1939-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அமெரிக்காவின் முன்னணி பொருளாதார வல்லுநர்களில் ஒருவரான அலெக்சாண்டர் சாக்ஸ் (Alexander Sachs), அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் சந்தித்தார்.
ஓவல் அலுவலகத்திற்கோ, அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கோ சாக்ஸ் புதியவர் அல்ல. ஆனால் அன்று அவர் பேச வந்த தலைப்பு புதிது.
பொதுவாக பொருளாதாரத்தைப் பற்றி அதிபரிடம் பேசும் அவர், அன்றைய தினம், அவர் அதிபரிடம் பேச இன்னொரு விஷயமும் இருந்தது.
அன்று, வரலாற்றின் போக்கை மாற்றியமைத்ததாக நம்பப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கையொப்பமிட்ட கடிதத்தை அவர் தன்னுடன் எடுத்துச் சென்றிருந்தார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம், நியூயார்க்கில் விற்பனைக்கு வரும் இந்தக் கடிதத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 34 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை (4 முதல் 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) என்று மதிப்பிடுகிறது கிறிஸ்டியின் ஏல நிறுவனம்.
இது மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலனுக்கு சொந்தமான கலைப்பொருட்கள் ஏலத்தின் ஒரு பகுதியாகும். அவர் 2018-இல் 65 வயதில் இறந்தார்.
கணினி இயலில் அவரது ஆர்வத்தையும் செல்வாக்கையும் பிரதிபலிக்கும் பல்வேறு பொருட்கள் இருந்தாலும், இந்தக் கடிதம் அவற்றின் மையமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கையொப்பமிட்டவர் மிக முக்கியமானவராக இருந்த போதிலும், ரூஸ்வெல்ட் ஆரம்பத்தில் அதன்மீது அதிக கவனம் செலுத்தவில்லை.
மற்ற விஷயங்கள் அவரது மனதை ஆக்கிரமித்திருந்தன. அந்தச் சந்திப்பிற்கு 15 நாட்களுக்கு முன்பு, ஜெர்மனி போலந்தின் மீது படையெடுத்திருந்தது. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அழிவு கொண்ட ஒரு போர் ஐரோப்பாவில் நடந்து கொண்டிருந்தது.
லியோ சிலார்ட் (Leo Szilard) என்ற அதிகம் அறியப்படாத ஹங்கேரிய புலம்பெயர்ந்த இயற்பியலாளர் எழுதிய கடிதத்தை ரூஸ்வெல்டுக்கு சாக்ஸ் படித்துக் காட்டினார்.
உண்மையைச் சொல்வதானால், அணுசக்தி, சங்கிலி விளைவுகள், மற்றும் நினைத்துப் பார்க்க முடியாத ஆற்றல் ஆகியவை அவர்கள் இருவருக்கும் மிகச் சிக்கலானதாக இருந்தன.
அக்கடிதத்தில் இதுபோன்ற பத்திகள் இருந்தன:
“கடந்த நான்கு மாதங்களில், யுரேனியத்தின் ஒரு பெரிய திரளில் இருந்து சங்கிலி விளைவை நிறுவுவது சாத்தியமாகியிருக்கிறது (…), இதன் மூலம் அதிக அளவு ஆற்றல் மற்றும் ரேடியம் போன்ற புதிய தனிமங்கள் பெரிய எண்ணிக்கையில் உருவாகும்.”
ஆனால் இதனை அதிபர் ரூஸ்வெல்ட் சட்டை செய்யவில்லை.
அதிபர் தனது பழைய நண்பரை மறுநாள் காலை காபி சாப்பிட அழைத்தார்.
நிகழும் போது பெரிதாகத் தோன்றாத சில சம்பவங்கள் உலகையே மாற்றிவிடும்.
இதுவும் அதுபோன்ற ஒன்றுதான்.
(Alexander Sachs),
சில மாதங்களுக்கு முன்…
அட்லாண்டிக் பெருங்கடலின் மறுபக்கத்திலிருந்து வந்துகொண்டிருந்த செய்திகள் சில மாதங்களாக சிலார்ட்டை வேதனைப்படுத்திக் கொண்டிருந்தது.
1939-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நாஜி ஜெர்மனியில், அவரது சக ஊழியர்களாக இருந்த விஞ்ஞானிகள் அணுவைப் பிரிப்பதில் வெற்றியடைந்திருந்தனர். இது அணுப்பிளவு என்று அழைக்கப்படுகிறது.
