பிரேசிலின் சாவோ பாலோ மாகாணத்தில் விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 61 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாகாணமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது, ​​வின்ஹெடோ நகரில் விழுந்ததாக வோபாஸ் (Voepass) விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான காணொளியில், அந்த விமானம் செங்குத்தாகச் சுழன்று வீழ்ந்ததைக் காண முடிகிறது.

ஏ.டி.ஆர் 72-500 எனும் அந்த விமானத்தில் 57 பயணிகள் மற்றும் விமான குழுவினர் நான்கு பேர் என 61 பேர் இருந்துள்ளனர். இந்த விபத்தில் யாரும் உயிர்பிழைக்கவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் துணை நிற்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என, சாவோ பாலோ மாகாண ஆளுநர் டார்சிஸியோ கோம்ஸ் டீ ஃபிரெயிட்டாஸ் தெரிவித்துள்ளார்.

விமானத்தின் செயல்திறனைப் பதிவு செய்யும் கருவிகளை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ்-இத்தாலி விமான தயாரிப்பு நிறுவனமான ஏ.டி.ஆர் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாகத் தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்தது. ஆனால், அங்கிருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த விபத்தின்போது, குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரேயொரு வீடு மட்டும் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீடுகள் நிரம்பியுள்ள ஓரிடத்தின் பெரும்பகுதி நெருப்பு மற்றும் புகையால் சூழப்பட்டிருப்பதை வீடியோ பதிவுகள் காட்டுகின்றன.

காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

விமான கண்காணிப்பு இணையதளமான ஃபிளைட்ரேடார்24 (Flightradar24) காஸ்கேவலில் இருந்து அந்த விமானம் உள்ளூர் நேரப்படி 11:56க்கு (14:56 ஜிஎம்டி) புறப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. ஒன்றரை மணிநேரம் கழித்து விமானத்தில் இருந்து கடைசி சிக்னல் பெறப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அந்த விமானம், “முறையான பதிவு மற்றும் தகுதிச் சான்றிதழுடன் நல்ல நிலையில் இருந்ததாக”, பிரேசிலின் விமானப் போக்குவரத்து முகமை தெரிவித்துள்ளது.

நேரில் கண்டவர்கள் என்ன கூறுகின்றனர்?

விமானத்தில் இருந்த நான்கு விமானக் குழுவினர் உரிய உரிமம் மற்றும் முறையான தகுதிகளைப் பெற்றிருந்ததாக அந்த முகமை தெரிவித்துள்ளது.

கேஸ்கேவலில் உள்ள உவோபெக்கன் புற்றுநோய் மருத்துவமனை நிர்வாகம் பிபிசி பிரேசிலிடம் கூறுகையில், தங்களுடைய பயிற்சி மருத்துவர்கள் இருவரும் இந்த விமான விபத்தில் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது.

இந்த விமான விபத்து ஏற்பட்ட தருணத்தை அங்கிருந்த உள்ளூர் மக்கள் நேரில் கண்டனர்.

விபத்துக்குள்ளான விமானத்தில் மொத்தம் 61 பேர் இருந்தனர்.

“விமானம் விழும் சத்தம் கேட்டதால், என்னுடைய வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன், அந்த விமானம் விழுந்த தருணத்தை நான் பார்த்தேன்,” என ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்த ஃபெலிப் மகால்ஹேஸ், அது தன்னை “அச்சுறுத்தியதாக” கூறினார்.

மற்றொரு குடியிருப்புவாசியான நதாலி சிகேரி சிஎன்என் பிரேசில் ஊடகத்திடம் கூறுகையில், தனக்கு “மிக அருகில் பலத்த சத்தம்” கேட்டபோது தான் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகவும் அது ட்ரோன் சத்தத்தை ஒத்திருந்ததாகவும், ஆனால் அதைவிட “இன்னும் பலமாக” இருந்ததாகவும் தெரிவித்தார்.

“நான் வீட்டின் பால்கனியில் இருந்து விமானம் சுழன்றதைப் பார்த்தேன். சில நொடிகளிலேயே அது விமானத்தின் வழக்கமான இயக்கம் இல்லை என்பதை உணர்ந்தேன்.”

கடந்த 2007ஆம் ஆண்டில் சாவோ பாலோவில் TAM எக்ஸ்பிரஸ் விமானம் நொறுங்கி விபத்து ஏற்பட்டதில் 199 பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு பிரேசிலில் நடக்கும் மோசமான விமான விபத்து இது.

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா

பிரேசில் அதிபர் உரை நிகழ்த்திய நிகழ்ச்சி ஒன்றில், விமான விபத்தில் இறந்தவர்களுக்காக இரங்கல் தெரிவித்தார்.

“நான் மிக மோசமான செய்தியைத் தாங்க வேண்டியுள்ளது. எல்லோரும் எழுந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்,” என பார்வையாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த விமான விபத்து “மிகவும் வருந்தத்தக்க சம்பவம்” என அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். “இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் துணை நிற்பதாகவும்,” அவர் தெரிவித்துள்ளார்.

‘விசாரணைக்கு ஒத்துழைப்பு’

வாலின்ஹோஸுக்கு அருகிலுள்ள நகரத்தில் இருந்து அவசர சேவை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக, உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“இருபது பேர் அங்கு சென்றுள்ளனர். வாலின்ஹோஸ் நகராட்சி சிவில் காவலர் பிரிவிலிருந்து மூன்று வாகனங்களும் சிவில் பாதுகாப்புப் பிரிவிலிருந்து ஒரு வாகனமும் அனுப்பப்பட்டுள்ளது,” என வாலின்ஹோஸ் சிட்டி ஹால் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது.

ஏ.டி.ஆர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஏ.டி.ஆர் 72-500 விமானம் விபத்துக்குள்ளானது தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

“இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் எங்கள் எண்ணங்களில் உள்ளனர்,” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்த விபத்து தொடர்பான விசாரணை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவு தருவதில் ஏ.டி.ஆர் நிபுணர்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளனர்.”

Share.
Leave A Reply

Exit mobile version