சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐஎஸ்எஸ்- ISS) மூன்றாவது முறையாக பயணம் மேற்கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, நாசாவின் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.

போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலமான ஸ்டார்லைனரை சோதிக்க, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோர், கடந்த ஜூன் 5ஆம் தேதி விண்வெளிக்குச் சென்றனர்.

எட்டு நாட்களில் சோதனைப் பணிகளை முடித்துவிட்டு பூமிக்கு திரும்புவதுதான் திட்டம், ஆனால் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இப்போதுவரை அவர்களால் திரும்பி வர முடியவில்லை.

அவர்கள் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப கோளாறுகளைச் சரிசெய்ய தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக நாசா தெரிவித்துள்ளது.

அதேசமயத்தில், வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி க்ரூ 9 (Crew 9) என்ற திட்டத்தின் கீழ், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 4 பேர் கொண்ட குழுவை அனுப்பவுள்ளது நாசா.

ஸ்டார்லைனர் விண்கலத்தின் தாமதத்தால் க்ரூ 9 திட்டம் பாதிக்கப்படுமா? சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் என்னென்ன சவால்கள் உள்ளன?

சர்வதேச விண்வெளி மையத்தில் இணைக்கப்பட்டுள்ள ஸ்டார்லைனர் விண்கலம்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்கலங்கள் மூலம் வீரர்களை அனுப்பி, மீண்டும் அவர்களை பூமிக்குக் கொண்டுவரும் பணியில் இரண்டு தனியார் நிறுவனங்கள் நாசாவுடன் இணைந்து பணியாற்றுகின்றன. முதல் நிறுவனம், எலோன் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’, இரண்டாவது போயிங்.

நாசா இதுபோன்ற விண்கலங்களைச் சொந்தமாக வைத்து இயக்க விரும்பாமல், வணிக நிறுவனங்களிடம் இருந்து இந்தச் சேவையை வாங்க விரும்புகிறது.

விண்வெளி பயணத்திற்கான செலவைக் குறைக்கவும், விண்வெளித் துறையில் ஒரு புதிய வணிகச் சந்தையை உருவாக்கவும் இதை செய்வதாக நாசா கூறியிருந்தது.

ஸ்டார்லைனர் விண்கலம் 2015-ஆம் ஆண்டில் தனது முதல் சோதனைப் பயணத்தை மேற்கொள்ளவிருந்தது.

ஆனால் அது 2019 வரை தாமதமானது, ஏனெனில் அதன் மென்பொருள் குறைபாடுகள் உள்ளிருந்த கடிகாரத்தைச் செயலிழக்கச் செய்தது. இதனால் அத்திட்டம் நிறுத்தப்பட்டது.

இரண்டாவது முயற்சி, 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டது. ஆனால் அது மீண்டும் 2022-ஆம் ஆண்டு மே மாதம் வரை தாமதமானது. உந்துவிசை அமைப்பில் (த்ரஸ்ட்- Thrust) ஒரு சிக்கல் ஏற்பட்டதால் இது நடந்தது என்று சொல்லப்பட்டது.

இந்தக் குறைபாடுகள், வயரிங் மற்றும் பாராசூட்களின் பாதுகாப்பில் இருந்த கூடுதல் சிக்கல்கள் விண்வெளி வீரர்களைச் சுமந்து செல்லும் திட்டத்தை தொடர்ந்து தாமதப்படுத்தி வந்தது.

பின்னர் அனைத்துச் சிக்கல்களும் சரிசெய்யபட்டதாகத் தெரிவிக்கப்பட்டு, கடந்த மே 7ஆம் தேதி தனது முதல் சோதனை குழுவைச் சுமந்துகொண்டு ஸ்டார்லைனர் விண்ணில் பாய்வதற்கு 90 நிமிடங்களே இருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விண்வெளிப் பயணம் நிறுத்தப்படுவதாக நாசா அறிவித்தது.

பயணம் ரத்து செய்யப்பட்டதால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஸ்டார்லைனர் விண்கலத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

ஸ்டார்லைனரின் முதல் பயணம்

பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு, ஜூன் 5ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஸ்டார்லைனர் விண்கலம்.

ஆனால் அப்போது ஹீலியம் வாயு கசிவு சிறிதளவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தும் விண்ணில் செலுத்தப்பட்டதற்கு காரணம் ஹீலியம் கசிவு மிகச்சிறிய அளவிலேயே இருந்ததால், விண்வெளி பயணத் திட்டத்தை இது எந்த வகையிலும் பாதிக்காது என்று பொறியாளர்கள் நம்பினர்.

விண்கலனை வான்வெளியில் இயக்குவதற்கும், பூமியின் வளி மண்டலத்தில் நுழையும்போது அதன் வேகத்தைக் குறைப்பதற்கும் உதவும் த்ரஸ்டர் இயந்திரத்தை இயக்குவதற்கு ஹீலியம் வாயு பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், தனது விண்வெளி பயணத்தைத் தொடங்கிய பிறகு, ஸ்டார்லைனரில் மேலும் நான்கு முறை ஹீலியம் கசிவு ஏற்பட்டது.

விண்கலனை திசை மாற்றி இயக்குவதற்காக உள்ள 28 த்ரஸ்டர்களில் ஐந்து விண்வெளி மையத்தை அடையும் முன்பே பழுதாகிவிட்டன. பழுதான ஐந்து த்ரஸ்டர்களில் நான்கு மீண்டும் இயக்கத்துக்குக் கொண்டு வரப்பட்டன.

