எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு பிரதான வேட்பாளரும் ஜனாதிபதியாக தெரிவாவதற்கு தேவையான் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறப்போவதில்லை என்பது நீண்ட நாட்களாக இருந்துவரும் ஒரு பொதுவான அபிப்பிராயமாகும்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட பிறகு கடந்த சில நாட்களாக பல பத்திரிகைகள் முதற்சுற்றில் 50 சதவீதமான வாக்குகளை எந்தவொரு வேட்பாளரும் பெறத்தவறும் பட்சத்தில் ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்வதற்கு அடுத்தகட்ட வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடத்தப்படும் என்பது குறித்து விபரங்களை வெளியிட்டுவருகின்றன.

அரசியலில் புதிய அணிசேருகை முயற்சிகள் பல மாதங்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டபோதிலும், தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அந்த முயற்சிகள் தற்போது தீவிரமடைந்திருக்கின்றன.

இலங்கை அரசியலில் முன்னென்றும் இல்லாத வகையில் எந்தவொரு அரசியல் கட்சியும் இன்று பலம்பொருந்திய நிலையில் இல்லை.

கடந்த நூற்றாண்டில் மாறிமாறி ஆட்சிக்குவந்த இரு பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் மிகவும் பலவீனமடைந்து கருத்தில் எடுக்கமுடியாத அரசியல் சக்திகளாக மாறிவிட்டன.

சுதந்திர கட்சியைக் கைவிட்டு ராஜபக்சாக்கள் அமைத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிகவும் பலம்பொருந்திய கட்சியாக குறுகிய காலத்திற்குள் ஆட்சியதிகாரத்துக்கு வந்தபோதிலும், இரு வருடங்களுக்கு முன்னர் மூண்ட மக்கள் கிளர்ச்சியை தொடர்ந்து அந்த கட்சியும் செல்வாக்கை இழந்துவிட்டது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு ஆசனத்தைக் கூட ஐக்கிய தேசிய கட்சியினால் வென்றெடுக்க முடியவில்லை.

பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட்டிருக்காவிட்டால் சுதந்திர கட்சிக்கும் அதே கதியே ஏற்பட்டிருக்கும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் முரண்பட்டுக்கொண்டு வெளியேறி சஜித் பிரேமதாச நான்கு வருடங்களுக்கு முன்னர் அமைத்த ஐக்கிய மக்கள் சக்தியிடமே ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கி தற்போது இருக்கிறது.

மிகவும் குறைந்த வாக்கு வங்கியைக் கொண்டிருந்த ஜனதா விமுக்தி பெரமுன பல்வேறு அமைப்புக்களை அணிசேர்த்துக்கொண்டு அமைத்த தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் கிளர்ச்சிக்கு பின்னர் தென்னிலங்கையில் ஆதரவு பலமடங்கு பெருகியிருப்பதாக தோன்றுகின்ற போதிலும், இதுவரையில் அது தேர்தல் ஒன்றில் பரீட்சித்துப் பார்க்கப்படவில்லை.

அநுரகுமார

அண்மையை கருத்துக்கணிப்புக்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் பிரேமதாசவுமே மக்கள் ஆதரவில் முன்னிலையில் இருப்பதாக காண்பித்தன

ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புக்கு பிறகு தீவிரமடைந்திருக்கும் அணிசேருகைகள், குறிப்பாக ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் கட்டுப்பாட்டையும் மீறி அணிதிரளுகின்ற பின்புலத்தில், பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் மக்கள் ஆதரவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுகிறது.

தனது கட்சியில் இருந்து தன்னை தூரவிலக்கிக்கொண்டு ஜனாதிபதி விக்கிரமசிங்க ஒரு சுயேச்சை வேட்பாளாராகவே தேர்தலில் போட்டியிடுகிறார்.

இலங்கையில் இவ்வாறு இடம்பெறுவது இதுவே முதற்தடவை. தனது தேர்தல் பிரசாரங்களைக் கூட அவர் தனது கட்சியினரிடம் கையளிக்கக்கூடிய நிலையில் இல்லை. பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் அமைக்கப்படவிருப்பதாக கூறப்படும் பரந்த கூட்டணியை நம்பியே விக்கிரமசிங்க களத்தில் குதித்திருக்கிறார்.

அவருக்கு ஆதரவாக அணிதிரளும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜபக்சாக்களின் செல்வாக்கு உச்சநிலையில் இருந்தபோது நான்கு வருடங்களுக்கு முன்னர் அவர்களின் கட்சியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவானவர்கள்.

