ஹேக் நகரில் செயற்படும் 17நீதியரசர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றம் 2024 ஜுலை 15 வெள்ளிக்கிழமை அன்று வரலாற்று முக்கியத்துவம் மிக்கதொரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

“பலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளிலிருந்து அதுவெளியேற வேண்டும்.

அந்தப் பகுதிகளில் இஸ்ரேல் நிறுவியுள்ள குடியிருப்புக்கள் சர்வதேச சட்டங்களை மீறுபவையாக உள்ளன. புதிய குடியிருப்புக்களை நிறுவும் முயற்சிகளைக் கைவிட வேண்டும். பலஸ்தீன பூமியில் இருந்து குடியேற்றவாசிகளை வெளியேற்ற வேண்டும்” ஆகிய விடயங்கள் தான் அந்த தீர்ப்பின் சாராம்சம்.

“ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பூமியில் இஸ்ரேல் கடைப்பிடிக்கும் கொள்கைகள் அபகரிப்புக்குச் சமனானவை.

பலஸ்தீன பூமியின் மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு சட்ட விரோதமானது. அதுமுடியுமான வரைக்கும் விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இந்நிலப்பரப்பின் மீதான இறையான்மை இஸ்ரேலுக்கு கிடையாது.

நிலப்பரப்புக்களை பலவந்தமாக கபளீகரம் செய்து கொண்டு இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறிவருகின்றது. பலஸ்தீனத்தின் சுயாட்சியையும் அதுதாமதித்து வருகின்றது” என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1967ஜுனில் இடம்பெற்ற ஆக்கிரமிப்பு யுத்தத்தில் இஸ்ரேல் பலஸ்தீனத்தின் மேற்குக்கரை, காஸா பிரதேசம் மற்றும் கிழக்கு ஜெரூஸலப் பிரதேசத்தைக் கைப்பற்றியது.

அன்று முதல் அது மேற்கு கரையிலும் கிழக்கு ஜெரூஸலம் பகுதியிலும் குடியேற்றங்கள் பலவற்றை நிறுவியுள்ளது. மிகவும் உறுதியான முறையில் அவற்றை விஸ்தீரணம் செய்தும் வந்துள்ளது.

கட்டாரிலிருந்து செயற்படும் அல்ஜஸீராவின் சிரேஷ்ட அரசியல் விமர்சகர் மர்வான பிஷாரா “சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பானது சர்வதேச இயக்கத்துக்கான ஆதரவை கொண்டுவரும் என்று நம்பக்கூடியதாக உள்ளது.

மேற்குலகிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் அது உருவாகும். இஸ்ரேல் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு மேற்குலக நாடுகளுக்கு நெருக்குதல்;களை மேலும் அதிகரிக்கும் வகையில் அது அமையக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன அரசியல்வாதியும் செயற்பாட்டாளருமான முஸ்தபா பர்கோதி “அல் குத்ஸ் பிரதேசம் உட்பட கைப்பற்றப்பட்ட பகுதிகளை சட்டவிரோதமாக தன்னோடு இணைத்துக் கொண்ட இஸ்ரேலின் பொறிமுறைக்கு எதிரானவையாக உள்ளன.

சர்வதேச சட்டங்கள் அப்பட்டமாக மீறப்படடுள்ளன என்பதன் அடிப்படையில் இஸ்ரேல் மீது ஏனைய நாடுகள் திடமான தடைகளையும் பகிஷ்கரிப்புக்களையும் மேற்கொள்ள இத்தீர்ப்பு ஏதுவாக அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் சட்டத்தரணியான ஜெப்ரி நைஸ் “சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு கடப்பாடற்றதாக இருப்பினும்கூட அதனை முற்றாக அலட்சியம் செய்வது உலகத் தலைவர்களுக்கு கடினமான விடயமாகும். இதுவும் நீதித்துறையின் ஓரங்கமாகும்” என்;று தெரிவித்துள்ளார்.

ஒடுக்கப்பட்ட கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பலஸ்தீன செயற்பாட்டாளர்கள் முன்னொருபோதும் இல்லாத வகையில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் நிலைமைகள் மோசமடைந்துள்ள பின்னணியில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை தங்களால் கொண்டாட முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

காஸா மீதான இஸ்ரேலின் யுத்தத்தை அவர்கள் காரணம் காட்டி உள்ளனர். காஸாவை மக்கள் வாழத் தகுதியற்ற ஒரு பிரதேசமாக இஸ்ரேல் மாற்றி உள்ளது.

ஒரு வருடத்துக்கு முன் இதுபோன்ற ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். இப்போது இந்த தீர்ப்பல்ல முக்கியம். நிரந்தர யுத்த நிறுத்தமும் ஆக்கிரமிப்புக்கு முடிவு காணப்பட வேண்டியதுமே முக்கியமாகும் என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது.

பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டாளரான மொஹமட் அல்வான், “மேற்குக் கரையில் குடியேற்றவாசிகள் பலஸ்தீன மக்கள் மீது நடத்தும் தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபடுபவர்.

