கடந்த புதன்கிழமை அன்று, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (Organisation of Islamic Cooperation – OIC) உறுப்பு நாடுகளின் அவசரக் கூட்டம் செளதி அரேபியாவில் நடைபெற்றது.
இரானின் கோரிக்கையை முன்வைத்து நடைபெற்ற இந்த சந்திப்பில், பல்வேறு விஷயங்களோடு, டெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலை செய்யப்பட்டது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பு OIC உறுப்பு நாடுகளிடம் இரான் தனது பதில் நடவடிக்கையை விளக்குவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.
கடந்த ஜூலை 31 அன்று, டெஹ்ரானில் இரானின் புதிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வந்தபோது இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, ஹனியேவின் மரணத்திற்கு கடுமையான தண்டனை வழங்கப்போவதாக இரானின் அதியுயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி சூளுரைத்தார்.
இஸ்மாயில் ஹனியேவின் கொலையின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஹமாஸ் மற்றும் இரான் கூறியிருந்தன, ஆயினும் இது குறித்து இஸ்ரேல் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இரானின் எதிர்வினை குறித்து ஏன் கவலை நிலவுகிறது?
இதற்கு பதிலடி கொடுப்பதைத் தவிர தங்கள் நாட்டுக்கு வேறு வழியில்லை என இரானின் பொறுப்பு வெளியுறவுத்துறை அமைச்சர் க்யூரி அலி பாகேரி கனி தெரிவித்துள்ளார்.
சரியான நேரத்தில் மற்றும் சரியான முறையில் இரான் தக்க பதிலடி கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.
இரானின் பதிலடி, இரானின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பிற்காக மட்டுமல்ல, “முழு பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கானதாகவும்” இருக்கும் என்று கனி கூறினார்.
இரானின் புதிய அதிபரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள டெஹ்ரானுக்கு வந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர்களின் (IRGC) மிக பாதுகாப்பான விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார்.
அதீத பாதுகாப்பு கொண்டிருந்த இந்த தளத்தின் மீதான தாக்குதலில் இஸ்மாயில் ஹனியே மரணம் அடைந்ததை அடுத்து இரானும் மிகுந்த தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பிறகு, இரான் தொடர்பான ஒவ்வொரு சமிக்ஞையும், ஒவ்வொரு அறிக்கையும், ஒவ்வொரு பேச்சும் இந்த தாக்குதலுக்கு இரான் எப்போது, எப்படி பதிலடி அளிக்கும் என்பதை அறிய உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது.
அதே நேரத்தில், இரானின் பதிலடி தாக்குதல் முழு பிராந்தியத்தையும் ஒரு பரவலான மோதலில் மூழ்கடிக்கும் என்ற கவலையும் நிலவுகிறது.
எனினும், இரான் பொறுப்பு வெளியுறவு அமைச்சர் இதுபற்றி இதுவரை எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. மேற்கத்திய நாடுகள் இரானைப் பற்றிய உளவுத் தகவல்கள் போதிய அளவு இல்லை என கூறுகின்றன.
எனவே இரான் என்ன செய்யத் திட்டமிடுகிறது என்பதைக் குறித்து தெளிவாகத் தெரியவில்லை.
இந்த ஆண்டு ஏப்ரலில், சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரக வளாகத்தின் மீது வான்வழித் தாக்குதலில் இரானின் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையை சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டனர்.
இது இஸ்ரேலின் தாக்குதல் என்று நம்பப்பட்டது. இது இரானுக்கு ஏற்பட்ட மற்றொரு அடியாக பார்க்கப்பட்டது.
டமாஸ்கஸ் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் மீது 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவப்பட்டன.
ஆயினும், நடுவழியிலேயே அவை இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதனால் இரானின் இந்த பதிலடி நடவடிக்கை இஸ்ரேல் மீது எந்தவொரு குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இரானின் பதிலடி நடவடிக்கை
கடந்த வாரம், அமெரிக்க அதிகாரிகள், முந்தைய முயற்சிகள் தோல்வி அடைந்தது போல் இல்லாமல், இம்முறை இரான் ஒரு பெரிய தாக்குதலுக்கு தயாராகி வரலாம் என்று கூறியுள்ளனர்.