சிலார்ட் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அதை முன்னறிவித்திருந்தார். அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அணு யுத்தம் இனியும் ஒரு கற்பனை மட்டுமே அல்ல.
நாஜிக்கள் மற்ற எல்லோரையும் விட அணு ஆராய்ச்சியில் மேலும் முன்னேறலாம் என்று அவர் அஞ்சினார்.
ஆனால் யாரும் தன் பேச்சைக் கேட்க மாட்டார்கள் என்பதும் அவருக்குத் தெரியும்.
அதற்கு முன் சில ஆண்டுகளாக, அவர் விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் மற்றும் ராணுவத் தளபதிகள் ஆகியோர் தனது பேச்சை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று போராடி வந்தார்.
அணுப்பிளவு சாத்தியமா என்று அவர்கள் சந்தேகித்தனர். ஆனால் அவர் சொன்னது சரி என்று நிரூபிக்கப்பட்டது.
இருப்பினும், அணுப்பிளவு பற்றிய செய்தி வெளியான சில வாரங்களுக்குப் பிறகு, ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதில் அவரது நண்பரும் சக ஊழியருமான என்ரிகோ ஃபெர்மி இந்தப் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு பற்றிய கவலைகளை நிராகரித்திருந்தார்.
குறைந்தது 25 ஆண்டுகளுக்கு, ஒருவேளை 50 ஆண்டுகளுக்கு வணிக அல்லது ராணுவ நோக்கங்களுக்காக யாரும் அணுப்பிளவுகளைப் பயன்படுத்த முடியாது, என்று அவர் கணித்திருந்தார்.
இது நம்ப முடியாத, அறிவியல் புனைகதை என்று கருதப்பட்டது.
அணுப்பிளவில், ஓரு அணு பிளக்கப்படுகிறது. அது ஆற்றலை வெளியிடுகிறது, அவ்வளவுதான்.
இருப்பினும், ஒரு நிலையற்ற அணுவை பிளக்க முடிந்தால், அது அதிக எண்ணிக்கையிலான நியூட்ரான்களை வெளியிடும். அவை மற்ற நிலையற்ற அணுக்களைப் பிளவுபடுத்தி, மேலும் நியூட்ரான்களை வெளியிடும். இப்படி நடக்கும் ஒரு சங்கிலி எதிர்வினை ஒரு அசாதாரண அளவிலான ஆற்றலை வெளியிடும்.
இயற்பியலாளர் சிலார்ட்டுக்கு பதில்கள் தேவைப்பட்டன. அவற்றை அவர் 1939-ஆம் ஆண்டு வசந்த காலத்தில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தனது சக ஊழியர் வால்டர் ஜின்னுடன் கண்டடைந்தார். அவர் புதிய மற்றும் சாத்தியமற்ற அறிவியல் சோதனைகளைச் செய்வதில் நிபுணர்.
சிலார்ட் சொன்னது சரிதான் என்று அவர்கள் கண்டுபிடித்தார்கள். “உலகம் வலிமையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது,” என்று அவர் பின்னர் எழுதினார்.
அதிர்ஷ்டவசமாக, அணுப்பிளவு சங்கிலி எதிர்வினையை உருவாக்க முயற்சிப்பவர்களுக்கு ஒரு தடை இருந்தது. அணுப்பிளவு வெளியிடும் நியூட்ரான்கள் அதிவேகமாகப் பயணித்தன. மற்ற அணுக்களால் அவற்றை உறிஞ்சுவது கடினமான இருந்தது.
ஆனால் அந்த விவரம் நாஜிகளை நிறுத்தப் போவதில்லை.
நார்வேயில் கன நீர் தயாரிக்கப்பட்டு வந்த இடம். இதனை 1943-இல் நாஜிக்கள் தகர்த்தனர்
ஜெர்மனி-பிரான்ஸ் இடையே நீருக்கான போட்டி
நியூட்ரான்களை மெதுவாகச் செல்லவைப்பது எப்படி?
இதற்கு தண்ணீர் மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் அது பல நியூட்ரான்களை உறிஞ்சி, அவற்றை ஒரு சங்கிலி எதிர்வினையில் பயனற்றதாக ஆக்கி விடுகிறது.
இருப்பினும், H₂O இன் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுக்குப் பதிலாக ஒரு கூடுதல் நியூட்ரான் (D₂O) கொண்ட ஹைட்ரஜன் ஐசோடோப் பயன்படுத்தப்பட்டால், இந்தச் சிக்கல் தீர்ந்துவிடும்.
