ரஸ்யாவின் 1000 சதுரகிலோமீற்றரை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இரண்டரை வருடகால யுத்தத்தில் முதல்தடவையாக உக்ரைன் படையினர் ரஸ்யாவிற்குள் ஊருடுவி தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில் ரஸ்யாவின் 1000 சதுரகிலோமீற்றரை உக்ரைன் படையினர் தங்கள் கட்டுபாட்டின் கீழ் வைத்துள்ளதாக உக்ரைனின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
கேர்க்ஸ் பிராந்தியத்தில் உக்ரைன் படையினர் தொடர்ந்தும் இராணுவநடவடிக்கையை முன்னெடுக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் தாக்குதலை பாரிய தூண்டும் நடவடிக்கை என வர்ணித்துள்ள ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது நாட்டிலிருந்து உக்ரைன் படையினரை உதைத்து வெளியே அனுப்பபோவதாக தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் மேற்கு பிராந்தியத்திலிருந்து பெருமளவு மக்கள் பாதுகாப்பிற்காக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
28 கிராமங்கள் உக்ரைன் படையினரிடம் விழுந்துள்ளன, 12 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்,நிலைமை மிக மோசமானதாக காணப்படுகின்றது என உள்ளுர்ஆளுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை தீடீர் தாக்குதலொன்றை ஆரம்பித்த உக்ரைனிய படையினர் அடுத்த சில நாட்களில் 30 கிலோமீற்றர் முன்னேறினர்.
இந்த தாக்குதல் உக்ரைனிய படையினரின் மனோநிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இந்த தந்திரோபாயத்தினால் ஆபத்துக்கள் உள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த தாக்குதலினால் கடும் சீற்றமடைந்துள்ள ரஸ்யா உக்ரைனின் உட்கட்டமைப்புகள் பொதுமக்கள் இலக்குகள் மீது கடும் தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என பிரிட்டனின் இராணுவவட்டாரங்கள் பிபிசிக்கு தெரிவித்துள்ளன.
தொலைகாட்சிக்கு கருத்து வெளியிட்டுள்ள விளாடிமிர் புட்டின் எதிரியின் முக்கிய நோக்கம் விரோதத்தை விதைப்பது,சச்சரவு செய்வது மக்களை அச்சுறுத்துவது ரஸ்ய சமூகத்தின் ஒற்றுமையை அழிப்பது என தெரிவித்துள்ளார்.
எங்கள் பகுதியிலிருந்து எதிரியை வெளியேற்றுவதே பாதுகாப்பு தரப்பினரின் முக்கிய நோக்கம் என அவர் பாதுகாப்பு அதிகாரிகளிற்கு தெரிவித்துள்ளார்.
121,000 பேர் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என அந்த பகுதியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அந்த பகுதியில் சுமார் 2000 ரஸ்யபொதுமக்கள் உள்ளனர் அவர்களிற்கு என்ன நடந்தது என்பது தெரியாது என புட்டின் தெரிவித்துள்ளார்.
ஏவுகணைகளின் தாக்குதல்களில் இருந்து மக்கள் தங்களை பாதுகாக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் ஜன்னல்கள் இல்லாத உறுதியான சுவர்களை கொண்ட அறைகளில் மக்கள் பாதுகாப்பு தேடவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
திங்கட்கிழமையன்று கீவ் நகரில் அதிபர் ஸெலன்ஸ்கி உடனான சந்திப்பின் போது, யுக்ரேனின் இந்த எல்லை தாண்டிய போர்த் தாக்குதலை “புத்திசாலித்தனமானது” மற்றும் “தைரியமானது” என்று குறிப்பிட்ட அமெரிக்க செனடர் லிண்ட்சே க்ராஹம், யுக்ரேனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்குமாறு அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாகத்தை வலியுறுத்தினார்.
குர்ஸ்க் பகுதிக்குள் யுக்ரேன் எவ்வாறு நுழைய முடிந்தது என்று ரஷ்யாவில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ரஷ்ய சார்புடைய போர் குறித்த வலைதள எழுத்தளரான பொடோல்யாகா இந்த நிலைமையை “ஆபத்தானது” என்று கூறியுள்ளார்.
ரஷ்யாவின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா, இந்த நிலைக்கு ரஷ்யாவின் ஆயுதப் படைகள் கடுமையான பதிலடி கொடுக்க “நீண்ட காலம் எடுக்காது” என்றார்.
ரஷ்ய நட்பு நாடான பெலாரஸ், யுக்ரேன் தனது வான்வெளிக்குள் டிரோன் தாக்குதல் நடத்துவதாகக் கூறி, அந்நாட்டின் எல்லையில் தனது சொந்த படைகளை வலுப்படுத்தவிருப்பதாக கூறியுள்ளது.
இதற்கிடையில், திங்கள்கிழமை அன்று யுக்ரேனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் தீ விபத்தால் ஏற்பட்ட சேதத்தை ஆய்வு செய்ததாக சர்வதேச அணுசக்தி அமைப்பு கூறியுள்ளது. ஆனால் உடனடியாக தீக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
யுக்ரேனை அச்சுறுத்தவே ரஷ்யா வேண்டுமென்றே இந்த தீ விபத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்று அதிபர் ஸெலன்ஸ்கி குற்றம் சாட்டினார். மறுபுறம் யுக்ரேனின் தாக்குதலாலே இது ஏற்பட்டது என்று ரஷ்ய அரசால் நியமிக்கப்பட்ட அப்பகுதி உள்ளூர் ஆளுநர் கூறினார்.