ஹனியேவின் மரணம் துல்லியமான ஏவுகணைத் தாக்குதலால் ஏற்படவில்லை என்றும் இரானுக்குள் உள்நாட்டு உதவியுடன் நடந்த தாக்குதல் என்றும் சமீபத்திய ஊடக செய்திகள் கூறுகின்றன.
ஹனியே மீதான தாக்குதலில் இரான் குடிமக்கள் யாரும் இறக்கவில்லை எனவும் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மேற்குலக மற்றும் அரபு நாடுகளின் ராஜ்ஜிய நடவடிக்கைள், இரானின் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வைக்கலாம்.
கடந்த வாரம் ஜோர்டானின் வெளியுறவுத்துறை அமைச்சர் இரான் சென்றிருந்தார். புதன்கிழமை அன்று, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இரான் அதிபருடன் பேசினார்.
பிரெஞ்சு தூதரகத்தின் தகவலின்படி, புதிய ராணுவ பதட்டங்களைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு இரானிடம் மக்ரோன் கேட்டுக் கொண்டார், என கூறப்படுகிறது.
இதனிடையே, லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லாவால் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் எதிர்கொண்டு வருகிறது. ஹெஸ்பொல்லா என்பது இரான் ஆதரவு அரசியல் இயக்கம் மற்றும் லெபனானில் உள்ள போராளி அமைப்பாகும்.
தனது தளபதி ஃபவாத் ஷுக்ரின் மரணத்திற்கு பழிவாங்குவதற்காக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதாக ஹெஸ்பொல்லா அறிவித்துள்ளது.
ஹனியே கொலை செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதலில் ஃபவாத் ஷுக்ர் கொல்லப்பட்டார். ஹெஸ்பொல்லாவின் கோட்டையாக கருதப்படும் பெய்ரூட்டின் தஹியா பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
ஹெஸ்பொலாவும் பெரிய நடவடிக்கை எடுக்குமா?
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, லெபனானுடனான இஸ்ரேலின் வடக்கு எல்லையில் ஹெஸ்பொல்லா தாக்குதல் நடத்த தொடங்கியது. அப்போதிருந்து, லெபனானுக்கும் போர் பரவுவதற்கான அபாயம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது.
இதுவரை, இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொல்லாவிற்கும் இடையிலான சண்டை லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான எல்லையில் மட்டுமே இருந்தது. இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொல்லாவும் தாங்கள் ஒரு முழுமையான போருக்கு ஆதரவாக இல்லை என்பதை சுட்டிக்காட்டி வருகின்றன.
இதற்கு முன்னர்வரை, இஸ்ரேலிய ராணுவ இலக்குகளை மட்டுமே குறிவைத்து வந்த ஹெஸ்பொல்லாவின் தாக்குதல்கள் இப்போது மிகவும் சிக்கலான நிலையாக உருமாறியுள்ளது. ஏனெனில், இப்போது இஸ்ரேலின் உள்பகுதிகளில் உள்ள இலக்குகளை குறிவைக்க துவங்கியுள்ளது ஹெஸ்பொல்லா.
ஹெஸ்பொல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் “கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான பதிலடியைக் கொடுப்போம் என உறுதியளித்துள்ளார்.
ஃபுவாட் ஷுக்கரை ஹெஸ்பொல்லாவின் ‘வியூக அமைப்பின் மூளை’ என்று விவரித்த ஹசன், அவர் கொல்லப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு அவருடன் பேசியதாகவும் கூறினார்.
முந்தைய காலங்களில், உயர்மட்ட தளபதிகளின் மரணத்தைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்தி ஹெஸ்பொல்லா பதிலடி கொடுத்திருந்தது. இப்போது, பெய்ரூட்டில் அதன் உயர்மட்ட தளபதி படுகொலை செய்யப்பட்ட பின்னர், ஹெஸ்பொல்லா குறிப்பிடத்தக்க பதிலடி கொடுக்கலாம்.
இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் புதன்கிழமை பிராந்திய தலைவர்களை சந்தித்தார்
லெபனானில் உள்ள பலரும் லெபனானின் தேசிய நலனுக்கு தேவையில்லாத ஒரு போருக்குள் இழுக்கப்படுகிறோம் என அச்சம் கொள்கின்றனர். 2005இல் இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொல்லாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் ஏற்பட்ட அழிவை லெபனான் மக்கள் இன்னும் மறக்கவில்லை.
ஆனால், பலவீனமான ஹெஸ்பொல்லா என்பது இரானின் நலனுக்கும் பொருந்தாது.
இரானின் அணுசக்தி திட்டத்தை இஸ்ரேல் தனது இருப்புக்கு அச்சுறுத்தலாக கருதுகிறது. இரானின் அணு ஆயுத தளங்கள் எப்போதாவது இஸ்ரேலிய தாக்குதலின் இலக்காக மாறும்பட்சத்தில், பதிலடி கொடுப்பதில் ஹெஸ்பொல்லாவின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.
இரானும் அதன் ஆதரவுக் குழுக்களும் இஸ்ரேல் மீது பதிலடி கொடுக்குமா என இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, இருப்பினும் ஹெஸ்பொல்லா தனித்து முதலில் தாக்கலாம் என அமெரிக்க ஊடக செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த வாரம், அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையத் தலைவர் ஜெனரல் மைக்கேல் குரில்லா இஸ்ரேலுக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். இதனால், இம்முறையும் இஸ்ரேலை மீட்பதற்கான முயற்சிகளை அமெரிக்கர்கள் முன்னெடுப்பார்கள் என நம்பப்படுகிறது.
அதேநேரம், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு கடுமையான விலை அளிக்கவேண்டி இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்த பதட்டமான சூழலுக்கு இடையே, இஸ்ரேல் மற்றும் லெபனானுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான நிறுவனங்கள் இந்த நாடுகளின் வான்வெளியைத் தவிர்க்க திட்டமிட்டுள்ளன. உலக நாடுகள் தங்கள் குடிமக்களை இஸ்ரேல் மற்றும் லெபனானை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளன.
மக்களில் சிலர் போருக்கு தயாராகி வருகின்றனர். எதிர்வரும் காலங்களில் இப்பகுதி தற்செயலாகவோ அல்லது திட்டமிட்ட நோக்கத்துடனோ போரை நோக்கி தள்ளப்படலாம்.
அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல் விரைகிறது
ஏற்கனவே அப்பகுதிக்கு சென்று அனுப்பப்பட்ட ஒரு விமானம் தாங்கி கப்பல், விரைவில் அங்கு சென்றடையும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறியுள்ளார்.
சமீபத்தில் மூத்த ஹெஸ்பொலா மற்றும் ஹமாஸ் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, மத்திய கிழக்கில் மிகப்பெரிய அளவில் மோதல் வெடிக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இரானின் எந்தவொரு தாக்குதலில் இருந்தும் இஸ்ரேலைப் பாதுகாக்க உதவுவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை இது வெளிப்படுத்துகிறது. அமெரிக்கா தனது கூட்டாளியைப் பாதுகாக்க “எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கும்” என்று ஆஸ்டின் கூறியுள்ளார்.
ஜூலை 31-ம் தேதியன்று டெஹ்ரானில் ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு இரான் எப்படி, எப்போது பதிலடியை கொடுக்கும் என்பதை அறிகுறிகளை உன்னிப்பாக அமெரிக்கா கவனித்து வருகிறது.
இரானியர்கள் தங்கள் மண்ணில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு இஸ்ரேல் தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர்.
இஸ்ரேலை பழிவாங்கவும் இரான் சூளுரைத்துள்ளது. இஸ்மாயில் ஹனியே படுகொலை குறித்து இஸ்ரேல் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் இஸ்ரேல் தான் ஹனியே படுகொலையின் பின்னணியில் இருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது.
யுஎஸ்எஸ் ஜார்ஜியா என்ற நவீன ஏவுகணைகளை தாங்கிய நீர்மூழ்கிக் கப்பலை மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
இதேபோல், அந்த பிராந்தியத்திற்கான பயணத்தை ஏற்கனவே தொடங்கிவிட்ட யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் என்ற விமானந்தாங்கி போர்க்கப்பலின் வேகத்தையும் அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.