இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொருளாதார ரீதியில் இலங்கை வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில், நாட்டை இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க, பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை ஓரளவு மீட்டு இயல்பு நிலைக்கு திருப்பியுள்ளார்.
இவ்வாறான பின்னணியில், வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம் என்ற கருப் பொருளை முன்னிலைப்படுத்திய ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்திருக்கின்றார்.
போரை முடிவுக்கு கொண்டு வந்தோம் என்பதை முன்னிலைப்படுத்தி 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வெற்றி பெற்றதை போன்று, பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களை மீட்டோம் என்ற கருப் பொருளை முன்னிலைப்படுத்தி ரணில் விக்ரமசிங்க தற்போது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்.
இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க, இரண்டு முறையும் தோல்வியடைந்திருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க 1994ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, 1999ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், முதல் தடவையாக போட்டியிட்டார்.
சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவை எதிர்த்து போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க அந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.
சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க 4,312,157 வாக்குகளை பெற்றார். ரணில் விக்ரமசிங்க 3,602,748 வாக்குகளை பெற்றிருந்தார்.
2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து போட்டியிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் முதல் தடவையாக களமிறங்கிய மஹிந்த ராஜபக்ஸ, ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்தார்.
ரணில் தோல்விக்கு விடுதலைப் புலிகள் காரணமா?
சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் 2001ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 109 ஆசனங்களை பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
இதன்மூலம், ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றார். இலங்கையில் அப்போது பிரதமருக்கு அதிகாரம் காணப்பட்டது. அந்த காலப் பகுதியில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை ரணில் கைப்பற்றியிருந்தார்.
இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் நார்வே தலையீட்டில் சமாதான பேச்சுவார்த்தை 2002ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு, பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
(1999 தேர்தலில் சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவை எதிர்த்து போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க அந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.)
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை, 2006ம் ஆண்டு முடிவுக்கு வந்த நிலையில், நான்காவது ஈழப் போர் ஆரம்பமானது.
இந்த போர் நிறுத்தம் காணப்பட்ட காலப் பகுதியிலேயே 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டிய நிலையில், 2006ம் ஆண்டு மீள போர் ஆரம்பமானது.
2005ம் ஆண்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என வடக்கு, கிழக்கு மாகாண மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கோரிக்கை முன்வைத்தது. இதனால், அந்த மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் வாக்களிப்பதை பெருமளவு புறக்கணித்திருந்தனர்.
அந்த தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் வாக்களிக்காமையே, ரணில் விக்ரமசிங்கவின் தோல்விக்கு காரணம் என கூறப்படுகின்றது.
ராஜபக்ஸ குடும்பத்தினர்
இந்த விடயம் தொடர்பில் மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான பாரதி ராஜநாயகம் பிபிசி தமிழிடம் பேசுகையில், ”2005ம் ஆண்டு தேர்தலை பகிஷ்கரிக்குமாறு விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.
அப்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு மாகாண மக்கள் பெரும்பாலும் வாக்களிக்கவில்லை.
கிழக்கு மாகாணத்தில் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. எனினும், குறைந்தளவிலேயே பதிவாகியிருந்தன. வடக்கு மாகாண மக்கள் வாக்களித்திருந்தால், ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றிருக்கலாம் என்ற கருத்து பொதுவாகவே இருக்கின்றது.” என்றார்.
தேர்தலை புறக்கணிக்குமாறு 2005ம் ஆண்டு ஏன் விடுதலைப் புலிகள் அறிவிப்பை வெளியிட்டார்கள் என்ற கேள்விக்கு மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான பாரதி ராஜநாயகம் பதிலளித்தார்.
”இலங்கையின் தேர்தலை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. சிங்கள மக்களே தங்களின் தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்ற கருத்து விடுதலைப் புலிகளிடம் இருந்தது. அந்த அடிப்படையில் தான் அவர்கள் அந்த கோரிக்கையை விடுத்திருந்தார்கள்.” என அவர் கூறினார்.
பாரதி ராஜநாயகம், மூத்த பத்திரிகையாளர்
”சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட காலத்தில் ரணில் விக்ரமசிங்க சூழ்ச்சிகளை செய்தார் என்ற கருத்து மக்கள் மத்தியில் இருக்கின்றது.
