாக அந்த சந்தியை நோக்கி வந்துகொண்டிருந்தனர்.

அவர்கள் கைககளை அசைத்து சத்தமிட்டனர்,அவர்களில் ஒருவர் அனைத்து தமிழர்களையும் கொலை செய்யவேண்டும் ஒருவரை கூட தப்பவிடக்கூடாது என காடையர்களை நோக்கி கூச்சலிட்டார்.

நான் கடும் அச்சத்தின் பிடியில் சிக்குண்டேன்-சில நிமிடம் சிந்தித்த பின்னர் விரைவில் வீட்டுக்கு செல்வதே சிறந்த விடயம் என தீர்மானித்தேன்.

பேருந்து மூலம் பயணி;ப்பது மிகவும் ஆபத்தான விடயம் என்பதால் நான் நடந்தே வீட்டிற்கு செல்ல தீர்மானித்தேன்.

9.30 -நுகேகொட சந்தியிலிருந்து நான்கு கிலோமீற்றர் தொலைவிலிருந்த எனது வீட்டை நோக்கி நான் நடக்கதொடங்கினேன்- வீதியின் இரு மருங்கிலும் இருந்த கடைகளை மக்கள் சூறையாடிக்கொண்டிருந்தார்கள்.கடைகளை முழுமையாக கொள்ளையடித்த பிறகு அவற்றை தீயிட்டு கொழுத்தினார்கள்.

தொலைவில் இராணுவத்தினரின் ஜீப்பினை பார்த்தேன்.ஒருவித நிம்மதியுடன் நான் அதனை நோக்கி நடந்தேன், ஆனால் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது,

ஜீப்பின் மேற்பகுதியில் ஆறு ஏழு இராணுவத்தினர் அமர்ந்திருந்தார்கள் அவர்கள் காடையர் கும்பல் சூறையாடுவதற்கான கொள்ளையடிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கிக்கொண்டிருந்தார்கள்,நான் திகைத்துப்போனேன்.

10.45- நான் மஹரகமவில் உள்ள எனது வீட்டை சென்றடைந்தேன்.அங்கு இன்னமும் எதுவும் நடக்கவில்லை.

நான் வீட்டிற்குள் சென்றதும் பிரார்த்தனையில் ஈடுபட்டேன்.அதன் பின்னர் மண்வெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்புறம் சென்று நிலத்தை ஆழமாக தோன்றி அதற்குள் பெறுமதியான பொருட்களை துணி பொலித்தீனால் மூடி புதைத்தேன்.

11.30- எனது வீட்டிற்கு வெளியே பெரும் சத்தங்கள் கேட்டன,கூச்சல் குழப்பமான நிலை காணப்பட்டது.ஜன்னலால் எட்டிப்பார்த்தேன்.

அரசாங்கத்திற்கு சொந்தமான பல ஜீப்கள்,இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பல பேருந்துகள் திடீரென அந்த பகுதிக்கு வந்தன.

அந்த பேருந்துகள் ஜீப்புகளில் இருந்து பலர் கத்திகள் வாள்களுடன் இறங்கினார்கள்.சுமார் 200 பேர் இருப்பார்கள் அவர்கள் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட விதத்தில் தமிழ் மக்களின் வீடுகளை நோக்கி ஒடினார்கள்.

அவர்களின் தலைவர்கள் போன்று தோற்றமளித்த ஒரு பத்துபேரின் கரங்களில் பேப்பர் போன்ற ஆவணங்கள் காணப்பட்டன,( அவை தேர்தல் வாக்காளர் பதிவேடுகள் என பின்னர்தான் தெரியவந்தது)அவர்கள் தமிழர்களின் வீடுகளை நோக்கி காடையர்களை வழிநடத்திக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் இருவரை என்னால் அடையாளம் காணமுடிந்தது,ஆளும் கட்சியின் தேர்தல் கூட்டங்களில் நான் அவர்களை சமீபத்தில் பார்த்திருக்கின்றேன்( ஐக்கிய தேசிய கட்சி)

எனது வீட்டிற்கு நேரே தமிழர்களின் வீடுகள் இருந்தன,காடையர்கள் ஜன்னல்களை உடைத்து பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள்.அந்த வீடுகள் தீப்பிடித்தன,தீ வானளவிற்கு உயர்ந்தது.உள்ளேயிருந்தவர்கள் அலறினார்கள்.

11.45- நான் ஜன்னலை மூடிவிட்டு உள்ளே சென்றேன் – மெழுகுதிரியை கொழுத்தி அந்தோனியரை வணங்கினேன் தமிழர்களை பாதுகாக்குமாறு மன்றாடினேன்.

12.25 நான் வானொலியி;ல் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் செய்தியை செவிமடுக்க ஆரம்பித்தேன்.பாதுகாப்பு அமைச்சின் ஊரடங்கு உத்தரவு குறித்து அறிவிப்பு வெளியானது.

1.30 மணி நான் தொடர்ந்தும் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவேளை வெளியே பெரும் அலறல்கள் சத்தங்கள் கேட்டன.

பலர் இரண்டு யுவதிகளை கூந்தலில் பிடித்து இழுத்து வந்துகொண்டிருந்தனர். எனது வீட்டிலிருந்து சற்று தொலைவில் வசித்தவர்கள் என நான் அடையாளம் கண்டுகொண்டேன்.’

மூத்த சகோதரிக்கு 18 வயதிருக்கும் இளைய சகோதரிக்கு 11 வயதிருக்கும். அவர்களை எனது வீட்டிற்கு அருகில் கொண்டுவந்தார்கள்,காடையர்கள் கும்பல் அவர்களை சூழ்ந்துகொண்டது.அவர்களை என்ன செய்யலாம் என அவர்கள் விவாதித்தார்கள்.

திடீரென ஒருவன் அந்த சிறுமியை தனது கையில்பிடித்து இழுத்து தனது கையிலிருந்த கத்தியால் வெட்ட தொடங்கினான்.நான் மிகுந்த அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

மூத்த சகோதரி அச்சத்தினால் பேச்சு இழந்து ஒரு சிலையை போல காணப்பட்டாள்.

அதன் பின்னர் அவள் அந்த காடையர்களின் பைத்தியக்காரத்தனமான சிரிப்பிற்கு மத்தியில் அவர்களின் காலில் விழுந்து தனது சகோதரியை எதுவும் செய்யவேண்டாம் என மன்றாடினாள்.

பின்னர் அங்கிருந்த ஒருவன் கோடாரியை எடுத்து சிறுமியின் தலைiயை கொத்தினான்.மூத்தவள் திகைத்துபோய் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளுடைய தங்கை கொல்லப்பட்ட கொடுரமாக கொல்லப்பட்டவேளை அவள் அனுபவித்த அளவிடமுடியாத அச்சம் பயங்கரம் ஆகியவற்றின் கலவையான உணர்வுகள் உதவியற்ற அமைதியற்ற தன்மையின் தெளிவற்ற உணர்வுகளாக மாற்றம்பெற்றன.

by Thornton, E.M. & Niththyananthan, R.
தமிழில் – ரஜீபன்
-வீரகேசரி-

அகதிமுகாமில் எழுதப்பட்ட திகில் கதை? : 1983 ஜூலை கலவரத்தை நேரில் பார்த்தவரின் மனதை கலங்கவைக்கும் நாட்குறிப்பு-1

Share.
Leave A Reply

Exit mobile version