இது ‘கன நீர்’ (heavy water) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இதனை உற்பத்தி செய்வது கடினம்.
எனவே நாஜி அரசாங்கம் நார்வேயில் உள்ள வேமோர்க் என்ற நீர்மின் நிலையத்திற்குத் தனது பிரதிநிதிகளை அனுப்பியது. அங்கு அவர்கள் தங்கள் தினசரி வேலையின் துணை விளைபொருளாக கனரக நீரை உற்பத்தி செய்தனர்.
ஜெர்மனியர்கள், அங்கு உற்பத்தி செய்யப்பட்டிருந்த அனைத்து கன நீரையும் மிக அதிக விலைகொடுத்து வாங்க முன்வந்தனர். அந்த ஆலையை மேலும் அதிகமாக கன நீர் உற்பத்தி செய்யவும் வலியுறுத்தினர்.
ஆனால் நார்வேஜியர்கள் இதனை நிராகரித்தனர். ஹிட்லரின் திட்டங்கள் என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை என்றாலும், அவற்றின் ஒரு பகுதியாக இருப்பதில் அவர்களுக்கு விருப்பமில்லை.
பிரெஞ்சு ரகசிய போலீஸ் குழு ஒன்று அதன் பின்னர் அந்த ஆலையை அணுகி, அவர்களது ரசாயன துணைத் தயாரிப்புகளின் சாத்தியமான ராணுவ நோக்கம் குறித்து நார்வேஜியர்களை எச்சரித்தது.
நார்வேஜியர்கள் கன நீரை இலவசமாக பிரெஞ்சு அதிகாரிகளுக்குத் தருவதாகச் சொன்னார்கள். ஆனால் ஜெர்மனியர்கள் இதனைக் கண்டுபிடித்தனர்.
இரவோடு இரவாக 26 கனரக நீர் கேன்கள் கடத்தப்பட்டன.
இது ஒரு பதற்றமான நடவடிக்கை. நாஜி போர் விமானங்கள் தயாராகக் காத்திருந்தன.
அவர்கள் பிரெஞ்சு அதிகாரிகள் ஏறிய விமானத்தைக் குறிவைத்து அதனைத் தரையிறக்கக் கட்டாயப்படுத்தினர்.
ஆனால், நாஜிக்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.
விமானத்தில் கன நீர் கேன்கள் இல்லை.
அவை ரயில் மூலம் பாரிஸுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டிருந்தன. அங்கு ஒரு விஞ்ஞானிகள் குழு அவசரமாகப் பரிசோதனையைத் தொடங்கியது.
படக்குறிப்பு, அதிபருக்கு அனுப்பப்பட்ட அசல் கடிதம் நியூயார்க்கில் உள்ள ஹைட் பார்க்கில் உள்ள ரூஸ்வெல்ட் நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தில் உள்ளது. ஏலம் விடப்படும் இரண்டாவது பதிப்பு, கையொப்பமிடப்பட்ட சிறிய பதிப்பு
ஐன்ஸ்டீனின் கையொப்பம்
அணுஆயுதப் போட்டி உச்சத்தில் இருந்தது.
ஒரு அணுகுண்டு இருக்குமோ என்று சிலார்ட் அஞ்சினாலும், அவர் நாஜி வெடிகுண்டு பற்றி அதிகம் பயந்தார்.
இதுவரை நினைத்துப் பார்க்க முடியாத இந்த ஆயுதம் உண்மையில் இருக்கிறது என அவர் நம்பினார். அதனால் நிகழப்போகும் அழிவுகள், அடக்குமுறைகளைக் கற்பனை செய்து பார்த்தார்.
அவர் ஒரு எளிய முடிவுக்கு வந்தார்: அமெரிக்கர்கள் அதை ஜெர்மனியர்களுக்கு முன்பாக உருவாக்க வேண்டும்.
அதைச் செய்ய அவர்களைச் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. அவர் அவர்களுக்கு உச்ச அதிகாரத்தை வழங்க வேண்டியிருந்தது.
அவருக்கு ஒரு கூட்டாளி மற்றும் சிந்தனை தேவை: உலகில் மிகவும் சக்தி வாய்ந்தவர் கூட புறக்கணிக்காத விஞ்ஞானி யார்?
ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் தெரியும்.
பெர்லினில் உள்ள ஒரு மாநாட்டு அறையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை சிலார்ட் சந்தித்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கடந்துவிட்டன.
