படக்குறிப்பு, இந்த சம்பவத்தையடுத்து மேற்கு வங்க டாக்டர்கள் மத்தியில் கடும் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவரை போலீசார் கைது செய்தனர்.
ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருந்துவர்களின் ஆதங்கம் குறையவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து, கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் சந்தீப் கோஷ் ராஜினாமா செய்துள்ளார்.
மருத்துவக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், “சமூக வலைதளங்களில் ஏற்பட்டுள்ள அவப்பெயர் மற்றும் தன் மகளாகக் கருதிய மருத்துவர் இறந்ததால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும் என நம்புகிறார்” என்று விவரித்தார்.
நாடு தழுவிய போராட்டம்
இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் திங்கள்கிழமை போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட நபர் சம்பவம் நடந்த பின்னர், தனது வீட்டிற்குச் சென்று துணிகளை துவைத்துவிட்டு தூங்கி இருக்கிறார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபருக்கு மருத்துவமனையுடன் நேரடியாக தொடர்பில்லாத நிலையில், மருத்துவமனைக்கு அவர் வந்து சென்றுள்ளார்.
அவர் கொல்கத்தா காவல்துறையோடு பணிபுரிந்த ஒரு தன்னார்வலர் மற்றும் தேவைப்படும் போதெல்லாம் காவல்துறை அதிகாரிகளுக்கு சிறிய உதவிகள் செய்பவர்.
ஞாயிற்றுக்கிழமை, கொல்கத்தா போலீசார் கூறுகையில், சம்பவத்திற்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் தனது வீட்டிற்குச் சென்று தூங்கிவிட்டார். பின்னர், ஆதாரங்களை அகற்றுவதற்காக அவர் தனது துணிகளை துவைத்திருக்கிறார் என்கின்றனர்.
கருத்தரங்கு கூடத்தில் பெண் மருத்துவரின் சடலம்
மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்பு பயின்றுக்கொண்டிருந்த இந்த பயிற்சி பெண் மருத்துவரின் சடலம் கலந்தாய்வுக் கூடத்தில் வெள்ளிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது. இரவு உணவு சாப்பிட்டுவிட்டு செமினார் ஹாலில் மருத்துவர் தூங்கிவிட்டார்.
இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் நள்ளிரவு 3 மணியில் இருந்து காலை 6 மணிக்கும் இடையில் நடந்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை, கொல்கத்தா காவல்துறை ஆணையர் வினீத் கோயல் கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக மருத்துவக் கல்லூரிக்கு வந்து, போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களைச் சந்தித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களைச் சந்தித்துப் பேசிய போலீஸ் கமிஷனர், பிரேதப் பரிசோதனை அறிக்கை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் பணியமர்த்தப்பட்ட உதவி போலீஸ் அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதே நேரத்தில், பணியில் அலட்சியமாக இருந்ததற்காக இரண்டு பாதுகாப்புப் பணியாளர்களையும் மருத்துவமனை நிர்வாகம் நீக்கியுள்ளது. இருவரும் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவமனையில் பணியாற்றி வந்தனர்.
ஆரம்பத்தில் இந்தச் சம்பவத்தை கொலை வழக்காகக் காவல்துறை கருதியது. ஆனால் குடும்பத்தினரின் வற்புறுத்தலின் பேரில் பாலியல் வன்கொடுமை பிரிவுகளும் சேர்க்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை செய்தியாளர்களிடம் பேசுகையில், “என் மகள் திரும்பி வரமாட்டார், ஆனால் குறைந்தபட்சம் விசாரணையை முறையாக நடத்த வேண்டும்” என்று கூறியிருந்தார்.
மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்
பிடிபட்டது எப்படி?
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த போலீசார் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தனர். விசாரணை தொடங்கிய 6 மணி நேரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.
சிசிடிவி வீடியோவைத் தவிர,சம்பவத்தில் கிடைத்த சில ஆதாரங்களும் அந்த நபரை கைது செய்ய காவல்துறைக்கு உதவியது
செமினார் ஹாலில் இருந்து உடைந்த புளூடூத் இயர்போனை போலீசார் கண்டுபிடித்தனர். அது அந்த நபரின் போனுடன் இணைக்கப்பட்டிருந்தது.
இது தவிர, அதிகாலை 4 மணியளவில் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்திற்குள் அந்த நபர் நுழைவதையும் சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன.
இந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் இயர்போன்களை அணிந்திருந்தார், ஆனால் சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு அவர் மருத்துவமனையை விட்டு வெளியேறியபோது, அவரது காதுகளில் இயர்போன்கள் இல்லை.
குற்றம் சாட்டப்பட்டவர் கொல்கத்தா காவல்துறையில் தன்னார்வலராக பணியாற்றினார். மருத்துவமனைக்கு வெளியே உள்ள காவல் நிலையத்தில் பலமுறை பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இதன் காரணமாகவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் தடையின்றி மருத்துவமனைக்குச் சென்று வர அனுமதிக்கப்பட்டதாக போலிசார் தெரிவிக்கின்றனர்.
குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பல தடயங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பொதுவாக நான் தூக்கு தண்டனைக்கு எதிரானவர் என்றாலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தூக்கு தண்டனை வழங்குவதை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றால் தனக்கு ஆட்சேபனை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த மருத்துவமனை சுமார் 26 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. மருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிக்க 1200 படுக்கைகள் உள்ளன.
சராசரியாக தினமும் 2500 நோயாளிகள் வந்து போகின்றனர். இது தவிர, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வந்து செல்கின்றனர்.