“லண்டன்:இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகரில் உள்ள நடனப் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான சிறுவர்களும், சிறுமிகளும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், நடன பள்ளியில் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்த சிறுவர்களை 17-வயது சிறுவன் திடீரென கத்தியால் குத்தி தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் 3சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதலை தடுக்க முயன்ற 9 பேருக்கு கத்திக் குத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தனர்.
ரத்த காயத்துடன் சிறுவர்கள் சிலர் நடனப்பள்ளியில் இருந்து வெளியே சாலையில் ஓடியுள்ளனர். இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து தாக்குதல் நடத்திய சிறுவனை கைது செய்துள்ளனர்.
மேலும், இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த தாக்குதல் பற்றி கூறும்போது, இச்சம்பவம் பயங்கரமான மற்றும் ஆழ்ந்த அதிர்ச்சி என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.”,