மேலும் 15 வருடங்களாக அவர்கள் ஒவ்வொரு நாளின் முடிவிலும் ஒன்றாக வீட்டிற்கு நடந்து செல்கையில், இயற்பியல், தத்துவம், மற்றும் அரசியல் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.
இப்போது இருவரும் அமெரிக்காவில் குடியேறி, சில கிலோமீட்டர்கள் இடைவெளியில் வசித்து வந்தனர்.
ஆனால் 1939-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி, உலகின் மிகவும் பிரபலமான விஞ்ஞானியான் ஐன்ஸ்டீன் அமெரிக்காவின் லாங் தீவில் ஒரு நண்பரின் அறையில் இருந்தார்.
அங்கு அவரைக் காண, சிலார்ட், ( Leo Szilard) தனது நண்பரும், சக ஊழியரும், சக ஹங்கேரியருமான யூஜின் விக்னருடன் சென்றார்.
ஐன்ஸ்டீனுக்கு அணுசக்திச் சங்கிலி எதிர்வினை பற்றி சிலார்ட் விளக்கி, அவரும் ஃபெர்மியும் சோதனைகளை நடத்தி வருவதாகக் கூறியபோது, ஐன்ஸ்டீன் அதிர்ச்சியடைந்தார்.
“இதைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை,” என்பதுதான் அவரது முதல் பதிலாக இருந்தது.
இது சுவாரஸ்யமானது. ஐன்ஸ்டீனின் E=mc² சமன்பாடு செயல்பாட்டில் இருந்தது.
ஆனால் நாஜி ஜெர்மனியில் இருந்து அகதியாக வந்து, உறுதியான சமாதானவாதியாகவும், அரசியல் உணர்வுள்ள நபராகவும் இருந்த ஐன்ஸ்டீன், ஜெர்மனியர்களின் கைகளில் அணு ஆயுதங்கள் இருந்தால் என்ன ஆகும் என்ற ஆபத்தை உடனடியாகப் புரிந்துகொண்டார்.
ஜெர்மனி போருக்குத் தயாராக இருந்த நிலையில், நிலைமை அவசரமானது என்று ஐன்ஸ்டீன் ஒப்புக்கொண்டார்.
பின்னாட்களில், அவர் தனது வாழ்க்கையின் பெரும் தவறு என்று அழைத்த ஒரு செயலைச் செய்தார். ரூஸ்வெல்ட்டுக்கு அனுப்ப சிலார்ட் தயாரித்திருந்த கடிதத்தில் கையெழுத்திட அவர் ஒப்புக்கொண்டார்.
ஐன்ஸ்டீனின் கடிதத்துடன் சிலார்ட் நியூயார்க் திரும்பினார். கடிதத்தை அதிபருக்கு அனுப்புவது மட்டுமே மிச்சம்.
இது நம்மை மீண்டும் அலெக்சாண்டர் சாக்ஸிடம் கொண்டு செல்கிறது.
அணுகுண்டுடன் காலை உணவு
ரூஸ்வெல்ட்டுடனான சாக்ஸின் முதல் சந்திப்பில் அவரிடம் ஐன்ஸ்டீன் கையொப்பமிட்ட கடிதம் இருந்தபோதிலும், அச்சந்திப்பு சரியாகச் செல்லவில்லை.
“மிக விரைவில் யுரேனியம் ஒரு முக்கியமான புதிய எரிசக்தி ஆதாரமாக மாறக்கூடும்,” என்று அக்கடிதம் துவங்கியது. “சூழ்நிலை குறித்து வெளிவந்துள்ள சில அம்சங்கள் விழிப்புடன் இருக்கக் கோருகின்றன. தேவைப்பட்டால், அரசாங்கம் விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்று அக்கடிதம் எச்சரித்தது.
அணுசக்தி சங்கிலி எதிர்வினை “வெடிகுண்டுகளின் உற்பத்திக்கு வழிவகுக்கும். இது சாத்தியமானது. உறுதியாக இல்லாவிட்டாலும், இந்த வழியில் மிகவும் சக்திவாய்ந்த புதிய வகை குண்டுகளை ஆயுதமாக்க முடியும்,” ஐன்ஸ்டீன் எச்சரித்திருந்தார்.