ராஜபக்சாக்களே செல்வாக்கிழந்துநிற்கும் நிலையில் இந்த பாராளுமன்ற உறூப்பினர்களுக்கு மக்கள் மத்தியில் எந்தளவுக்கு செல்வாக்கு இருக்கமுடியும் என்பது இன்னொரு முக்கியமான கேள்வி. புதிய ஜனாதிபதியை பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்ல, நாட்டு மக்களே தெரிவு செய்யப்போகிறார்கள்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தனது ஆசனத்தைக்கூட விக்கிரமசிங்கவினால் காப்பாற்ற முடியவில்லை. பல்வேறு கட்சிகளையும் சேர்ந்தவர்களை இணைத்துக் கொண்டு அமைக்கும் கூட்டணியினால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான 50 சதவீதமான வாக்குகளை அவருக்கு திரட்டிக் கொடுக்கமுடியுமா?

சுமார் அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும், விக்கிரமசிங்க கடந்த இரு வருடங்களில் நாட்டின் பொருளாதார மீட்சிக்காக தனது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மாத்திரமே தனது சாதனைகள் என்று கூறிக்கொண்டு மக்களிடம் செல்கிறார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு மாத்திரமே நெருக்கடியில் இருந்து இலங்கை விடுபடுவதற்கு ஒரே வழி என்பதை தவிர அவர் மக்களிடம் புதிதாக எதையும் கூறுவதாகவும் இல்லை.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஜனாதிபதி முற்றுமுழுதாக தனது பொருளாதாரக் கொள்கைகளில் மாத்திரமே தங்கியிருக்கிறார்.

அது அவரை மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு கொண்டுவரப் போதுமானதா? அவரது அரசாங்கம் மேற்கொண்ட பல நடவடிக்கைகளும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய சில சட்டங்களும் இலங்கை அரசியல் தலைவர்களில் கூடுதலான அளவுக்கு தாராளவாத ஜனநாயகப் போக்கைக்கொண்ட ஒருவர் என்று அவருக்கு ஏற்கெனவே இருந்த பெயரையும் இல்லாமல் செய்துவிட்டன.

ராஜபக்சாக்களை கைவிட்டு பொதுஜன பெரமுன அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியுடன் அணிசேருவது அவருக்கு எந்தளவுக்கு அனுகூலமானதாக இருக்கும்?

விக்கிரமசிங்கவை ஆதரிக்கப்போவதில்லை என்று ராஜபக்சாக்கள் எடுத்த தீர்மானம் அவருக்கு பாதகமானது அல்ல என்ற ஒரு அபிப்பிராயமும் இருக்கிறது.

அவ்வாறானால், நாட்டை சீரழித்த அவர்களின் சகல கொள்கைகளையும் செயற்பாடுகளையும் ஆதரித்த அதே பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு விக்கிரமசிங்கவுக்கு எவ்வாறு நல்வாய்பாக அமையமுடியும்?

இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்களுக்கு இருக்கும் அபிப்பிராயம் தேர்தலில் விக்கிரமசிங்கவின் வாய்ப்புக்கள் மீது நிச்சயம் தாக்கத்தை செலுத்தும் எனலாம்.

ராஜபக்ஷாக்கள் தங்களுக்கு மக்கள் மத்தியில் இன்னமும் கூட பெரிய செல்வாக்கு இருப்பதாக காட்டிக்கொள்வதற்கு பொதுவெளியில் என்னதான் பேசினாலும், ஜனாதிபதி தேர்தலில் பெரும்பாலும் விக்கிரமசிங்கவையே அவர்கள் ஆதரிப்பார்கள் என்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

தங்களது குடும்பத்தின் நலன்களையும் எதிர்கால அரசியல் வாய்ப்புக்களையும் உறுதிசெய்யக்கூடிய உத்தரவாதங்களை ஜனாதிபதியிடமிருந்து பெறுவதற்கு அவர்கள் எடுத்த முயற்சிகள் பயனளிக்காமல் போனதை அடுத்தே அவர்கள் தங்கள் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளரை களமிறக்குவதற்கு தீர்மானித்திருக்கிறார்கள்.

ஆனால், ஒரு ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்துவதற்கும் அவர்கள் தயாராக இல்லை. ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன போட்டியிடாவிட்டால் தங்களது வாக்குவங்கி சிதறிப்போய்விடும் என்றும் அதனால் பாராளுமன்ற தேர்தலில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள்.

தங்களது கட்சியின் எதிர்கால வாய்ப்புக்களை உறுதிசெய்வதற்கு அவர்கள் விசுவாசி ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பார்கள். அதற்கென்று ஏற்கெனவே ஒருவரை தெரிந்தெடுத்துவைத்திருக்கிறார்கள்.