2002ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தையை பயன்படுத்தி கருணா போன்றோரை பிரித்து, விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த ரணில் விக்ரமசிங்க முயற்சித்தார் என கூறப்பட்டது” என்கிறார் பாரதி ஜனநாயகம்.
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இன்றும் இருக்கின்ற நிலையில், 2005ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் வெளியிட்ட அறிவிப்பு 2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு தாக்கம் செலுத்துமா என்ற கேள்விக்கு, அவர் பதிலளித்தார்.
”இந்த காலக் கட்டத்திலும் அவ்வாறான கருத்து சிலரால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட முன்வைக்கின்றது.
எனினும், ஜனாதிபதி தெரிவில் தமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என தமிழர்கள் எண்ணுகின்றார்கள். இந்த நிலையில், தேர்தல் பகிஷ்கரிப்பு என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும், அது எந்தளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதை நிச்சயமாக சொல்லமுடியாது” என தெரிவித்தார்.
2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிவிப்பு, அந்த தேர்தலில் தாக்கத்தை செலுத்தியது.
2005ம் ஆண்டுக்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் முதல் முறையாக தற்போதுதான் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுகின்றார்.
இடைக்கால ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 2009ம் ஆண்டு மௌனிக்கப்பட்டதை அடுத்து, மஹிந்த ராஜபக்ஸ போர் வெற்றியை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதித் தேர்தலை நடாத்தியிருந்தார்.
இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து, பொது வேட்பாளராக சரத் பொன்சேகா களமிறக்கப்பட்டார்.
இலங்கை ராணுவ தளபதியாக ராணுவத்தை வழிநடத்தி போரை முடிவுக்கு கொண்டு வந்தார் என்ற பெருமையை சரத் பொன்சேகா பெரும்பான்மை மக்கள் மத்தியில் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பொது கூட்டணியொன்று ஆரம்பிக்கப்பட்டு, பொது வேட்பாளராக சரத் பொன்சேகா களமிறங்கிய நிலையில், அந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடவில்லை.
அதனைத்தொடர்ந்து, 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.
இந்த பின்னணியில், மஹிந்த ராஜபக்ஸவை கட்டாயம் தோற்கடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்த எதிர்க்கட்சிகள், மஹிந்த ராஜபக்ஸ அப்போது தலைமைத்துவம் வகித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவை பிரித்தெடுத்து, மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து போட்டியிட வியூகம் வகுத்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல தலைவர்கள் ஒன்றாக கைக்கோர்த்து,
2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக களமிறக்கியமை காரணமாக அந்த தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்க போட்டியிடவில்லை.
சஜித் பிரேமதாஸ (கோப்புப்படம்)
அதனைத் தொடர்ந்து, 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்க போட்டியிடவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் காணப்பட்ட தலைமைத்துவ சர்ச்சை காரணமாக, அந்த கட்சியின் பிரதித் தலைவராக செயற்பட்ட சஜித் பிரேமதாஸ பெரும் எண்ணிக்கையிலான ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்களுடன் ஐக்கிய மக்கள் சக்தியை ஸ்தாபித்தார்.
இதன்மூலம் தனிமைப்படுத்தப்பட்ட ரணில் விக்ரமசிங்க 2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடவில்லை.
இந்த நிலையில், சஜித் பிரேமதாஸவை எதிர்த்து போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஸ, அந்த தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றார்.
எனினும், கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, இலங்கையில் வரிசை யுகத்தை ஏற்படுத்தியது.
எரிபொருள், எரிவாயு, பொருட்களை கொள்வனவு செய்வதற்கு என வரிசைகளில் மக்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்ட நிலையில், கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத கோட்டாபய ராஜபக்ஸ, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தார்.
அதனைத் தொடர்ந்து, போராட்டம் வலுப் பெற்றதை அடுத்து, நாட்டை விட்டு கோட்டாபய ராஜபக்ஸ வெளியேறிய நிலையில், பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றதுடன், நாடாளுமன்றத்தில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பின் ஊடாக ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.
கோட்டாபய ராஜபக்ஸவின் பதவி காலத்தில் எஞ்சிய பகுதியை ரணில் விக்ரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாக நிறைவுசெய்துள்ள நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலை 19 வருடங்களுக்கு பின்னர் இம்முறை ரணில் விக்ரமசிங்க எதிர்கொள்கின்றார்.