“கான்பூர்,உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் கித்வாய் நகர் பகுதியில் பெண் ஒருவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்துள்ளார்.

பின்புறம் அவருடைய மகள் அமர்ந்து இருந்துள்ளார். அவர்கள் சென்ற திசைக்கு எதிரே இருந்து,

பக்கவாட்டில் சறுக்கியபடி திடீரென வந்த கார் ஒன்று ஸ்கூட்டரின் மீது மோதியுள்ளது.இந்த சம்பவத்தில், தாயும் மகளும் தூக்கி வீசப்பட்டனர்.

இருவரையும் அந்த வழியே சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இதில், அந்த பெண் உயிரிழந்து விட்டார்.

படுகாயமடைந்த மகள் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.அந்த காரை ஓட்டி வந்தது 17 வயது சிறுவன் என தெரிய வந்துள்ளது.

பரபரப்பான அந்த சாலையில் சாகசம் செய்வதற்காக காரை ஓட்டியபோது, கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் விபத்து ஏற்படுத்தி உள்ளது.

அந்த சிறுவனை போலீசார் காவலுக்கு அழைத்து சென்றுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டில் இதுபோன்று சாகசம் என்ற பெயரிலும், அனுமதிக்கு உட்படாத சிறுவர்கள் கார் ஓட்டி சென்றும் விபத்து ஏற்படுத்துவது என்பது அதிகரித்து காணப்படுகிறது.

மராட்டியத்தின் புனே நகரில், கடந்த 2 மாதங்களுக்கு முன் 17 வயது சிறுவன் சொகுசு ரக காரை கொண்டு மோதியதில் 2 ஐ.டி. நிறுவன இளைஞர்கள் உயிரிழந்தனர்.

இதே புனே நகரில், கடந்த ஜூலை 20-ந்தேதி ஸ்கூட்டரில் 2 குழந்தைகளுடன் சென்ற 27 வயதுடைய ஜெரிலின் டி சில்வா என்ற இளம்பெண் ஒருவரை, காரில் பின்தொடர்ந்த ஆடவர் ஒருவர் அவரை முந்தி செல்ல முயன்று முடியாமல் போக, ஆத்திரத்தில் ஸ்கூட்டரை முந்தி சென்று குறுக்காக காரை நிறுத்தினார்.

இதன்பின் காரில் இருந்த நபர் கீழே இறங்கி, ஜெரிலினின் தலைமுடியை பிடித்து இழுத்து, முகத்தில் குத்தி, தாக்கினார்.

இதில், அந்த பெண்ணுக்கு மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதுபற்றி அதிர்ச்சிகர வீடியோ ஒன்றும் வெளிவந்து வைரலானது.

இதேபோன்று, ஸ்கூட்டரில் சென்ற பெண் மீது தாக்குதல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன், முந்த்வா-மஞ்சரி சாலையில் கோழிகளை ஏற்றி சென்ற லாரி மீது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகியின் மகன் சவுரப் பண்டு குடிபோதையில் காரை கொண்டு ஏற்றியுள்ளார்.

இதில், ஓட்டுநர் மற்றும் கிளீனர் என 2 பேர் காயமடைந்தனர்.சமீபத்தில், டெல்லியில் கோகல்புரி பகுதியில் பறக்கும் சாலையில் சிம்ரன்ஜீத் கவுர் (வயது 30) மற்றும் அவருடைய கணவர் ஹீரா சிங் (வயது 40) ஆகிய 2 பேரும் பைக் ஒன்றில் சென்றபோது,

இவர்களுடைய பைக் மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீது உரசுவது போல் சென்றுள்ளது.இதனால், இரண்டு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் திடீரென துப்பாக்கியை எடுத்து சுட்டதில், சிம்ரன்ஜீத் கவுரின் கழுத்துக்கு அருகே குண்டு துளைத்தது.

அவரை தூக்கி கொண்டு ஜி.டி.பி. மருத்துவமனைக்கு ஹீரா சிங் சென்றார். எனினும், அதில் பலனின்றி சிம்ரன் உயிரிழந்து விட்டார்

Share.
Leave A Reply

Exit mobile version