இந்தப் பயணம் எட்டு நாட்களுக்கு மட்டுமே திட்டமிடப்பட்டது. ஆனால், பொறியாளர்கள் இந்தக் கோளாறுகளை ஆய்வு செய்து வந்ததால், விண்கலன் பூமிக்குத் திரும்புவது தாமதமானது.

அமெரிக்க நேரப்படி ஜூன் 26ஆம் தேதி இரவு பத்து மணிக்கு ஸ்டார்லைனர் பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கும் என்று நாசா அறிவித்திருந்தது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்படவில்லை.

ஏறக்குறைய 60 நாட்கள் கடந்துள்ள நிலையில், இந்த தொழில்நுட்ப குறைகளை சரிசெய்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோரை பூமிக்கு அழைத்துவர பல சோதனைகளைச் செய்து வருகிறது நாசா.


சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர்

போயிங் நிறுவனத்தின் மீதான அழுத்தம்

போயிங் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியிட்ட பதிவில், “எங்கள் குழுக்கள் நடத்திய ஏராளமான சோதனைகளின் அடிப்படையில் ஸ்டார்லைனர் திட்டத்தின் மீதும், விண்கலத்தின் திறன் மீதும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

விண்கலத்தை பாதுகாப்பாக தரையிறக்குவது தொடர்பாக நாசாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.” என்று கூறியுள்ளது.

இந்தத் திட்டம் போயிங் நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது.

100 ஆண்டுகள் பழைமையான, முதல் உலகப் போரில் இருந்து தனது விமானங்களை உற்பத்தி செய்து வரும் ஒரு நிறுவனம், கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து பேசுபொருளாகி வந்தது. காரணம், சமீப காலங்களில் அந்த நிறுவனத்தின் விமானங்கள் சந்தித்த தொடர் விபத்துகள்.

போயிங் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானங்களில், 2011 முதல் 2020 வரையிலான பத்து ஆண்டு காலகட்டத்தில் உலகம் முழுக்க 320 விமான விபத்துகள் நடந்துள்ளதாக அவர்களுடைய 2020-ஆம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.

அந்த பத்து ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் மொத்தமாக 1,752 பேர் உயிரிழந்துள்ளனர். 2020-ஆம் ஆண்டில் மட்டும் போயிங் நிறுவனம் தயாரித்த விமானங்களில் 17 விமான விபத்துகள் நடந்துள்ளன. அதில் மொத்தமாக 121 உயிரிழப்புகள் நிகழ்ந்தன.

இவ்வாறு அடுத்தடுத்த விபத்துகளால் போயிங் நிறுவனத்தின் மீதான அழுத்தம் அதிகரித்தது. இந்த ‘ஸ்டார்லைனர்’ திட்டம் தங்கள் மீதான விமர்சனங்களை துடைத்தெறிய போயிங் நினைத்தது.

, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து காணொளி மூலமாக பேசிய சுனிதா வில்லியம்ஸ் (ஜூலை 14)

 

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் உள்ள சிக்கல்கள்

விண்வெளியில் தங்கி இருப்பதால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோர் இருவருக்கும் எந்த ஆபத்தும் கிடையாது என்றும், அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள் என்றும் இதற்கு முன்னர் பலமுறை தெளிவுபடுத்தியிருந்தது நாசா. ஆனால் இந்தக் கோளாறுகளை ஏன் நாசாவால் சரிசெய்யமுடியவில்லை என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.

“ஸ்டார்லைனரை சோதனை செய்யதான் அவர்கள் சென்றார்கள், எனவே விண்வெளியில் சிக்கியுள்ளார்கள் என்றே சொல்ல முடியாது” என்கிறார் இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர், முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன்.

“போயிங் நிறுவனத்தின் மீது பல விமர்சனங்கள் உள்ளது உண்மைதான், ஆனால் இதுவொரு சோதனை முயற்சிதான் என்பதால் நாசா மற்றும் போயிங் எதிர்பார்க்காத கோளாறுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக ஹீலியம் வாயு கசிவு மற்றும் த்ரஸ்டர்களில் ஏற்பட்டுள்ள பிரச்னை”

“இது நிச்சயம் சரிசெய்யப்படக்கூடிய ஒன்றுதான். அவர்கள் அங்கு பத்திரமாக இருப்பார்கள் ” என்கிறார் பேராசிரியர் த.வி.வெங்கடேஸ்வரன்.

முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன்.

இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன்.

க்ரூ 9 (Crew 9) திட்டம் குறித்து கேட்டபோது, அந்தத் திட்டம் இதனால் பாதிக்கப்படாது என தான் நம்புவதாகவும், ஸ்டார்லைனர் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோரை பூமிக்கு கொண்டுவர முடியாவிட்டால், நாசாவிடம் வேறு திட்டங்கள் இருக்கும் என்றும் கூறுகிறார் அவர்.

“ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலம் மூலம் கூட பூமிக்குத் திரும்ப அழைத்து வரலாம். ஆனால் போயிங் நிறுவனத்திற்கு இதுவொரு பின்னடைவுதான். விண்வெளித்துறையில் தனியாரின் பங்கு குறித்து நாசா மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது” என்று கூறினார் பேராசிரியர் த.வி.வெங்கடேஸ்வரன்.

Share.
Leave A Reply

Exit mobile version