நாஜிக் கட்டுப்பாட்டில் இருந்த செக்கோஸ்லோவாகிய சுரங்கங்களில் இருந்து யுரேனியம் தொடர்பான தகவல்களை அவர் குறிப்பிடுகிறார் என்றாலும், அதிகமான அறிவியல் தகவல்களால் அதிபர் குழம்பிவிட்டார் என்பதை சாக்ஸ் அறிந்திருந்தார்.
இருப்பினும், அடுத்த நாள் காலை உணவுக்கான அழைப்பு, உலகின் மிக சக்திவாய்ந்த மனிதனுக்கு வரவிருக்கும் ஆபத்தைப் பற்றி புரிய வைப்பதற்கான இரண்டாவது வாய்ப்பாகும்.
சாக்ஸ் (Alexander Sachs,) ஒரு திட்டத்தை வகுத்தார்.
அதிபரை விஞ்ஞானத்தால் வெல்ல வழி இல்லை என்றால், அவர் அவருக்கு ஒரு கதை சொல்ல முடிவெடுத்தார்.
போர்களுக்கு மத்தியில், ஒரு இளம் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் பிரஞ்சு அரசர் நெப்போலியனுக்கு நீராவிக் கப்பல்களை உருவாக்கிக் கொடுக்க முன்வந்தார். அது காற்றைப் பொருட்படுத்தாமல் இங்கிலாந்தில் தரையிறங்க உதவும் என்று அவர் விளக்கினார்.
பாய்மரம் இல்லாத கப்பல்களைப் பற்றிய யோசனை நெப்போலியனுக்கு மிகவும் அபத்தமாகத் தோன்றியது. அவர் கண்டுபிடிப்பாளரான ராபர்ட் ஃபுல்டனை வேலையிலிருந்து நீக்கினார்.
Robert-Fulton
ராபர்ட் ஃபுல்டன் (Robert Fulton) நீராவிப் படகை மட்டுமல்ல, முதல் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் முதல் நீர்மூழ்கி ஏவுகணைகளை உருவாக்கினார்.
ரூஸ்வெல்ட் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார். பின்னர், “அலெக்ஸ், நாஜிக்கள் நம்மைத் தாக்கித் தகர்க்காமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுதானே சொல்ல வருகிறீர்கள்?” என்றார்.
“ஆம்,” என்று சாக்ஸ் பதிலளித்தார்.
ஃபுல்டன் மற்றும் நெப்போலியன் கதை ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்திருக்கலாம். ஆனால் லியோ சிலார்ட் எழுதிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கையொப்பமிட்ட கடிதம் அவரை அதை நம்ப வைத்தது.
அக்கடிதத்தைப் பெற்ற அதே மாதம், ரூஸ்வெல்ட் யுரேனியம் ஆலோசனைக் குழுவை உருவாக்கினார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கா ‘மன்ஹாட்டன் திட்டத்தை’ துவங்கியது. இது 1945-இல் ஜப்பானுக்கு எதிராக முதல் அணுகுண்டுகளைப் பயன்படுத்த வழிவகுத்தது.
ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் மீது வீசப்பட்ட வெடிகுண்டுகளுக்கும் ஐன்ஸ்டீனின் கடிதத்திற்கும் இடையே நேரடித் தொடர்பை வரைந்த வரலாற்றாசிரியர்கள் உள்ளனர்.
மற்றவர்கள் அத்தகைய நேரடி உறவு இருப்பதாக நம்பவில்லை. அக்கடிதம் இல்லாவிடினும் அமெரிக்கர்கள் எப்படியும் அணுகுண்டுகளைத் தயாரித்திருப்பார்கள் என்று நம்புகிறார்கள்.
ஐன்ஸ்டீன், தனது பங்கிற்கு, பல சந்தர்ப்பங்களில் அக்கடிதத்தில் கையெழுத்திட்டதற்காகப் பெரிதும் வருந்தினார்.
1947-ஆம் ஆண்டு ‘நியூஸ் வீக்’ பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரையில் ‘அனைத்தையும் ஆரம்பித்து வைத்தவர்’ என்ற தலைப்பில் அவர் கூறியது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது:
“ஜெர்மானியர்களால் அணுகுண்டு தயாரிக்க முடியாது என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் ஒரு விரலைக் கூட உயர்த்தியிருக்க மாட்டேன்.”
- முண்டோ –பிபிசி நியூஸ்
தொடர்புடைய செய்தி வாசிக்க இங்கே அழுத்தவும்:
A huge expanse of ruins left the explosion of the atomic bomb on Aug. 6, 1945 in Hiroshima. 140,000 people died because of the disastrous explosion. AP