ராஜபக்சாக்கள் நாட்டு நலன் உட்பட சகலவற்றுக்கும் மேலாக தங்களது சொந்த நலன்களுக்கு மாத்திரமே முன்னுரிமை கொடுக்கும் சுபாவம் கொண்டவர்கள். ஜனாதிபதி தேர்தல் ராஜபக்சாக்களைப் பற்றியும அவர்களுடன் சேர்ந்து நின்றவர்களைப் பற்றியும் நாட்டு மக்கள் என்ன அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நிச்சயம் நிரூபிக்கும்.

பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானத்தை மாற்றியமைப்பதற்கு அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பிரதமர் தினேஷ் குணவர்தன பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது.

அவரின் முயற்சி எந்தளவுக்கு வெற்றிபெறும் என்று தெரியவில்லை. ராஜபக்சாக்களிடம் இருந்து தூரவிலகுவது ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு அனுகூலமானது என்று பரவலாக நம்பப்படுகின்ற போதிலும், அவர் ராஜபக்சாக்கள் எடுத்த முடிவு பற்றி கருத்து எதையும் பெரிதாகக் கூறுகிறார் இல்லை.

தங்களை மீறி பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஆதரவைப் பெறுவதற்கு ஜனாதிபதி எடுத்த முயற்சிகள் காரணமாக ராஜபக்சாக்கள் கோபமடைந்திருக்கிறார்கள். பொதுஜன பெரமுனவை பிளவுபடுத்துவதாக ஜனாதிபதி மீது அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் எதிரணிக்கட்சிகளை பலவீனப்படுத்துவதற்கு முயற்சிப்பது ஒன்று அரசியலில் புதிய விடயம் அல்ல.

ராஜபக்சாக்கள் தாங்கள் அதிகாரத்தில் இருந்த காலத்தில் எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தும் வேலையை மிகவும் கச்சிதமாகச் செய்தார்கள். அதனால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட அரசியல் தலைவர் என்றால் அது விக்கிரமசிங்கவே. அவரது கட்சியின் இன்றைய பலவீனத்துக்கு அது ஒரு முக்கிய காரணம்.

இப்போது வரலாறு திரும்பியிருக்கிறது. தங்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது மாத்திரம் ராஜபக்சாக்கள் குமுறுகிறார்கள். சலூன் கதவு பற்றி மகிந்த ராஜபக்ச பேசியதை எவரும் மறந்திருக்கமாட்டார்களன.

தனது கட்சியின் சார்பில் தன்னந்தனியனாக பாராளுமன்றத்தில் இருந்துகொண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வந்த விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இப்போது பாராளுமன்றத்தில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் உட்பட 115 பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது இவ்வாறிருக்க, பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்கு எடுத்த தீர்மானம் கடந்த வாரம் இடம்பெற்ற அரசியல் நிகழ்வுகளில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒன்று. அதற்கு ஒரு பிரத்தியேக காரணம் இருக்கிறது.

பிரதமர் குணவர்தன ஜனாதிபதியுடன் பாலர் வகுப்பில் இருந்து ஒன்றாகக் கல்விபயின்ற ஒருவர். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றாலும் அரசியலில் இரு துருவங்கள. குணவர்தன தன்னையும் தனது கட்சியையும் எப்போதுமே ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான முகாமுடனேயே அடையாளப்படுத்தும் ஒரு அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவர்.

விக்கிரமசிங்கவின் கொள்கைகளை ஒருபோதும் குணவர்தன ஏற்றுக்கொண்டதில்லை. அவர் இடதுசாரிக் கொள்கைகளும் சிங்கள தேசியவாதமும் கலந்த ஒரு போக்கைக் கடைப்பிடித்து வந்தவர்.

காலம் செய்த கோலம் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் அவர் பிரதமராக பதவி வகிக்கிறார். அது மாத்திரமல்ல, ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரங்கள் குணவர்தனவின் தலைமையிலேயே முன்னெடுக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது.

பிரதமரின் தந்தையார் காலஞ்சென்ற பிலிப் குணவர்தன இலங்கைக்கு மார்க்சிசத்தை அறிமுகப்படுத்தியவர் என்று பெயரெடுத்தவர்.

அவர் தனது இறுதிக்காலத்தில் இடதுசாரி அரசியலுக்கு நேர் எதிரான கொள்கைகளைக் கொண்ட ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக இருந்தார்.

அதேபோன்றே அவரின் புதல்வனும் தற்போதைய ஐக்கிய தேசிய கட்சி தலைவரின் அணியில் சங்கமமாகியிருக்கிறார்.அரசியல் மாற்றங்கள் பல விசித்திரமான படுக்கைத் துணைகளை உருவாக்குகின்றன. அடுத்துவரும் நாட்களில் அத்தகைய மேலும் பல துணைகளை நாம் காணப்போகிறோம்.

-வீரகத்தி தனபாலசிங்கம்-

Share.
Leave A Reply

Exit mobile version