இந்த தீர்ப்பு இஸ்ரேலின் நற்பெயரை வெளிநாடுகளில் பாதிக்கலாம் ஆனால் இதை அமுல் செய்யும் அல்லது இஸ்ரேல் மீது இந்த தீர்ப்பை பிரயோகிக்கும் எந்த பொறிமுறையும் சர்வதேச நீதிமன்றத்துக்கு கிடையாது. இந்த தீர்ப்பின் பிறகு உலக நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்குமா என்பதும் சந்தேகமே” என்றார்.

ஆலோசனைத் தீர்ப்பு என வர்ணிக்கப்படும் சர்வதேச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு 1948இன் நக்பா அல்லது பேரழிவு சம்பவத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ளப்பட வேண்டியதொன்று எனப் பலஸ்தீன் செயற்பாட்டாளர்கள் மிகவும் அழுத்தமாக தெரிவித்துள்ளனர்.

ஆயுதம் தாங்கிய சியோனிஸ யூதர்கள் 7,50,000 அப்பாவி பலஸ்தீன மக்களை அவர்களது தாயக பூமியில் இருந்து அச்சுறுத்தி வெளியேற்றிய நிகழ்வே நக்பா சம்பவமாகும்.

பலஸ்தீன சட்ட வல்லுனரான டயானா புட்டோ, “ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இஸ்ரேலின் நடத்தை பற்றிய வரலாற்றை கோடிட்டுக்காட்ட சர்வதேச நீதிமன்றம் நக்பா நிகழ்வை மீட்டியிருக்க வேண்டும்” என்று தனது எதிர்பார்ப்பைக் குறிப்பிட்டுள்ள அவர், “இந்த வழக்கின் தீர்ப்பு பற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆனால் தீர்ப்பு காஸாவிலும் மேற்கு கரையிலும் மட்டுமே கவனம் செலுத்துவதாக் நினைக்கின்றேன். இஸ்ரேல் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது பற்றிய இப்பிரச்சினையின் உண்மைத் தன்மை பற்றிய பெரிய அளவிலான காட்சிகள் மறைக்கப்பட்டுள்ளன” என்றும் சுட்டிக்காட்டினார்.

“பலஸ்தீனர்கள் நக்பாவின் போது விட்டுச் சென்ற தமது வீடுகள் மற்றும் காணிகளில் மீண்டும் குடியேறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமையை நிலைநிறுத்துவதற்காக குரல் கொடுக்க வேண்டிய தனது தலையாய கடமையை செய்வதை பலஸ்தீன அதிகார சபை நீண்டகாலத்துக்கு முன்பே கைவிட்டு விட்டது” என்றும் டயானா புட்டோ குற்றம் சாட்டியுள்ளார்.

“நக்பா எங்கே தொடங்கியது? என்ற கேள்வி முக்கியமானது. தற்போதைய நிலைமைகளுக்கான இந்த முக்கிய காரணியைப் பற்றி நாம் எப்படி பேசாமல் இருப்பது? இவை எல்லாம் எங்கே தொடங்கின? இவ்விடயம் பற்றிப் பேசுவதற்கு தற்போது கையாளப்பட்டுள்ள முறை சரியானதல்ல. சர்வதேச சமூகம் நக்பாவை நிச்சயமாக அங்கீகரிக்க வேண்டும். அதை நாம் காண வேண்டும்” என்றும் புட்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலில் சட்டம் கிடையாது. அதன் நிதி அமைச்சர் பஸேலல் ஸ்மொட்ரிச் பிரதமர் நெத்தன்யாஹ{வுக்கு விடுத்திருந்த வேண்டுகோளில் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு எதிராக தீர்ப்பு வழங்கினால் மேற்குக் கரையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளையும் இஸ்ரேல் தன்னோடு இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டிருந்தார்.

இஸ்ரேலியர்களை அவர்களது பூமியில் இருந்து எந்த சக்தியாலும் வெளியேற்ற முடியாது என்றும் அவர் நிருபர்களிடம் பேசும் போது கூறினார் என்று டைம்ஸ் ஒப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.

தனது முடிவுகளையும் தீர்ப்புக்களையும் தீர்க்கமாக அமுல் செய்யும் பொறிமுறை சர்வதேச நீதிமன்றத்திடம் கிடையாது.

இந்த தீர்ப்பை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் முன்வைக்க வேண்டும். அங்கு தான் பொருளாதார தடைகளுக்கோ அல்லது இராணுவ நடவடிக்கைக்கான முடிவையோ எடுத்து அமுல் செய்ய முடியும். ஆனால் அங்கும் வீட்டோ அதிகாரம் என்று ஒன்று இருக்கின்றது.

வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து இஸ்ரேலை அரசியல் ரீதியாக பாதுகாக்கும் தனது கடமையை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் மீண்டுமொரு தடவை நிறைவேற்றும். ஆனால் அது அமெரிக்காவை மேலும் தனிமைப்படுத்தும்.

அந்நிலைமையானது, ஐ.நா.பாதுகாப்பு சபைக்குள் பல குழப்பமான சூழலை உருவாக்கக் கூடும் என்று வொஷிங்டனில் உள்ள பொறுப்பான தேசங்களின் உருவாக்கத்துக்கான குயின்ஸி நிறுவனத்தின் இணை ஸ்தாபகர் ட்ரிட்டா பார்ஸி என்பவர் சுட்டிக்காட்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

-லத்தீப் பாரூக்-

Share.
Leave A Reply

Exit mobile version